அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 04
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 04   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 20 November 2006

4.

வைகாசி விசாகத்துப் பூரண நிலவு நந்திக் கடலைப் பாற்கடலாக மாற்றிக் கொண்டிருந்தது.

நந்திக் கடலோரத்தில் அமைந்திருந்த வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவிலும் அதன் சுற்றுப்புறமும் மின்சார தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிவெள்ளமாகத் திகழ்ந்தன. ஒரு பக்கம் நந்திக் கடலாலும், மறுபுறங்களில் வயல்களினாலும் தென்னந்தோப்புக்களாலும் சூழப்பெற்ற அந்தப் பழமையான ஆலயத்தைச் சுற்றியுள்ள பெருநிலப் பரப்பில் எள்போட்டால் கீழே விழாத அளவிற்கு மக்கள் திரண்டிருந்தார்கள்.

கோவிலின் முன்றலிலே ஆயிரக்கணக்கான பக்கதர்கள் பொங்கலிட்டுக் கொண்டிருந்தனர். தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியதற்கான நன்றிக்கடனைச் செலுத்தச் சந்நிதியில் கூட்டம் அலை மோதியது.

வவுனியா மாவட்டத்திலிருந்த கிராமங்களிலிருந்து வந்திருந்த உள்ளுர் மக்களும் வெளியூர்களிலிருந்து கார்களிலும், வான்களிலும், லொறிகளிலும் வந்த பக்தர்களுமாகப் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவிலின் விசாலமான வெளிவீதியின் ஓரங்களில பாய்க் கடைகள், பழக்கடைகள், உணவுச் சாலைகள் எனப் பல்வகையான பொருட்களை விற்பனை செய்யும் பல்வேறு கடைகள் சாரிசரியாக போடப்பட்டிருந்தன.

சனத்திரளின் ஓசை, ஒலிபரப்பிகளின் சினிமாப் பாடல்கள், குழந்தைகளின் அழுகைகள், அம்மம்மாக் குழல்களின் அலறல்கள் இத்தனையுமாகக் கலந்து விபரிக்கமுடியாத பேரிரைச்சல் கிளம்பிக் கொண்டிருந்தது.

வெளிவீதியிலே மக்கள், குடும்பம் குடும்பமாகப் பாய்களை விரித்துக்கொண்டு தரையிலே அமர்ந்திருந்தார்கள்.

ஒரு ஒதுக்குப் புறமான இடத்திலே சித்திராவும் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். கோவிலடிக்கு வந்ததுமே நேரே ஆலயத்தினுட் சென்று வணங்கிவிட்டு வந்து அங்கே பாயை விரித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள் அவள்.

முன்பென்றால் இப்படியா இருப்பாள்? தன் சகோதரிகளுடன் ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்தவாறே சென்று தனக்கும் தங்கைகட்கும் வேண்டிய வளையல்கள், ரிபன் போனறவற்றை வாங்குவாள். எதிர்ப்படும் பள்ளிப்பருவ நண்பிகளுடன் பேசி மகிழ்வாள். பொங்கலன்று இரவு முழுவதும் கோவிலடியைச் சுற்றிவரும் இயல்பினளான அவள் இன்றுமட்டும் பெத்தாச்சியுடன் தங்கைகளை அனுப்பிவிட்டுத் தனியே இருந்து கொண்டாள்.

சில நாட்களுக்கு முன் அவளுடைய கனவுகள் கலைந்து போனதன் பின் அவளுடைய குதூகலமான இயல்பு அவளைவிட்டு அகன்றிருந்தது. மௌனமாக அமர்ந்திருந்து அவள் தனக்கெதிரில் போயும் வந்தும் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்களிற்றான் எத்தனை இளங்குடும்பங்கள்! எத்தனை வாலிபர்கள்! எத்தனை யுவதிகள்!

..... இந்த வாலிபர்களுக்கும் யுவதிகளுக்கும் எங்கெங்கு வாழ்க்கைத் துணைகள் பிறந்திருக்கும்? அவர்கள் எப்போது சந்தித்துக் கொள்வார்கள்? .....

சித்திராவின் மனம் எதற்காகவோ ஏங்கியழுதது. .... என்னுடைய எதிர்காலந்தான் என்ன? ... ஒரு பருவப்  பெண்ணுக்குரிய நியாயமான ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் என்னைப் பொறுத்தமட்டில் நிறைவேற வாய்ப்பில்லையே! என்னுடைய தங்கைகளின் நிலைமை எப்படியிருக்கப் போகின்றது? கிழட்டுத் தென்னைகளும், பழைய வீடும் ஐந்து பெண்களையும் கரைசேர்க்குமா?

சித்திரா ஏதேச்சையாக மறுபுறம் நோக்கியபோது அங்கே கங்காதரன்... அவளுடைய அத்தான் அவளை நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டாள்.

அவனைக் கண்டதுமே சித்திராவின் நெஞ்சு கொதித்துக் குமுறியது. இயற்கையாகவே சிவந்த நிறம் கொண்ட அவளுடைய முகம் மேலும் சிவந்து, விழிகள் கனல்போன்று ஒளிர்ந்தன.

