அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 23 - 24
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 23 - 24   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Thursday, 11 October 2007

23.
அன்று மாலை பட்டிக்குடியிருப்புக்குப் போய்ச் சேர்ந்த வன்னியராசன் தன் மனதில் நிர்மலாவைப் பற்றிய இனிய நினைவுகளுடன் கூடவே பவளத்திற்கு மாப்பிள்ளை தேடவேண்டிய பொறுப்பையும் சுமந்து சென்றான்.
அவன் அந்தச் சிறிய கிராமத்தில் சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவன். அவனுடன் கூடப் பிறந்த ஒரேயொரு அண்ணன்தான் அவனைச் சிறுவயதிலேயே யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிக் கல்வி பயிற்றி அவனுக்கு வழிகாட்டியாக இருந்தவன்.
தாயில்லாத வன்னியராசன்மேல் அவனுடைய அண்ணி அன்பைச் சொரிபவள். அவள் மூலமாகத் தன் திருமணவிஷயத்தைத் தமையனுக்குத் தெரிவித்து அவனுடைய சம்மதத்தைப் பெற்றவிடலாம் என்று வன்னியராசனுக்கு அசையாத நம்பிக்கை இருந்தது.
அன்றிரவே தன் அண்ணியிடம் தன் மனதிலுள்ளவற்றைக் கூறியபோது அவள் மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். சிறுவயது முதலே கல்வியில் கவனமும் சிறந்த ஒழுக்கமும் கொண்ட தன் மைத்துனன் தனக்கேற்ற பெண்ணைத்தான் விரும்புவான் என்பதில் அவளுக்குச் சிறிதும் ஐயம் ஏற்படவில்லை.
கூடவே பவளத்தின் விஷயத்தைப் பற்றியும் அவள் காதில் போட்டுவைத்த வன்னியராசன் அன்று தொடக்கம், அக்கம் பக்கத்துக் கிராமங்களையெல்லாம் சல்லடை போட்டுச் சலித்தான். அவனுடைய முயற்சி விரைவிலேயே பலனளித்தது.
அடுத்த வாரம் அவன் மீண்டும் குமாரபரத்திற்குச் சென்றபோது சித்திராவிடம், 'அக்கா! பவளத்துக்கு ஒரு அருமையான மாப்பிளை பாத்திருக்கிறன்! ... நல்ல பிரயாசி! ... பிச்சுப் பிடுங்கல் இல்லாத குடும்பம்! ... என்ரை அண்ணை பெண்சாதியினுடைய சொந்தக்காறப் பொடியன்தான்..." என்று கூறியபோது, அவள் மகிழ்ந்து போனாள். 
'அக்கா! இந்தமுறை வற்றாப்பளைப் பொங்கலுக்கு வரேக்கை பொடியனைக் கூட்டி வாறம் .... கோயிலடியிலை பாக்கிலாம் ... அவனும் பொம்பிளையை ஒருக்காப் பாக்கட்டன்!" எனத் திட்டமும் வகுத்துக் கொடுத்தான் வன்னியராசன். பவளத்துக்குப் பார்த்திருந்த மாப்பிளையைப் பற்றி மேலும் பலவிபரங்களைக் கேட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டாள் சித்திரா.
வைகாசிப் பொங்கல் என அழைக்கப்படும் வற்றாப்பளைப் பொங்கல் வந்தபோது, ஏற்கெனவே செய்திருந்த ஏற்பாட்டின் பிரகாரம் விஷயங்கள் நிறைவேறின. இரு பகுதியினருக்கும் பூரண திருப்தி ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து ஆனிமாத முற்பகுதியில் பேச்சுக்கால் வைத்துத் திருமணத்திற்குத் தேதியும் குறித்துக் கொண்டனர்.
வன்னியராசன் சகல விஷயங்களையும் முன்னின்று நடத்தினான். நிர்மலாவும் அவனுமாக யாழ்ப்பாணத்தில் திருமணத்திற்குத் தேவையான நகைநட்டு, புடவை முதலிய பொருட்களை வாங்கி வந்தனர்.
குறித்த நாளிலே சித்திரவேலாயுதரின் சந்நிதியிலே சித்திராவின் விருப்பப்படி மிகவும் எளிமையான முறையிலே தாலிகட்டும் வைபவம் நடந்து கொண்டிருந்தது.
