எழுதியவர்: சிவானி
|
|
|
Thursday, 24 May 2007
மாலதி பாரிஸ் நகரை அண்டிய புறநகர்ப் பகுதியில் கடந்த பத்தாண்டு காலமாக வாழ்ந்து வருகிறாள். இங்கு வந்து பெரிதாக வேலை என்று பார்த்ததில்லை. ஆனால் தாயகத்தில் நீண்ட காலம் வேலை பார்த்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவம் இந்த நாட்டிற்கு உதவாது.என்றாலும் மனதிற்குள் ஓர் உழைச்சல். ஐந்து வயதில் பாடசாலைக்குப் போனதிலிருந்து தொடர்ந்து படிப்பு பின்னர் வேலை என்றிருந்த அவளுக்கு பிரான்சுக்கு வந்து வீட்டிற்குள் இருப்பது மனஅழுத்தத்தைத் கொடுத்தது. இப்படியே தொடர்ந்து இருக்கக் கூடாது என்று பிரெஞ்சு மொழி வகுப்பிற்குப் போகத் தொடங்கினாள். சரளமாக மொழியைக் கற்றுக் கொள்ளாவிட்டாலும் ஓரளவு கற்றுக் கொண்டாள். சரி... இனி எங்கேயாவது ஒரு வேலை தேடினால் நல்லது. அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றியும் அடைந்தாள். பிரெஞ்சு சீமாட்டி ஒருவரின் வீட்டில் வீடடு வேலைக்காரி வேலை. அதை எல்லோரும் "மடம்(சீமாட்டி) வீட்டு வேலை" என்பார்கள். வாரத்தில் ஒரு நாளைக்கு நான்கு மணித்தியாலய வேலை. மடம் வீட்டுவேலை சரியான கடினம், நீர் போய்ச் சமாளிக்க மாட்டீர் என்று பலர் பலவாறாகச் சொன்னார்கள்.ஆனால் அவள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவளுக்குத் தேவை பணம். சும்மா இருந்தால் யார் பணம் தருவார்கள்? என்பது அவள் வாதம். வீடடு வேலைக்காரியாக அந்த வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாலதி வேலை பார்த்து வருகிறாள்.சீமாட்டியும் மாலதி... மாலதி என்று அவளுடைய பெயரை வாய் நிறைய அழைத்து நன்றாக வேலை வாங்குவார்.சில நாட்களில் ஒருவருக்கும் தெரியாமல் தேம்பித் தேம்பி அழுவதுமுண்டு. ஒருநாள் "உன்னுடைய பிள்ளைகளுக்குக் கொடு' என்று ஒரு பார்சலைத் கொடுத்தார் எசமாட்டி.. என்றைக்குமில்லாத அதிசயமாக இருக்கு என மாலதி தனக்குள் நினைத்துக் கொண்டாள். வீடடிற்கு வந்து பார்சலைத் திறந்த பார்த்தாள். மூன்று வகையான விலையுயர்ந்த சொக்கிலேட் பெட்டிகள். பெட்டியைத் திருப்பி பாவனை முடிவுத் திகதியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள்.. மூன்று மாதத்திற்கு முன்னரே அதனுடைய திகதி முடிந்துவிட்டது. அன்று முழுவதும் இனம் புரியாத ஒரு வேதனை அவளது மனதைக் குடைந்து கொண்டிருந்தது. ஊரில் சிலரது வீடுகளில் வேலை பார்க்கிறவர்களுக்கு மிச்சச் சாப்பாடுகளும் பழைய சாப்பாடுகளும் கொடுத்த காட்சிகள் மாலதியின் மனக்கண் முன் தோன்றின.
சிவானி - பிரான்ஸ்.
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts) |