அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 16, 17, 18
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 16, 17, 18   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Thursday, 07 June 2007

16.


மண்ணைப் பண்படுத்தினால் அங்கு பொன் விளையும் என்பதை நிரூபிப்பதுபோலச் சித்திராவின் காணியில் பூத்துக் குலங்கிய மிளகாய், கத்தரி முதலிய செடிகளில் பிஞ்சும் காயும் நிறைந்திருந்தன. மொறுங்கன் நெல் குலைகட்டி நின்றது. தாய்ப்பால் குடித்துக் களித்துக் கிடக்கும் மதலையைப் போலத் தோட்டம் பருவமழையில் செழித்துக் கிடந்தது.
அங்கிருந்த ஒவ்வொரு செடியையும், பயிரையும் தனியாகப் பிடுங்கிவந்து காட்டினாலும் இது இன்ன இடத்தில் நின்றது என்று சொல்லக்கூடிய அளவுக்கு கண்ணுக்குள் எண்ணையை விட்டுக்கொண்டு கவனித்துப் பராமரித்த சித்திராவுக்கு, செல்லையரின் அனுபவமிக்க ஒத்துழைப்பு மிகவும் அனுகூலமாக இருந்தது.
பகலில் குரங்குகள் பறவைகள், இரவில் முள்ளம் பன்றி, முயல், காட்டுப்பன்றி இவற்றை விரட்டுவதற்காக ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் காவல் புரிந்தனர். சித்திரா விழிமூடாது பேய்போலத் தோட்டம் முழுவதும் அலைந்தாள்.
இந்நாட்களில் ஒரு இரவு குடிசையின் உள்ளேயிருந்து பொழுது போக்கிற்காக சாமான் கட்டிவந்த பத்திரிகைத் துண்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்த நிர்மலாவின் விழிகளில் ஒரு விளம்பரம் தட்டுப்பட்டது.
முல்லைத்தீவுத் தொகுதியிலிருந்து ஆசிரியர் பதவிக்கு ஜி. சீ. ஈ சித்தி பெற்றுள்ள வாலிபர்களையும், யுவதிகளையும் தேர்ந்தெடுப்பது பற்றிய விளம்பரம் அது. தெரிவுசெய்யப்படுபவர்கள் ஈராண்டுப் பயிற்சி முடிவில் முல்லைத்தீவுத் தொகுதியிலேயே நியமிக்கப்படுவர் எனக் கண்டபோது விண்ணப்ப முடிவு திகதி எப்போ என ஆவலுடன் பார்த்தாள் நிர்மலா.
இன்னமும் ஒருவார கால அவகாசம் இருந்தது. நிர்மலா எழுந்து தன் பெட்டியின் அடியிலே வைத்திருந்த தன் பத்திரங்களை எடுத்துப் பார்த்தபோது, விளம்பரத்தில் கேட்கப்பட்ட முக்கியமான பத்திரங்கள் இருக்கவே அவளுடைய ஆவல் வலுத்துவிட்டது.
சாமம் உலாத்திக் கொண்டுவந்த சித்திரா குடிசையில் சற்று நேரம் தங்கியபோது, நிர்மலா தன் எண்ணத்தை வெளியிட்டாள். அதைக் கேட்ட சித்திரா, சிறிதுநேரம் ஆழ்ந்து யோசித்துவிட்டு, 'நீ உந்த வேலைக்கு எழுதிப் போடுறது நல்லது! இனிமேல் தோட்டத்திலும் அவ்வளவு வேலையில்லை.... காலமை மணியம் மாஸ்ரரிட்டைப் போய் யோசனை கேட்டுத் தேவையானதைச் செய்யம்மா!' என்று சொல்லிவிட்டு மீண்டும் தோட்டத்தைச் சுற்றிவரப் போய்விட்டாள்.
 
17.


