அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 13
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 13   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 23 April 2007

13.

கடந்த இரண்டுமாத காலமாக அவர்கள் பணத்தட்டுப்பாடு காரணமாகத் தங்கள் உணவிலே, காட்டிலே கிடைக்கும் இலை, கிழங்கு முதலியவற்றையும், நந்திக் கடலிலே கிடைக்கும் நண்டு, இறால், மீன் போன்றவற்றையும் அதிகமாகச் சேர்த்துக் கொண்டிருந்தனர்.

 
குமாருவிடம் ஏற்கெனவே இறால் வலையும், மீன்வலையும் இருந்தன. திறமையுடன் வலைவீசப் பழகியிருந்த அவன், அடிக்கடி பிடித்துவரும் விரால், கச்சல் பொட்டியன், போன்ற மீன்களும், கருவண்டன் இறாலும் அருமையான கறிகளை ஆக்குவதற்குப் பயன்பட்டன.


முதல்நாள் முழுவதுமே சோனாவாரியாக மழை கொட்டியதால் தோட்டத்தில் தண்ணீரிறைக்கும் வேலையுமிருக்கவில்லை. மழைநேர வெள்ளத்தில் மணலை, மடவை முதலிய மீன்கள் அமோகமாக அகப்படும். எனவேதான் குமாரு, குமாரபுரத்திற்கு மேற்கே, வயல்வெளியின் நடுவே, பெரும் மருதமரங்களால் சூழப்பட்டுக் கருநிறத்தில் கிடந்த கறுத்தான் மடுவுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தான்.
தோட்டத்தின் நடுவே இருந்த குடிலுக்குள் சித்திரா மத்தியான உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தங்கைகள் மிளகாய் மேடைகளில் களை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். செல்லையர், பலகையடித்து விதைக்கப்பட்டிருந்த வயலில் வேலையாகவிருந்தார்.


அவர்களைக் கவனித்த சித்திரா, ஆறு மாதங்களுக்கு முன்னால் தாங்கள் இருந்த நிலையையும், கடந்த காலத்தில் தாங்கள் பட்ட கஷ்டத்தையும், இன்று தோட்டம் இருக்கும் நிலையையும் எண்ணிப் பார்த்தாள். முதல் நாள் மழையில், புதுக் குருத்துக்களும், இளம் பயிர்களுமாகச் சிலிர்த்து நிற்கும் அந்த ஜீவபூமியில், உழைப்பின் வடிவங்களாக வேலையில் ஈடுபட்டிருந்த தனது தங்கைகளையும், செல்லையரையும், பாசப்பெருக்கோடு நோக்கிய சித்திராவின் நெஞ்சம் கனிந்தது.

 
எதிரே சித்திர வேலாயுத கோவிலில் உறையும் குமரக் கடவுளுக்கு மனதுக்குள் நன்றி கூறிக்கொண்டவள், நான் கண்கண்ட தெய்வம் என்னுடைய குமரன்தான்! சதா சிரித்த முகத்துடன் கடுமையாக உழைக்கும் குமாரு காரணமாகத்தான் நாங்கள் இன்று நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர்கொள்ளக்கூடிய நிலையிýல் இருக்கின்றோம், என்று மனதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் பொங்கிவர நினைத்துக் கொண்டாள் சித்திரா.


சித்திரா சமையலை முடித்துவிட்டுத் தங்கைகளையும், மற்றவர்களையும் வந்து சாப்பிடுமாறு கூறிவிட்டு, எருதுகளுக்குத் தவிடு வைப்பதற்காக மாட்டுக் கொட்டிலுக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் வழக்கதில் தலையை அசைத்து மகிழ்ந்து வரவேற்கும் அந்த எருதுகள், அன்று சோம்பி நின்றிருந்தன. மேலே பரணில் சாக்கிலிருந்த தவிட்டை எடுத்துப் பெட்டிகளில் அவற்றுக்காய்ப் போட்டபோது அவை தவிட்டை வெறுமனே முகர்ந்து பார்த்துவிட்டுச் சும்மா நின்றிருந்தன.

