எழுதியவர்: முகிலன்
|
|
|
Wednesday, 06 June 2007
ஐரோப்பிய வாழ்வில் கடனட்டை இல்லாமல் வாழ்வதென்பது முகமற்று வாழ்வதற்கு ஒப்பானது. ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என என்தந்தை கம்பரை சிறுவயதில் அறிமுகப்படுத்தியது எனது ஆழ்மனதில் பதிந்ததொன்று.
இந்த உலகமயமாக்கல் யுகத்தில் நாடுகளை ஆட்டிப்படைப்பது உலகவங்கி என்றால் எமது வாழ்வைத் தீர்மானித்து ஆட்டிப்படைப்பது நடைமுறையிலுள்ள வங்கிகள்தான். வங்கியின் பிடியிலிருந்து விடுபடல் என்பது நடக்கிற காரியமில்லை, தற்கொலைக்குச் சமமானது. வங்கிகளில்தான் உடனுக்குடன் புதிய தொழில்நுட்பமும் அறிமுகமாகும். இப்போது எல்லாத் தொடர்பாடல்களையும் இயந்திரத்தினூடாக மேற்கொள்வதான நடைமுறையும் வந்துவிட்டது. நாங்கள் புலம்பெயர்ந்த காலத்தில் இந்த இயந்திரங்களை வாஞ்சையுடன்தான் தொட்டோம். ஏனென்றால் பழக்கமில்லா மொழியால் கதைத்து சிரமப்படத்தேவையில்லை. அசட்டுச் சிரிப்பும் சிரிக்க வேண்டியதில்லை.
இயந்திரத் தொடுதாளுகை முறையில் கடனட்டைப் பாவனையிலான பண எடுப்புகளில் இனி என்னென்ன மாற்றம் நிகழலாம்?
நண்பர்களிடையே அலசல் ஆரம்பமாகியது. - நுண்கமெராக்கள் பதிவுசெய்யலாம் - குரல் வழியான ஒலிப்பதிவுகள் உறுதி செய்யலாம் - தேசிய அடையாள அட்டை எண் பதியப்படலாம் - கடனட்டையிலேயே புகைப்படம் இணைக்கப்பட்டு நுண்கமராவினால் உறுதிப்படுத்தப்படலாம் என்றவாறாக கருத்துகள் பகிரப்பட்டன. இதில் ஈடுபடாது மௌனமாக இருந்த நண்பன் திடீரெனச் சொன்னான் ‘கடனட்டையே இராது’ ‘ஆ.. ஆ... ஆ!’ எல்லோருமே வாயைப் பிளந்தனர். ‘வங்கியின் கணனித்திரையில் கைநாட்டை வைக்க (வலது பெருவிரல்) அது முழுமையான சாதகத்தையும் தரும். மேலதிக உறுதிப்படுத்தலுக்கு பிறந்த நாளுடனான நவீன பதிவெண்ணை(பெயருக்கான பதிவெண்) கேட்கும். எல்லாமே கையடையாளத்தில் தெரிந்துவிடும்.’ என்றான் அமைதியாக கேட்க வியப்பாக இருப்பினும் யாராலும் மறுத்துப் பேசமுடியவில்லை. மொழிகளையும் கடந்து, நாடுகளின் எல்லைகளையும் தகர்த்து, மின்காந்த அலைகளுக்குள் புவியைச் சுருக்கிப் பயணிக்கும் மானுடவாழ்வில், எழுத்தறியாத பாமரர் கையெழுத்தென இகழப்பட்ட கைநாட்டு நாகரிமாக அறியவியலாக ... இனி என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?
- பாரீஸ், மே 2007
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts) |