அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 08
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 08   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 17 January 2007

8.

அன்று மத்தியானம் வன்னிச்சியார் சாப்பிடவில்லை. மூன்று மணிபோல் பொல்லையும் ஊன்றிக் கொண்டு குமாரபுரத்திற்குப் புறப்பட்டுவிட்டாள். சித்திர வேலாயுதக் கோவிற் காட்டை ஒட்டியிருந்த ஒரு சின்ன வளவில்தான் குமாருவும், அவனுடைய உறவினரான செல்லையாக் கிழவனும் குத்தகைக்குக் குடியிருந்தனர்.
  
குமாரபுரக் காட்டினூடாகச் சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்த வன்னிச்சியாரின் நினைவுக்குத் தன் தகப்பன் மாப்பாணசேகர வன்னியர் கூறும் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.

"எங்கடை வன்னியா குடும்பம் காலங் காலமாகக் கோயில் சொத்தை அனுபவித்த குடும்பம் அம்மா! .. எங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மிஞ்சிறதை ஏழை எளியன்களுக்குக் குடுத்துப் போடோணும். இல்லாட்டில் பழிச் சொத்தைத் திண்ட பாவம் தலைமுறை தலைமுறையாய் நிண்டு வருத்தும்."

... அப்புவின்ரை காலத்திலை ஒவ்வொரு நாளும் எத்தினை ஏழை எளியதுகளுக்கு வீட்டிவை அவிச்சுப் போடுவம்! ... என்ரை அவரும் அப்புவுக்குக் குறைஞ்சவரே! ..எத்தினை காணி பூமியைச் சும்மாய் குடுத்திருப்பார்! ... ம்ம்... எல்லாத்தையும் என்ரை மோன் ஆள்ப்பட்டுக் குடியிலையும், கூத்தியிலேயும் காசைக் கொட்டினதுக்குப் பிறகுதானே வன்னியா குடும்பத்துக்கு இந்த நிலை!....

பெத்தாச்சி பெருமூச்சுடன் பாழடைந்து கிடந்த பழங் கோவிலைக் கடந்து அதற்குமப்பால் இருந்த குமாருவின் வளவை அடைந்தாள்.

குமாரு வீட்டிலே இருந்தான். வன்னிச்சியார் வீடு தேடி வந்ததைக் கண்ட செல்லையர் திகைத்துப் போனார்.

"என்ன வன்னிச்சியார் இவ்வளவு தூரம்? ஆரிட்டையும் சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பனே!"

"அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டுது செல்லையா! ... நான் ஆளனுப்புகில் அந்தக் குமருகளிலை ஒண்டைத்தான் அனுப்பலாம்! ... வேறை ஆர் எனக்கு?" .. என்றவாறே திண்ணையில் அமர்ந்த வன்னிச்சியார் சுற்றி வளைக்காமல் தான் வந்த விஷயத்தைப் பட்டென்று கேட்டுவிட்டாள்.

அவள் கூறிய விஷயம் செல்லையருக்குப் பயத்தை ஏற்படுத்தியது.

"நீங்கள் என்ன பறையிறியள்? ..... உங்கடை குலமென்ன? குடும்பமென்ன? இவன்ரை நிலையென்ன?" நாக்குழறினார் செல்லையர்.

"உந்தக் குலம் கோத்திரக் கதையளை விடு செல்லையா! .. கையிலை நாலு பணமிருந்தால் மதிப்பு மரிசாதையெல்லாம் தானாய் வீடு தேடி வரும்! .. இல்லாட்டி இந்த நாளையிலை நாயும் ஏனெண்டு எட்டிப் பாக்காது! .. எங்கடை சித்திராவுக்கும் குமாருவைச் செய்ய நல்ல விருப்பம்... ஏதோ கிடக்கிற காணியிலை அவளுக்கும் ஒரு பங்கு குடுப்பன்! .. நகை நட்டு எல்லாத்தையும் எப்பவோ வித்துத் திண்டு குடிச்சாச்சு! ... ஊருக்கையும் இதுகள் இரண்டையும் சேத்து இல்லாதது பொல்லாதது எல்லாம் சேத்துக் கதை கட்டி விட்டிருக்கினம்! ... ஏதோ என்ரை மனதிலை சரியெண்டு தெரிஞ்சதைச் செய்ய வேணுமெண்டுதான் இஞ்சை வந்தனான்!..."

