அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 12
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 12   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Tuesday, 09 May 2006

12.

அடுத்து வந்த புதன்கிழமையே, மகள் கண்ணம்மாவும் பேத்தி ராணியும் எவ்வளவோ தடுத்தும் கேளாது சிங்கராயர் மனைவியையும் கூட்டிக்கொண்டு ஆண்டாங்குளத்துக்குப் பறப்பட்டவிட்டார். குமுளமுனைக்கு பஸ்ஸிலே வந்து ஆண்டாங்குளத்தை நோக்கி அந்தக் காலை இளம்பொழுதிலே அந்த முதிர்வயதுத் தம்பதிகள் நடந்து கொண்டிருந்தார்கள். சிங்கராயர் கையில் மண்ணெண்ணெய் கலனும், தலையிலே ஒரு பையுமாய் முன்னே வீறு நடைபோட, அவருடைய காலடிகளைப் பின்பற்றியே செல்லம்மா ஆச்சி நிழலாகத் தொடர்ந்து கொண்டிருந்தாள். ஓங்கிவளர்ந்த காட்டுமரத்திலே இளசாகாகவே படர ஆரம்பித்த தண்ணிக்கொடி, காலப்போக்கில் அந்த மரத்துடனேயே பிரிக்கமுடியாதபடி சுற்றி இறுகப் படர்ந்து ஒன்றிவிடுவதுபோல அவளும் தனது பதினாறு வயதிலேயே சிங்கராயர் என்ற கருங்காலி மரத்தைச் சுற்றிப் படர்ந்து, அவர் வேறு தான் வேறு என்றில்லாமல் ஒன்றிப்போயிருந்தாள். முன்னரைப்போல் களைப்பின்றி யாவற்றையும் இப்போ அவளால் செய்ய முடியாதிருந்தது. உள்ளுர மகள் கண்ணம்மாவின் வேண்டுகோளைக் கணவர் ஏற்றால் அவளுடனேயே தங்கி, பேரப்பிள்ளைகளின் முகங்களைப் பார்த்துக்கொண்டே மிகுதி வாழ்க்கையைக் கழித்துவிடவேண்டும் என்ற ஆசை இருப்பினும், கணவன் இருக்குமிடமே தனக்குக் கைலாயம் என நினைத்தவண்ணம் அவரின் அடியொற்றி நடந்துகொண்டிருந்தாள் செல்லம்மா ஆச்சி. அவர்களிருவரும் வள்ளத்திலேறி ஆண்டாங்குளத்தை அடைந்து பனைகளினூடாக வருகையிலேயே தமது எசமானின் வரவுகண்ட சிங்கராயரின் வேட்டை நாய்கள் குதித்து ஓடிப்போய் ஊளையிட்டும், உறுமியும் அவருடைய கரங்களை நக்கின. செல்லமாக அவற்றை அடக்கியவர் அவை யாவும் பட்டினி கிடக்காமல் நன்றாகவே இருப்பதை அவதானித்து நந்தாவதியை நெஞ்சுக்குள் பாராட்டிக்கொண்டார்.                     நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டு தங்கள் குடிசைக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்த நந்தாவதி, செல்லம்மா ஆச்சியைக் கண்டதுமே குதித்துக்கொண்டு ஓடி வந்தாள்.                                                           தங்கள் வளவுக்குள் நுழைந்து செல்லம்மா ஆச்சி முற்றமும் வீடுவாசலும் இருந்த சீர்சிறப்பைப் பார்த்து மலைத்துப் போனாள். அந்த அளவுக்கு நந்தாவதி வீடுவாசலைப் புனிதமாக வைத்திருந்தாள். பால்சட்டிகள் யாவும் துப்புரவாகக் கழுவிப் பரணில் அடுக்கப்பட்டிருந்தன. அடுப்படியும் மாலும் திண்ணைகளும் பசுஞ்சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தன. எலுமிச்சையடியில் குடம் நிறையத் தண்ணீர் இருந்தது. ஒரு வாரத்துக்குத் தேவையான விறகு சேர்த்து வைக்கப்பட்டிருந்தது. இவை யாவற்றையும் பார்த்த செல்லம்மா ஆச்சிக்குக் கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. ஓடிவந்த நந்தாவதியை நன்றிப்பெருக்குடன் அணைத்து முத்தமிட்டு 'என்ரை குஞ்சு!" எனத் தன் பாசத்தைக் காட்டிக்கொண்டார்.                                         