மாப்பிள்ளை பகுதியினரையும், வன்னியராசனின் குடும்பத்தினரையும், இங்கே சித்திராவின் குடும்ப நலனில் அக்கறை கொண்ட மிகச் சிலரையும் தவிர கோவிலடியில் கூட்டமில்லை.
வன்னியின் இன்னுமொரு கிராமமாகிய பழம்பாசியில் பிறந்த கட்டிளங் காளையான மாப்பிள்ளை சிவராசாவுக்குத் தோழனாக நின்றிருந்தான் வன்னியராசன். அவனுடைய அண்ணி மணப்பெண்ணின் தோழியாகச் சகல விஷயங்களையும் நடத்தினாள்.
மகிழ்ச்சி பொங்க நாணத்துடன் நின்றிருந்த மணப்பெண்ணுக்கு எந்த வகையிலும் குறைந்துவிடாமல் ஒரு ஓரமாக விஜயாவுடன் நின்றிருந்த நிர்மலா, தனக்கும் வன்னியராசனுக்குங்கூட இந்த முகூர்த்தத்திலே மானசீகமாகத் திருமணம் நடப்பதாக நினைத்துப் பரவசப்பட்டாள்.
சகோதரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் கோவிலடிக்குப் போக மறுத்துவிட்டாள் சித்திரா. அவளுடைய மனநிலையை உணர்ந்துகொண்ட பவளம், கோவிலுக்குப் புறப்படுமுன் சித்திராவின் காலடியில் விழுந்து விடைபெறுகையில் தேம்பியழ ஆரம்பித்து விட்டாள். 'அக்கா! அக்கா!" என்ற வார்த்தையைத் தவிர அவளால் வேறு எதுவுமே பேசமுடியவில்லை. 
ஆனால் அவளுடைய மனம் மட்டும், அக்கா! தாய்க்குத் தாயாய், தந்தைக்குத் தந்தையாய் எங்களை வழிநடத்தி நல்ல நிலைக்குக் கொண்டுவந்த நீ பட்டமரமாய் நிற்க நான் பசுமையான வாழ்வை நோக்கிச் செல்கிறேனே என அழுதது. சித்திரா கலங்கும் தன் இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, 'இதென்னடி இந்த நேரத்திலை அழுகை!" என்று அவளுடைய கண்ணீரைத் துடைத்து, 'போட்டு வா அம்மா!" என அன்போடு அனுப்பி வைத்தாள்.
யாவரும் கோவிலடிக்குச் சென்றதன் பின்னர் வாழைத் தோட்டத்தினூடாக விரைந்து சென்ற சித்திரா, தங்கள் காணிக்கும் கோவிலுக்கும் இடையே நின்ற ஆனைகட்டிய புளியமரத்தின் மறைவிலே நின்று கோவிலடியைக் கண்ணிமைக்காது பார்த்தாள்.
அமைதியும் எளிமையும் தேங்கிநின்ற அந்தச் சந்நிதியிலே கற்பூரதீபத்தின் சாட்சியாக மாப்பிள்ளை பவளத்தின் கழுத்தில் தாலியைக் கட்டியபோது சித்திராவின் மேனி சிலிர்த்தது. முருகா! என வேண்டிக்கொண்ட சித்திராவின் மனம் தன் இலட்சியங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேறி வருவதற்குக் காரணனாய் இருந்த குமாருவை நினைத்து உருகியது.
அரியாத்தை புருஷனுடைய பெயரைச் சொல்லி ஆனையைக் கட்டின போல நீங்கள் தந்த பெலத்திலை எங்களுக்கு வந்த கஷ்டமெல்லாத்தையும் கட்டிப் போட்டன்! இனி இவள் விஜயாவையும் ஒரு நல்ல இடத்திலை விட்டிட்டால் என்ரை பொறுப்பெல்லாம் முடிஞ்சு போகும்!, எனச் சித்திராவின் இதயம் குமாருவுடன் பேசிக்கொண்டது.

 
24.
பவளம் பழம்பாசிக்குப் போனபின் விஜயாவுக்கு வானொலி ஒன்றே தஞ்சமாக இருந்தது.
