அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 21 - 22
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 21 - 22   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Tuesday, 21 August 2007

21.
கங்காதரன் அமெரிக்காவுக்கு வந்து, ஏறத்தாழ ஓராண்டு காலமாகி விட்டது. இன்னும் ஒரு வருடத்தினுள் அவனுடைய பயிற்சி முடிந்துவிடும். நடுவே நடந்த தேர்வின் முடிவுகள் அவன் முயற்சிக்குத் தக்க பலனாகவிருந்தன.
அவனுடைய தந்தை பல விஷயங்களையிட்டு மனமுடைந்து கடிதமெழுதியிருந்தார்.
... கொம்மாவுக்கு இப்ப பிறசர் குணம்... எழும்பித் திரியமாட்டா! ... என்று தாயாருடைய சுகவீனத்தைக் குறிப்பிட்டுவிட்டு, 'இப்ப இந்த ஒரு வரியத்துக்கை காலமெல்லாம் தலைகீழாய்ப் போய்ச்சுது! ... ஒரு ஆளுக்கு, ஆக 6 ஏக்கர் வயலும், 5 ஏக்கர் மேட்டுக் காணியுந்தான் வைச்சிருக்கிலாம் எண்டு சட்டம் கொண்டு வந்திட்டாங்கள்! .... மிச்சமாய்க் கிடக்கிறதை கவுணமேந்து எடுத்து, காணியில்லாத ஆக்களுக்குப் புறிச்சுக் குடுக்கப் போறாங்களாம் .... எனக்கு வயிறு பத்தியெரிது! .. எங்கடை காணிபூமி 130 ஏக்கரளவிலை எடுபடப் போகுது! ... அதோடை இப்ப ஊருக்கையும் சரியான பிழையள் நடக்குது! ... முந்தநாள் எங்கடை வயலுக்கையும் தோட்டத்துக்கையும் கூலி வேலை செய்ததுகள் எல்லாம் இப்ப முத்திரையன் கட்டுத் திட்டத்திலை முளகாய்க் கண்டு நட்டு, புதுப் பணக்காறராய் மாறியிருக்குதுகள்! ... அதுகளுக்கு எங்களைப்போலை ஆக்களுக்கு மதிப்பு, மரியாதை குடுத்து நடக்கோணும் எண்ட எண்ணம் சிந்தனை கொஞ்சமும் இல்லை .." என்ற ரீதியில் பிரலாபித்து எழுதியிருந்தார் குலசேகரத்தார்.
அவருடைய கடிதத்தைப் படிக்கையில் கங்காதரனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
பிறநாடுகளிலேயும், மக்களிடையேயும் ஏற்பட்டுவரும் துரித மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குத் தன் தந்தை பழமையிலும், ஆதிக்க வெறியிலும் ஊறியவர் என்பது அவனுக்குத் தெரியும். கண்முன்னே ஏற்பட்டுவரும் புதிய மாற்றத்தைச் சீரணித்துக் கொள்வது தன் தந்தையைப் போன்றவர்களுக்குக் கஷ்டமென்றாலும், தேவைக்கு அதிகமாகச் செல்வம் ஓரிடத்தில் குவிவது தேயைற்றது மட்டுமல்ல, மிகவும் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதைக் கங்காதரன் அமெரிக்காவில் தான் வாழ்ந்த ஒரு வருட அனுபவத்தைக் கொண்டு அறிந்திருந்தான்.
அளவுக்கு மீறிய செல்வத்தை வைத்துக்கொண்டு, அதை எப்படி அனுபவிப்பது என்பதே தெரியாமல் திணறி, உடலும் உள்ளமும் திரிந்துபோன கரோலினைப் போன்ற அமெரிக்க வாலிபர், யுவதிகளின் இலக்குத் தவறிப்போன வாழ்க்கையை அவன் அன்றாடம் காணக்கூடியதாக இருந்தது.
