அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 19
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 19   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 07 July 2007

19.
கல்லூரியில் முதலாவது இடைத்தவணைப் பரீட்சை நடந்து  முடிந்திருந்தது. தமிழ்ப் பண்டிதர் விடைத்தாள்களைத் திருத்தி  வகுப்புக்குக் கொண்டு வந்திருந்தார். சில நல்ல விடைகளைப் படித்துக்காட்டிச் சில திருத்தங்களும் கூறிவந்த பண்டிதர், 'பல நாட்களுக்குப்  பின்னர் ஒரு, கருத்துச் செறிவு நிறைந்த, அருமையான கட்டுரை  ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்கேற்பட்டது. சமுதாயத்தில்  பெண்ணின் பங்கு என்பதுதான் அதன் தலைப்பு! நீங்களும் கேட்டுப்  பாருங்கள்!" எனக்கூறி அக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தார்.


'..... மனித சமுதாயம் என்பது பல குடும்பங்கள், கிராமங்கள்,  நகரங்கள், நாடுகள் என்ற அங்கங்களைக் கொண்டது. சமுதாயத்தின்  அடிப்படை அங்கமாகவிருக்கும் குடும்பங்களின் தலைமைப்  பொறுப்பை ஏற்று நடத்தும் ஒரு ஆணுடைய திறமையிலேயே அந்தக் குடும்பங்களின் வாழ்வும் தாழ்வும் தங்கியிருக்கின்றன என நாம்  மேலோட்டமாக நினைக்கலாம். ஆனால் அந்தக் குடும்பத்  தலைவனுடைய சகல வெற்றி தோல்விகளுக்கும் காரணமாக  இருப்பவள் ஒரு பெண்ணே! அவள் தாயாகவிருக்கலாம் அல்லது  தாரமாகவிருக்கலாம்.
ஒரு குடும்பம் நன்றாக வாழ்கின்றது. அங்கே செல்வமில்லாவிடினும்  அமைதியும், இன்பமும் நிறைந்த வாழ்க்கை நடைபெறுகின்றது.  இப்படிப்பட்ட சிறந்த வாழ்க்கைக்குக் காரணம் யார் என்பதை நாம்  அவதானித்தால் நிச்சயமாக அவர் அந்தக் குடும்பத்  தலைவியாகத்தான் இருப்பார். இதைப்போன்றே இன்று நம்  கண்முன்னே அவலநிலையில் உழன்று கொண்டிருக்கும் ஒரு  குடும்பத்தை எடுத்து நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அந்த  அவலநிலைக்கும் காரணமாகவிருப்பது ஒரு பெண்ணே என்பதையும்  உணரலாம். வாசுகியைப் போன்ற சிறந்த மனைவி வள்ளுவருக்கு  வாய்க்காதிருந்தால் உலகம் போற்றும் உயர்ந்த நூலாகிய  திருக்குறளை அவரால் எழுதியிருக்க முடியாது.
மனைவியானவள் குடும்பத் தலைவனுக்கு வெவ்வேறு வேளைகளில் தாயாகத், தாரமாக, பணிப்பெண்ணாக விளங்குவதைப் போன்றே அவள் அவனுக்கு ஆலோசனை கூறும் அந்தரங்க மந்திரியுமாக  இருக்கிறாள். சக்தியின் வடிவம் என்று அழைக்கப்படும் இப் பெண்கள் ஒரு குடும்பத்தின் ஆணிவேரைப் போன்றவர்கள். ஆண்கள்  மண்ணின்மேல் காணப்படும் மரத்தின் எஞ்சிய பகுதியைப்  போன்றவர்கள்.