செல்லையரால் முன்போல் வேலை செய்ய முடியாததனாலும், இப்போ வேலையைப் பகிர்ந்துகொள்ள ஆட்கள் இல்லாததனாலும் அவர் தேவையேற்படுகையில் கூலியாட்களை அமர்த்தி, ஆக வேண்டியவற்றைக் கவனித்துக் கொண்டார்.
சதா கடும் உழைப்பையே தவமாக மேற்கொண்டிருந்த சித்திரா தன்னுடைய வேகத்தைச் சிறிதும் குறைக்கவில்லை. எவ்வளவுக்குப் பாடுபட்டு உழைக்க முடியுமோ அவ்வளவுக்கு முயன்றாள். பணம் சிறிது சிறிதாக அவர்களிடம் சோந்து கொண்டிருந்தது.
நாட்கள் ஓடிக் கொண்டேயிருந்தன. தைப்பொங்கலை முன்னிட்டு வாயும் வயிறுமாகப் பிறந்த வீட்டுக்கு வந்த பவளத்தின் முகத்தில் ஏறியிருந்த செழுமையையும், உடலில் ஏற்பட்டிருந்த பூரிப்பையும் கண்ட சித்திராவுக்குத் தன்னுடைய கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. 
பல நாட்களாகக் காணாமலிருந்த தமக்கையைக் கண்ட விஜயா, அவளைவிடடு ஒரு வினாடியும் அகலவில்லை. சித்திரா பவளத்துக்குப் பிடித்தமான பண்டங்களை ஆசைதீரச் செய்து கொடுத்தாள்.
இரண்டு நாட்கள் தங்கிய பவளம், 'அங்கை இனி அருவிவெட்டு துவங்கீடும்! .. நான் போனாத்தான் வெட்டுக்காறருக்கு சமைச்சுப் போட வசதி .. அவர் தனிய ஒண்டுஞ் செய்து கொள்ள மாட்டார்" என்று பொறுப்புணர்வுடன் புறப்பட்டபோது, அவளுக்கு ஏற்பட்டிருந்த குடும்பப்பாங்கைக் கண்டு பெருமிதப்பட்டுக் கொண்டாள் சித்திரா.
அடுத்த வைகாசிப் பொங்கலுக்கு ஒரவாரம் முன்பதாகவே தான் பெற்ற செல்வத்துடன் வீட்டுக்கு வந்தாள் பவளம். அழகாக கொழு கொழுவென்றிருந்த அந்த ஆண் குழந்தையை நிலத்திலே விடாமல் கொஞ்சிக் கொண்டாள் விஜயா.
'இஞ்சை கொண்டு வாடி என்ரை பூட்டனை!" என்று பெத்தாச்சி தன்னருகிலே குழந்தையைப் படுக்க வைத்துக்கொண்டு தாலாட்டுப் பாடினாள். அணைத்து மகிழ்ந்தாள். அந்தக் குழந்தையின் தண்ணென்றிருந்த தளிர் உடல் ஏற்படுத்திய பரவசத்தில் திளைத்து மகிழ்ந்தாள்.
அந்நாளில் தன் ஒரே மகனையும் அவனுக்குப் பிறந்த ஐந்து பெண்களையும் மார்பிலும் தோளிலும் போட்டுத் திரிந்த இனிய காலங்கள் அவள் ஞாபகப் பரப்பில் வந்து போயின.
 
000
நிர்மலாவும் பயிற்சி முடிந்து மார்கழியிலே வீட்டுக்கு வந்தபோது, வன்னிச்சியாரின் சந்தோஷம் கரைகடந்து விட்டது. ஆனால் அந்த மாரிகாலத்தின் வாடைக் குளிரைப் பெத்தாச்சியினால் இம்முறை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி வரும் காய்ச்சலில் அவதிப்பட்டாள். சித்திராவும் சகோதரிகளும் மாறிமாறி அவளருகிலே இருந்து கவனித்துக் கொண்டனர்.
ஒருநாள் இரவு சகோதரிகள் மூவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஏதேதோ பழங்கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். 'இனி எனக்கென்னடி பொட்டையள் குறை! ... நான் செத்தாலும் பறவாயில்லை! என்ரை குஞ்சுகள் எல்லாம் இனி நல்லாய் இருக்குங்கள்! ..." என்று அவள் கூறியபோது, 'இதென்ன பெத்தாச்சி கதை!" என்று அன்புடன் கடிந்த சித்திராவை ஏறிட்டுப் பார்த்தாள் வன்னிச்சியார்.
