அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 05
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 05   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Friday, 01 December 2006
5.

திடீரென்று, சித்திரா அமர்ந்திருந்த இடத்திற்கு அண்மையில் உரத்த குரலில் குரல்களும், கூச்சலும் கேட்கவே அவள் திடுக்கிட்டுப்போய்த் திரும்பிப் பார்த்தாள்.

  மக்கள் முண்டியடித்துக் கொண்டு சிதறிப்போய் நாலா பக்கமும் ஓட ஆரம்பித்தார்கள். 'ஐயோ சண்டை புடிக்கிறாங்கள்!" என்று பெண்களின் கூக்குரல் கேட்கவே, சித்திரா பாயை வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.

  அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த மின்சார தீபங்கள் இந்தக் கலவரத்தில் அணைந்து விட்டன. பெண்களின் ஓலமும், குழந்தைகளின் அலறுலுமாக அந்த இடமே திமிலோகப்பட்டது. அந்தப் பிராந்தியத்தைவிட்டு அகன்றுவிட வேண்டும் என்ற தவிப்பில் மக்கள் தரையில் அமர்ந்திருந்தவர்கள் மேலும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். சித்திரா என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போய் நின்றபோது, எதிரே ஓடிவந்த ஒருவன் அவள்மீது மோதிக்கொண்டு சென்றான். எளிய நாயள்! என்று வாய்விட்டுத் திட்டிய சித்திரா, பெத்தாச்சியும் தங்கைகளும் என்ன செய்வார்களோ எனத் தவித்தாள்.

  அவள் வெளிச்சம் தெரிந்த திசையை நோக்கி ஓதுங்கிச் செல்வதற்குள், சண்டையில்; ஈடுபட்டிருந்த கோஷ்டிகள் அவள் நின்றிருந்த இடத்திற்கே வந்துவிட்டிருந்தனர். கற்கள் பறந்தன. தன்னாள் யார் மாற்றாள் யார் என்று தெரியாமலே பலர் மோதிக் கொண்டபோது அந்த இடமே அல்லோல கல்லோலப்; பட்டது. நட்டநடுவில் அகப்பட்டுக்கொண்டு அவள் திணறியபோது ஒரு உருவம் அருகில் ஓடிவந்து கரத்தைப் பற்றி, 'இதுக்கை எப்பிடி அம்புட்டனீ சித்திரா?" என்றவாறே அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஒளியிருந்த இடத்திற்கு இட்டுச் சென்றபோது துணுக்குற்றுப்போன அவள், அந்தக் குரலைக் கேட்டபோது, இது குமாருதான் என்று புரிந்து கொண்டிருந்தாள்.

  கலவரம் நடந்த இடத்தைவிட்டுப் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றதும் குமாரு தன் பிடியை விட்டு, 'எங்கை சித்திரா உன்ரை தங்கச்சியள்?" என்று கேட்டபோது, சித்திரா தன்னிலைக்குத் திரும்பியவளாய், 'கடையள் பாக்கவேணுமெண்டு ஆசைப்பட்டுப் பெத்தாச்சியோடை போனவளவை.... எங்கை மாறுப்பட்டினமோ தெரியேல்லை!" என்று குழப்பத்துடன் கூறினாள்.

  'வா! போய்த் தேடிப்பாப்பம்!" எனக் குமாரு அழைக்கவே எதுவுமே பேசாமல் அவனுடன் போனாள் சித்திரா.

  கோஷ்டிச் சண்டை ஏற்பட்ட இடத்திற்கு ஸ்தலத்திலே இருந்த பொலிசார் வந்ததும் நிலமை முன்போல் அமைதியாகி விட்டிருந்தது.

  முன்னால் சென்ற குமாருவைப் பின்தொடர்ந்த சித்திரா அந்தச் சனநெரிசலில் பெத்தாச்சியையும் சகோதரிகளையும் தேடிக் களைத்துப் போனாள். ஆலயத்தின் சுற்றுப்புறம் எங்கும் தேடியும் அவர்களைக் காணவே முடியவில்லை. இடையில் எதிர்ப்பட்ட தெரிந்த மனிதர்களிடம் விசாரித்தபோதும் அவர்களுடைய முயற்சி பலனளிக்கவில்லை.

  'ஒருவேளை அவையள் என்னைக் காணேல்லை எண்டு வீட்டை போட்டினமோ?" சித்திரா தன் சந்தேகத்தைக் கூறியபோது, பலமணி நேரமாக அவளுடன் கூடியலைந்த குமாருவுக்கும் அது சரியாகவே பட்டது.

