அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 20
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 20   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 23 July 2007

20.
இவ்வளவு காலமும் சேர்த்து வைத்த மிளகாய்ச் செத்தலைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் போதிய இடவசதி இல்லாததால், மிளகாய்ச் செத்தலை விற்றுவிடத் தீர்மானித்தார்கள்.


யாழ்ப்பாணத்து வியாபாரிகள் லொறியில் வந்து செத்தல் அத்தனையையும் மொத்தமாக வாங்கிக்கொண்டு, பணத்தைக் கொடுத்தபோது, சித்திரா திக்பிரமை பிடித்தவள்போல் நின்றுவிட்டாள்.

பவளமும், விஜயாவும் தங்கள் கண்களையே நம்பமுடியாமல் வாய்திறந்து பார்த்து நின்றனர். புத்தம் புதிய சலவை நோட்டுக்கள்! ஆயிரம் ரூபா மடிப்புக்களாக நாற்பது கட்டுக்கள்! அவற்றைச் சரிபார்க்க எண்ணிய சகோதரிகளின் விரல்கள் நடுங்கின. செல்லையர் சிரித்தார். 

 
முழுமையாக இவ்வளவு காலமும், ஆயிரம் ரூபாவைத்தானும் கண்டிராத அவர்கள், நாற்பதினாயிரம் ரூபாவை ஒருமித்து தங்கள் உழைப்பின் கூலி என்று கண்டபோது மலைத்துப் போய்விட்டனர்.
பெத்தாச்சி உடல் நிலை தளாந்திருந்ததால், குடிசையின் உள்ளே படுத்திருந்தாள்.


பணத்தை அப்படியே கைகளில் நிறைத்துக் கொண்டு, பெத்தாச்சியினருகில் சென்று பணமத்தனையையும் அவளுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, 'பெத்தாச்சி! எழும்பிப் பாரணை! நாப்பதாயிரம் ரூபா பெத்தாச்சி! நாப்பதாயிரம்!" என்று சித்திரா கூறியபோது, பெத்தாச்சி தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டாள். பஞ்சடைந்துவிட்ட விழிகளால் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தைக் கவனித்த பெத்தாச்சி, சற்றுநேரம் எதுவுமே பேசவில்லை.

 
பின் சட்டென்று விம்மிவெடிக்கும் குரலில், 'என்ரை புள்ளையள் ஆற்றை பரம்பரையிலை வந்தவளவை எண்டு எனக்குத் தெரியும்! என்ரை அப்பு மாப்பாண வன்னியன்ரை சிங்கக் குட்டியளல்லோ!.... இஞ்சைவிடு, நான் இப்பவே குலசேகரத்தான் வீட்டை போய், அவனுக்கு முன்னாலை நிண்டு, ..... டேய் பொறுக்கி! உன்னைப்போல களவெடாமல், கள்ளக் கையெழுத்துப் போட்டுக் காணி, பூமி புடிக்காமல்.... என்ரை பொட்டைக் குட்டியள், இரத்த வேர்வை சிந்தி உழைச்ச காசைப் பாற்றா! எண்டு நாலுக்காறு குடுத்திட்டு வரோணும்!" என ஆவேசங்கொண்டு எழும்பிய வன்னிச்சியார், தடுமாறி நிலத்தில் விழுந்து விட்டாள்.


சித்திராவும் தங்கைகளும் சட்டென்று அவளைத் தாங்கிப் பிடிக்க முயன்றபோதும், பெத்தாச்சிக்கு அடி பலமாகப் பட்டுவிட்டது. 'எங்கையணை நோகுது?" எனச் சித்திரா அவளை அணைத்துக்கொண்டு கேட்டபோது, 'விடடி சிறுவலி! ... எனக்கென்ன இனி நோயும் நொடியும்!" என்று முனகிக்கொண்டே மீண்டும் பாயில் சுருண்டு படுத்துவிட்டாள்.


அடுத்தநாட் காலையில் முதல் வேலையாகச் சித்திரா, செல்லையரையும் அழைத்துக்கொண்டு, முல்லைத்தீவு மக்கள் வங்கிக்குச் சென்று தங்கைகள் மூவருடைய பெயரிலும் தலா பத்தாயிரம் ரூபா சேமிப்புக் கணக்கில் போட்டுவிட்டு, முல்லைத்தீவில் ஒரு நீரிறைக்கும இயந்திரத்தையும் வாங்கிக்கொண்டு திரும்பினாள்.


அவளுடைய திட்டப்படி அடுத்த சில நாட்களுக்குள் ஒரு அறையையும் நீண்ட மாலையும் கொண்ட ஒரு சிறிய கல்வீடும், காணியின் மேற்குப் பக்கத்தில் ஒரு அகலமான தோட்டக் கிணறும் கட்டும் வேலைகள் ஆரம்பித்திருந்தன.

