அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 43 arrow எனது நாட்குறிப்பிலிருந்து - 08
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எனது நாட்குறிப்பிலிருந்து - 08   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - யதீந்திரா  
Thursday, 13 March 2008

நான் படித்த ஒரு நல்ல சிறுவர் நாவல் பற்றி:
ஜோர்ஜ் ஓவலின் விலங்கு பண்ணை!
Animal farm


01.
ஜோர்ஜ் ஓவலின் “விலங்கு பண்ணை” அதிகம் சிலாகிக்கப்பட்ட ஒரு நாவல் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நாவலின் தரம் என்பதற்காக அல்லாமல் ஓவல் வெளிப்படுத்த முற்பட்டதாக கருதப்பட்ட ஒரு அரசியல் போக்கிற்காகவே இந்த நாவல் அதிகம் சிலாகிக்கப்பட்டது. அப்போதே பத்து லட்சம் பிரதிகள் விற்பனையாகும் அளவிற்கு ஓவலின் விலங்கு பண்ணை கவனிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் வெளியிடப்படும் 100 சிறந்த புத்தங்களுக்கான பட்டியலில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு நாவலாகவும் இருக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும் இந்த நாவலின் சிறப்பினைச் சொல்வதற்கு.

ஒரு நாவல் விற்பனையாகிறது என்பதற்காகவோ அல்லது அது அதிகமானவர்களால் வாசிக்கப்பட்டது என்பதற்காகவோ அது சிறந்ததாகி விடுவதில்லை. அதிகம் பேசப்படுவைகள்தான் அற்புதமென்றால் தமிழின் சிறந்த நாவல்கள் எல்லாம் ரமணிச் சந்திரனுடையாதாகவும், பட்டுக்கோட்டை  பிரபாகர்களுடையதாகவும்தான் இருக்க முடியும். நல்ல சினிமாக்கள் என்பவையெல்லாம் கோடம்பாக்கத்திலிருந்து வரும் கோமாளிக் கூத்துக்களாகத்தான் இருக்க முடியும். ஆகவே இந்த நாவலின் விற்பனை, அதிகம் பேசப்பட்டது, தொடர்ந்தும் பட்டியிலில் இடம்பிடிக்கிறது போன்ற வாதங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்க்கவே நான் விரும்புகிறேன்.

ஓவலின் விலங்கு பண்ணை இடதுசாரிகள் தளத்தில் ஒரு எதிர் கருத்தியல் நாவலாகவும் வலதுசாரிகள் பக்கத்தில் அற்புதமான நாவலாகவும் பார்க்கப்பட்ட ஒன்று. நான் அறிந்த வரை இந்த நாவல் பற்றி ஈழத்தில் தளையசிங்கம் சார்ந்தவர்கள் பேசியதாக கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்கள் இந்த நாவலில் வித்தியாசமான ஏதோ ஒன்றை கண்டுபிடித்திருக்கலாம். இது பற்றி நான் அறிந்த தகவல்களே பெருமளவிற்கு இந்த நாவலை படிக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் இல்லாமல் செய்தது. நமக்கு பிடித்த மார்க்சியத்திற்கு எதிராக ஒரு நாவலா? அதனை நான் படிப்பதா? என்ற ஒருவிதமான வரட்டு இறுமாப்பில் விலங்கு பண்ணையை படிக்காமலே விட்டுவிட்டேன். ஆனால் இப்பொழுதான் (இலங்கை சூழலில்) நம்மிடம் இடதுசாரி அரசியலே இல்லையே பிறகு என்ன எல்லா பக்கங்களையும் படித்துப் பார்க்க வேண்டியதுதானே! உண்மையில் இந்த நாவல் குறித்து நிட்சமாக இதற்கு முன்னர் எவருமே இப்படியொரு தலைப்பில் எழுதியிருக்க மாட்டார்களென்றுதான் நினைக்கிறேன்.

ரஸ்ய புரட்சி வரலாற்றை அறிந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக ஸ்டாலின் கால அரசியல் பற்றி அறிந்தவர்களுக்கோ இந்த நாவலில் ஊடாக ஓவல் என்ன சொல்ல வருகின்றார் என்பது பட்டவர்த்தனமாகவே தெரிந்துவிடும். இடதுசாரி அரசியல், குறிப்பாக ரஸ்யப் புரட்சி அதிலும் குறிப்பாக இரும்பு மனிதர் என வர்ணிக்கப்பட்ட ஸ்டாலின், மற்றும் ரஸ்ய புரட்சியின் இன்னொரு முதுகெலும்பாக கருதப்படும் ரொட்ஸ்கி, போன்றவர்களது வரலாறுகளை அறிந்தவர்களுக்கு இந்த நாவல் முன்னிறுத்தும் கருத்தியலை விளங்கிக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை.