 
அவளுக்கு அவற்றின் செய்கை வியப்பை ஏற்படுத்தியது. ஒருவேள எருதுகளுக்கு ஏதும் சுகமில்லையோ, என்று சந்தேகப்பட்டவள், அவர் வரட்டும் சொல்லுவம், என நினைத்துக்கொண்டு தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.
நண்பகலுக்கும் மேலாகி பொழுது சாயும் நேரமாகியும் குமாரு வரவில்லை. வழமையாகக் காலையில் ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்பவன், மத்தியானம் இரண்டு மணிக்கெல்லாம் திரும்பி விடுவது வழக்கம். ஏன் இன்னும் இவரைக் காணேல்லை என்று சித்திராவின் மனது சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது.
மாலைப் பொழுதானதும் அவள், 'செல்லையா அம்மான்! இவரை இன்னும் காணேல்லை!.... நீங்கள் ஒருக்காப் போய்ப் பாத்துக்கொண்டு வாருங்கோ!" என வேண்டிக் கொண்டதும், செல்லையர் குமாருவைத் தேடிக்கொண்டு கறுத்தான் மடுப்பக்கம் புறப்பட்டார்.
அவர் படலையைத் திறந்துகொண்டு ஒழுங்கையில் இறங்கிச் சற்றுத்தூரம் சென்றபோது எதிரே ஒரு வண்டில் வருவது தெரிந்தது. வண்டில் விலத்திப் போகட்டும் என ஒதுங்கி நின்ற செல்லையர் அருகில் வண்டில் வந்தபோது அவருக்குச் சப்தநாடியும் ஒடுங்கிப் போய்விட்டது.


வண்டித் தட்டிலே குமாரு நீட்டி நிமிர்ந்து நினைவிழந்து கிடந்தான். அவனுடைய விழிகள் மூடியிருந்தன. மேனியெல்லாம் ஒரே சேறு! இடுப்புக்குக் கீழே இரத்த விளாறு! ஒரு கால் பயங்கரமாகத் தொங்கிக்கொண்டு கிடந்தது. செல்லையருக்குத் தலை சுற்றியது. வண்டில் கிறாதியைப் பிடித்துக்கொண்டு அவர் சித்தம் கலங்கி நின்றபோது, 'குமாருவை முதலை சப்பிப்போட்டுது செல்லையா அண்ணை! விறகேத்திக்கொண்டு இருட்டுமடு ஒழுங்கையாலை வாறன்..... ஒழுங்கை வித்தனிலை பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான் ... கறுத்தான் மடுவுக்கை முதலை புடிச்சுப்போட்டுது போலை! ... இவன் ஒருமாதிரிப் பறிச்சுக்கொண்டு தவண்டு, தவண்டு ஒழுங்கைமட்டும் வந்திருக்கிறான் .... கிடந்த இடத்திலை ஒரே ரத்தக்களரி! ... விறகைப் பறிச்சுப்போட்டுத் தூக்கிப் போட்டுக்கொண்டு வாறன்!" என்று வண்டியோட்டி வந்த ஆறுமுகம் கூறுவது எங்கோ தொவைவில் கேட்பதுபோல் செல்லையருக்குக் கேட்டது.

 
வண்டில் வளவுக்குள் சென்றது, குமாருவை இறக்கித் திண்ணையில் கிடத்தியது, வன்னிச்சியாரும், சித்திராவின் தங்கைகளும் குமாருவின் நிலைகண்டு குய்யோ முறையோ எனக் கூக்குரலிட்டுக்கொண்டு ஓடிவந்தது, யாவுமே செல்லையருக்குக் கனவிலே நடப்பது போலிருந்தன.