ஒரு பெண் நினைத்தால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லை,  எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கின்றோம். எனவே ஒரு  தனிமனிதனின், ஒரு குடும்பத்தின் வெற்றி-தோல்விக்குக்  காரணமாகவிருக்கும் பெண், தன் சிறுபராயந் தொட்டே அந்தப்  பணிக்கு ஆயத்தம் செய்யப்பட வேண்டியவளாகின்றாள். நமது  இனத்தின் பாரம்பரியக் கதைகள், புராணங்கள் முதலியவை  பெண்களை மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்ததும் எதிர்காலச்  சந்ததியின் நன்மை கருதியே!
ஒரு சிறந்த மனைவியாக வரவிருக்கும் ஒரு பெண்ணுக்கு மிகவும்  முக்கியமானவை, பொறுமையும், எளிமையும், தீவிர உழைப்புமே!  தன்னை அகழ்பவரைத் தாங்கி நிற்கும் அன்னை பூமியைப்போல,  எந்தவிதமான இடர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டபோதும்  பொறுமையைக் கைவிடாது அமைதியாக நடக்கும் இயல்பு  அவர்களுக்கு இருக்க வேண்டும். அடுத்ததாக, ஒரு பெண் நிச்சயமாகத் தன்னையும், தன் சுற்றாடலையும் அழகுபடுத்திக் கொள்ளத்தான்  வேண்டும். ஆனால் அழகு என்றால் அது ஆடம்பரத்துடன்தான்  அமைய வேண்டுமென்றில்லை. இருப்பதில் சிறந்ததைக் கொண்டு  எளிமையாக வாழ்வது அழகு செய்வதில் மட்டுமல்ல, அன்றாட  வாழ்க்கைக் கிரமங்களில் அனேகமானவற்றிற்குப் பொருந்தக்கூடியது. 
அடுத்து, வெறுமனே பொறுமையும், எளிமையும் மட்டுமே  இருந்துவிட்டால் வாழ்க்கை சிறக்காது! பெண்ணென்பவள் தான்  ஈடுபடும் எச் செயலிலும் தீவிர உழைப்பைக் காட்டவேண்டும்!  சக்தியின் வடிவமாகிய அவள் சோம்பிக் கிடக்காமல் தானும் இயங்கி, மற்றவர்களையும் இயக்க வேண்டும். தீவிர உழைப்பே வாழ்க்கைக்கு  அவசியமான பொருளாதாரத்தைத் தேடித்தரும்.
கண்ணகிக்குக் கோவிலெடுத்து, அவளை வணக்கத்துக்கு உரியவளாக  உயர்த்தியதும், கல்வி, வீரம், செல்வம் என்ற மூன்றையும் பெண்களாக உருவகப்படுத்தித் தொழுவதும், சமுதாயம் பெண்களை  மதிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வாழ்க்கையில் இருக்கும் மாபெரும் பொறுப்பை  உணர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காகவுந்தான்!
எனவே நாளைய குடும்பத் தலைவிகளான இன்றைய இளம்பெண்கள், இதை நன்கு உணரவேண்டும். அவர்களுடைய ஆசாபாசங்கள்,  இலட்சணங்கள், இலட்சியங்கள் என்பவைதான் எதிர்கால  இல்லங்களின் வாழ்வுக்கோ, தாழ்வுக்கோ வித்தாக இருக்கப்போகும்  மூலகாரணிகள். இவர்கள் தம் பொறுப்பை உணர்ந்து, செவ்வனே  நடப்பார்களேயாயின் இல்லங்களில் அமைதியும், இன்பமும்  நிறையும்! வீடு நிறையின் நாடு நிறையும்! ஒரு சமுதாயத்தின்  ஆணிவேராக, அடிநாதமாக இருப்பவர்கள் அந்தச் சமுதாயத்தின்  பெண்கணே!...."


பண்டிதர் தன் வெண்கலத் தொனியில் இந்தக் கட்டுரையை ஒரு  சொற்பொழிவு போல வாசித்து முடித்தபோது வகுப்பில் நிசப்தம்  நிலவியது. அக் கட்டுரையின் ஆழமான கருத்துக்கள் மாணவ,  மாணவியருடைய மனங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.


