கடற்புவி அதிர்வும் மானுடரும்!
|
|
|
|
எழுதியவர்: அருந்தா பாரீஸ்
|
|
|
Monday, 03 January 2005
சுனாமி((Tsunami) - தமிழர் தாயகத்திலிருந்து ஒலித்த அலறல்களையும் அள்ளிச்சென்றிருந்தது வங்காளக்கடலின் பேரலைகள் என்பது இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம். இச்செய்தி எட்டிய கணத்திலிருந்து நாமெல்லாம் நடைப்பிணங்களாக புகலிடத்தின் இயந்திரச்சுற்றில். ஐபிசியும் தொலைபேசிகளுமாக தகவல்கள் சேரச்சேர 'மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான்!'. மிகப் பெரிய அவலத்தை தாங்கும் மன இறுக்கத்துடன் பணிக்கு சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
பல்லின மக்கள் வாழும் பாரீசில் இன்று முகம் தெரியாத வேற்றினத்தவர்கள் துக்கம் விசாரித்தமை புதுமையான ஆறுதலைத்தந்திருந்தது. இன்றைய தினசரிகளின் தலைப்பை பெற்றிருந்தது சுனாமி. அதிலும் 'பாரிசியன்' பத்திரிகை விரிவான செய்தியையும் கொடுத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (TRO) பற்றியும் விபரித்திருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவிருந்தது.
வேலையின் களைப்பினை சுமந்தவாறு ஓடிவந்து பேருந்தில் இடம் பிடிக்கிறேன். ஒல்லியான மெலிந்த தோற்றமுடைய அந்த வெள்ளைக்காரர் என்னைத் தேடிவந்து வணக்கம் சொல்கிறார். பின் நாட்டின் நிலை தொடர்பாக குசலம் விசாரிக்கிறார். குடும்பத்தினர் சுகம்பற்றி விசாரிக்கிறார். வேதனையுடன் தன் அனுதாபங்களைப் பகிர்கிறார். இவரை ஏற்கனவே எனக்குத் தெரியும்.....! ஞாபகத்திற்கு உடனே வரமாட்டாமல் எண்ணங்கள் அலைக்களித்தன. ஒருவாறு அடையாளம் தெரிந்ததில் புன்முறுவல்கண்டது முகம். என் அயலகத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு கணிதம் சொல்லிக் கொடுத்த யூத இனத்தவர். ஆமாம் மானிடம் வாழ்கிறது. என்களைப்பு என்னை விட்டுப் பறந்திருந்தது.
வண்டி அடுத்த தரிப்பிடத்தில் நிறுத்தப்படுகிறது. நெற்றியில் பொட்டிட்ட ஒரு யுவதி தன் மூன்று குழந்தைகளுடன் ஏறி இடம் பிடிக்கிறார். அவரிடம் செல்கிறார் இந்த கணித ஆசிரியர். காதினை கூர்மையாக்குகிறேன். வழமையான குசலவிசாரிப்பின் பின் சுனாமியின் அனர்த்தங்கள் பற்றிய கவலையை வெளிப்படுத்துகிறார் அந்த வெண்மனிதர். எந்தச்சலனத்தையும் காணாததால் திரும்பிப் பார்க்கிறேன். தான் கொண்டுவந்திருந்த கைப்பையை அவசரமாகத் திறந்து பாரிசன் பத்திரிகையை எடுத்து அம்மணியிடம் நீட்டுகிறார் அந்த வெண்மனிதர். 'இது எவ்வளவு? ஒரு ஈரோவா இரண்டு ஈரோக்களா?'-அம்மணி புருவத்தை உயர்த்தியவாறு... 'இல்லை இல்லை இது விற்பதற்கல்ல அம்மா!ää பார்ப்பதற்கு.... இதில் சுனாமிபற்றி செய்திகள் வந்திருக்கின்றன'. விளக்கமளிக்கிறார் வெண்மனிதர். 'தென்கிழக்காசியாவை சூறையாடியுள்ளது இந்த அனர்த்தம்ää உங்கள் குடும்பத்தவர்கள் அல்லது அயலவர்கள் பாதிக்கப்படவில்லையா?' அப்பாவித்தனத்தோடு வினவுகிறார் வெண்மனிதர். 'எங்களுக்கொன்றும் நடக்கவில்லை. நான் இந்தியன்' என்றது அம்மணியின் குரல். தூர இருந்த என் தலையில் ஓங்கிக் குட்டியது போலிருந்தது. பேச்சை நிறுத்திய வெண்மனிதர் எனக்கு அண்மையில் வந்ததை உணர்கிறேன். ஆனாலும் அவரை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டவளாகப் பரிதவித்தேன். ஒருவாறு மனதை திடப்படுத்தியவாறு அவரை ஆறுதலாகப் பார்க்கிறேன். 'அந்தப் பெண்ணும் உங்கள் மொழி பேசுபவர் தானே?' அந்தமனிதரிடம் எழுந்த வினா ஈட்டியாகப் பாய்ந்தது. 'இருக்கலாம்!' எனது ஒற்றைச் சொல்லிலான பதில் அவருக்கு புரிந்தது. எனது தரிப்பிடத்தில் இறங்கிய நான் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாதவளாக வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் தொப்பென விழுகிறேன். ஓவென அழவேண்டும் போலிருக்கிறது.
-27.12.2004
|