தோட்டத்தின் கிழக்குக் கோடியில் கச்சான் தின்ன வரும் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காகத் தீவறை மூட்டிக்கொண்டிருந்த சித்திராவின் செவிகளில், 'ஐயோ! இனி என்ரை புள்ளையள் என்ன செய்யும்!" எனப் பெத்தாச்சி ஓலமிடுவதும், 'அத்தான்! அத்தான்! அக்கோய்!"..." என்று தங்கைகள் கூச்சலிடுவதும் கேட்டபோது, அவளுடைய வயிறு பகீரென்றது. வளவை நோக்கி ஓடவேண்டும் என அவளுடைய இதயம் துடித்தபோதும், நடக்கக்கூட இயலாமல் அவளுடைய கால்கள் இரும்பாகக் கனத்தன.
மெல்ல மெல்ல அவள் அவனை வளர்த்தியிருந்த இடத்தை நெருங்கியபோது அவளுடைய தங்கைகள் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு கோவென்று கதற ஆரம்பித்துவிட்டனர். 'அக்கோய்! அக்கோய்!" என்ற குரல்கள் சோகத்தைப் பிழிந்து, இதயத்தை உலுக்கின. அவர்களை மெல்ல விலக்கிக்கொண்டு குமாருவினருகிற் சென்ற சித்திரா, திண்ணையிலே அமர்ந்து குமாருவின் தலையைத் தூக்கித் தன் மடியிலே வைத்துக்கொண்டு, கைவிளக்கின் ஒளியிலே அவனுடைய முகத்தைக் குனிந்து நோக்கினாள்.

 
ஆறுமாதங்களுக்கு முன்பு அதே திண்ணையில் குமாரு காயம் பட்டுக் கிடக்கையில் தான் ஓடிவந்து அவனுடைய தலையைத் தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு காயத்தைக் கழுவி மருந்த வைத்துக் கட்டியபோது மெல்லக் கண்விழித்த அவன், வலதுகைiயை உயர்த்தித் தன் முகத்தை மெல்ல வருடிப் புன்னகை செய்ததுபோல, இதோ! அவனுடைய கரம் மெல்ல உயரும்! கரடுதட்டிப் போய்க்கிடக்கும் அந்தக் கை தன் கன்னக் கதுப்புக்களில் எல்லையற்ற பாசத்தை மின்சாரம்போற் பாய்ச்சும்! திடமான நெஞ்சையும் இதமான அன்பையும் பிரதிபலிக்கும் அந்த விழிகள் மெல்லத் திறந்து என்னை நோக்கும்! என்றெல்லாம் ஏங்கும் இதயத்தோடு சித்திரா குமாருவின் முகத்தையே பார்த்தவாறு காத்திருந்தாள்.
ஆனால் குமாருவின் விழிகள் மீண்டும் திறக்கவேயில்லை!


குமாருவின் சடலத்தின்மீது பெத்தாச்சியும், தங்கைகளும் விழுந்து கல்லுங்கரையக் கதறியபோதும், சித்திராவின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர்கூடச் சிந்தவில்லை. வெளியே தெரிந்த இருட்டை வெறித்து நோக்கியபடியே கல்லாய் அமர்ந்திருந்தாள் அவள்.

 
காயம்பட்ட பிரேதமானபடியினால் அடுத்தநாட் காலையிலேயே ஈமச்சடங்குகளை ஆரம்பித்து விட்டார்கள். குமாருவுக்கு ஏற்பட்ட அவலச் சாவு, சடங்குக்கு வந்த அனைவரையும் திகைக்க வைத்திருந்தாலும், அதைவிடச் சித்திரா வாய்விட்டுக் கதறாமல், கண்ணீர் பெருக்காமல், கற்சிலைபோலப் பிரேதத்தின் கால்மாட்டில் இருந்ததுதான் அவர்களுடைய பேச்சாகவிருந்தது.

 
'உவளை உப்பிடியே இருக்கவிடக் கூடாது! .... அழாமல் இருந்தாளோ விசராக்கிப் போடும்!" என்று பேசிக்கொண்ட அவர்கள், 'எப்பிடியும் சவமெடுத்துத் தாலி கழட்டேக்கை அழாமல் விடப்போறாளே?" என்றும் சொல்லிக் கொண்டார்கள்.
பிரேதத்தைப் பாடையில் வைத்துத் தூக்கிவிட்டார்கள். பெண்கள் பெரிதாகக் கூக்குரலிட்டுக் கதறினார்கள். சித்திராவின் தங்கைகள் பாடையின் பக்கங்களைப் பிடித்துக்கொண்டு, !ஐயோ! அத்தான்!" என்று புலம்பினார்கள். செல்லையர் குழந்தையைப் போன்று விக்கிவிக்கி அழுதார்.