 
வயலில் விளைந்த நெல்லை உணவுக்காகப் பத்திரப்படுத்திக் கொண்டு, கச்சான், காய்கறி முதலியவற்றை விற்ற பணத்திலும், நீரிறைக்கும் இயந்திரம் வாங்கி எஞ்சிய ரூபா ஏழாயிரத்திலும் வீட்டுவேலையும், கிணற்று வேலையும் துரிதகதியில் முன்னேறின.

 
சித்திரா ஒரு முழு ஆணுக்கு இருக்கக்கூடிய திறமையுடனும் ஆற்றலுடனும் வேலைகளை மேற்பார்த்துக் கரியங்களைச் செயற்படுத்தி வந்தாள். அவளுடைய முகத்தில் சதா பிரதிபலித்த உறுதியும், துணிவும் ஆட்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவதில் அவளுக்கு மிகவும் உதவின.


சித்திரை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த நிர்மலா, தோட்டத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு மலைத்துப் போய்விட்டாள். விஜயாவும், பவளமும் நிர்மலாவை அழைத்துச் சென்று வீட்டையும் கிணற்றையும் காட்டிக் குதூகலித்தனர். 'நீ வந்த பாத்த உடனை திகைச்சுப் போடோணும் எண்டுதான் நாங்கள் உனக்கு இதுகளைப் பற்றியொண்டும் எழுதேல்லை!" என்று சொல்லி அவர்கள் மகிழ்ந்தபோது, சித்திராவும் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

 
குடிசையினுட் படுத்திருந்த பெத்தாச்சியின் அருகில் சென்றபோது, நிர்மலாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. தனக்கு நினைவு தெரிந்த நாட்தொட்டு குடும்பத்தின் முதுகெலும்பாய் உற்சாகத்துடனும், மிடுக்குடனும் அலுவல்களைக் கவனித்து வந்த பெத்தாச்சி, இன்று எழுந்த நடமாடமுடியாத நிலையில் படுத்திருந்ததைக் கண்டு, அவள் அழவாரம்பித்து விட்டாள்.

பின், குழந்தையைப் போன்று அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு, தான் வாங்கி வந்திருந்த திராட்சைப் பழங்களை அவளுக்கு ஒவ்வொன்றாக ஊட்டியவாறே, தன் கல்வியைப்பற்றியும், கல்லூரிப் புதினங்களையும் அவளுக்குக் கூறிக்கொண்டிருந்தாள் நிர்மலா.
பின்பு, தான் இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தில் வாங்கிவந்த துணிமணி, அலங்காரப் பொருட்கள் முதலியவற்றை அவள் ஆசையோடு ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கொடுத்தபோது, பவளமும் விஜயாவும் அவற்றைப் பெருமகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

சித்திரா மட்டும் தனக்கு வளையல்களோ, வேறெந்த அலங்காரப் பொருட்களோ வேண்டாம் என மறுத்துவிட்டாள். செல்யைர், நிர்மலா தனக்கு வாங்கிவந்த வேட்டியையும், துவாயையும் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டார்.


இரவு உணவருந்திய பின்னர், சித்திரா எருதுகளுக்கு வைக்கோல் போடுவதற்கு மாட்டுக் கொட்டகைக்குப் போய்விட்டாள். நிர்மலாவும் சகோதரிகளும் புதிய வீட்டின் அறைக்குள் படுத்துக் கொண்டனர். பவளமும், விஜயாவும் நிர்மலாவைத் தூங்க விடவில்லை. 

 
'அக்கா! நீ யாழ்ப்பாணத்திலை படமொண்டும் பாக்கேல்லையோ?" என்று விஜயா கேட்டபோது, 'இல்லையடி! என்னோடை படிக்கிற பொட்டையள் போறவளவை... அக்காவும் நீங்களும் இஞ்சை இந்தமாதிரிக் கஷ்டப்பட, நான்மட்டும் அங்கை படம் பாத்துக்கொண்டு சந்தோஷமாய் இருப்பனே!" என்று அவள் கூறியபோது பவளத்துக்கும் விஜயாவுக்கும் இதயம் கனிந்துவிட்டது.


அவர்கள் மூவரும் சித்திராவை ஒரு அன்னையின் ஸ்தானத்தில் வைத்து மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடத்தினார்களே அல்லாமல், தங்களுக்குள் தோழிகள் போலவே பேசிக்கொள்வர். சில சமயம் சண்டை பிடித்துப் பின் சமாதானமாகியும் போவார்கள். ஆனால் சித்திராவின் முன்னிலையிலோ, பெத்தாச்சியின் அருகிலோ மிகவும் நல்ல பிள்ளைகளாக நடந்துகொள்வது வழக்கம்.

