அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 14-15
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 14-15   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 20 May 2007

14.
குமாருவின் மறைவைத் தொடர்ந்து சித்திரா முன்போல் கலகலவென்று பழகாவிட்டாலும், காணியிலே மௌனமாக - ஆனால், மிகவும் தீவிரமாக உழைக்க ஆரம்பித்திருந்தாள். வைகறையிலே எழுந்து அவள் நாள் முழுவதுமே சதா வேலையில் ஈடுபட்டிருந்தாள். மிளகாய்க் கன்றுகளுக்கு நீரிறைப்பது, அவற்றிடையே கொத்திச் சாறுவது, மருந்து விசிறுவது, களையெடுப்பது போன்று பலவேலைகள் தொடர்ந்து இருந்தன.

 
அவளுடைய தங்கை நிர்மலா இதுவரை சித்திரா செய்துவந்த சமையல் முதலிய வேலைகளை ஒழுங்காகக் கவனித்தாள். சித்திரா வெறிபிடித்தவள் போல உக்கிரமாக உழைப்பதைப் பார்க்கையில் பெத்தாச்சிக்கும், தங்கைகளுக்கும் மனங்கள் தவிக்கும். குமாருவும் அவளும் சிரிப்பும் உற்சாகமுமாக வேலைகளைச் செய்துவந்த கடந்த நாட்கள் அவர்களுடைய ஞாபகங்களைக் கிளறும். ஆனால், யாரும் துணிந்து அவளுடன் எதுவும் பேசுவதில்லை. அவள் வெகுவாக மாறிப் போனாள். அவசியம் ஏற்பட்டாலொழிய அதிகம் பேசாத அவளுக்கு உழைப்பு ஒரு தவமாக ஆகியிருந்தது.

 
ஆனால், அவளுடைய கடைசித் தங்கை செல்வம், சித்திராவை விட்டு ஒரு நிமிடமும் விலகி இருக்கவில்லை. மிகச் சிறுவயதிலேயே தாயை இழந்துவிட்ட அவளுக்குச் சித்திரா அக்காவல்ல - அன்னை! செல்வத்துக்கு மட்டுமல்ல, சித்திராவுக்கு அடுத்தவளான நிர்மலாவைத் தவிர, மற்றத் தங்கைகளான பவளத்திற்கும், விஜயாவுக்குங்கூட அவள் ஒரு தாயின் ஸ்தானத்திலேயே இருந்தாள். கோழி தன் குஞ்சுகளைப் பராமரிப்பதுபோலத் தன் சிறகுகளின் கீழே அவர்களை வழிநடத்திய சித்திராவின் பொறுப்பை இப்போ நிர்மலா ஏற்றிருந்தாள்.

 
பண்படுத்தப்பட்ட புதுமண்ணில் ஆரோக்கியம் நிறைந்த பல பயிர்கள் செழுமையுடன் அசைந்தன. எட்டு ஏக்கரளவில் கிடந்த அந்தக் காணியில் இரவிலும் சித்திரா எல்லையோரங்களில் எரியும் தீவறைகளுக்குப் புதிய விறகுகளை அண்டிவிட்டுச் சாமம் உலாத்தி வருவாள். அந்த வேளைகளில்கூட, கடைசித் தங்கை செல்வம் சித்திராவை விட்டு விலகுவதில்லை. இரவு, பகல், வெய்யில், மழை, காற்று, பனி என்ற கால வேறுபாடுகளே சித்திராவின் உணர்வுகளுக்குத் தெரிவதில்லை. அவற்றால் அவளுடைய உடலுக்கும் எந்த வகையான ஊறுகளும் ஏற்பட்டதில்லை. அவளின் உள்ளேயிருந்து இயங்கச் செய்த எதுவோ ஒன்று, இந்தச் சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாக, பலம் கூடியதாக இருந்தது. ஆனால், குழந்தைப் பராயம் கடவாத செல்வம் விரைவாக நோய் வாய்ப்பட்டுப் போனாள். சிறுவயதிலிருந்தே சித்திராவினால் செல்லமாக வளர்க்கப்பட்ட அவள், தமக்கையின் தீவிர தவத்தில் தானும் பங்குகொள்ள முயன்றபோது அந்தப் பிஞ்சு உடலினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், அவள் தன்னால் முடிந்த வேளைகளில் சித்திராவுடன் ஒட்டிக் கொண்டிருப்பதையே விரும்பினாள்.