 
ஆனால் சித்திராவோ அழவில்லை. பேய்பிடித்தவள் போன்று அவள் பாடையைத் தொடர்ந்து படலையடிக்கு நடந்து கொண்டிருந்தாள். படலையடியில் பாடையை நிறுத்திப் பெண்கள் அழுகையில் யாரோ ஒரு பெரியவர்; சித்திராவின் கழுத்திலிருந்த தாலிக் கயிற்றைக் கழற்றியெடுத்தார். நெஞ்சையுருக்கும் அந்த நிலையிலும் சித்திரா அழவில்லை. பித்துப் பிடித்தவள்போல் பாடையினுட் தெரிந்த குமாருவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாடையை உயர்த்தினார்கள். வேலியில் கதியால்களை வெட்டியிருந்த இடைவெளியூடாகப் பாடையைக் கடத்தினார்கள். குமாருவின் இறுதி யாத்திரை ஆரம்பமாகிவிட்டது. அப்போதுங்கூட சித்திரா அழவேயில்லை.


அன்றிரவு, துக்கம் விசாரிக்க வந்திருந்தவர்கள் போய்விட்டனர். பகல் முழுவதும் ஒருவருமே சாப்பிடவில்லை. தேய்பிறை நிலவு வானத்தே வந்தபோது, சித்திரா எழுந்து மாட்டுக் கொட்டிலை நெருங்கினாள்.


அங்கே, குமாரு பிள்ளைகள் போல் வளர்த்த எருதுகள் மௌனமாக நின்றிருந்தன. நிலவிலே அவற்றின் விழிகள் கலங்கியிருப்பது போன்று அவளுக்குத் தோன்றின. முதல்நாள் தான் தவிடு வைக்கையில் அந்த எருதுகள் தவிட்டை உண்ணாது சோகமாய் நின்றதன் அர்த்தம் அவளுக்கு இப்போதுதான் புரிந்தது.
தங்களை அல்லும் பகலும் அன்போடு பராமரித்த குமாருவின் வாழ்க்கை அன்றுடன் முடிந்துவிடப் போகின்றது என்பதை அவை அப்போதே தெரிந்துகொண்டனபோலும் என்று எண்ணிய சித்திரா, இந்த விலங்குகளுக்கே குமாரு இறந்தது இவ்வளவு வேதனையெனில், எனக்கு வாழ்வளித்து, கடந்த ஆறு மாதத்திலும் அன்பை அள்ளிப்பொழிந்து, என் குடும்பத்திற்காகத் தன் உதிரத்தையே உழைப்பாக்கி வழங்கிச் சதா உற்சாகமாயிருந்த என்னுடைய குமாரு, என் கண்கண்ட தெய்வம், என்னை விட்டுப் போனபின், நான் ஏன்தான் வாழவேண்டும்? என்று கலங்கினாள்.
அப்போது அவளுடைய விழிகளில் மாட்டுக்கொட்டில் வளையில் தொங்கிய நார்க்கயிறு தென்பட்டது.


கயிற்றுச் சுருளைக் கையில் எடுத்துக்கொண்ட சித்திரா, சந்தடியின்றி வளவைவிட்டு வெளியேறி, குமாருவின் சடலத்தை எரித்த இடத்தை நோக்கிச் சென்றாள். அவர்களுடைய காணிக்கு வெகு அருகில்தான் குமாருவை எரித்த சிதை இருந்தது.


அவள் அந்த இடத்தை நெருங்கியபோது, ஒரு காட்டு ஒதுக்குக்குள் அருகருகே நின்ற இரு மரங்களின் நடுவே, குமாருவின் சிதையில் எஞ்சிய தணல்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதையே சற்றுநேரம் வெறித்து நோக்கிய சித்திரா உன்மத்தம் பிடித்தவள்போல் விடுவிடென்று போய், கோவிலின் கிழக்கே நின்ற கிழட்டுப் புளியமரத்தின் கீழ் வந்து நின்றாள். இருண்டு கிடந்த அந்த மரத்தின் தாழ்ந்த கிளையொன்றைப் பற்றி ஏற அவள் முயன்றபோது, அவளுடைய பெத்தாச்சி இரவு வேளைகளில் பாக்குரலும் கையுமாய் கால்களை நீட்டி அமர்ந்தவாறே சொல்லும் பல கதைகளிலொன்று அவளுடைய நினைவில் நிழலாடியது.