வெடுக்கென்று முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்ட அவளருகிலே வந்த அவன், 'சித்திரா" என்று ஆவலுடன் கூப்பிட்டபோது, அளவுகடந்த சினத்தினாலும், ஆத்திரத்தினாலும் அவளுடைய உடல் படபடத்தது.

நான் ஒன்றும் மானங் கெட்டவளல்ல! பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்படுகிற நீங்கள் இந்த ஏழையிலை ஆசைப்பட்டிருக்கக் கூடாது. எனக்கும் ஆசையைக் கொடுத்திருக்கக் கூடாது! எங்களிட்டைப் பணங்காசுதான் இல்லாமல் போட்டுது! ஆனால் மானம் மரியாதையெல்லாம் இல்லாமல் போகேல்லை! என்றெல்லாம் திட்டித் தீர்ப்பதற்குத்தான் அவளுடைய உதடுகள் துடித்தன. ஆனால் அக்கம் பக்கத்திலே ஆட்கள் நிறைய இருந்ததனால் சித்திரா தன்னுடைய ஆத்திரத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

சித்திராவைத் தனிமையில் சந்திக்க எவ்வளவோ முயன்றும் தோற்றிருந்த கங்காதரன் இங்கு அவள் தனியே இருப்பதைக் கண்டு, அவளுடன் எத்தனையோ விஷயங்களைக் கூறுவதற்கு ஆவலுடன் வந்திருந்தான். ஆனால் சித்திராவின் முகம் போனபோக்கைக் கண்டதுமே அவனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.

'நீ ஆர் என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட? எனக்கும் உனக்கும் இனிமேல் எந்தவிதமான தொடர்புமில்லை எண்டு நினைச்சுக்கொள்!" என அனல் பறக்கக் கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சித்திரா.

கங்காதரனுக்குச் செருப்பால் அடித்தது போலிருந்தது சித்திராவின் செய்கை. இவ்வளவு மூர்க்கமா இவளுக்கு? என்று எண்ணியவனை அவமானம் பிடுங்கியது. என்ன செய்வதென்றே தெரியாமல் சற்றுநேரம் திகைத்துப் போய் நின்றவன், அக்கம் பக்கத்தில் உள்ளோர் ஒரு மாதிரியாகப் பார்க்கத் தொடங்கவே அந்த இடத்தைவிட்டு உடனே அகன்று விட்டான்.

அன்று புன்னை மரத்தடியில் பாகாய் உருகிய சித்திராவா இவள்? இன்று அக்கினிக் குழம்பாய்த் தகிக்கும் இவள் அந்தச் சித்திராதானா? என்று எண்ணியவனுக்கு அவள் சற்றுமுன் கூறிய சுடுசொற்கள் மீண்டும் மீண்டும் தீய்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இவளுக்கு மட்டுந்தான் மானமும் ரோசமுமா? எனக்கு மட்டும் அவை இல்லையோ? என அவன் மனம் சீறியது. நெஞ்சில் ஆத்திரம் பற்றியெரிந்தது.

மனதை அடக்கமுடியாமல் நந்திக் கடலோரத்திலே சனசஞ்சாரமில்லாத இடமாகப் பார்த்து மணலிலே போய் உட்டகார்ந்தான் கங்காதரன்.

அடுத்த நாள் மாலையே உயர்கல்வி பயில அமெரிக்காவுக்குப் புறப்படவிருந்த அவன், கடந்த நாட்களில் சித்திராவைத் தனியே சந்தித்துப் பேசமுயன்றும் முடியவில்லை. அவளுடன் பேசுவதற்கு எத்தனையோ முக்கியமான விஷயங்கள் இருந்தன. இன்று அவளுடைய சடுதியான மனமாற்றத்தைக் கண்டு மனங் குழம்பிப்போனான் கங்காதரன்.

தன்னை நாடி வந்த கங்காதரனை ஏசித் துரத்தியபின் சித்திராவின் சீற்றம் தணிந்திருந்தது.

..... சே! இந்த ஆண்களென்றாலே இப்படித்தான்! காதலிக்கும்போதும், வாக்குறுதிகள் வழங்கும்போதும் கண்மூக்குத் தெரியாது!.. கலியாணம் என்றுமட்டும் வந்துவிட்டால் சொத்தென்ன? சீதணமென்ன? என்றல்லவா சிந்திக்கின்றனர்...?

சித்திரா மீண்டும் கோவிலடியில் அலைமோதும் மக்கள் வெள்ளத்தைக் கவனித்தாள்.

எத்தனை வாலிபர்கள்! எத்தனை யுவதிகள்! பணமும் பதவியும், சொத்தும் சுகமும் எல்லாப் பெண்களுக்குமா இருக்கின்றது? இத்தனை ஆயிரம் யுவதிகளில் என்னைப் போன்ற ஏழைகளும் எத்தனைபேர் இருப்பார்கள்! அத்தனை பேரும் வாழ்வு கிடைக்காமல் கன்னிகளாகவே இருந்துவிடப் போகிறார்களா?

அவர்களுக்கும் எங்கோ ஓர் ஏழை பிறந்து காத்திருப்பான்!... சித்திராவின் கன்னி நெஞ்சு கனன்று கொண்டது.

 


 


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 09:51
TamilNet
HASH(0x5588c07fe928)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 09:51


புதினம்
Tue, 19 Mar 2024 09:51
















     இதுவரை:  24681861 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1288 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com