  நிலவைக் கவனித்த குமாரு, 'ஓ! நேரமும் மூண்டு மணிக்கு மேலையிருக்கும்... உன்னைக் கொண்டுபோய் வீட்டை விட்டிட்டு நான் போறன்" என்று சொல்ல, சித்திராவும் சம்மதித்து அவனுடன் புறப்பட்டாள்.

  சுமார் அரைமைல் சுற்றுவட்டமாய்ப் பரந்திருந்த மக்கள் கூட்டத்தினின்றும் வெளியேறி, கோவிலுக்குத் தெற்கே கிடந்த வயல் வெளியினூடாக அவர்கள் போய்க் கொண்டிருந்தனர்.

  பூரண சந்திரன் மேற்கே சாய்ந்து விட்டிருப்பினும், அதன் ஒளிவெள்ளம் வயல்வெளியெங்கும் ததும்பி வழிந்தது. தென்னந்தோப்புக்களையும், நீரோடைகளையும் தழுவிவந்த காற்று சில்லென்று இருந்தது.

  குமாரு வேட்டியை மடித்துச் சண்டிக் கட்டாய்க் கட்டிக்கொண்டு நடைவரம்பால் போய்க் கொண்டிருந்தான். அவன் போர்த்திருந்த மெல்லிய சால்வை காற்றில் விலகுகையில் அவனுடைய கட்டுக்கோப்பான உடல் கருங்கல்லாய் மின்னியது.

  கோவிலடியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவள் அவனுடன் சேர்ந்து தங்கைகளைத் தேடியபோது அவர்களைக் கண்டுபிடித்துவிட வேண்டுமே என்ற தவிப்பைத் தவிர அவள் வேறெதையும் உணரவில்லை.

  ஆனால் இப்போது அமைதியும், நிலவொளியும் தவழும் அந்தப் பின்னிரவில் சித்திரா தன் முன்னால் போய்க் கொண்டிருந்த குமாருவை ஆற அமரப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.

  குமாரு ஒரு முழு வாலிபன். நானோ இன்னும் திருமணமாகா கன்னிப்பெண். நான்தான் எவ்வளவு சுவாதீனமாகக் கோவிலடியில் மட்டுமல்ல, இந்தத் தனிமையான பாதையிலே, அதுவும் இரவிலே, குமாருவுடன் சென்று கொண்டிருக்கின்றேன். யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? கணவனும் மனைவியும் போலல்லவா போகிறார்கள் என்று சொல்வார்களே என்று எண்ணிய சித்திராவை வெட்கமும் சங்கடமும் பிசைந்தன.

  இத்தனைக்கும் குமாரசாமி அவர்களுக்கு உறவினனும் அல்ல. மாதம் இருமுறை தேங்காய், கிடுகு முதலியவற்றை வாங்கிச் செல்ல வன்னியா வளவுக்கு வந்துபோகும் வண்டிக்காரன். தாய் தந்தையற்ற அனாதையான அவன் தன் உறவினான ஒரு கிழவனுடன் குமாரபுரத்தில் வசிக்கின்றான் என்பது அவளுக்குத் தெரியும். யார் என்ன வேலைக்குக் கேட்டாலும் மகிழ்ச்சியுடன் சென்று வஞ்சகமில்லாமல் உழைக்கும் அவன் ஒரு கூலிக்காரனுங்கூட. ஆனால் அவனை இப்போது பார்த்தால் ஒரு கூலிக்காரன் போலவா தெரிகிறது? கருகருவென்று வளர்ந்து தலைகொள்ளாமல் கிடக்கும் அடர்ந்த கேசத்தை அழகாக வாரியிருந்தான். நிமிர்ந்த தலையும், அகன்ற மார்பும் அவனை அழகனாகவே காட்டின.
 
  .... குமாருவுக்கு இன்னமும் கல்யாணமாகவில்லை... அவனுக்குக் கல்யாணமானால் தன் மனைவியைக் கண்ணுங் கருத்துமாய் ஆசையுடன் கவனித்துக் கொள்வான்..... ஆரோக்கியம் நிறைந்த குழந்தையொன்றை அவள் அவனுக்குப் பெற்றுக் கொடுப்பாள்.... இப்படியான பொங்கல், திருவிழாச்  சமயங்களில் அவள் அந்த அழகான குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு மகிழ்ச்சியுடன் அவனுக்குப் பின்னால் போய்க் கொண்டிருப்பாள்..... சந்தோஷம் அவர்களுடைய வாழ்வில் கரை புரண்டோடும்!....