 
'வேலப்பணிக்கன் பொண்டில் அரியாத்தையின்ரை கதை தெரியுமே பொடிச்சியள்? பொம்பிளையெண்டால் அவளல்லோ பொம்புளை!"


இப்ப உங்கை சித்திரவேலாயுத கோயிலுக்குக் கிழக்கை நிக்குதல்லே ஒரு பெரிய புளி!
அந்தப் புளியமரத்துக்குக் கீழைதான் ஒருநாள் இந்தப் பகுதியிலை இருந்த ஆனை புடிக்கிற பணிக்கமாரெல்லாம் கூட்டமாய் நிக்கினம் ... ஒரு பக்கத்திலை இந்த அண்டை அயல் சனங்களெல்லாம், அப்ப குமாரபுரத்தை ஆண்ட வன்னி ராசனிட்டை முறைப்பாடு சொல்ல வந்து நிக்குதுகள்! என்ன முறைப்பாடு தெரியுமே!....


கருக்கம்பணிக்கச் சோலையுக்கை ஒரு ஆனை! ஆனையெண்டால் சும்மா சின்னன் பொன்னனல்ல! ... கரிப்போலை நிறம்!... மலைமாதிரி உருப்படி!...அஞ்சு பாகக் கொம்புகளை ஒருக்கா ஆட்டி அசைச்சுதேயெண்டால் ஒரு கட்டை தேசத்துக்குக் கலீரெண்டு கேக்கும்!-- அப்பிடி nhம்பு இரண்டுக்கையும் முத்து விளைஞ்சு குலுங்கும்!


இந்த மாதிரி முத்துக் கொம்பனுக்கெல்லோ மதம் புடிச்சிட்டுது!... காடு கரம்பையெல்லாம் புடுங்கி எறிஞ்சு ஒரே இடிகுமுதம்!.... அக்கம்பக்கத்து வயல் வெளியிலையும் நாலைஞ்சு பேரை அடிச்சுக் கொண்டு போட்டுது!... மனிச வாடை சாடையாய் விழுந்தால் காணும், நாலு கட்டைக்குத் திரத்திக்கொண்டு வரும்!...
சனமெல்லாம் போட்ட சாமான் போட்டபடி விட்டிட்டு வன்னியராசா வீட்டை ஓடி வந்திட்டுதுகள்! பின்னை ராசா இந்தப் பகுதியில் பணிக்கமாரையெல்லாம் கூப்பிட்டு, இந்த ஆனையைப் புடிச்சுக் கட்டுற பணிக்கனுக்கு ஆயிரம் பொன் தாறன் எண்டுகூடச் சொல்லிப் பாத்தார்...

 
ஆனா, பணிக்கமாரெல்லாம் ஆளையாள் பாத்து முழிச்சுக்கொண்டு பேசாமல் நிக்கிறாங்களாம்!... அவ்வளவு பயம் அந்த ஆனைக்கு! .. ஆனானப்பட்ட வேலப்பணிக்கன்கூட ஒரு கதையும் பறையாமல் நிண்டானாம்.... அப்பதான் பொடிச்சியள்... சனக்கூட்டத்துக்கை நிண்ட ஆரோ ஒருதன், வேலப்பணிக்கன்தான் இந்த ஆனையைப் புடிப்பான் எண்டு சொன்னானாம்!...


அப்பிடி அவன் சொல்ல, அங்கை நிண்ட இன்னொரு பணிக்கன்..... அவனுக்கும் ஏதோ ஒரு பேரெண்டு சொல்லுற.... அந்தப் பணிக்கனுக்கு இவன் வேலப்பணிக்கன் எண்டால் ஒரே பொறாமை!... அவன் நையாண்டியாய் சிரிச்சுப்போட்டு, வேலப்பணிக்கனல்ல!... வேலப்பணிக்கன் பொண்டில் புடிப்பாள் இந்த ஆனையை! எண்டு பகிடியாய் சொன்னானாம்!....