குமாருவின் மறைவுடன் வண்டியால் கிடைக்கும் வருமானம் குறைந்துவிட்டது. விறகு தறிப்பது, மூடை சுமப்பது போன்ற கடும் வேலைகளைச் செய்யச் செல்லையரால் தற்போது அவ்வளவாக முடியாவிட்டாலும், ஏதோ கிடைக்கும் சவாரிகளை விட்டுவிடாமல் முயன்றார் அவர். அவற்றில் கிடைக்கும் பணம் ஏருதுகளுக்குத் தவிடு, பிண்ணாக்கு முதலியவற்றை வாங்கவே போதுமானதாக இருந்தது. எனவே, ஐந்து சகோதரிகளுக்குப் பொதுவானதும், குடும்பத்தில் எஞ்சிய ஒரே நகையுமான தங்கச்சங்கிலி கடையேறியது. அதனாற் கிடைத்த பணத்தில் பயிர்களுக்கு விசிறவேண்டிய மருந்துகள் வாங்கி மீதமானதில், சந்தையில் எது மலிவாகக் கிடைத்ததோ அதைக்கொண்டு அவர்கள் வயிற்றைக் கழுவினார்கள்.


பெத்தாச்சிதான் காலையில் ஆலடிக்குச் சென்று கறியும், பிறபொருட்களும் வாங்கி வருபவள். குமாருவின் இழப்பின் காரணமாக மிகவும் தொய்ந்துபோன அவளால் தினமும் இரண்டு மைல் தூரம் நடந்து திரும்புவதுடன் வேறு எதுவுமே செய்ய முடிவதில்லை. சிறகு குடிலருகில் அல்லது குரங்குகள் வரும் வேலியோர நிழல்களில் ஒரு சாக்கை விரித்து உட்கார்ந்துவிடும் அவள் இயந்திரகதியில் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தாலும், அவளுடைய உள்ளம் மட்டும் பலவருடங்கள் பின்னோக்கி ஓடி அன்றயை அனுபவங்களில் ஆடித் திளைத்திருக்கும். இன்றைய வேதனைகளை மறப்பதற்கு இந்த இரைமீட்டல் மிகவும் இலகுவானதாக மாத்திரமன்றி, மிகவும் இதமாகக்கூட இருந்தது அவளுக்கு.


கோடையிலே வரண்டு கிடக்கும் வன்னியின் சிறுகுளங்களும், சிற்றாறுகளும் மாரி வந்;து விட்டால் பொங்கிப் பிரவகிக்கும். ஆனால் வன்னிவாழ் ஏழை விவசாயிகளின் வாழ்வோ மாரியில் வரண்டுவிடும்! சேமித்து வைக்க நெல் இல்லாதபடியினாலும், சேமித்து வைத்தது பல்வேறு வழியில் கரைந்து போனதாலும், அரிசியுணவு அவர்களுக்குக் கிடைப்பது அபூர்வமாகிவிடும்.


வயல்களிலே செழுமையான பயிர்கள் அசைந்தாடும்! தோட்டங்களிலே வருவாய் தரும் பயிர்கள் பூத்துக் குலுங்கும்! ஆனால் இவற்றை உற்பத்தி செய்பவர்களின் வயிறுகளோ மாரியில் காய்ந்து போய்விடும்! இந்த நிலைக்குச் சித்திராவின் குடும்பமும் விதிவிலக்காக இருக்கவில்லை. வறுமை அவர்களை வாட்டியது. எதுவோ, கிடைப்பதைக் கொண்டு வயிற்றை நிரப்பி, நம்பிக்கைகளினால் நெஞ்சை நிரப்பி, உழைக்கும் வேகத்தைச் சிறிதும் குறைக்காமல் பாடுபட்டனர் அந்தச் சகோதரிகள்.

