அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 07
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 07   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 17 January 2007

7.

ராசம்மாக் கிழவி குலசேகரத்தார் வீட்டிலிருந்து தான் அறிந்துகொண்ட தகவலுடன் புறப்பட்டுச் சென்ற சிலமணி நேரத்துக்குள்ளாகவே அவள் பற்ற வைத்தது ஊர் முழுவதும் புகைய ஆரம்பித்து விட்டது.

வீட்டுப் பெண்கள் தாம் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டுவிட்டு வேலியோரங்களில் கூடிக குசுகுசுத்தனர். இளவட்டங்கள் வீதியோரங்களில் பேசிக் கொண்டனர். சித்திராவையும் குமாருவையும் இணைத்துப் பல்வேறு கதைகள், பல்வேறு ரீதியில் அந்த வட்டாரமெங்கும் பரவி விட்டன.

.... பொங்கலுக்குப் போன சித்திரா குமாருவுடன் வயல் வெளியிலே தனியே காணப்பட்டாளாம்! .... கோவிலடியிலை வன்னிச்சியாரும் சித்திராவின் தங்கைகளும் அவளைக் காணவில்லையெனத் தேடித் திரிந்தனராம்! ... சித்திராவுக்கு இப்ப மூண்டு மாதமாம்!  ...

பலருடைய விபரீதக் கற்பனைகள் முழு வேகத்துடன் செயற்பட்டு பல விபரீதக் கதைகளைப் பிரசவித்திருந்தன.

குலசேகரம் பிள்ளை ஒரு மாத காலமாக மச்சம் சாப்பிடுவதை நிறுத்தி, அம்மாள் கோவில் அலுவல்களில் முக்கிய பங்கெடுத்திருந்தார். பொங்கலுக்கு அடுத்த நாள் விடியற் காலையிலே மனைவியையும் மகனையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆலயத்தில் அலுவலாக நின்றவர், கார் திரும்பியதும் நேரே முல்லைத்தீவுக்குச் சென்று நல்ல பெரிய கருங்கண்ணிப் பாரை மீன்களாகப் பார்த்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். நித்திரைக் களைப்புத் தீர நன்றாக முழுகிவிட்டு, முன் விறாந்தையில் ஒரு களுத்துறைப் போத்தலைத் திறந்து வைத்துக் கொண்டு உடல் அசதியைப் போக்கிக் கொண்டிருந்தார்.

அந்நேரம் அங்கு அவசரமாக வந்த அவருடைய நெருங்கிய நண்பர் கணுக்கேணிக் கந்தையர் .. தான் வந்த சமயம் நல்ல சமயந்தான்! ... என மனதுக்குள் சந்தோஷப் பட்டுக்கொண்டார். குலசேகரத்தார் போத்தலைக் கொடுக்கவும் ஒரே மூச்சில் காப்போத்தலை உள்ளே விட்டுக்கொண்ட கந்தையர், உதட்டைக் கோணிக்கொண்டு சுருட்டு ஒன்றைப் பற்றிக் கொண்டார்.

பின்பு கதிரையை குலசேகரத்தாருடைய சாய்மனைக் கதிரைக்கு அருகில் இழுத்துக்கொண்டு உட்கார்ந்த கந்தையர், தன் காதுக்குள் சொன்ன சில விஷயங்களைக் கேட்ட குலசேகரத்தாருடைய முகம் ஒரு தடவை கறுத்துப் பின் ஜிவ்வென்று சிவந்தது.

'உங்கடை குலமென்ன! கோத்திரமென்ன! வன்னியா குடும்பத்திலை இப்பிடி ஒண்டு நடக்கவோ?" கந்தையர் உரக்கவே பொருமிக் கொண்டார்.

'எங்கையோ கிடந்த வப்பனுக்கு இந்த அளவுக்குத் துணிவு வந்திட்டுதோ ... இண்டைக்குப் பொழுது படுறதுக்கிடையிலை அவனை நான் இந்தப் பகுதியை விட்டுக் கலைக்காட்டில் என்ரை பேரை மாத்திக் கூப்பிடு!" என்று கொதித்தார் குலசேகரத்தார்.

'அது சரிதானே! நீங்கள் அவனைச் சும்மா விடாயள் எண்டு எனக்கு நல்;லாய்த் தெரியும்!" எனத் தூபமிட்ட கந்தையரோடு சேர்ந்து சில திட்டங்களைத் தீட்டிக் கொண்டார் குலசேகரத்தார்.

போதை அதிகமாகியபோது குலசேகரத்தாரால் சும்மா இருக்க முடியவில்லை. 'ஒருக்காப் போய் உவளவையை எச்சரிச்சு வைக்காட்டில் என்னை ஊருக்குள் தலை காட்டாமல் பண்ணிப் போடுவாளவை!" என்று தனக்குள் கூறிக்கொண்ட குலசேகரத்தார், கந்தையரை அனுப்பிவிட்டு வன்னியா வளவை நோக்கிப் புறப்பட்டார்.