இந்தக் கதையைக் கேட்டு கூடிநிண்ட சனமெல்லாம் கொல்லெண்டு சிரிச்சுவிட்டுதுகள்! வேலப்பணிக்கனுக்கு முகம் கிகமெல்லாம் கறுத்துப் போச்சுது!... திருப்பி ஒரு கதையும் பறையமாட்டான்!... அப்பிடி எக்கச்சக்கமான ஆனை!...


ஒரு பணிக்கமாரும் இந்த ஆனையைப் புடிக்க வரேல்லை எண்ட கோவத்திலை ராசாவும் விட்டிட்டுப் போட்டார்... வீட்டை போன வேலப்பணிக்கன் சாப்பிடவுமில்லை... தண்ணி வென்னி குடிக்கவுமில்லை... ஒண்டும் பேசாமல் திண்ணையிலை முகங் குப்புறக் கிடந்திட்டான்... அந்தளவுக்கு அவனுக்கு மற்றப் பணிக்கமாற்றை கேலி கேந்தியாய்ப் போச்சுது!...
அவன்ரை பொண்டில் அரியாத்தைக்கு முதலிலை சங்கதி என்னண்டு விளங்கேல்லை!... ஒருமாதிரி நெருக்கிக் கிருக்கிப் புரியனைக் கேக்க, அவனும் விசயத்தைச் சொன்னான்...
உடனை எழும்பிக் கிணத்தடிக்குப் போனவள், தலைமுழுகி ஈரச்சீலையோடை வந்து, ஆனை புடிக்கிற கயித்தையும் பொல்லையும் எடுத்துக்கொண்டு வந்து, புரியன்ரை காலடியிலை வைச்சுத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு நேரை போனாளாம் கருக்கம்பணிக்கச் சோலைக்கு!...
கூப்பிடு தூரத்திலை ஆனைக் கொம்புக்கை முத்துக் குலுங்குற சத்தம் கேக்குது!... அந்தத் திசையைப் புடிச்சுக்கொண்டு கயிறடிச்சமாதிரிப் போய் ஆனைக்கு முன்னாலை அரியாத்தை வெளிக்கிடவும் ஆனை கண்டிட்டுது!... ஆளைக் கண்டிட்டு ஆனை வெருளமுதல் அம்புமாதிரி ஆனைக்கு முன்னாலை போய்நிண்ட அரியாத்தை, 'வேலப்பணிக்கன் பொண்டில் வந்திருக்கிறன்!... நீட்டு முருகா காலை!" எண்டாளாம்! உடனை பசுப்போலை முன்னங்காலை உயர்த்திக் குடுத்துதாம் அந்த ஆனை! கொண்டுபோன வார்க் கயித்தாலைப் படுத்துக் கட்டின உடனை இரட்டிச்சுக் குளறிவிட்டுதாம் ஆனை!... அக்கம் பக்கத்துக் கிராமமெல்லாம் அந்தச் சத்தத்திலை கிடுகிடுத்துப் போச்சுதாம்!... விசயத்தை வெள்ளண அறிஞ்சிருந்த மற்றப் பணிக்கமார் அரியாத்தை கட்டிப் போட்டாளிடா ஆனையை எண்டு வெப்பீகாரத்திலை அவளுக்குப் பில்லிப் பேயை ஏவி விட்டிட்டாங்கள்!
அரியாத்தை கையிலை வைச்சிருந்த கோலாலை ஆனையைத் தட்டி, 'நடவிடா முருகா கோயிலடிக்கு!" எண்டதும் வளத்த நாய் சொல்லுக் கேக்குமாப் போலை கோயிலடிப் புளியமரத்துக்குக் கீழை வந்து நிண்டுதாம் ஆனை!...


அரியாத்தை புளியமர வேரிலை ஆனையைக் கட்டிப்போட்டுப் போய் வீட்டுக்கை வெள்ளைச் சீலையை விரிச்சுக்கொண்டு கிடந்தவள்தான்.... பிறகெங்கை அவள் எழும்பினது!.... அடுத்தநாள் விடியக்கிடையிலை அவள் செத்துப் போனாள்!... அந்த ஆனையும் அவிட்டுவிட ஆளில்லாமல் அதிலையே நிண்டு செத்துப் போச்சுதாம்!....