 
இந்நாட்களில், சில்லென்று எலும்புக் குருத்துக்களை உறைய வைக்கும் ஒரு மாரிகால நடு இரவில் குழந்தை செல்வம் சித்திராவின் மடியில் தலையை வைத்துக்கொண்டு சுரத்தில் பிதற்றிக் கொண்டிருந்தாள். அவளைத் தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டிருந்த சித்திரா, மூடீயிருந்த அந்தப் பட்டுப்போன்ற இமைகளையே பார்த்திருந்தாள். சன்னியில் அடிக்கடி வாய்புலம்பிய அவள், விழிகளை ஒரு தடவை திறந்து, கண்கள் பளபளக்க, 'அக்காச்சி, எனக்குச் சரியான விருப்பமான சாமான் என்னெண்டு தெரியுமே?' என்று பிதற்றியபோது வியப்புடன் அவள் முகத்தைப் பார்த்தாள் சித்திரா. விழிகளை மூடிக்கொண்டு, 'சோறு! சோறு!' என்று அவள் மீண்டும் பிதற்றியது சித்திராவின் நெஞ்சைப் பிழிந்தது. பல்லைக் கடித்துக்கொண்டாள் சித்திரா.
விடிகாலைப் பொழுதில் அந்தக் குருத்து கருகிப் போய்விட்டது.
 
15.
கடந்த சில மாதங்களில் கங்காதரனுடைய மனம் அமைதியடைந்திருந்தது.
அவனை இரவின் தனிமையில் சந்தித்த சித்திராவை அவன் இன்னமும் மறந்துவிடவில்லை. கங்காதரனைப் பொறுத்த வரையில் அவனுடைய சித்திரா என்றோ இறந்து போனாள். இன்றிருக்கும் சித்திரா வேறு யாரோ ஒருத்தி! அந்நியனுடைய மனைவி!
புன்னை மரத்து நிழலில், நிலவூறித் ததும்பிய அந்த விழிகள் இன்றும் அவன் நெஞ்சில் நிழலாடின. அவளுடைய சிவந்த கழுத்தோரங்களில் பிறந்த சுகந்த மணம் இன்றும் அவன் நினைவில் மணத்தது. அன்று அவனைப் பற்றிப் படர்ந்த அந்த இளங்கொடியின் அணைப்பை இன்று நினைக்கையிலும் உடல் சிலிர்க்கத்தான் செய்தது.


தனது கல்வி சம்பந்தமான கடமைகளை மிகவும் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்துவந்த அவன், இரவில் விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கச் செல்லும் அந்த வேளையிலே தன்னுடைய சித்திராவை மீண்டும் நினைத்துக் கொண்டு சுகமாகத் தூங்கிப் போவான். கனவுகள் வரும். நனவில் நடவாதவை அவற்றில் நடக்கும். காலையில் விழிக்கையில் கர்ப்பக்கிரகத்துப் பொற்சிலையாக அவள் தோன்றுவாள். அழகாகச் சிரிப்பாள். இந்த அனுபவங்கள் தரும் அமைதியுடன் அவன் அன்றாட அலுவல்களில் மூழ்கிச் சிந்தையை ஒருமுகப்படுத்தி உழைக்கக் கற்றுக்கொண்டான்.


அமெரிக்காவின் வேறு மாகாணங்களில் சிலகாலம் தங்கியிருந்த சிவராசா மீண்டும் கலபோர்னியாவுக்குத் திரும்பியதும், அன்று மாலை கங்காதரனிடம் வருவதாகப் போன் பண்ணியிருந்தான்.
குறிப்பிட்ட நேரத்துக்கு வந்தவிட்ட அவன் கங்காவின் முகத்தைப் பார்த்தான். - இவன் சித்திராவை மறந்துவிட்டான். அவளைப் பற்றிய துயர நினைவுகள் இனிமேலும் இவனுடைய நெஞ்சை அரித்துக் கொண்டிருக்காது - என்று தன்னுள் மகிழ்ந்தவாறே, 'இன்று உன்னை ஒரு புதிய நிகழ்சிக்கு அழைத்துச் செல்கிறேன்! விரைவில் புறப்படு!' என்று அவசரப்படுத்தினான்.