எல்லாரும் சந்தோஷமாய்த்தான் வாழப் போகின்றார்கள். ஆனால் என்னுடைய அருமைப் பேத்தி சித்திரா? ... விஜயாவும் இன்னொருவனுடைய வீட்டுக்குப் போய்விட்டால் சித்திரா தனிமரமாய் என்ன செய்வாள்? ... வன்னிச்சியாரின் இதயம் ஓலமிட்டது.
அன்றொருநாள் தான் குலசேகரத்தருடைய வீட்டுக்குச் சித்திராவின் திருமண விஷயமாகப் போய்விட்டு வரும் வழியிலே நடந்தவொரு சம்பவம் அவளுடைய மனச்சாட்சியை உறுத்தியது. பலநாட்களின் பின் இன்று அதை நினைவுகூர்ந்த வன்னிச்சியார் துடித்துப் போனாள்.
மகனுடைய படிப்பு முடிய மூன்று வருடங்கள் கழியும். அதன்பிறகு பார்த்துச் செய்யலாம் என்று குலசேகரத்தார் மனைவி கூறியபோதே இந்தத் திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை வன்னிச்சியாருக்குத் தகர்ந்து விட்டது. தன்மானம் மிக்க அவள் குலசேகரத்தாரை எடுத்தெறிந்து பேசிவிட்டு, ஆத்திரத்துடன் திரும்பிக் கொண்டிருந்த பொழுது, சைக்கிளில் வேகமாக வந்த கங்காதரன், அவளருகில் இறங்கினான்.
'என்ன?" என்பதுபோல் கம்பீரமாய் அவனைப் பார்த்தாள் வன்னிச்சியார். 'ஆச்சி! அப்பா அம்மா சொன்னதுக்கு என்னிலை கோவியாதையுங்கோ! சரியாய் இரண்டு வரியத்திலை என்ரை படிப்பு முடிஞ்சு நான் திரும்பி வந்த உடனை சித்திராவைக் கலியாணம் முடிப்பன்! ... எனக்காக இரண்டு வரியம் பொறுத்துக் கொள்ளுங்கோ! ... அமெரிக்கா போறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்து போட்டன்!" என்று கெஞ்சினான் கங்காதரன்.
அதற்கு வன்னிச்சியார், 'மோனை கொப்பரும் கொம்மாவும் படிப்பு முடியட்டும் செய்வம் எண்டு சாட்டுச் சொன்னது என்னட்டைச் சீதணம் இல்லை எண்டதுக்குத்தான்! .. இரண்டு வரியம் கழிச்சு, நீ வந்திட்டால் ... எங்களிட்டைச் சீதணமும் வந்திடுமோ? ..." என்று கூறியபோது, 'அவைக்கு விருப்பம் இல்லாட்டிலும் நான் கட்டாயம் சித்திராவைத்தான் முடிப்பன்!" என்று மீண்டும் உறுதி கூறினான் கங்காதரன்.
அதைக் கேட்ட வன்னிச்சியாரின் முகத்தில் ஏளனப் புன்னகையொன்று படர்ந்தது. 'பொட்டையைக் காட்டி சீதணம் இல்லாமல் மருட்டிப் போட்டாளவை எண்ட வசை கேட்டுக்கொண்டு நானோ என்ரை புள்ளையளோ உயிரோடு இருக்க மாட்டம்!" என்று தீர்க்கமாகச் சொல்லிய வன்னிச்சியார், 'இனிமேல் சித்திராவை மறந்துபோடு மோனை!" என்று கூறிவிட்டு மேலே நடக்கத் தொடங்கிவிட்டாள். 
ஆத்திரத்துடன் வீட்டுக்கு வந்தவளிடம் நிர்மலா, 'அத்தானும் அங்கை நிண்டவரோ?" என விசாரித்தபோது, 'ஓமாக்கும்! அங்கினைக்கைதான் நிண்டவன்!" என அசுவாரஷ்யமாகக் கூறியிருந்தாள்.