02.
சரி அப்படி என்ன இந்த நாவலில் சொல்லப் பட்டிருக்கிறது. மகத்தான ஒக்டோபர் புரட்சி என நம்பப்படும் இன்றும் பல்வேறு புரட்சிகர செயற்பாடுகளுக்கான உந்து சக்தியாக தொழிற்படுவதாக கருதப்படும் ரஸ்ய போல்ஷ்விக் புரட்சிக்கு தலைமை தாங்கிய தலைவர்களையும், அதற்காக அணிதிரண்ட லட்சக் கணக்கான மக்களையும் பன்றிகளாக சித்தரிக்கிறது ஓவலின் ‘விலங்குப்பண்ணை’ நாவல். அடிப்படையில் இந்த நாவல் மூலம் ஓவல் சொல்ல வருவது சோசலிசம் என்ற பேரில் இடம்பெற்ற நடவடிக்கைள், இறுதியில் ஒரு தனிமனிதரின் விருப்பிற்கான சர்வாதிகார மையமாக மாறியது என்பதுதான். சோவியத் யூனியன் பற்றிய ஓவலின் மதிப்பீடு இவ்வளவுதான். லெனினுக்கு பின்னர் சோவியத் யூனியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் கால அரசியல் அணுகுமுறைகள், ஸ்டாலினுக்கும் லியன் ரொட்ஸ்கிக்கும் இடையில் நிலவும் அதிகாரப் போட்டி ஆகியவற்றை  விமர்சிக்கும் அல்லது பரிகசிப்பதுதான் விலங்கு பண்ணையின் உள்ளடக்கம். நாவலில் 'ஸ்டாலின்' நெப்போலியன் என்ற பன்றி பாத்திரமாகவும், 'ரொட்ஸ்கி' ஸ்நேபால் என்ற பன்றியாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர். மக்களுக்கான ஆட்சியை நிலைநாட்டுவதை இலக்காகக் கொண்ட அரசியல் இறுதியில் படிப்படியாக சர்வாதிகார ஆட்சியொன்றாக மாறிவிடுகின்றது. இறுதியில் சோவியத் போல்ஷ்விக்குகளுக்கும், அவர்களால் அதிகாரமிழக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தினருக்கும் இடையில் எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான் ஓவலின் விலங்குப் பண்ணை நம் முன்வைக்கும் வாதம்.

ஒரு எழுத்தாளர் என்ற வகையில், ஓவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாடு பற்றி என்ன அபிப்ராயங்களை கொண்டிருக்க முடியும். நம்மில் பலர் சொல்லுவது போன்றே எழுத்தாளர்கள் சுதந்திரமானவர்கள், அவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள், மூன்று நேரமும் நன்றாக மூக்குப்பிடிக்க தின்றுவிட்டு மனுசியோடு உரசிக் கொண்டு அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படியும் சிந்திக்கத் தகுதியுடையவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம், அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல, அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் ஜோர்ஜ் ஓவல் ஒரு எழுத்தாளர் என்பதற்கான தார்மீக தகுதியை இழந்து போகின்றார். உண்மையில் இந்த நாவல் அதிகம் பேசப்பட்டது விற்பனையாகியது என்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்றால்,  ஒரு மிகவும் நாகரிகக் குறைவான அணுகுமுறை மிகவும் உச்சமாக ரசிக்கப்பட்டிருக்கிறது, போற்றப்பட்டிருக்கிறது என்பதுதான். இன்றும் சிறந்த உலக நாவல்களில் இதுவும் தவறாமல் இடம்பிடிப்பதற்கு பின்னால் இந்த நாவல் முன்னிறுத்தும் சோவியத் எதிர்ப்பு உள்ளடக்கம்தான் காரணமாக இருக்க வெண்டுமென்று நினைக்கிறேன்.