மத்தியான வெய்யில் கொளுத்தித் தள்ளியது. அவருடைய மனதில் மூண்டெழுந்த ஆத்திரத்தைச் சாராய போதை மேலும் அதிகரித்துக் கொண்டிருந்தது.

இந்த வெறியுடனும் வேகுரத்துடனும், அவர் வன்னியா வளவை அடைந்தபோது வன்னிச்சியாரும், சித்திராவும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். குலசேகரத்தாரைக் கண்டதும் சித்திரா சட்டென்று எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

நேரே முற்றத்தில் போய் நின்ற அவர், 'பொம்புளைப் புள்ளையளை வைச்சு வளக்கிறதெண்டால் நேர்சீராய் வளக்கோணும்! .... இல்லாட்டிப் பொலிடோலைக் கிலிடோலைக் குடுத்துக் கொல்லிப் போடோணும்!... " என உரத்த குரலில் அதட்டியதும், வன்னிச்சியாருக்கு உடல் பதறியது.

'என்னடா குடிச்சிட்டு வந்து நியாயம் பறையிறாய்!... என்ரை புள்ளையளைப் பற்றி ஏதும் கதைச்சியெண்டால் நாக்கை அறுத்துப் போடுவன் தெரியுமே!" அவள் பொல்லையும் ஊன்றிக்கொண்டு எழுந்துவிட்டாள்.

'உனக்குக் கோவத்துக்கு ஒண்டும் குறைச்சலில்லை! .. ராத்திரி உவள் சித்திராவை அவன் பொறுக்கி குமாரு எங்கை கொண்டுபோய் வைச்சிருந்திட்டுக் கொண்டு வந்தவன் எண்டது உனக்குத் தெரியுமே!"

அவருடைய வக்கிரமான தூத்தரிப்பு உள்ளேயிருந்த சித்திராவின் நெஞ்சைப் பொசுக்கிக் கொண்டு இறங்கியது.

எவ்வளவோ காலமாகத் தங்கள் சொத்துக்களை ஆண்டனுபவித்து, அதன் மூலமாகவே சமூகத்தின் உச்சிக்குப் போய்விட்ட குலசேகரமாமா, தன்னை மருமகளாய் ஏற்றுக்கொள்ள மறைமுகமாக மறுத்ததையிட்டும் சித்திரா அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் அவர் இன்று தங்கள் வளவுக்கே வந்து தன்னையே கீழ்த்தரமாகப் பேசுகையில் அவளுக்கு குப்பென்று ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. தேகம் நடுங்கியது.

'சித்திரா கெர்ப்பனியாம் எண்டு ஊர் முழுக்கக் கதைக்குது! ... நாலு மனிசருக்கு முன்னாலை என்னை வெளிக்கிடாமல் பண்ணிப் போட்டியள்! ... இதுக்குத்தானே அண்டைக்கு அவசரமாய்க் கலியாணமும் பேசிக்கொண்டு வந்தனீ? ... செய்தாலுஞ் செய்தாள் .. ஒரு நல்லவன் நறியவன்கூடக் கிடைக்கேல்லையே உவளுக்கு! ...

சித்திராவுக்கு மேலும் பொறுக்க முடியவில்லை. தேங்காய் உடைக்கும் கொம்புக் கத்தியையும் தூக்கிக் கொண்டு சரேலென்று வெளியே வந்தவள், 'பொத்திடா வாயை! .. என்னைப்பற்றி இனிமேலும் ஏதும் கதைச்சியெண்டால்...!" என்று ஆவேசத்துடன் பாய்ந்த சித்திராவை நிர்மலாவும், பவளமும் ஓடிவந்த பிடித்;துக் கொண்டனர். இளையவர்களான விஜயயாவும், செல்வமும் கதறியழத் தொடங்கி விட்டனர்.

நடுங்கியவாறே துடித்த வன்னிச்சியார், 'விடுங்கோடி அவளை ... உந்தமாதிரிக் கதைச்சவனைக் கொல்லாமல் விடுறதே! ...விடுங்கோடி அவளை!" என்று குமுறினாள்.

கூந்தல் அவிழ்ந்து கலைய, கண்கள் சிவந்து நீர் சொரிய ஓங்கிய கத்தியுடன் காளிபோல ஆவேசமாய் நின்ற சித்திராவைக் கண்ட குலசேகரத்தார் பயந்து போனார்.

இரண்டு யார் பின்வாங்கிக் கொண்டே 'நான் ஒருதன் மட்டுமோ கதைக்கிறன் ... ஊருச்சனம் எல்லாரையுமல்லோ கொல்லவேணும்! ... இனிமேல் எண்டாலும் அவன் இஞ்சை அண்ட விடாதேயுங்கள்!" என்று குலசேகரத்தார் கூறியதும் வன்னிச்சியாருக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை.