 
பெத்தாச்சி நேரில் கூறுவதைப் போன்று சித்திராவின் செவிகளில் ஒலித்தது அந்தப் பழைய கிராமியக் கதை. அதைக் கேட்கும்போதெல்லாம், ஊரவர் சொல்வது போன்று, அரியாத்தை பில்லி சூனியத்தாலை சாகேல்லை, தன்னுடைய புருஷனாற் செய்ய முடியாமற்போன ஒரு செயலைத் தான் செய்து முடித்தது, கணவனுக்கேற்பட்ட அன்றைய அவமானத்தைப் போக்கினாலும், எதிர்காலத்தில் அவனுடைய திறமைக்குத் தன் செயல் ஒரு இழுக்காகும் என்பதை உணர்ந்து கொண்டதினால்தான், அரியாத்தை தானாகவே தன்னுயிரைப் போக்கிக் கொண்டாள் எனச் சித்திரா எண்ணிக்கொள்வது வழக்கம்.


அரியாத்தையைப் போலத் திடநம்பிக்கையும், நெஞ்சுரமும் ஒரு பெண்ணுக்கு இருந்துவிட்டால் இந்த உலகத்தில் அவளால் எதைத்தான் சாதிக்க முடியாது என வழமையாக நினைக்கும் சித்திராவுக்கு இப்போ மீண்டும் அந்த நினைவு துளிர்த்தது.


.... ஒருகாலத்தில் கொடிகட்டி வாழ்ந்த எங்கள் குடும்பம் மாமாவின் குள்ளநரிப் புத்தியாலும், அப்பாவின் குடியாலும் நொடித்து நின்ற வேளையிலும் பெத்தாச்சி ஒடிந்து போய்விடவில்லையே!... அரியாத்தை பிறந்த மண்ணில் தோன்றியவள் அல்லவா வன்னிச்சியார்!... தள்ளாத வயதிலும் பொல்லை ஊன்றியபடியே உழைப்பில் ஈடுபடும் அவளுடைய பேத்தியல்லவா நான்! .... கணவனுக்கு அவமானம் ஏற்பட்டுவிடுமே என்று தன்னுயிரைப் போக்கிக்கொண்ட அரியாத்தை, யானையைக் கட்டிய புளியமரத்தில் இன்று நான் தூக்குப் போட்டுக்கொண்டால் அது என் குமாருவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் அல்லவா அவமானம்!.. சொத்துச் சுகமற்ற குமாருவை மணந்ததனாற்றான் சித்திரா தன்னையும், தன் தங்கைகளையும் காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்துகொண்டாள் என்றல்லவா ஊர் சிரிக்கும்!... இல்லை! ... நான் சாகக்கூடாது! ... அன்று அரியாத்தை காட்டு யானையைக் கட்டினாள் .... இன்று சித்திரா, தன் குடும்பத்தை மதங்கொண்ட யானையைப் போல் மிதிக்க முயலும் வறுமையையும், பழியையும் கட்டத்தான் போகின்றாள்! .... நிராதரவாக நிற்கும் தங்கைகளுக்குச் சிறப்பானதோர் எதிர்காலத்தை ஏற்படுத்தத்தான் போகின்றாள்! ... என்று இதைச் செய்து முடிக்கின்றேனோ அன்றுதான் இந்தப் போராட்டத்திலிருந்து எனக்கு ஓய்வு! ...


மின்னல் வேகத்தில் சித்திராவின் எண்ணத்தில் மேற்படி எண்ணங்கள் வந்து போயின. அவள் நெஞ்சில் வைராக்கியத்துடனும், இதயத்தில் திடநம்பிக்கையுடனும் தங்கள் காணியை நோக்கித் திரும்பி நடந்தாள்.

(வளரும்..) 


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 04:44
TamilNet
HASH(0x55ae47b26868)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 04:44


புதினம்
Tue, 19 Mar 2024 04:44
















     இதுவரை:  24681592 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1967 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com