03.
ஜோர்ஜ் ஓவல் ஒரு பிரித்தானிய உளவாளி என்ற விமர்சனங்கள் உண்டு அதன் உண்மை பொய் பற்றி நாம் அறிந்து கொள்ள வாய்ப்புகள் இல்லை. ஒரு எழுத்தாளரோ அல்லது கருத்தியலாளரோ இடதுசாரித்துவ அரசியலை விமர்சிக்கிறார் என்பதற்காகவே அவர் ஓரு உளவாளியாகிவிடுவதில்லை. நானும் முன்னர் இப்படி நினைத்ததுண்டு, இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது. ஓவல் எழுதி பிரசுரிக்கப்படாத முன்னுரை ஒன்றை சமீபத்தில் படித்தேன். அதில் தனது நாவல் ஸ்டாலின் கால சோவியத் பற்றியதுதான் என்பதை ஓவல் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். “இங்கிருக்கும் பிரச்சனை மிகவும் எளிமையான ஒன்று ஒரு கருத்து எவ்வளவு முக்கியத்துவமற்றதாக இருந்தாலும் எவ்வளவு முட்டாள்தனமானதாக இருந்தாலும் அதைப்பற்றி விவாதிப்பதற்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமா? வேண்டாமா? இன்றைய இங்கிலாந்தின் இலக்கிய வாதிகளிடம் இந்த கேள்வியை இப்படி கேட்டால் அனைவரின் பதிலும் வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் அது ஸ்டாலின் பற்றியது என்று சொல்லிப் பாருங்கள் அனைவரின் பதிலும் வேண்டாம் என்பதாக இருக்கும் ” (ஒரு வெளியிடப்படாத முன்னுரை - திண்ணை.கொம்)
இந்த நாவலில் நான் அவதானித்த விடயம் இடதுசாரி எதிர்ப்பு என்பதை விட சோவியத் வகை இடதுசாரி அரசியல் குறித்தும் அன்றைய ஸ்டாலினிய அணுகுமுறை குறித்த எதிர்ப்புணர்வுமே இந்த நாவலில் தூக்கலாக இருக்கிறது. ஸ்டாலின் கால சோவியத் அணுகுமுறை குறித்து மார்க்சிய தரப்பினர் மத்தியிலேயே பல்வேறு வகைத்தான விமர்சனங்களும் அதிருப்திகளும் உண்டு. நமது சூழலிலும் ஒரு காலத்தில் இடதுசாரித்துவ அலை ஓங்கி வீசிய வரலாறுண்டு. அது நம்மில் பலருக்கும் இனிமையான நினைவாக எஞ்சிக் கிடக்கலாம். அப்போது சிங்களச் சூழலிலிருந்த பலருக்கும் ஆதர்ஷமாக இருந்த சிங்கள இடதுசாரித் தலைவர்கள் பெரும்பாலும் ரொட்ஸ்கிய வாதிகளாகத்தான் இருந்தார்கள். என்.எம்.பெரேரா, கொல்வின் என பல பெயர்களை உச்சரிக்கலாம். இவர்களிடம் சாதாரணமாகவே ஸ்டாலினிய எதிர்ப்பு இருந்தது. இதே போன்று நம் மத்தியில் கொஞ்சம் வீரியமாகவே இயங்கிய பெரியளவில் சாதியத்திற்கு எதிராக போராட்டங்களையெல்லாம் நடாத்திய சன்முகதாசன் அணியினர் சீன சார்பு அணியினராகவே தம்மை பிற்காலங்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர். சீன-சோவியத் இடதுசாரித்து பிளவுக் காலத்தில் தம்மை சீன சார்பு நிலையாக காட்டிக் கொண்டனர். இதற்கு அவர்கள் சார்ந்து தத்துவார்த்த காரணங்கள் உண்டு. கருத்தியல் அடிப்படையில் சண் அணியினரிடம் சாதாரணமாகவே ரொட்ஸ்கிய எதிர்நிலை அரசியல் போக்கிருந்தது. ரொட்ஸ்கிய அணியினரை திரிபு வாதிகளென்று சோவியத் மற்றும் சீன சார்பு அணியினர் கூறுவதும், சோவியத் சீன சார்பு அணியினரை சர்வாதிகாரிகள் என்று ரொட்ஸ்கிய அணியினர் கூறுவதும் சாதாரணமான ஒன்றாகவே அன்று இருந்தது. ஒரு முறை மு.த, மு.பொ, போன்றவர்களுக்கு நெருக்கமான புரட்சிகர கொம்யூனிஸ்ட் கழகத்தைச் சேர்ந்த ஆனந்த வக்கும்புற என்பவர் மாவோவை ஒரு பொல்பொட் (Mao he is a Polpot)  என வர்ணித்தது நினைவுக்கு வருகிறது. பிற்காலங்களில் சிங்கள ரொட்ஸ்கிய, சோவியத் சார்பான இடதுசாரிகள் இனவாத அரசியல் பக்கம் சாய்ந்து தமிழர் விரோத அரசியலுக்கு முண்டு கொடுத்த சந்தர்ப்பத்தில் அவர்கள் குறித்த சீன சார்பு அணியினர் முன்வைத்த திரிபுவாதிகள் என்ற சொல் நடைமுறையில் மிகவும் பொருந்திப் போகக் கூடியதாக இருந்தது. அதற்கு சற்று பின் வந்த காலங்களில் எழுச்சியடைந்த தமிழரின் விடுதலை அரசியல் சூழலை சரியாக விளங்கிக் கொள்ள முடியாத கையறு நிலைக்கு சீன சார்பு இடதுசாரிகள் வந்தபோது அவர்கள் தமிழ்த் தேசியவாதிகளின் விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டியேற்பட்டது. 90களில் சோவியத் யூனியன் பதின் நான்கு துண்டுகளாக சிதறிய போது சோவியத் விசுவாசிகள் நடு வீதிக்கு வந்தனர். மாவோவின் மறைவுக்கு பின்னர் சீனாவின் பாதை மாறியது. 1980 களுக்கு பின்னர் சீனா சர்வதேசியம் என்பதை கைவிட்டு தேசியத்தை உயர்த்தியபோது சீன விசுவாசிகள் நடு வீதிக்கு வந்தனர். பிடலுக்கு பிறகு கியூபா எத்தனை பேரை கைவிடப் போகின்றதோ யார் அறிவார்.