இதற்குள் நந்தாவதி பரபவென்று அடுப்பைப் பற்றவைத்துத் தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். செல்லம்மா ஆச்சியும் சிங்கராயரும் விரைவிலேயே திரும்பிவிட்டது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது அவளுடைய மலர்ந்த முகத்தில் தெரிந்தது. தாயை இழந்த நந்தா செல்லம்மா ஆச்சியில் மிகவும் பாசம் வைத்திருந்தாள். வேலையில்லாத பொழுதுகளில் ஆச்சியுடன் ஒண்டிக்கொள்ளும் அவளுக்குத் தனிமைச் சுமை குறைந்தது மட்டும் அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கவில்லை. சிங்கராயரும் ஆச்சியும் வந்துவிட்டதால் இனிமேல் ஒவ்வொரு சனிஞாயிறும் சேனா ஆண்டாங்குளத்துக்கு வருவான் என்ற நினைப்பே அவளுக்கு அதிகமாகத் தித்தித்தது. தேனீரைத் தயாரித்து ஆச்சிக்குக் கொடுத்துவிட்டு, சிங்கராயருக்கு மூக்குப்பேணியில் தேனீர் கொண்டு சென்றபோது, அவர் மால் பரணிலே ஏறி அங்கே அவர் சேகரித்து வைத்திருந்த பெட்டைமான் தோல்களை எடுத்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தார். நந்தாவதி ஏன் இதெல்லாம் என்பதுபோல் அவரைப் பார்த்தபோது, இறங்கிவந்த சிங்கராயர் அவளிடமிருந்து தேனீரை வாங்கிப் பருகிக்கொண்டே, ' என்ன மோனை பாக்கிறாய்?.. இந்தத் தோலை எல்லாம் வாந்துதான் பெரிசாய் ஒரு வார்க்கயிறு திரிக்கப்போறன்!.. அண்டைக்கு அந்த வார்க்கயிறு தண்ணீக்கை கிடந்து ஊறினபடியால்தான் அறுந்து கலட்டியன் ஆளிலை வந்திட்டுது.. ஆனா நான் திரிக்கப்போற இந்த புதுக் கயிறை ஆனைகூட அறுக்கமாட்டுது!" எனப் பெருமையடித்துக் கொண்டார்.              மான்தோல்களை முற்றத்தில் போட்டு அவற்றின்மேல் சுடுசாம்பரைப் போட்டு உரோமம் போக்க சிரட்டையினால் அவற்றைச் சிங்கராயர் உரசிக் கொண்டிருந்த போது, குணசேகரா ஒரு கையில் ஒரு மான் தொடையும், மறுகையில் முழுப்போத்தல் சாராயமுமாக வந்திருந்தான்.                             'அச்சா! என்ன குணசேகரா எனக்கு இண்டைக்கு விருந்துபோலை கிடக்கு!" எனச் சிங்கராயர் கடகடவெனச் சிரித்தபோது 'இந்த மாதங் சம்பளங் வந்தபோது ஐயா இல்லைத்தானே!.. இதிங் நாங் அண்டைக்கு வாங்கிக் குடிக்க இல்லைத்தானே!" எனச் சிரித்தான்.                                                   ஒவ்வொரு மாதமும் சம்பளம் பெற்றுவருகையில் முல்லைத்தீவிலிருந்து ஒருபோத்தல் சாராயமும் வாங்கி வருவான் குணசேகரா. இம்முறை சம்பள தினத்தன்று சிங்கராயர் ஆண்டாங்குளத்தில் இல்லாததால் தானும் அதைக் குடிக்காது, இன்று அவர் வந்ததும் அதனைக் கொண்டு வந்திருந்தான். காலையில் காட்டுக்கோழி வெடிவைக்கப் போயிருந்தபோது ஒரு மான் அகப்பட்டதால் அதனை வெடிவைத்து சிங்கராயர் வீட்டுக்கும் ஒரு காலைக் கொண்டுவந்திருந்தான்.                                      