நாகரிகம் மலிந்திருந்த அமெரிக்க நாட்டிலே தான் கற்கவேண்டியது மதிநுட்பமேயன்றி, மனநுட்பம் அல்ல என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
காலமாற்றத்தை உணர்ந்து, அதற்கேற்பத் தானும் மாறமுடியாமல் தத்தளிக்கும் தன் தந்தையின் நிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட கங்காதரன், அவருக்கு ஆறுதலளிக்கும் வகையிலே, தான் அண்மைக்காலத் தேர்விலே அடைந்த விசேட சித்தி பற்றியும், தான் பெற்றுவரும் கல்வியின் பயனாக எதிர்காலத்தில் தன்னுடைய நாட்டுக்கு ஆற்றக்கூடிய சேவையையும், அதன்மூலம் தனக்குக் கிடைக்கவிருக்கும் மதிப்பைப் பற்றியும் பதிலெழுத ஆரம்பித்தான்.


22.
வருடப்பிறப்பன்று அதிகாலையிலேயே எழுந்து தலை நீராடி, தத்தம் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு, பொங்கலிடுவதற்கான ஆயத்தங்களை செய்தனர் நிர்மலாவும் அவளுடைய இளைய சகோதரிகளும். வெகுநேரமாகியும் சித்திரா நீராடவோ, புதுச்சேலை அணியவோ செய்யாது தோட்டத்தில் ஏதுவோ வேலையாக இருந்ததைக் கண்ட இளையவள் விஜயா, 'அக்கா! நீ புதுச்சீலை உடுக்காட்டி நாங்களும் உடுக்கமாட்டம்!" எனத் தான் அணிந்திருந்த புதுப் பாவாடையையும், சட்டையையும் கழற்றி வைக்கப் போனாள்.
சகோதரிகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியபோது, நான்தான் வாழ்விழந்தவள் ... ஆனால் என்னுடைய நிலையின் காரணமாக இந்தச் சின்னஞ்சிறிசுகளும் எதற்காக ஒரு நல்ல நாளில் கலகலப்பின்றி இருக்க வேண்டும்? .... என்று எண்ணிய சித்திரா, 'சரி! அதுக்கென்ன நானும் முழுகீட்டு ஒரு சீலையை உடுக்கிறன் .... நீங்கள் செல்லையா அம்மானுக்குப் பொங்குறதுக்கு உதவியளைச் செய்து குடுங்கோ!" என்று கூறிவிட்டுத் துரவுக்குக் குளிப்பதற்காகச் சென்றாள்.
சில்லென்ற நீரில் முழுகிக்கொண்ட சித்திரா, ஈரச் சேலையுடனேயே பக்கத்திலிருந்த குமாருவின் சிதையடிக்குச் சென்றாள். அவனுடைய உடலை எரித்திருந்த இடத்திலே நின்ற அந்த மரம் கருகிப் பட்டுப்போய் நின்றிருந்தது.
எரிந்து எஞ்சி மழையில் கழுவப்பட்ட கரித்துண்டுகள் குவியலாய்க் கிடந்தன. அந்த மேட்டின் முன்னே பயபக்தியுடன் விழிகளை மூடிநின்ற சித்திரா, இறந்துபோன தன் கணவனை நினைந்து உருகினாள். அவனோடு வாழ்ந்த வறுமை மிகுந்த ஆனால் இன்பம் நிறைந்த அந்த நாட்களை எண்ணி மகிழ்ந்தாள். 'எல்லாம் நீ தந்த செல்வம் ஐயா!" என இரங்கித் தியானித்துக் கொண்டு, தோட்டத்துக்குத் திரும்பிய சித்திரா ஒரு சாதாரணப் புதுச் சேலையை உடுத்துக்கொண்டு சகோதரிகளுடன் அமர்ந்து உணவருந்தினாள். தன்னுடைய செயல் தன் தங்கைகளுக்குக் கொடுத்த மகிழ்ச்சியை அவதானித்த அவள், ... உங்கடை சந்தோஷந்தான் என்னுடைய சந்தோஷம்! .... என மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். 
அடுத்தநாட் காலையில், நிர்மலாவும் இளைய சகோதரிகளும் சித்திரவேலாயுத கோவிலுக்குப் புறப்படுகையில், 'நீயும் வாவனக்கா!" என்று சித்திராவையும் அழைத்தனர். 'நான் நேற்றுக் காலமையே கோயில் கும்பிட்டிட்டன்! நீங்கள் போட்டு வாருங்கோ!" என அவர்களை வழியனுப்பிவிட்டு, புதிதுடுத்தி மூன்று தங்கைகளும் செல்லும் அழகை, வாசலில் நின்றவாறே, மனங்கொண்ட மட்டும் ரசித்தாள் சித்திரா.
தன்னைவிட இரண்டு வயது குறைந்த நிர்மலாவுக்கு இப்போ வயது இருபதாகின்றது. பவளத்திற்குப் பத்தொன்பது, விஜயாவுக்கு இப்போ பதினேழு வயதுதான்.. ஆனால் சற்று வயதுக்கு மீறிய வளர்ச்சி! மிக விரைவில் நிர்மலாவுக்கும் பவளத்திற்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும் ... விஜயாவுக்கு இரண்டொரு வருடம் கழித்து ஏற்பாடு செய்யலாம் ... என்று தனக்குள் திட்டம் போட்டுக் கொண்டாள் சித்திரா.
பாழடைந்து கிடந்த கோவிற் சந்நிதியில் கற்பூரம் கொளுத்தித் தேங்காய் உடைத்து வணங்கிக் கொண்டனர் சகோதரிகள். மற்றவர்கள் இருவரையும்விட, வெகுநேரமாக விழிகளை மூடித் தியானித்த நிர்மலாவுடன் கோவிலடியை விட்டு வெளியேறிய போது, 'என்ன நிர்மலா! பட்டிக்குடியிருப்புப் பக்கம் பாத்துத்தான் நீ கும்பிட்டனி போலை கிடக்கு! அதுதான் கனநேரமாய்க் கண்ணை மூடிக்கொண்டு நிண்டனியோ?" என்று விஜயா கேலி செய்தபோது, பவளம் பக்கென்று சிரித்துவிட்டாள். 'போடி விசரியள்! உங்களுக்கு வேறை வேலையில்லையோ!" என்று கடிந்தபோது, அற்புதமாகச் சிவந்து மாறிய நிர்மலாவின் முகத்தைக் கண்டு வியந்தாள் பவளம்.
முன்பு அத்தானைப் பற்றிப் பேசுகையில் அக்காவின் முகம் மாறுவது போலல்லவா நிர்மலாவின் முகம் இப்போ கோலங் காட்டுகின்றது! எனத் தனக்குள் எண்ணிக்கொண்ட பவளம், எதிரே குமாரபுர வீதியில், சற்றுத் தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்டாள்.
நிர்மலாவைச் சிறிது கேலி செய்ய வேண்டும்போல் பவளத்திற்குத் தோன்றவே, 'அங்கை பார் நிர்மலா! பட்டிக்குடியிருப்பு மாஸ்ரர் வாறார்!" என்று கூறவும், நிமிர்ந்து பார்த்த நிர்மலாவின் நெஞ்சு நின்றே போய்விட்டது!
உண்மையாக அங்கு வந்துகொண்டிருந்தது வன்னியராசனே! 'எப்பிடியடி உனக்குத் தெரிஞ்சுது!" என ரகசியமான குரலில் வியந்துகொண்ட நிர்மலா, 'அவர் வீட்டைதான் வாறார்! நிண்டு கூட்டிக்கொண்டு போவம்!" என்று சொல்லிக் கொண்டிருக்கையில், அவன் இவர்கள் நின்றிருந்த இடத்துக்கு வந்துவிட்டான். 