04.
இரவில் வந்த ஏதோ ஒன்று பற்றிய கனவு காலையில் மெதுவாக நினைவுக்கு வந்து மெல்ல மங்கி மறைந்துவிட்டது போன்ற உணர்வு. ஒரு வகையான மார்க்சியம் பேசும் காலம் இப்பொழுதும் இருக்கிறதா? மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, இப்படியொரு பட்டியல் மார்க்சியம் மட்டுமா நம் முன் இருக்கிறது. ரொட்ஸ்கியின் இடம் என்ன? நிட்சயமாக ஒன்றுமே இருக்காதா? ரஸ்ய செம்படையை சிறுகச் சிறுக உருவாக்கிய ஒரு புரட்சியாளருக்கு எந்த பங்களிப்பும் இல்லையென்பதா? கிராம்சிய வகை மார்க்சிய சிந்தனைப் பாரம்பரியம், ஆபிரிக்க வகை மார்க்சிய அனுபவங்கள், லத்தீனமெரிக்க வகை மார்க்சியம் என, இன்று மார்க்சியங்கள் பலதாகிவிட்டன. இப்பொழுது எத்தனை மார்க்சியங்கள் நம்மிடம், எதை திரிபு என்பது? எதை அற்புதம் என்பது? இந்த துறையில் புலமை வாய்ந்தவர்கள் ‘மார்க்சியங்கள் பல' என்ற தலைப்பில் நல்ல தொரு நூலை எழுதலாம்.
இந்த நாவலை படித்த போது என்னுள் இப்படி பல எண்ணங்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் பலதையும் நினைவுக்கு கொண்டு வருவதற்கு இந்த நாவல் உதவியிருக்கிறது. ஆனால் இந்த நாவலில் நானும் துருவித் துருவித்தான் தேடிப் பார்த்தேன் சிலாகித்துச் சொல்வதற்கு ஒன்றுமே அகப்படவில்லை. சோவியத்தும் இல்லை, ஸ்டாலினிய வகை அரசியலும் இல்லை, ஆங்காங்கே நம்பிக்கையின் பேரால் சில குழுக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. ரொட்ஸ்கியத்தின் பேராலும் சில குழுக்கள். நிலைமை இப்படி இருக்க ஜோர்ஜ் ஓவலின் நாவலில் என்ன இருக்கப் போகிறது சிலாகித்துச் சொல்வதற்கு. ஆனாலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல சிறுவர் நாவல் படித்த அனுபவம் கிடைத்தது. சும்மா சொல்லக் கூடாது நண்பர்களே உண்மையிலேயே அற்புதமான சிறுவர் நாவல்தான்.

 

 


மேலும் சில...
எனது நாட்குறிப்பிலிருந்து - 01
எனது நாட்குறிப்பிலிருந்து - 02
எனது நாட்குறிப்பிலிருந்து - 03
எனது நாட்குறிப்பிலிருந்து - 04
எனது நாட்குறிப்பிலிருந்து - 05
எனது நாட்குறிப்பிலிருந்து – 06
எனது நாட்குறிப்பிலிருந்து - 07

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 08:48
TamilNet
HASH(0x5584716f9a80)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 08:48


புதினம்
Tue, 19 Mar 2024 08:48
















     இதுவரை:  24681827 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1361 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com