'மனுசி!.. உன்னளவிலை ஒரு மான்கால் கொண்டு வந்திருக்கிறான் குணசேகரா!.. நந்தாவதியும் நீயுமாய் சமையுங்கோ!.. குணசேகராவும் புள்ளையும் இங்கையே மத்தியானம் சாப்பிடட்டும்!" என்று சொல்லிவிட்டுத் தனது மான்கொம்புப் பிடிபோட்ட நீண்ட வில்லுக்கத்தியை எடுத்துப் பார்த்தார் சிங்கராயர். பின்னர் மால் தாழ்வாரத்தில் கிடந்த யானைக்கால் எலும்பை எடுத்து முற்றத்தில் போட்டு, அதன்மேல் குருமணல் போட்டு வில்லுக்கத்தியைத் தீட்ட ஆரம்பித்தார் சிங்கராயர். குணசேகரா முற்றத்தில் கிடந்த மான் தோல்களையும், அவர் கத்தி தீட்டுவதையும் புரியாது பார்த்தான். தன் திருப்திக்கு வில்லுக்கத்தியைக் கூராக்கிக்கொண்டு, குணசேகரா அமர்ந்திருந்த முற்றத்து வேப்பமர நிழலுக்கு வந்தார் சிங்கராயர். இதற்குள் நந்தாவதி கொணடுவந்த கிளாசில் சாராயத்தை விளிம்புவரை நிறைத்துக் கொடுத்த குணசேகராவிடமிருந்து கிளாசை வாங்கிய சிங்கராயர் ஒரே மடக்கில் அதை உள்ளே செலுத்திவிட்டு, மடியிலிருந்து நெடுங்காம்புப் புகையிலையை எடுத்து, காப்பிலையைக் கிழித்து நாவினால் தடவி ஈரமாக்கிக் கொண்டு, நீண்டதொரு சுருட்டைச் சுற்ற ஆரம்பித்தார். சிங்கராயர் எதைச் செய்தாலும் அரைகுறையாகச் செய்யமாட்டார். முழுக் கவனத்தையும் செய்யும் வேலையில் செலுத்தி, கச்சிதமாகவும் விரைவாகவும் செய்துமுடிப்பார். அவர் எதைச் செய்தாலும் அவரை மிகவும் இரசனையுடன் கவனிப்பான் குணசேகரா. மண்சட்டியினுள் பழைய சோறு கறியைப் போட்டுக் குழைத்துத் திரணையாக்கிக் கையில் எடுத்து வாயில் போட்டு உருசிக்கும் போதும்சரி, எருமை நாம்பன்களைக் கட்டி விழுத்திக் கிட்டியால் காயடிக்கும் போதும்சரி, அவர் மிகவும் ஈடுபாட்டுடன் முழுக் கவனத்தையும் செலுத்திச் சிறப்பாக வினைமுடிப்பார். அவருடைய இந்தப் பண்பு குணசேகராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.                                             சுருட்டைச் செவ்வையாகப் பற்றிக்கொண்ட சிங்கராயர் புகையை நெஞ்சு நிறைய இழுத்து வெளியேவிட்டுச் சிரித்துக்கொண்டே, 'திறமானதொரு வார்க்கயிறு திரிக்கப்போறன் குணசேகரா! அதுக்குத்தான் இந்தத் தோல் எல்லாம்!" என முற்றத்தில் போட்டிருந்த மான்தோல்களைக் காட்டினார். 'இதெல்லாத்தையும் மெல்லிய நாடாவாய் வார்ந்து எடுத்து, பந்துகளாய்ச் சுத்தி தண்ணியிலை ஊறப்போடவேணும்! பிறகு அதுகளை இழுத்து வடியக் கட்டவேணும். அதுக்குப் பிறகு அதுகளை மூணடு புரியாய் புறிச்சு வார்க்கயிறு திரிக்கோணும்!" என அவர் குணசேகராவுக்கு விளங்கப்படுத்தியபோது, குணசேகரா வியப்பினால் விழிகளை உருட்டி, 'ஐயா! ஒங்களை வெட்டின அந்தக் குழு மாட்டைப் புடிக்கிறதுக்கா கயிறு?" என நம்பமுடியாமல் கேட்டான். அவனையறியாமலே அவனுடைய கண்கள் சிங்கராயருடைய வலது தொடையிலே தெரிந்த சிவந்த நீண்ட தழும்பைப் பார்த்தன.                                                       சிங்கராயருக்கு அவனுடைய வியப்புக்குக் காரணம் புரிந்தது. 'என்ன குணசேகரா?.. அண்டைக்குக் கலட்டியன் என்னைத் தூக்கி எறிஞ்சதோடை நான் பயந்துபோனன் எண்டு நினைச்சியே! நல்ல கதை! இருந்துபார்! அவரை நான் என் செய்யிறன் எண்டு!" என உறுமினார். குணசேகரா ஏதோ சட்டென்று நினைவுக்கு வந்தவனாய், 'ஐயா! அந்தக் கலட்டியனைப் பொறவு நாங் கண்டதுதானே!" என்றான். சிங்கராயர் ