Friday, 23 March 2007
ஈழத்து இலக்கியப் போக்கின் சாபக்கேடு பற்றி விரிவான ஆய்வொன்றிற்கான அவசியத்தை வலியுறுத்தும் சில முன்வரைபுக் குறிப்புகள்
 1. இந்த குறிப்பானது ஈழத்து இலக்கியப் போக்கின் சாபக்கேடென நான் கருதும் ஒன்றைப்பற்றிய சில குறிப்புகளின் பதிவாகும். எப்போதுமே நமது எழுத்துலக தலையீடென்பது நமது நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்பிற்கும் மாறான விடயங்கள் அரங்கேறும் போதும், அதுவே முடிந்த முடிபென்னும் வகையிலான புகழ்ச்சி வாதங்கள் தலை தூக்கும் போதும்தான் நிகழ்வதாக நான் நினைக்கின்றேன். இது தொடர்பில் மற்றவர்கள் பற்றி நானறியேன் ஆனால் என்னுடைய எழுத்துலக தலையீடென்பது எப்போதுமே அவ்வாறானதொரு பின்புலத்தில்தான் நிகழ்கின்றது, நிகழ்ந்திருக்கின்றது. நாம் விரும்புவது போன்றும் நமது நம்பிக்கைக்கு ஏற்பவும் புற நிலைமைகள் இருக்குமாயின் பின்னர் அங்கு நாம் குறுக்கிடுவதற்கும் விவாதிப்பதற்கும் என்ன அவசியம் இருக்கின்றது? இது கலை, இலக்கியம் சார்ந்த உரையாடல்களுக்கு மட்டுமல்ல அரசியல், கருத்தியல் சார்ந்த சகலவற்றுக்கும் பொருந்தும். இந்த பின்புலத்தில்தான் இப்படியொரு தலைப்பு எனக்கு தேவையாக இருந்தது. நான் இந்த குறிப்பில் நமது இலக்கிய விமர்சனங்கள் பற்றி எனது ஆதங்கங்களை வெளிப்படுத்த முயல்கின்றேன். எனது வாதங்கள் ஈழத்து கவிதைப் போக்கை முன்னிறுத்திய ஒன்றாக அமைந்திருப்பினும் பொது நிலையில் நமது காலத்தின் விமர்சனப் போக்குளை கேள்விக்குள்ளாக்கும் நோக்கத்தையே உட்கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் வருடாவருடம் இடம்பெறும் கலாசார திணைக்களத்தின் இலக்கிய கருத்தரங்கு இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலாநிதி ஒருவர் ஈழத்தின் கவிதைகள் குறித்து பேசினார். அவரது பேச்சைக் கேட்கும் அரிய வாய்ப்பை பெற்றவர்களில் நானும் ஒருவன். அவர் ஈழத்தின் கவிதைப் போக்கை குறிப்பிட்ட நான்கு கவிஞர்களுடன் குறுக்கி தனது உரையை முடித்திருந்தார். அந்த கலாநிதியின் பெயர் செ.யோகராசா. (செ.யோகராசாவின் விமர்சன ஆளுமை பற்றி நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை) சு.வில்வரெத்தினம், சி.சிவசேகரம், வ.ஜ.ச.ஜெயபாலன், அ.யேசுசாரா ஆகியோரே அந்த நால்வர். (அப்போது கவிஞர் சு.வில்வரெத்தினம் அங்கு இருந்தார் அதுதான் அவர் கலந்து கொண்ட இறுதி நிகழ்வு) கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த ஒரு இலக்கியவாதி, சண்முகம்சிவலிங்கத்தை குறிப்பிடாது விட்டது ஒரு குறையென தனது ஆதங்கத்தை வெளியிட்டார். இதற்கு திரு.செ.யோகராசாவின் பதிலோ மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இது ஒரு இன்டர்சிட்டி பஸ் பயணம். இதில் சண்முகம் சிவலிங்கத்தை ஏற்ற முடியாமல் போய்விட்டது, பிறிதொரு சந்தர்ப்பத்தில் நேரம் கிடைக்குமாயின் அவரையும் ஏற்றலாம் என்றார். பார்வையாளர்களுடன் இருந்த எனக்கோ அப்படியாயின் புதுவை இரத்தினதுரை என்றும் ஒரு கவிஞர் இருக்கின்றாரே அவரை எந்த பஸ்சில் ஏற்றலாம் என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது ஆனாலும் நான் அப்படியொன்றும் கேட்கவில்லை. எனக்கு இப்பொழுதெல்லாம் நமது இலக்கியவாதிகளின் காதுகளில் சங்கூதிக் கொண்டிருப்தில் பெரிதாக நாட்டம் இல்லை. நான் விரும்புவதை, நம்புவதை, எழுத்தில் மட்டும் பதிவு செய்வதுதான் எனது பணியென நினைக்கின்றேன். புதுவை குறித்து நமது விமர்சகர்களும் சரி, (சிலர் விதிவிலக்கு) பெரும் கவிஞர்கள் என விமர்சகர்களால் விதந்துரைக்கப்படும் நமது கவிஞர்களும் சரி அதிகம் பேசுவதில்லை. இதனை பல சந்தர்ப்பங்களிலும் நான் அவதானித்திருக்கின்றேன். மரணத்துள் வாழ்வோம் இரண்டாவது பதிப்பில் புதுவையின் கவிதைகள் சேர்க்கப்படாதது பற்றி அப்போது விமர்சனங்களும் எழுந்தன ஆனால் என்னைப் பொருத்தவரையில் அதில் அவரது கவிதைகள் சேர்க்கப்படாமல் போனதால் அவருக்கு எந்த நஸ்டமும் இல்லை மற்றும்படி இது ஒரு பெரிய விவாதத்துக்குரிய விடயமுமல்ல. இப்படியான நிலைமைகளும் ஈழத்து இலக்கியப் போக்கில் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே நான் இதனை குறிப்பிட்டேன். என்னளவில் புதுவை குறித்து பலரும் பேசாமல் விடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அவர் ஒரு போராளியாக இருப்பதால் அவர் குறித்து போசுவது எங்கு நமக்கும் அந்த அரசியல் முத்திரையை குத்திவிடுமோ என்ற அச்சத்தில் பேசாமல் விடலாம். அல்லது தாங்கள் கவிதை குறித்து கீறிவைத்திருக்கும் பண்டித வட்டங்களுக்குள் அவர் வராமல் இருக்கலாம். ஆனால் புதுவை இரத்தினதுரை என்னும் கவிஞருக்கோ அவரது கவியாளுமைக்கோ இதனால் எந்த நஸ்டமும் ஏற்படப் போவதில்லை. எவர் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இன்றும் விடுதலை அரசியலுக்கும் கவிதைக்குமான ஒரு இணைகோடாக இருப்பவர் புதுவை இரத்தினதுரைதான். நான் இங்கு ஈழத்து கவிதையின் பொதுப் போக்கு குறித்தே கவனம் கொள்கின்றேன். உண்மையில் செ.யோகராசாவின் உரையை கேட்டதிலிருந்து எனக்குள் ஒரே புல்லரிப்பு. அந்த அரிப்பிலிருந்து எப்படியாவது விடுபட்டுவிட வேண்டுமென்ற முனைப்பில்தான் இப்படியொரு கட்டுரையை தெரிவு செய்தேன். எவ்வளவு நாளைக்குத்தான் அரிப்பில் கிடந்து கஸ்டப்படுவது.
2. ஈழத்தின் கவிதைப் போக்கு குறித்தோ அல்லது இலக்கியத்தின் போக்கு குறித்தோ விவாதிக்க விரும்பும் ஒருவர் அதன் பொதுநிலை மீதே கவனம் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட கவிஞர்கள் எல்லோருமே தேர்ந்த கவிஞர்கள் என்பதிலும் அவர்கள் ஈழத்தின் கவிதைப் பரப்பிற்கு கணிசமான பங்காற்றியவர்கள் என்பதிலும் என்னிடம் மாறுபட்ட அபிப்பிராயங்கள் கிடையாது. ஆனால் இவர்கள் எவருமே முன்னைய வேகத்தோடு பின்னைய நாட்களில் எழுதியவர்களல்ல. அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதுவதன் மூலம் தமது இருப்பை அடையாளப்படுத்திக் கொண்ட- கொள்ளும் இவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கால்வாசியாவது ஏன் தற்போதைய இளம் தலைமுறை கவிஞர்களுக்கு - கவிஞைகளுக்கு கொடுக்கக் கூடாது? இந்த இடத்தில் ஒரு முறை கவிஞரும் எழுத்தாளருமான நண்பர் கருணாகரன் கூறிய ஒரு விடயம்தான் நினைவுக்கு வருகின்றது. ‘நாங்கள் பெரிய படைப்பாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களது கால்களைப் பிடிக்கவும் தயார் ஆனால் இளம் படைப்பாளிகளின் கைகளைக் கூட பிடிக்கத் தயாரில்லை’ இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இதுதான்.