தை பிறப்பதற்குச் சிலநாட்கள் இருக்கையிலே மிளகாய்ச் செடிகளில் காய்கள் முற்றி இடைப்பழம் பழுக்கத் தொடங்கிவிட்டன. புதுக்காட்டு மண்ணில் நோயெதுவுமின்றிச் சகோதரிகளின் உழைப்பிலும், செல்லையரின் கண்காணிப்பிலும், மூன்று ஏக்கர் பரப்பளவில் நல்ல ஜாதி மிளகாய்ச் செடிகள், அரையளவுக்கு உயர்ந்து வளர்ந்து பழஞ் சுமந்து நின்றன. அதிகாலை தொடங்கி அந்தி மாலைவரை பனை ஓலைப் பட்டைகளில் அத்தனை பேரும் பழம் பிடுங்கிச் சேர்த்தும் மாளவில்லை.
குடிசையைச் சுற்றி நிலத்தைச் செதுக்கி மிளகாய்ப் பழத்தைக் காயப்போட்டனர். இரத்தச் சிவப்பாய் பெருமளவு நிலப்பரப்பில் காய்ந்த அந்தப் பழங்கள் அந்த உழைப்பாளிகள் சிந்திய உதிரக் கடலாகக் காட்சியளித்தன. காய்ந்த செத்தல்களைப் பக்குவமாகப் பத்திரப்படுத்திக் கொண்டனர்.
இடையில் நேர்முகப் பரீட்சைக்கு வவுனியாக் கல்விக் கந்தோருக்குச் செல்லையருடன் சென்றுவந்த நிர்மலா, 'இந்தத் தொகுதியிலை பிறந்து படிச்ச ஆக்களுக்குத்தான் முதலிடம் குடுப்பினமாம்!' என நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டாள்.
அவளுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. தைப்பொங்கல் தினத்தன்று, அவளைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், பலாலி ஆசிரியர் கலாசாலையில் முழுச் சம்பளத்துடன் அவள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெறவேண்டுமெனவும் கடிதம் கிடைத்தபோது, குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துப் போனது.
சித்திரா பெருமிதத்தில் கண்களில் நீர்மல்கத் தங்கையைக் கட்டிக்கொண்டாள். பவளமும், விஜயாவும் தங்களுக்கே உத்தியோகம் கிடைத்ததுபோல் துள்ளிக் கொண்டிருந்தனர். அறுவடை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலக்கடலையை விற்று நிர்மலாவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டனர்.
நிர்மலா பயிற்சிக் கல்லூரிக்குப் புறப்படும் நாள் வந்துவிட்டது. செல்லையருடன் யாழ்ப்பாணம் செல்வதற்குத் தன் புதிய பெட்டி சகிதம் புறப்பட்டு நின்ற நிர்மலா, வன்னிச்சியாரிடம் விடைபெற்றுச் சித்திராவிடம் வந்து, 'அக்கா போட்டுவாறன்!' என்று சொல்கையில் அழுதேவிட்டாள்.
இவ்வளவு காலமும் அவள் தன்னுடைய சகோதரிகளை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை. நிர்மலாவை அணைத்துக் கொண்டு, கன்னம் இரண்டிலும் கொஞ்சி, 'நிர்மலா! நாங்கள் ஆருமற்ற அனாதைகள்! கவனமாய் நடந்து கொள்ளம்மா!' என்று வழியனுப்பி வைத்தாள் சித்திரா.
 
18.
 