காலை வேளையிலே காடு சூழ்ந்த பாழடைந்த கோவிலின் பின்னணியில் மான்கிளை போல அந்தச் சகோதரிகள் நின்றிருந்த அந்தக் காட்சி, வன்னியராசனின் மனதைக் கவர்ந்தது.
'என்ன ரீச்சர்! உங்கடை வீட்டை வாறதெண்டால் காட்டுக்காலைதான் வரவேணும் போலை!" எனச் சிரித்தபடியே அவன் கூறியபோது, 'ஏன்? உங்கடை பட்டிக்குடியிருப்பு பெரிய ரவுணோ?" என்று துடுக்காகக் கேட்டுவிட்டுக் கலகலவென்று சிரித்தாள் விஜயா. கூடவே பவளமும் சேர்ந்து கொண்டாள்.
'சும்மா இரடி விஜயா!" என அவளை அடக்கிவிட்டு, தங்கைகள் இருவரையும் அவனுக்கு அறிமுகஞ் செய்து, 'வாருங்கோ! வீட்டை போவம்!" என்று அவனையும், தங்கைகளுடன் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள் நிர்மலா.
தோட்டத்தின் கச்சிதமான வேலி, வாழைகளின் செழிப்பு என்பவற்றைக் கண்ட வன்னியராசன் பிரமித்துப் போனான்.
ஒரு தனி அறையையும் நீண்ட மாலையும் கொண்ட அந்த அடக்கமான வீட்டைச் சுற்றிப் பூஞ்செடிகள் அழகு செய்தன. மேட்டுப் பாங்கான பூமியில் அமைந்திருந்த வீட்டுக்கு மேற்கே, ஒரு பெரிய குடிசையும் அதன் அயலிலே அடுக்களையும் காணப்பட்டன.
'அக்கா! அக்கா!" என நிர்மலா கூப்பிட்ட குரலிலே தொனித்த வேறுபாட்டை உணர்ந்த சித்திரா, என்வென்று பார்ப்பதற்காக வெளியே வந்தாள்.
முழுகி அவிழ்த்துவிட்ட கருங்கூந்தல் முழங்காலுக்குக் கீழே புரள, வெய்யிலிலும் பனியிலும் புடமிடப்பட்ட உடல் செப்புச்சிலை போலக் காலை வெய்யிலில் மின்ன, மெலிந்த வலிய கொடி போன்ற தோற்றத்தோடு வெளியே வந்த சித்திராவையும், அவளுடைய அகன்ற கருவிழிகளிலே பிரகாசித்த அதீத ஒளியையும் கண்ட வன்னியராசன் ஒருகணம் தன்னை மறந்துவிட்டான்.
நிர்மலாவும் சகோதரிகளும் சித்திராவின் சாயலைக் கொண்டிருந்தாலும், சித்திராவின் உள்ளே கொழுந்தவிட்டு எரிந்துகொண்டிருந்த ஏதோ ஒன்று அவளைச் சுற்றிப் பிரகாசிப்பது போல உணர்ந்தான் அவன். மனதில் பக்தியையும் பயத்தையும் ஏற்படுத்தும் ஒரு தேவதையின் தேஜசோடு விளங்கும் அந்த இளம் விதவையின் அழகு ஆராதனைக்குரியது, ரசனைக்குரியதன்று, என்று அவன் மனம் சொல்லிக் கொண்டிருந்த போது, 'இவர்தான் அக்கா என்னோடை படிக்கிற பட்டிக்குடியிருப்பு மாஸ்டர்!" என்று நிர்மலா சொல்வது கேட்டு, அவன் தன் கரங்களிரண்டையும் கூப்பி, 'வணக்கம்!" என்றான். 
அவனை நிமிர்ந்து ஏறெடுத்துப் பார்த்த சித்திராவின் விழிகள் வன்னியராசனுடைய கண்களினூடாகப் பாய்ந்து, அவனுடைய இதயத்தில் உள்வற்றையெல்லாம், ஒரு வினாடிக்குள் அறிந்துகொண்டு திரும்பின.
'வாருங்கோ தம்பி!" அன்புடன் அவனை வரவேற்று மாலுக்கு அழைத்துச் சென்றாள் சித்திரா. பாயை விரித்து அவனை உட்காரச் செய்வதற்குள், நிர்மலா தண்ணீர்ச் செம்புடனும், பலகாரப் பெட்டியுடனும் அங்கு வந்துவிட்டாள்.
அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த சொற்ப வேளைக்குள்ளாகவே அவனை நிர்மலாவின் சகோதரிகளுக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. கண்ணியமான குணமும், உற்சாகமான சுபாவமும் உடையவன்தான் என்பதை அவனுடைய தோற்றத்திலும், பேச்சிலும் உணர்ந்துகொண்ட சித்திரா, அவன் அளவுக்கு அதிகமாக நிர்மலாவை நேசிக்கிறான் என்பதுடன், அவளும் அவனை விரும்புகின்றாள் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டாள்.
'மத்தியானம் சாப்பிட்டிட்டுப் பின்னேரமாய்ப் போகலாம் தம்பி!" என அவனுக்குச் சொல்லிவிட்டு, நேரே குடிசையினுட் சென்ற சித்திரா பெத்தாச்சினருகில் உட்கார்ந்தாள்.
'பெத்தாச்சி! பட்டிக்குடியிருப்பு ராமலிங்கத்தாற்றை மோன் சந்திரசேகரத்தை உங்களுக்குத் தெரியுமே?" எனச் சித்திரா கேட்டபோது, புருவங்களை நெரித்துக்கொண்டு, 'பட்டிக்குடியிருப்பு ராமலிங்கமோ?" என்று சிந்தனையில் ஆழ்ந்த வன்னிச்சியாரின் முகம் சட்டென்று தெளிவடைந்தது.
'ஓமடி மோனை! அவர் உன்ரை கொப்பற்றை தேப்பன்ரை கூட்டாளிதான்! ... நல்ல மனுசன் .... அந்த நாளையிலை பட்டிக்குடியிருப்பிலை இருந்து ஊருப்பட்ட தேன் அனுப்புறவர்! ... ஏன் புள்ளை அவருக்கென்ன?" என்று கேட்டாள் பெத்தாச்சி.
'ஒண்டுமில்லை பெத்தாச்சி! அவற்றை பேரப்பொடியன் எங்கடை நிர்மலாவோடை பாலாலியிலை படிக்கிறது ... .இண்டைக்கு இஞ்சை வரியம் கழிச்சு வந்திருக்குது!" சித்திரா சற்று நிம்மதியுடன் பதில் சொன்னாள். 'இஞ்சை என்னடிக்கு கூட்டிக்கொண்டு வரச் சொல்லணை அந்தப் புள்ளையை!" என்று பெத்தாச்சி கேட்டுக் கொண்டபோது, சித்திரா எழுந்துபோய் நிர்மலாவிடம் சொல்லிவிட்டு, 'ஏதாவது நல்ல கறி வேண்டிக் கொண்டு வாங்கோ அம்மான்!" எனச் செல்லையரையும் அனுப்பிவிட்டு, மத்தியானச் சமையலைச் செய்வதற்காக பவளத்தையும், விஜயாவையும் அழைத்தாள். 
நிர்மலாவுடன் குடிசைக்குள் போன வன்னியராசனைத் தன்னருகிலே இருத்திக்கொண்டு, அவனுடைய பேரனாரின் சேமங்கள் பற்றியும், பட்டிக்குடியிருப்பில் தனக்குத் தெரிந்த வேறுசில குடும்பங்களின் செய்திகளையும் கேட்டறிந்து கொண்டாள் வன்னிச்சியார்.
அவளை நேரில் கண்ட வன்னியராசன், சித்திராவுக்கு இயல்பாகவே அமைந்த அழகும், ஆளுந்தன்மையும் யாரிடமிருந்து அவளுக்குக் கிடைத்தன என்பதைப் புரிந்து கொண்டான். உடல் தளர்ந்துபோன நிலையிலும், குரலிலோ பேச்சிலோ கம்பீரம் குறைந்துவிடாத வன்னிச்சியாரின் நேரடி வாரிசுதான் சித்திரா என்பதை அவன் தெரிந்து கொண்டான்.
குடிசையினுள்ளிருந்து வெளியே வந்து, மீண்டும் மாலுக்குள் போய் அமர்ந்தபோது, 'உங்கடை அக்காவையும், பெத்தாச்சியையும் பற்றி நான் நினைத்திருந்ததைவிட அவையள் உண்மையிலேயே மிகவும் உயர்ந்தவர்கள்!" என உணர்ச்சி மேலிடக் கூறினான் வன்னியராசன்.
தானும் தன் தங்கைகளும் தெய்வங்களெனப் போற்றும் இருவரையும் வன்னியராசன் மிகவும் உயர்வாக மதிக்கின்றான் என்பதை அவன் வாய்வழிக் கேட்ட நிர்மலா பரவசப்பட்டுப் போனாள். அவள் எதுவுமே பேசாது அவனுடைய முகத்தை அன்புப் பெருக்குடன் நோக்கி மெய்சிலிர்த்தாள்.
செய்யவெண்டிய வேலைகளையிட்டுத் தங்கைகளுக்குக் கூறிவிட்டு மாலுக்கு வந்த சித்திரா, 'நிர்மலா! நீயும் போய் சமையலைக் கெதியிலை முடியம்மா! நான் தம்பிக்கு எங்கடை தோட்டத்தைக் காட்டிக்கொண்டு வாறன்!" என்று கூறியபோது, வன்னியராசன் எழுந்து சித்திராவைப் பின்தொடர்ந்தான்.
வாழைகளினூடாகச் சென்று கிணற்றடிக்கு வந்த சித்திரா, அங்கேயே நின்று, 'எங்கடை கோயிலைப் பாத்தியளே!" என்று சற்றுத் தொலைவில் தெரிந்த சித்திரவேலாயுத கோவிலைக் காட்டினாள். 'வரேக்கை கோயிலுக்குப் பின்னால் ஒழுங்கையால் வந்தனான் .... உள்ளுக்குப் போய்ப் பாக்கேல்லை!" என்றான் வன்னியராசன்.
இடிந்து சிதிலமடைந்த சுற்றுப்புற மதிலோடும், காரை பெயர்ந்த சுவர்களோடும் பாழடைந்து கிடந்த ஆலயத்தையே பார்த்தவாறு சித்திரா பேசினாள்.
'எங்கடை பழைய காலத்து ஆக்கள் வன்னிமார் கட்டின கோயிலாம் இது! .. அவையள் அந்தக் காலத்திலை செய்த அக்கிரமங்களாலோ இல்லாட்டி எங்கடை விதிவசத்தாலையோ இந்தக் கோயில் இப்ப இருக்கிற நிலைமையிலைதான் ஒரு வரியத்துக்கு முந்தி எங்கடை குடும்பமும் இருந்தது.... ஆனா என்ரை புருசன்ரை முயற்சியாலை, இண்டைக்கு நாங்கள் ஏதோ நாலுகாசு கையிலை வைச்சிருக்கிறம் ....!" 
குரல் கரகரக்கக் கூறிய சித்திரா சட்டென்று திரும்பி வன்னியராசனைப் பார்த்தாள்.
'தம்பி, நீர் நிர்மலாவை விரும்புகிறீர் .... இல்லையே?" என அவள் நேரிடையாகவே கேட்டுவிட்டபோது, 'ஓம்!" என்று மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல், ஒடுங்கிப்போய்க் கூறினான்.
'தம்பி! காதலிக்கிற அதே வேகம் ... காதலிக்கிற பொம்பிளையைக் கைவிடாமல் காப்பாற்றுவதிலையும் இருக்கவேணும்! ... நீர், நிர்மலாவைக் கலியாணஞ் செய்வன் எண்டு எனக்கு உறுதியாய்ச் சொன்னால் காணும்! ... இல்லையெண்டால் அவளோடை பழகிறதை விட்டிடும் தம்பி! ... காதலிச்சவன் கைவிட்டிட்டால் அதைப்போலை ஒரு வேதனை ஒரு இளம் பொட்டைக்கு வேறையில்லைத் தம்பி! ..." எனத் தழுதழுத்த குரலில் கூறியபோது அவளுடைய விழிகளிரண்டும் குளமாய்த் தளும்பின.
அவளுடைய ஒளிவீசும் முகத்தையும், எதிரே தெரிந்த பாழடைந்த ஆலயத்தையும் ஒருமுறை பார்த்துக் கொண்ட வன்னியராசன், 'அக்கா! இந்தக் கோயிலிலை இருக்கிற முருகனாணை நான் சத்தியமாய் நிர்மலாவைத்தான் கலியாணம் செய்வன்! ... என்ரை உயிர்தான் போனாலும் அவளைக் கைவிடன்!" என ஆவேசங் கொண்டவன்போல் உறுதியளித்தான்.
சற்றுநேரம் அங்கு அமைதி நிலவியது.
மிகவும் முக்கியமானதொரு விஷயம் முடிவுசெய்யப்பட்ட நிம்மதியோடும் மனப்பூரிப்போடும், அவனைக் கருணை பொங்கப் பார்த்த சித்திரா, 'இந்த நிமிசத்திலையிருந்து நீங்கள் இந்தக் குடும்பத்திலை ஒரு ஆள் தம்பி! ... நிர்மலாவுக்கு இப்ப இருவது வயது. பவளத்துக்குப் பத்தொன்பது துவங்கீட்டுது ... படிப்பு முடிய நீங்கள் நிர்மலாவை முடிக்கிலாம் .. ஆனால் பவளத்துக்கு இந்த ஆவணியிலை எங்கையெண்டாலும் ஒரு நல்ல பொடியனாய்ப் பாத்துச் சம்பந்தம் செய்யவேணும் ... அவளின்ரை பேரிலை பத்தாயிரம் ரூபா போட்டிருக்கிறன் ... மண்ணைக் கொத்துறவன் எண்டாலும் மனுசிக்காறியை மானமாய் வைச்சுக் காப்பாத்தக் கூடியவனாய் இருக்கோணும் .. ஏழையெண்டால் இன்னும் நல்லது.." என்று மனந்திறந்து பேசினாள் சித்திரா.
'இந்தச் சித்திரை லீவு முடியிறதுக்கிடையிலை எங்கையெண்டாலும் பாத்து ஒரு நல்ல இடமாய் முடிவு செய்து போடுறன்! .. உந்தக் கவலையை என்னட்டை விட்டிட்டு நீங்கள் நிம்மதியாய் இருங்கோ அக்கா!" 
அவனுடைய திடமான பதில் சித்திராவுக்கு மிகவும் தென்பைக் கொடுத்தது. 'சரி தம்பி ... வாருங்கோ வீட்டை போவம்!" என அவனை அழைத்து வந்து மாலுக்குள் இருக்கச் சொல்லிவிட்டு குசியினுட் சென்ற சித்திரா, 'நிர்மலா நீ போய் வாத்தியாரோடை கதைச்சுக் கொண்டிரு நாங்கள் சமைக்கிறம்" என்றபோது நிர்மலா எழுந்து, மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் அவதிப்பட்டுச் சென்றாள்.
தேங்காய் துருவிக் கொண்டிருந்த விஜயா தமக்கைக்குத் தெரியாமல் பவளத்தைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டாள்.

இன்னும் வரும்.. 


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 03:43
TamilNet
HASH(0x55ef984f51d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 03:43


புதினம்
Tue, 19 Mar 2024 03:43
















     இதுவரை:  24681489 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1934 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com