உண்மையில் ஈழத்தின் கவிதைப் போக்கானது எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரி இருந்ததில்லை. அது ஒவ்வொரு காலகட்ட அரசியல் போக்கிற்கும் சமூக அசைவுகளுக்கும் ஏற்ப தன்னகத்தே மாற்றங்களை உள்வாங்கியே நகர்ந்திருக்கின்றது. அம்மாற்றத்திற்கு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பல கவிஞர்கள் பங்களித்திருக்கின்றனர். ஆனால் நான் நினைக்கிறேன் ஈழத்தின் கவிதைப் போக்கானது பெருமளவிற்கு அரசியல் நிலைமைகளாலேயே மாற்றங்களுக்கு ஆட்பட்டிருக்கின்றதென்று. இது பற்றி நான் விரிவான ஆய்வுகளைச் செய்த ஒருவனல்ல எனினும் ஒரு பொதுநிலைப்பட்ட அவதானத்தினடிப்படையிலேயே இதனைச் சொல்லுகின்றேன். ஒரு காலத்தில் இலங்கையின் அரசியலானது மார்க்சிய செல்வாக்கிற்குட்பட்டிருந்த காலத்தில் மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்ட ஒரு இலக்கிய பரம்பரையினர் உருவாகினர். அன்றைய காலத்தின் சமூகப் பார்வையென்பது பெரும்பாலும் மார்க்சிய நிலைப்பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. கவிதைத் தளத்தில் இந்தப் போக்கினை அடையாளப்படுத்தியவர்களாக சாருமதி, சுபத்திரன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் அடையாளம் கானப்படுகின்றனர். அன்றைய அரசியல் போக்கை கவிதைத் தளத்தில் பிரதிபலித்தவர்களாக அவர்கள் விளங்கினர். ஆனால் அன்றைய மார்க்சிய நிலைப்பட்ட பார்வையென்பது இலங்கை தேசியம் என்னும் கருத்துநிலையையே உட்கொண்டிருந்தது. இந்தப் பார்வையே பெருமளவிற்கு அன்றைய மார்க்சிய நிலைப்பட்ட படைப்பாளிகள் மத்தியிலும் மேலோங்கியிருந்தது. சிங்கள மேலாதிக்கமும், அதற்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வுகளும், அதனை அரசியல் தளத்தில் பிரதிபலிக்க முடியாமல் போன மார்க்சியவாத அமைப்பினரின் தோல்வியும் படிப்படியாக தமிழ் மக்களின் சுயாதீன அரசியலுக்கான ஏகபோக உரிமையை, தமிழரசுக் கட்சி தம்வசப்படுத்திக் கொள்வதற்கான புறச் சூழலை வழங்கியது எனலாம். தமிழரசுக் கட்சியின் தமிழ் தேசியம் சார்ந்தும் பல கவிஞர்கள் உருவாகியிருந்தனர். ஆனால் அவ்வாறான கவிஞர்களின் வெளிப்பாடுகள் பெருமளவிற்கு தமிழக திராவிட அரசியல் பாதிப்பிற்கு ஆட்பட்டவைகளாகத்தான் இருந்தன. குறிப்பாக அன்றைய சூழலில் எழுதிய சச்சிதானந்தனின் கவிதைகளை பாரதிதாசனின் கவிதைகளாக புரிந்து கொள்ளுமளவிற்கு நிலைமை இருந்திருக்கிறது. தமிழரசுக் கட்சி காலத்தைய கவிதை வெளிப்பாடுகளை நாம் (மிதவாதம் என்று சொல்லப்படும்) மேடை அரசியல் சார்ந்த வலுவூட்டல் கவிதைகள் என்று வகைப்படுத்தலாம் ஆனால் இதுவும் ஈழத்தின் கவிதைப் போக்கின் ஒரு பகுதிதான்.
3. தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுத வழிப் போராட்டமாக பரிமாணமடைந்த பின்னர் கவிதைப் போக்கு பிறிதொரு தளத்திற்கு நகர்கின்றது. குறிப்பாக 1970களில் மாற்றமடையத் தொடங்கிய இந்தப் போக்கானது 1980களுடன் முற்றிலும் புதியதொரு அனுபவத் தளத்திற்கு மாறுகின்றது. இந்த காலத்தில் ஈழத்தின் கவிதையானது உருவ உள்ளடக்க ரீதியான மாற்றத்திற்குள்ளாகின்றது எனலாம். இந்த காலகட்டத்தின் கவிதைகளை புதியதொரு தளத்திற்கு நகர்த்திச் செல்பவர்களாக பலர் இருந்திருக்கின்றனர். இன்று எனக்கு நமது விமர்சகர்கள் விதந்துரைக்கும் பெயர்கள் இந்த காலகட்டத்தின் வெளிப்பாடுகள்தான். இந்த காலகட்டத்தின் முகங்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் விடுதலை இயங்கங்களுடன் ஏதொவொரு வகையில் தொடர்பு