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தபோது, நிர்மலாவுக்கு வயிற்றைப் பிசைந்தது. வெட்டை வெளியில் அலரிகளும், வேம்புகளும் ஆங்காங்கு நின்றிருந்தன. யுத்தகாலத்து மொட்டைக் கட்டிடங்களின் நடுவே கல்லூரி அமைந்திருந்தது. அந்தப் புத்தம் புதிய சூழலிலும் அறிமுகமில்லாத மனிதர்கள் மத்தியிலும் அவள் மிகவும் தவிப்புடன் இருந்தாள்.
முதல்நாள்! தமிழ் வகுப்பெடுக்க வந்த பண்டிதர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதில் வல்லவர். ஒவ்வொருவராக அவரவர் ஊர், பெயா முதலியவற்றைப் புதிய மாணவ மாணவியரிடத்தில் விசாரித்துக்கொண்டு வந்தபோது, ஒரு மாணவன் எழுந்து, 'வன்னியராசன், பட்டிக்குடியிருப்பு' என்று கூறியதும், நிர்மலா திரும்பி அவனைப் பார்த்தாள். பட்டிக்குடியிருப்புக்கு அவள் போயிருக்காவிடினும், அது தன்னுடைய தொகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம் என்பதை அவள் அறிந்திருந்தாள். தன் பகுதியைச் சேர்ந்த ஒருவராவது கல்லூரியில் இருப்பது மனதுக்கு ஆறுதலாகவிருந்தது.
தொடர்ந்து பண்டிதர் மாணவிகளுடைய பெயரையும், ஊரையும் கேட்டு வந்தபோது நிர்மலாவின் முறையும் வந்தது. 'நிர்மலராணி வன்னியசேகரம்' என அவள் கூறியபோது, பண்டிதர் சிரித்தவாறே, 'அப்போ வன்னியிலிருந்து இரண்டுபேர் வந்திருக்கிறீர்கள். உமக்கு வன்னியராணி என்று பெயர் இருந்திருப்பின் மிகவும் நன்றாகவிருக்கும்!' எனச் சொன்னபோது, வகுப்பு கொல்லென்று சிரித்தது. நிர்மலா முகஞ்சிவக்கத் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
பண்டிதர் தொடர்ந்து, 'வன்னிநாடு வளமான நாடு! பாலுந் தயிரும், தேனும் நெய்யும் ஆறாய் ஓடும் அருமையான நாடு! இங்கே என்னிடம் பயின்ற அருமையான மாணவ, மாணவியர் பலர் அங்கே இருக்கின்றனர். நீங்கள் இரண்டுபேரும் அவர்களைப் போலவே நல்ல பிள்ளைகளாகத் தோற்றுகின்றீர்கள்!' என்று கூறியபோது, மாணவ மாணவியர் மீண்டும் சிரித்தனர். அவர்கள் மத்தியில் தன்னையும் வன்னியராசனையும் இணைத்துப் பண்டிதர் பேசியது நிர்மலாவுக்கு மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தியது.
வகுப்பு முடிந்து யாவரும் வெளியேறும் சமயத்தில் அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட நிர்மலாவுக்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.
'உங்கடை தகப்பனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன்! ... உங்கடை ஊருக்கு வைகாசிப் பொங்கலுக்கு வந்திருக்கிறன்! .... ஆனா உங்களை ஒருநாளும் நான் காணேல்லை!' என அவன் சிரித்துக் கொண்டே பேசியபோது, நிர்மலா எதுவுமே பேசத்தோன்றாமல் சங்கடப்பட்டுக் கொண்டாள்.
மற்ற மாணவிகள் தங்களிருவரையும் கவனிப்பதுபோல் தோன்றவே, அவளுடைய கன்னங்கள் மேலுஞ் சிவந்துவிட்டன. அவளுடைய மௌனத்தை அவதானித்த வன்னியராசன், 'நீங்கள் எங்கை படிச்சனீங்கள்?' எனக் கேட்டான். 'வித்தியானந்தாவிலை!.....'
'நான் நினைச்சது சரிதான்!..." என்று சொல்லிய வன்னியராசன், அவளுடைய தவிப்பைப் புரிந்துகொண்டு, 'உங்களுக்கு உதவி ஏதாவது தேவையெண்டால் ஊரவன் எண்ட முறையிலை என்னட்டைக் கேளுங்கோ!' என்று ஆதரவாகக் கூறி விடைபெற்றுக் கொண்டான்.
நிர்மலாவின் படபடப்பு அடங்குவதற்கு வெகுநேரமாயிற்று.


மேலும் சில...
ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 04:44
TamilNet
HASH(0x55ae47b26868)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 04:44


புதினம்
Tue, 19 Mar 2024 04:44
















     இதுவரை:  24681610 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1960 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com