 
நிர்மலா பயிற்சிக் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிக் கூறிவருகையில், 'அந்தப் பட்டிக்குடியிருப்பு மாஸ்டர் எனக்கு நல்ல உதவி! .... நல்லாய்ப் பாடுவார்! ... மிகவும் கெட்டிக்காறர்! " என்பதுபோன்ற விஷயங்கள் அடிக்கடி வந்து போகவே, அதைக் கவனித்த விஜயா, 'அக்கா! உன்ரை அந்தப் பட்டிக்குடியிருப்பு மாஸ்டர் எப்பிடி வடிவான ஆம்பிளையோ?" என்று கேலியாகக் கேட்டதும், நிர்மலா தன்னருகில் படுத்திருந்த விஜயாவின் தொடையை வெடுக்கெனக் கிள்ளி, 'பாற்றி பவளம்" இவளின்ரை கதையை!" என்று சிணுங்கினாள். விஜயா வலி தாங்கமுடியாமல் ஐயோ என்று கூவ, பவளம் சிரிக்க அறையினுள் ஒரே கலகலப்பாக இருந்தது.


அப்போதுதான் மாட்டுக் கொட்டகையிலிருந்து வந்த சித்திராவுக்கும் இவர்களுடைய உரையாடலின் இறுதிப் பகுதி தெளிவாகக் கேட்டது. அவளுடைய மனம் எத்தனையோ விஷயங்களையிட்டுச் சிந்தித்துக் கொண்டது.


'அறைக் கதவைப் கவனமாய்ப் பூட்டிக்கொண்டு படுங்கோ!" என அவள் வெளியே நின்று சொன்னபோது, தங்கைகள் மூவரும் பக்கென்று அடங்கிப் போனார்கள்.
.... இவ்வளவு நாளும் என்னோடை வெய்யிலுக்கையும் மழைக்கையும் கஷ்டப்பட்டதுகள்! இப்ப எண்டாலும் சிரிச்சுச் சந்தோஷமாயிருக்குதுகள்! ... சின்னவளும் இருந்திருந்தால் எவ்வளவு குதூகலமாய் இருப்பாள்! ... பள்ளிக்கூடத்துக்கும் விட்டிருக்கிலாம் .... எங்கடை வாழ்வு இண்டைக்கு இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ரை குமாருதான்! ..
சித்திரா குமாருவின் சிதையிருந்த பக்கம் பார்த்து மானசீகமாக வணங்கிக் கொண்டு பெத்தாச்சியனருகில் போய்ப் படுத்துக் கொண்டாள்.
 
000
சித்திரை வருடப்பிறப்பு நெருங்கியது. சித்திரா சகோதரிகளைப் பெத்தாச்சியினருகில் கூட்டி வைத்துக் கொண்டு, 'இந்த முறையெண்டாலும் சித்திரை வரியத்தைச் சீராய்க் கொண்டாடுங்கோ! உங்களுக்குத் தேவையான உடுப்பு, வேறை ஏதும் சாமான் தேவையெண்டால் சொல்லுங்கோ!" என்றபோது, சகோதரிகள் மூவரும் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

'அக்கா! நான் யாழ்ப்பாணத்திலை வாங்கி வந்த உடுப்புகள் எல்லாருக்கும் காணும்! ... ஆனால் ஒரு தையல் மிஷின் வாங்கினால் நல்லது .... இவளைவையும் தைக்கப் பழகிக் கொள்ளிலாம்!" என நிர்மலா சொன்னபோது, சித்திராவுக்கும் அந்த யோசனை நல்லதாகவே பட்டது.

'ஓமடி நிர்மலா! .. ஊர்ச்சனத்துக்குத் தைச்சுக் குடுத்தும் சம்பாதிக்கிலாம்! .. அதுக்கென்ன வாங்குவம்!" என்ற சித்திரா ஆமோதித்தபோது, இளையவள் விஜயா, எதையோ கேட்க நினைத்து, 'அக்கா!" என்று அழைத்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டாள்.
அவளுடைய முகத்தில் தோன்றிய ஆவலையும், பின் அதை அவள் கட்டுப்படுத்திக் கொண்டதையும் கவனித்துவிட்ட சித்திரா, 'என்னம்மா விஜயா! விருப்பமானதைச் சொல்லன்! .. நீயும் எங்களோடை கொஞ்ச நஞ்ச வேலையே செய்திருக்கிறாய்!" என்று தூண்டியதும், 'உங்கை இப்ப எல்லாற்றை வளவிலும் ரேடியோ இருக்குதக்கா ... எங்களுக்கும் ..." என்று அவள் குழந்தையாய்க் கேட்டபோது சித்திராவினால் அவளுடைய ஆசையை மறுக்க முடியவில்லை.


மறுநாளே செல்லையருடன் முல்லைத்தீவுக்குச் சென்ற சகோதரிகள், சித்திரா கொடுத்தனுப்பிய பணத்தில் ஒரு நல்ல தையல் இயந்திரத்தையும், அழகானதொரு சின்ன வானொலியையும் இன்னும் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு திரும்பினர்.

இன்னும்வரும்..


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 11:52
TamilNet
HASH(0x55e2bb8197d0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 11:52


புதினம்
Tue, 19 Mar 2024 11:52
















     இதுவரை:  24681995 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1193 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com