எழுதியவர்: குயிலி
|
|
|
Thursday, 24 May 2007
இரண்டு வயதில் பிரான்சுக்கு வந்த என்னுடைய மகனுக்கு இப்பொழுது பதினைந்து வயது. உயர்கல்விக்கான பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கிறான்.அந்தப் பாடசாலையை என்று அழைப்பார்கள். எமது கிராமத்தில் பத்துப் பதினைந்த தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. ஆனால் ஒன்பதாம் வகுப்புவரை அவனுடன் தமிழ்ப் பிள்ளைகள் எவரும்படித்ததில்லை.தற்பொழுதுதான் தமிழ்ப் பிள்ளைகள் அவனுடன் படிக்கிறார்கள். முதல் நாள் வந்து சொன்னான் என்ரை வகுப்பில என்னோடு சேர்த்து மூன்று தமிழ் ஆக்கள் படிக்கிறம். அவையளுக்கும் தமிழ் நன்றாகக் கதைக்கத் தெரியும் என்று. எங்களுக்கும் சந்தோசம். ஒவ்வொரு நாளும் பாடசாலையில் நிகழ்ந்த சம்பவங்களை-எனக்குச் சொல்லக் கூடிய விடயங்களை மாத்திரம் என்னுடன் பகிர்ந்து கொள்வான். ஒரு நாள் ஒரு சொல்லைச் சொல்லி என்ன கருத்து என்று கேட்டான். முதலில் அவன் கேட்ட சொல் எனக்கு விளங்கவில்லை. என்னுடைய மகன் சில தமிழ் எழுத்துக்களை பிரெஞச் உச்சரிப்பில் தான் உச்சரிப்பான். திருப்பிச் சொன்னபோதுதான் எனக்குப் புரிந்தது. ஓகோ! இதுவா விடயம். பிரெஞ்சு மொழியில் இருப்பது போல தமிழிலும் கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. அதுபோவத்தான் இந்தச் சொல்லும் என்று அவனுக்குப் புரியவைத்தேன். பதினைந்து வயதில் ஒரு புதுச் சொல்லை அறிந்திருக்கிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். இன்னோரு நாள் அம்மா... அம்மா... என்று கூப்பிட்டுக் கொண்டு சமையலறைக்குள் வந்தான். வந்ததும் வராததுமாக கேட்டான் நீங்கள் என்ன சாதி என்று. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. இதென்னடா புதுப் பிரச்சனை என்று நினைத்துக் கொண்டு ஏன் என்ன விடயம் என்று கேட்டேன். இண்டைக்கு வேற வகுப்புப் படிக்கிற தமிழ்ப் பொடியன் என்னட்ட நீ என்ன சாதி என்டு கேட்டவன். நான் எனக்குத் தெரியாது என்டு சொன்னனான். நீ போய் உங்கட அம்மாட்ட கேள் அவா சொல்லுவா என்டு சொன்னவன் அதுதான் கேட்டனான் என்று அப்பாவித் தனமாகச் சொன்னான். 'நச்சுக்கனி கொடுக்கும் மரத்தினை வளர்ப்பதோடல்லாமல் அதன் விதைகளையும் தூவுகின்றார் பிஞ்சு மனங்களில்..' என்னும் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வந்தது.
குயிலி - பிரான்ஸ்
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
|