'இந்தக் கட்டுரையை எழுதியவருiடைய சுட்டிலக்கம் 253. தயவுசெய்து அவர் எழுந்து நிற்கவும்" எனப் பண்டிதர் கேட்டுக்கொண்டபோது,  நாணம் மேலிட்டவளாய் நிர்மலா எழுந்து நின்றாள். மாணவ  மாணவியர் கரகோஷம் செய்து தம் பாராட்டைத் தெரிவித்துக்  கொண்டனர். அப் பாராட்டு தனக்குக் கிடைத்தது போலவே சற்று  அதிகமாகக் கைதட்டிப் பெருமிதப் பட்டுக்கொண்டான் வன்னியராசன்.
அன்று மாலை கல்லூரி வளவினுள் இருந்த ஆலயத்துக்கு நிர்மலா  வந்தபோது, வன்னியராசன் அங்கு ஏற்கெனவே வந்திருந்தான். பூச்சூடிப் பொட்டிட்டு மங்கலமாய் அவள் வந்த கோலம் அவன் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது.


நிர்மலாவைத் தனிமையிலே சந்திக்கச் சந்தர்ப்பம் வந்தபோது  அவளை நெருங்கிச் சென்றான் அவன். 'இப்பிடி ஒரு நல்ல  கட்டுரையை எழுதி எங்கடை வன்னிநாட்டுப் பெண்களுக்கே பெருமை தேடித் தந்துவிட்டீர்கள்!" என அவன் மனம்விட்டுப் புகழ்ந்தபோது,  அவனை நிமிர்ந்து நோக்கினாள் நிர்மலா.
அவளுடைய கண்கள் கலங்கிப் போயின.
'எங்கடை பெத்தாச்சி வன்னிச்சியார் காலத்திலை எங்கடை குடும்பம்  கொடிகட்டிப் பறந்தது..... அம்மா எங்கடை அப்பாவை வழிநடத்த  முடியாமல் போனதிலை மிகவும் உயரத்தில் இருந்த நாங்கள்,  மிகவும் கேவல நிலைக்கு வந்த காலமும் உண்டு! ... என்ரை அக்கா  சித்திரா மட்டும் இல்லாமலிருந்தால், நானும் தங்கச்சியளும் எப்பவோ நஞ்சு குடிச்சுச் செத்திருக்கோணும்!... நான் எழுதின கட்டுரை நான்  படிச்சதுகளை வைச்சு எழுதினதில்லை! அக்காவின்ரை வாழ்க்கையும்,  வழிநடத்தலுந்தான் அதின்ரை சிறப்புக்குக் காரணம்!..." நிர்மலாவின்  விழிகளிலிருந்து கண்ணீர்த்துளிகள் உதிர்ந்தன.


வன்னியராசன் உணர்ச்சி வசப்பட்டனவாய் அவளைத் தேற்றினான்  'சின்ன வயசிலை கஷ்டப்படுறது, பிற்காலத்துக்கு நல்லது ரீச்சர்!  நீங்கள் கவலைப்படாதேயுங்கோ!" என அவன் கூறியபோது, அந்த  வார்த்தைகளிலிருந்த பாசமும், ஆதரவும் நிர்மலாவின் இதயத்திற்கு  மிகவும் இதமாகவிருந்தன.
'நான் ஒருக்கால் உங்கடை வீட்டை வந்து, உங்கடை அக்காவையும்,  பெத்தாச்சியையும் பாக்ககோணும்!...."
'சித்திரை லீவுக்குக் கட்டாயம் வாருங்கோ!..." என்று கூறி  அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டாள் நிர்மலா.

இன்னும் வரும்..


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 15:06
TamilNet
HASH(0x559f03e19478)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 15:06


புதினம்
Thu, 28 Mar 2024 15:06
















     இதுவரை:  24712711 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5670 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com