வன்னிச்சியாரின் குரல் கணீரென்றிருந்தது.

"எனக்கு உதுக்கு என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை! ... உவனுக்குச் சம்மதமெண்டால் எனக்கும் சரிதான்! .." செல்லையர் பொறுப்பைக் குமாரு மேல் சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிய வண்ணம் ஒரு பக்கமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த குமாருவின் மனதில் கடந்த இரவு கோவிலிலிருந்து வருகையில் தன் பின்னே வந்த சித்திரா பெருமூச்சு விட்டதும், அவன் திரும்பிப் பார்க்கையில் நிலவில் அவளுடைய விழிகள் நீரில் மிதந்ததும், அந்த விழிகளில் தேங்கி நின்ற கரைகாணாச் சோகமும் அவனுக்கு மீண்டும் கண்ணில் தெரிந்தன.

பின்பு வீட்டினில், அவள் "கொஞ்சம் நில்லுங்கோ!" என்று கூறிவிட்டுச் சுடச்சுடத் தேநீர் தயாரித்து வந்து தந்துவிட்டுத் தான் அதை அருந்துவதையே வைத்தகண் வாங்காது பார்த்து நின்றதையும் நினைத்துக் கொண்டான்.

அன்று காலையில் அவன் ஏதே அலுவலாகத் தண்ணீரூற்றுக்குச் சென்றபோது, அங்கு அவனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், ஊரிலே அடிபடும் வதந்தியைப்பற்றி அவனுக்குச் சொல்லியிருந்தனர்.

அப்போது அவன், "நாக்கிலை நரம்பில்லாதவை என்னத்தைத்தான் கதைக்கமாட்டினம்!" என அதை அலட்சியமாக எண்ணியிருந்தான். ஆனால் இப்போ வன்னிச்சியார் தனது வளவு தேடிவந்து சம்பந்தம் பேசுகையில், அந்த வதந்தி சித்திராவையும், அவளுடைய குடும்பத்தினரையும் எவ்வளவு தூரம் பாதித்திருக்கின்றது என்பது குமாருவுக்கு விளங்கியது.

சித்திராவின் அழகிய தோற்றத்தையும், அவளுடைய ஏக்கம் தோய்ந்த விழிகளையும் மீண்டும் நினைவுகூர்ந்த குமாரு, "உங்கடை விருப்பம் போலை செய்வம்!" எனச் சம்மதித்தான்.

வன்னிச்சியார் அகமும் முகமும் மகிழ்ச்சி பொங்க "எனக்கு அப்பவே தெரியும் குமாரு சம்மதிப்பான் எண்டு!", என்று சொன்னபடியே எழுந்து குமாருவை நெருங்கி, அவனை அணைத்து அவனுடைய நெற்றியிலே முத்தமிட்டு, "பொழுதுபடப் போகுது செல்லையா! நாளைக்குக் காலமை ஒருக்கா வளவுக்கு வா!... ஒரு நல்ல நாளாய்ப் பாத்துச் சோறு குடுப்பிச்சு விடுவம்!" என்று கூறி, விடைபெற்றுக் கொண்டு உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்தவளாய் வன்னியர் வளவை நோக்கி விரைந்தாள் அந்த மூதாட்டி.

வளரும்..


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 06:46
TamilNet
HASH(0x5563ab170468)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 06:46


புதினம்
Tue, 19 Mar 2024 06:46
















     இதுவரை:  24681744 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1859 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com