  சித்திராவின் விழிகள் கலங்கின..... ஏங்கும் அவளுடைய இதயத்திலிருந்து ஒரு பெருமூச்சு தகித்துக்கொண்டு வெளியேறியது.

  முன்னே நடந்து கொண்டிருந்த குமாரு சட்டெனத் திரும்பிச் சித்திராவைப் பார்த்தான். நீரில் மிதந்துகொண்டிருந்த அவளுடைய நீள்விழிகள் நிலவில் பளபளத்தன. குமாருவின் கண்கள் தன்னை ஊன்றி நோக்கவே சித்திரா தலையைக் குனிந்து கொண்டாள்.

  'என்ன சித்திரா? என்னோடை வரப் பயமாய்க் கிடக்கே?" குமாரு கலகலவெனச் சிரித்தான்.

  'உங்களோடை வாறதுக்கு என்ன பயம்!" சித்திராவினாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  அவர்கள் வயலினூடாக நடந்து வந்த குறுக்கு வழி வற்றாப்பளை வீதியில் அவர்களைக் கொண்டுவந்து விட்டிருந்தது. வீதிவழியே கோவிலிருந்து திரும்பும் மக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது கோவில் பக்கமிருந்து வந்த ஒரு பெரிய காரின் கண்ணைக் கூசும் ஒளி வெள்ளம் அவர்களைச் சற்று பாதையோரமாக ஒதுங்கி நிற்க வைத்தது. குறுகலான அந்தப் பாதையருகே காருக்கு ஓதுங்கி அண்டி நிற்கையில், மிகவும் மெதுவாக அக் கார் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது காருக்குள்ளிருந்து 'ஆர் சித்திராவே!" என்று யாரோ சொல்வது கேட்டது. குரலிலிருந்து அதற்குரியவள் கங்காதரனுடைய தாயார்தான் எனச் சித்திரா ஊகித்துக் கொண்டபோது, 'குலசேகரத்தார் ஆக்கள் போலை கிடக்கு!" என்றான் குமாரு.

  அவர்கள் வன்னியா வளவுக்கு வந்தபோது அங்கு பெத்தாச்சியும் மேகலாவின் தங்கைகளும் ஏற்கெனவே வந்திருந்தனர். குமாரு சித்திராவை அழைத்து வந்ததைக் கண்டபின்தான் வன்னிச்சியாரின் தவிப்பு அடங்கியது.

  குமாரு தன் வீட்டுக்குப் போக முற்பட்டபோது, 'கொஞ்சம் நில்லுங்கோ, வாறன்!" என்று அவனை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சற்று நேரங்கழித்து கையில் ஒரு கோப்பை தேநீருடன் வந்தாள் மேகலா.

  நித்திரை விழித்த களைப்பிற்கும், நடந்த அலுப்புக்கும் அந்தத் தேநீர் குமாருவுக்கு அமிர்தம் போலிருந்தது. அவன் மடமடவென்று தேநீரைக் குடித்துவிட்டுக் கோப்பையைக் கொடுப்பதற்காக நிமிர்ந்தபோது, அங்கே சித்திராவின் விழிகள் தன்னையே நோக்குவதைக் குமாரு கண்டான். மறுகணம் தாழ்ந்துகொண்ட அந்தக் கருவிழிகளில் தோன்றிய ஏக்கமும், பரிவும் அவனுடைய சிந்தையை ஈர்த்தன.

  குமாரு அவளிடமும் பெத்தாச்சியிடமும் விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

  அவன் போனதன் பின் எல்லோரும் படுத்துக் கொண்டனர். சித்திராவும் நிர்மலாவும் ஒரு அறையினுள் படுத்திருந்தனர். வெளியே எறித்த நிலவு உள்ளேயும் வெளிப்பை ஏற்படுத்தியது. 'அக்கா!" என்று மெதுவாகக் கூப்பிட்டாள் நிர்மலா. 'என்ன நிர்மலா?" எனச் சித்திரா வினவியபோது, 'அத்தான் நாளைக்கு அமெரிக்காவுக்குப் போறாராம். கோயிலடியிலை ஆக்கள் கதைச்சினம்........!" என்றாள். 'ஆரெண்டாலும் எங்கையெண்டாலும் போகட்டும். அதுக்கு எங்களுக்கு என்ன? நீ பேசாமல் படு!". சித்திரா மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.


 


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 02:41
TamilNet
HASH(0x55b7643f8140)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 02:41


புதினம்
Tue, 19 Mar 2024 02:41
















     இதுவரை:  24681467 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1976 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com