'நான் ஆரையும் அண்டுவன் விடுவன்! .. நீ ஆரிடா கேக்கிறது? ... சித்திராவை அவன் குமாருவுக்குத்தான் நான் முடிச்சுக் குடுப்பன்! .... நீ போய் அறிஞ்சதைச் செய்!" ஆவேசமாகக் கூவினாள் பெத்தாச்சி.

ஆக்ரோஷத்துடன் திமிறிய சித்திராவை அவளுடைய தங்கைகளால் வெகுநேரத்துக்குப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதை அவதானித்த குலசேகரத்தார், மெல்ல நழுவிக்கொண்டே, 'என்னை வெட்ட வந்தவளை நான் என்ன செய்யிறன் பாரன்!" என்று கறுவிக்கொண்டே வேகமாக நடந்தார்.

'செய்யிறதை இப்ப செய்திட்டுப் போவன்ரா!" சித்திரா குமுறிக் கூவினாள்.

தங்கைகளின் பிடி தளர்ந்தபோது, சித்திரா கத்தியை எறிந்துவிட்டுப் பெத்தாச்சியைக் கட்டிக்கொண்டு கோவெண்டு கதறியழுதாள். வெகுநேரம் வரை விம்மி வெடித்து அழுது கொண்டிருந்த அவளைப் பெத்தாச்சி தன் மடியில் சாய்த்துக்கொண்டு ஆதரவுடன் அவள் முதுகை வருடிக் கொண்டிருந்தாள். அவள் தீவிரமான சிந்தனையிலே ஆழ்ந்திருந்தாள்.

நீண்டநேரமாக யோசித்திருந்த வன்னிச்சியார் பின்பு உறுதியான குரலிலே, 'எப்பிடியும் குமாருவைச் சித்திராவுக்குச் செய்து வைக்கோணும்! ... ஆளடுக்கில்லாட்டிலும் அவன் நல்ல குணசாலி! .. காசுபணம் இல்லாட்டியும் மானம் மரிசாதையானவன் .... நான் போய் அவன்ரை மாமனோடை கதைக்கிறன் ...." என்றபோது அவளுடைய மடியிலே முகம் புதைத்துக் கிடந்த சித்திரா எழுந்து, 'அப்பிடிச் செய்தால் பெத்தாச்சி ... ஊர்க்கதையை நாங்கள் மெய்ப்பிக்கிறதாய் அல்லவோ இருக்கும்!" அவளுடைய தொண்டை கட்டியிருந்தது.

'எடி விசரி! ... அவனை நீ முடிச்சாலும் ஊர் அப்பிடித்தான் கதைக்கும் .... முடியாட்டிலும் அப்பிடித்தான் கதைக்கும் ... கலியாணம் முடிஞ்சுதோ நாலு நாளைக்குக் கதைப்பினம் ... பிறகு விட்டிடுவினம் .. ஆனால் இதைச் செய்யாமல் விட்டியோ... உனக்கு மட்டுமில்லை ... உன்ரை தங்கச்சியளுக்குக்கூட ஒருநாளும் கலியாணம் ஒப்பேறாது! ...." என்று விளக்கியபோது சித்திராவுக்கு உண்மை, மெல்ல மெல்ல, மிகவும் வேதனையுடன் புரிந்தது.

தன் வாழ்விலே சிலரால் வேண்டுமென்றே சுமத்தப்பட்ட ஒரு பழிச்சொல், தன்னை மட்டுமல்லத் தன் தங்கைகளின் எதிர்காலத்தைக்கூட வெகுவாகப் பாதிக்கப் போகின்றதே எனச் சித்திரா மிகவும் கலங்கினாள்.

அவளுடைய துயரந் தோய்ந்த விழிகளைக் கவனித்த வன்னிச்சியார், 'மோனை! குமாரு படிக்கேல்ல ... பெரிய குலத்திலை பிறக்கேல்லை எண்டு கவலைப்படாதே! ... அவன் நல்ல பிரயாசி! ... நல்லவன்! ... நீயும் அவனோடை மனம் வைச்சுக் கஷ்டப்பட்டால் நல்லாய் வாறதுக்குக் காலஞ் செல்லாது!" எனக் கூறியபோது, சித்திராவுக்குத் தனக்கெதிரே ஒரு வழி திடீரெனத் திறந்து கொண்டது போலத் தெரிந்தது. தன்னை மட்டுமல்ல, தன் தங்கைகளையும் கவனித்துக் கொள்ள இந்த முடிவு துணை செய்யும் என்று அவள் நிச்சயமாக நம்பினாள்.

'எனக்கு ஒரு கவலையும் இல்லை பெத்தாச்சி! ... நீங்கள் சொல்லுமாப் போலை செய்யுங்கோ!" நாத் தழுதழுக்க உறுதியாகக் கூறினாள் சித்திரா.

(வளரும்)

 

 


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 10:52
TamilNet
HASH(0x560fa142d3d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 10:52


புதினம்
Tue, 19 Mar 2024 10:52
















     இதுவரை:  24681922 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1200 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com