 
செல்வங் கொழிக்கும் அமெரிக்காவின் உல்லாசபுரியாகிய கலிபோர்னியா நகரின் அழகிய கடற்கரையோரமாக அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான ஹோட்டல் ஒன்றின் பிரத்தியேக மண்டபத்திற்கு அவனை அழைத்துச் சென்றான் சிவா.
மண்டபத்தின் வெளியே விசாலமான தோட்டத்தில் படகுபோன்ற பல கார்களும், புதிய மோட்டார் சைக்கிள் சிலவும் நிறுத்தப்பட்டிருந்தன. மண்டபத்தின் உள்ளே நுழைந்தபோது ஸ்ரீரியோ ஒலிபரப்பில் பொப் இசை முழங்கிக் கொண்டிருந்தது. நீண்டதொரு ஹோலின் நடுவே வாலிபரும், யுவதிகளுமாகப் பத்துப் பதினைந்து பேர் இசைக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் நடுவே நின்ற ஒருத்தி இவர்களைக் கண்டதும், 'ஹை! கம் இன்!' என்று வரவேற்றவாறே முன்னுக்கு வந்தாள். அவள் அருகே வந்ததும், 'இவள்தான் என்னுடைய நண்பி டெனிஸ்!' என இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான் சிவா.
கங்கா டெனிஸின் கரத்தைப் பற்றிக் குலுக்கியபோது, அவளைக் கவனித்தான். பதினெட்டு வயதிருக்கும். வாலிபம் கொழிக்கும் உடல். மகிழ்ச்சி கொப்பளிக்கும் விழிகள்.


மிகவும் உரிமையுடன் சிவாவின் கரத்துடன் தன் கையைக் கோர்த்து இணைத்தவாறே ஒரு பக்கமாக அவர்களை அழைத்து பானங்களும், உணவு வகைகளும் வைக்கப்பட்டிருந்த ஒரு நீண்ட மேசையை நோக்கிச் சென்றாள். அங்கே மேசையருகில் தனியே நின்று, நடனமாடும் சோடிகளைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை, 'ஹை! கரோலின்! இதோ உன்னுடைய பாட்னர்!, இலங்கை நண்பர்!' என்று டெனிஸ் அழைத்தபோது, சட்டெனத் திரும்பி அவர்களிடம் வந்தாள் கரோலின்.


நீண்ட பொன்னிறக் கூந்தலும், நீல விழிகளும், இளமை ததும்பித் திமிறும் உடலுமாகச் சிரித்துக் கொண்டே வந்த அவளை இருவருக்கும் அறிமுகப் படுத்திவிட்டு, 'ஹாவ் எ குட் ரைம்!' என்று கண்ணைச் சிமிட்டி அவர்களிருவரையும் விட்டுவிட்டு சிவாவை இழுத்துக்கொண்டு போய்விட்டாள் டெனிஸ்.
'உங்களுடைய டிரிங் என்ன?' என்று கரோலின் கேட்டபோது, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு வைன் எடுத்துக் கொண்டான் கங்கா. கரோலின் தன் கிண்ணத்தில் மீண்டும் விஸ்கியை வார்த்துக் கொண்டு, 'வாருங்கள் அந்த சன்னலோரமாக உட்கார்ந்து பேசுவோம்!' என அங்கு போடப்பட்டிருந்த ஒரு சோபாவை நோக்கிச் சென்றாள்.