இடையிலே கங்காதரன் தன்னைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டதை சித்திராவிடம் வெளியிட வேண்டுமென்ற எண்ணம், அன்று அவளிடம் கிஞ்சித்தும் இருக்கவில்லை. உயிர்போனாலும் தன்மானத்தை இழக்க, அவள் தயாராக இருக்கவில்லை.
ஆனால், இன்று கணவனை இழந்து, தனிமரமாகப் போகும் சித்திராவைப் பஞ்சடைந்த விழிகளால் நோக்கிய பெத்தாச்சிக்கு, நான் செய்ததது சரிதானா? என்ற சந்தேகமும் கழிவிரக்கமும் ஏற்பட்டன. ஒருவேளை கங்காதரன் திரும்பி வந்து இவளை மறுமணஞ் செய்யும்படி கேட்டால்? ... ஏன் எங்கள் ஊரிலேயும் எத்தனை விதவைகள் மறுமணஞ் செய்திருக்கின்றனர் அல்லவா? ... இளவயதிலே மறுமணஞ்செய்து ஆறுமாதங்கள் மட்டும் வாழ்க்கை நடத்திய இவளை, இப்போது பார்த்தாலும் கன்னிப் பெண்ணைப் போலதானே தோற்றுகிறாள்? .. வன்னிச்சியாரின் சிந்தனை தறிகெட்டு ஓடியது.
அன்றிரவு அவளருகே சித்திரா மட்டும் இருக்கையில், அவளைத் தன்னருகே கூப்பிட்டு அன்று நடந்த விஷயங்களையெல்லாம் பெத்தாச்சி கொட்டித் தீர்த்தபோது, சித்திரா பொறி கலங்கித் தடுமாறிப் போனாள்.
... அப்போ அத்தான் உண்மையில் தன் தாய் தந்தையுடன் சேர்ந்து என்னை ஏமாற்றவில்லையா? இந்த விஷயத்தைக் கூறுவதற்குத்தானா அன்று பொங்கல் தினத்தன்று என்னைத் தேடி வந்தார்? ஆசையுடன் வந்தவரை, ஏசித் துரத்திவிட்டேன் அல்லவா நான்! ...
சித்திரா குழம்பித் தவித்தாள். அவளுடைய மௌனத்தைக் கவனித்த பெத்தாச்சி, 'நான் உனக்குத் துரோகம் செய்து போட்டன்!" என்று கலங்கியபோது, தன்னைச் சுதாரித்துக் கொண்ட சித்திரா, 'இதன்னெணை பெத்தாச்சி! அத்தான் என்னை முடிச்சிருந்தாலும் தங்கச்சியவளவைக்கு இண்டைக்கு இந்த நிலை வந்திருக்குமோ? அவையின்ரை பிச்சைக் காசிலையல்லோ நாங்கள் சீவிச்சிருக்கோணும்!" என்று கூறியபோது, சித்திராவின் மானவுணர்ச்சியை எண்ணிப் பெருமிதமடைந்தாள் வன்னிச்சியார்.
... சித்திரா இனிமேல் என்ன செய்வாள? ... தங்கைகளைப் பிரிந்து இனம்பிரிந்த மான்போல் எப்படியெல்லாம் அவதிப்படுவாளோ? ... என்ற கவலையுடனும், கொதிக்கும் சுரத்துடனும் இரவு முழுவதும் போராடிக் கொண்டிருந்தாள் வன்னிச்சியார். 
பிறந்தது தொட்டு வைராக்கியத்துடனும், தன்மானத்துடனும் வாழ்ந்த வன்னிச்சியாரின் கதை, அன்றைய பொழுது விடியும் தருணத்தில் முடிந்து விட்டிருந்தது.
சித்திரா மனதைக் கல்லாக்கிக் கொண்டு, செய்யவேண்டிய காரியங்களைக் கவனித்தாள்.
வன்னிச்சியாரின் இறுதிச் சடங்கிற்கு ஊரே திரண்டு வந்திருந்தது.

தொடரும்...


 


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 05:45
TamilNet
HASH(0x55ff10b40f98)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 05:45


புதினம்
Tue, 19 Mar 2024 05:45
















     இதுவரை:  24681664 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1853 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com