கொண்டவர்களாகவும் அதன் வழி சிந்திப்பவர்களாகவும் இருந்தனர். தவிர இந்த காலகட்டத்தில் ஈழத்தின் கவிதையென்பது பெரும்பாலும் அரசியல் நிலைப்பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. ஒரு வகையில் இன்றுவரையான விடுதலை அரசியல் சார்ந்த கவிதைப் போக்கிற்கான அடித்தளமானது 80கள் தழுவிய காலத்தில்தான் தோன்றியது எனலாம். இந்த நிலைமை 90களில் இன்னொரு தளத்திற்கு செல்கின்றது அதாவது போர்களத்திற்கு வெளியிலிருந்து போரின் அவலங்களையும் மக்களின் துன்பங்களையும் பேசிய மொழிக்கு மாறாக போர்களத்தில் இருந்து கொண்டே அதனை பேசும் போராளிக் கவிஞர்களின் வரவு நிகழ்கின்றது. இது 90களிற்கு முன்னர் இருந்திருந்தாலும் ஒரு கவிதைப் போக்காக அடையாளம் காணக் கூடிய நிலையைப் பெற்றது 90களுக்கு பின்னர்தான். இந்நிலைமையானது ஈழத்தின் கவிதைச் சூழலிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் கவிதைப் போக்கிற்குமே முற்றிலும் புதிதான ஒன்றாகும். இந்த போக்கின் முகங்களாக பலர் வெளிவருகின்றனர் அம்புலி, மலைமகள், அலையிசை,மலரவன் என பலரைக் குறிப்பிடலாம் (எனக்கு தெரியாத பலர் இருக்கின்றனர்) இதிலுள்ள இன்னொரு அம்சம் இதில் பெண் போராளிகளின் ஈடுபாடு அதிகமானதாகும். அதே வேளை 90களிற்கு பின்னர் முஸ்லிம் கவிஞர்கள் பலரும் ஈழத்து கவிதைப்பரப்பிற்கு கணிசமான பங்காற்றியிருக்கின்றனர் அவர்கள் தம்மை ஈழத்து தமிழ் கவிதைப் பரப்பிற்குள் இணைத்துப் பார்க்க விரும்பவில்லையாயின் அது வேறு விவாதத்திற்குரியது இதே போன்று 90களிற்கு பின்னர் புலம்பெயர் கவிதைகள் ((Diaspora poems) என்னும் ஒரு புதிய கவிதைப் போக்கும் மேலெளுகின்றது. அதுவும் ஈழத்து கவிதைப் போக்கின் இன்னொரு பகுதிதான் ஆனால் இன்றுவரை 90களிற்கு பின்னரான ஈழத்து கவிதைப் போக்கிற்கு மட்டுமல்ல பொதுவான இலக்கியப் போக்கு குறித்தும் கூட எந்தவிதமான மதிப்பீடும் நம்மிடமில்லை. இது குறித்து ஓரு தெளிவான பார்வையாவது நமது விமர்சக ஜாம்பவான்களிடம் இருப்பதாகக் கூட தெரியவில்லை. மீண்டும் மீண்டும் சில பெயர்களை மனனம் செய்வதிலேயே இவர்களது காலம் கழிகின்றது, நான் நினைக்கின்றேன் இதுதான் ஈழத்து இலக்கியத்தின் சாபக்கேடென. இந்தவகையான குறுகிய பார்வை, முனைப்புடன் களமிறங்கிய பல இளம் படைப்பாளிகள் தாமாகவே ஒதுங்கிக் கொள்ளவும் காரணமாகியது. ஒரு முறை ஒரு போராளிக் கவிஞர் இவ்வாறு பேசியிருந்தார் “எங்களது துரதிஸ்டமே நாங்கள் எழுதுவதைப் பற்றி நாங்களே பேசவும், எழுதவும் வேண்டியிருப்பதுதான்”. இன்று பெரிதாக பேசப்படும் படைப்பாளிகளும் சரி அவர்கள் குறித்து அபிப்பிராயங்களை உருவாக்கும் விமர்சகர்களும் சரி; சிறிலங்கா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள் எனவே இவர்கள் எப்போதுமே தமக்கு வெளியில் (வன்னியில்) அங்கு பெரிதாக ஒன்றும் (இலக்கியம்) வளரவில்லை என்று கூறுவதிலும் அதற்கான சான்றுகளை திரட்டுவதிலுமே காலத்தை கழித்தனர். இவ்வாறான அறிவாளிப் படைப்பாளிகள் தமது வாதங்களிற்கு பலஸ்தீனத்திலிருந்தும், லத்தீனமெரிக்காவிலிருந்தும் ஆதாரங்களை திரட்டினர் ஆனால் இன்று ஒரு கஜனி என்னும் பெண் போராளி தனது ஒளிப்படங்களுடாக சர்வதேச தரத்தில் தன்னை அடையாளம் காட்டியிருப்பதை இந்த அறிவாளிகள் ஒருபோதும் தெரிந்து கொள்ளப் போவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை எதிர்கால ஈழத்து இலக்கியம் என்பது நிட்சமாக இவ்வாறானவர்களை நம்பியில்லை.
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)
|