 
கையில் மதுக்கிண்ணத்துடன் அவள் பக்கத்தில் அமர்ந்த கங்கா, மண்டபத்தின் நடுவே ஜோடி, ஜோடியாக நின்றிருந்த வாலிபர்களையும் யுவதிகளையும் கவனித்தான். அங்கு நின்றிருந்த ஆண்கள் சுமார் ஆறேழு பேரிருக்கும். அவர்கள் அனைவருமே வேறு வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களுடைய தோற்றத்தில் தெரிந்தது. யுவதிகள் யாவரும் அமெரிக்க ரீன் ஏஜேஸ்!
கங்காவின் பார்வை சென்ற திக்கையும், அவன் முகத்தில் தோன்றிய வியப்பையும் கண்ட கரோலின், 'மிஸ்டர் கங்கா! நாங்கள் எல்லோரும் பல்கலைக்கழக மாணவிகள்! மாதத்தில் இருதடவை இப்படி ஒன்றுகூடுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த வெவ்வேறு நாட்டு வாலிபர்களை அழைத்து, விருந்திட்டு மகிழ்வது எமது வழக்கம்..... இப்படிச் செய்வதனால் ஒவ்வொரு இனத்தைப் பற்றியும், நாட்டைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பேற்படுகின்றது.' எனக் கரோலின் விளக்கியபோது வியப்புடன் அவளை நோக்கிய கங்கா, 'ஒரு தனிமனிதனைக் கொண்டு ஒரு இனத்தையோ, அல்லது நாட்டையோ நீங்கள் எப்படிச் சரியாக அறியமுடியும்!' என்று கேட்டபோது சிரித்துக் கொண்ட கரோலின், 'நீங்கள் சொல்வதுபோல் ஒரு தனிமனிதனைக் கொண்டு நாம் எதையும் பூரணமாக தெரிந்து கொள்ளாவிடினும், சில விஷயங்களையாவது நாம் தெரிந்துகொள்ள முடியுமல்லவா!' என்று கேட்டுவிட்டுச் சிறிது விஸ்கியைப் பருகிக்கொண்டாள் கரோலின்.

 
'ஒரு இனத்தைப் பற்றி அறிவதைவிட அந்த இன வாலிபனுடன் நாம் சேர்ந்திருக்கும் அனுபவத்தைத்தான் நாம் மிகவும் ரசிக்கின்றோம்! .... அதற்காகத்தான் இந்தத் திட்டம்! ... இன்றிரவு தொடங்கி, நாளை மாலைவரை, நாம் சுதந்திரமாக எமக்குப் பிடித்தவர்களோடு மகிழ்ந்திருப்போம்.... உலகையெல்லாம் சுற்றாமலேயே இந்த ஹோட்டல் மண்டபத்துக்குள்ளேயே நாம் உலகின் பலதரப்பட்ட இலட்சணங்களைச் சுவையாக அறிந்து கொள்கிறோம்!' என்றாள்.
அவளுடைய நீண்ட கூந்தலை அவதானித்த கங்கா, 'நீங்கள் ஒரு ஹிப்பியா?' என்று கேட்டதும், 'நீண்ட தலைமயிரை வைத்திருப்பவர்கள் எல்லாம் ஹிப்பிக்கள் அல்ல! ஆனால் எங்களுக்குக்கூட வாழ்க்கை அலுத்துத்தான் போய்விட்டது. இந்தக் கொஞ்ச வயதுக்குள்ளேயே நாங்கள் உலக இன்பங்கள் அத்தனையையும் அனுபவித்துத் தீர்த்துவிட்டோம்! ருசியான உணவு, சிறந்த மது, வெவ்வேறு விதமான போதைப்பொருட்கள், சொகுசான வேகம் நிறைந்த கார்கள், விதவிதமான காதலர்கள், இவற்றையெல்லாம் அனுபவித்துத் தெவிட்டியதாற்றான் இந்தப் புதிய திட்டத்தில் ஈடுபடுகின்றோம்' என்ற கரோலின், மீண்டும் மதுவருந்திக் கொண்டாள்.

 
தேவைக்குமேல் செல்வம் கொழிக்கும் ஒரு நாட்டின் இளம் பெண்ணின் கருத்துக்களைக் கேட்ட கங்கா, அவளைக் கூர்ந்து கவனித்தான்.
பொன்னிறமான நீண்ட கூந்தல் அவளுடைய கழுத்தோரமாக அருவியைப்போல வழிந்து மார்பில் ஏறியிறங்கி மடியிலுங் கிடந்தது. வட்டமான இளைய முகத்தில் நீலக்கண்கள் சிரித்தன. வெண்சங்கு போன்ற அவளுடைய கட்டுடலை மறைக்க முடியாமல் அவள் அணிந்திருந்த மினி திணறியது.

 
கங்காவுக்குச் சித்திராவின் நீண்ட கூந்தலும், கருநாவற்பழக் கண்களும், நிலவு முகமும் நினைவுக்கு வந்தன. மீண்டும் கரோலினுடைய நீல விழிகளுக்குள் உற்று நோக்கினான் கங்கா. அந்த விழிகள் அழகாகத்தான் இருந்தன. ஆனால் சித்திராவின் கண்களினுள்ளே ஊறிக் கிடந்து, அவ்வப்போது ஆழங்காட்டும் அழகிய கனவுகள் கரோலினின் நீல விழிகளுக்குள் இல்லை. இலட்சியங்களும் எதிர்பார்ப்புக்களும் தேங்கியிராத வெறும் விழிகளாக அவையிருந்தன.


.... சித்திராவின் விழிகளும் இப்போ இப்படித்தான் இருக்குமோ? .... என கங்கா எண்ணிப் பெருமூச்சு விட்டான்.


அவனுடைய முகத்தில் தோன்றிய மாறுதலைக் கவனித்த கரோலின், அவனருகில் நெருங்கி உட்கார்ந்து, 'ஏன் இவ்வளவு துயரம்?' என ஆதரவாகக் கேட்டபோது கங்கா நெகிழ்ந்து போனான். தன் கையை மெல்ல விடுவித்துக் கொண்டே, 'எல்லாம் உன்னைப்போன்ற ஒரு கன்னியின் நினைவுதான்!' என்றபோது அவனுடைய சிரிப்பில் சோகம் இழைந்தது.
அவனுடன் இன்னமும் நெருங்கி உட்கார்ந்த கரோலின், 'யார் கங்கா! உங்களுடைய காதலியின் நினைவா! அவளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!' மதுவின் போதையில் அவளுடைய நீலவிழிகள் சற்றுக் கிறங்கிப் போயிருந்தன.
இனிமையான மதுவும், அழகிய பெண்ணொருத்தியின் ஆதரவான பேச்சும், கங்காதரனை வழக்கத்துக்கு மாறுபட்ட வகையில் மனந்திறந்து பேச வைத்தன.
இடையிடையே மதுவைச் சுவைத்துக் கொண்டே, கரோலின் கங்கா கூறியதையெல்லாம் கவனமாகக் கேட்டிருந்தாள். அவன் சுருக்கமாகத் தன் கதையைச் சொல்லி முடித்தபோது, அவளுடைய விழிகள் கலங்கி விட்டிருந்தன.


'இளங்காதல் உலகத்திலேயே மிகவும் பரிசுத்தமானது கங்கா! எனது முதற் காதலை உங்கள் கதை எனக்கு ஞாபகப்படுத்தி விட்டது. என்னுடைய மென்மையான உணர்ச்சிகளை மதிக்காத என் காதலன் இன்னொருத்தியைத் தேடிக்கொண்டான். அதன்பின் எவரிலுமே அப்படிப்பட்ட புனிதமான, தீவிரமான காதல் ஏற்பட்டதேயில்லை! ... இப்போ நான் அதை நினைப்பதுமில்லை! ...ஏதோ அந்தந்த நேரத்து மனநிலைக்குத் தகுந்தபடி வாழ்கின்றேன்!' என்று உணர்ச்சி மேலிடக் கூறிய கரோலின், அந்த உணர்வுகளை உதறிவிடுவது போன்று சட்டென்று எழுந்து கங்காவின் கரத்தைப் பிடித்திழுத்து, 'பழையவற்றை எல்லாம் மறந்து விடுவோம்! இன்றையப் பொழுதை இன்பமாகக் கழிப்போம்!' என்று மீண்டும் மேசையடிக்குச் சென்றாள்.
அவர்கள் கிண்ணங்களை மீண்டும் நிரப்பிக் கொண்டபோது, 'எங்கள் நீச்சல் தடாகத்தை நீங்கள் இன்னும் பார்க்கவில்லையே! வாருங்கள்!' என்று கங்காவை மண்டபத்தின் ஒரு வாயிலினூடாகக் கூட்டிச் சென்றாள் கரோலின்.


ஒரு சிறிய மண்டபத்தில் ஒரு அழகான நீச்சல் தடாகம் நீரினடியில் விளக்குகள் பொருத்தப்பட்டு இளம் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. இன்னமும் அங்கு யாவரும் வரவில்லை.
'வாருங்கள் கங்கா! நன்றாக நீந்திக் களைத்துப் பழைய நினைவுகளை மறந்துவிடலாம்!" என அழைத்த கரோலின் தன் ஆடையைக் கழற்றத் தொடங்கினாள். அவளுக்கு மதுபோதை சற்று அதிகமாகியிருப்பதை விழிகள் காட்டின.


'நான் இப்படி உட்கார்ந்திருக்கின்றேன், நீங்கள் நீந்துங்கள்!' என்ற கங்கா தடாகத்தின் அருகில் போடப்படடிருந்த ஒரு இருக்கையை நோக்கிச் சென்று அமர்ந்து நிமிர்ந்தபோது, கரோலின் ஸ்பிரிங் பலகையின் மேல் நின்றுகொண்டிருந்தாள். நீல விளக்கொளியில் வீனஸ் தேவதையைப் போலஇ அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்த கங்காதரனுக்கு உள்ளமும் உடலும் கூசியது!


அவனுடைய திகைப்பைக் கவனித்த கரோலின், 'என்னிடம் ஒளிப்பதற்கு ஒன்றுமேயில்லை மிஸ்டர்!' எனக் கலகலவென்று நகைத்துவிட்டு ஸ்பிரிங் பலகையிலிருந்து உந்தியெழுந்து நீருக்குள் பாய்ந்தாள்.
வெதுவெதுப்பான அந்த நீரில் துளைந்து நீந்திக்கொண்டு அவள் மேலே வந்தபோது அங்கே கங்காதரனைக் காணவில்லை. 'ஸ்ருப்பிட் பெலோ!' என்று வாய்விட்டுச் சிரித்த அவள், ஆனந்தமாய் நீந்திக் கொண்டிருந்தாள்.
சிவாவைத் தேடிச்சென்ற கங்கா, ஹோலின் ஒரு கோடியில், டெனிஸன் நெருக்கமான அணைப்பில் அவனைக் கண்டான்.


இவனைக் கண்டதும், 'என்ன கங்காதரா?' என்று சிவா எழுந்து வந்தபோது அவனுடைய கரத்தைப் பற்றிய கங்கா, 'எனக்கும் இந்தச் சூழலுக்கும் ஒத்து வராது சிவா! நான் என்னுடைய அறைக்குப் போகின்றேன்' என்று சொன்னபோது, அட்டகாசமாகச் சிரித்தான் சிவா. 'உன்னைப்போல வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத ஒரு முட்டாளை நான் கண்டதில்லை!' சிவா கேலி செய்தான்.
'யார் முட்டாள் என்பதைப் பற்றிப் பிறகு முடிவு செய்வோம்!' என்ற கங்கா புறப்பட்டு விட்டான். உள்ளே சிவா ஏதோ கூற டெனிஸ் உரத்துச் சிரிக்கும் ஒலி கேட்டது.


ஒரு வாலிபனுடன் நெருங்கிப் பழகுவதனால் ஒரு இனத்தை அல்லது ஒரு நாட்டைப் புரிந்து கொள்ளலாம் என்று எண்ணும் கரோலினையும், அவளுடைய நண்பிகளையும் பற்றிச் சிந்தித்த கங்காதரன், சித்திராவையும் நினைத்துக் கொண்டான்.
பிறந்த மண்ணுக்கும் ஒரு பெண்ணின் பண்புக்கும் தொடர்பு உண்டா? கங்காதரன் தன்னையே கேட்டுக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான். 
 
தொடரும்..


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 08:48
TamilNet
HASH(0x5584716f9a80)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 08:48


புதினம்
Tue, 19 Mar 2024 08:48
















     இதுவரை:  24681817 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1370 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com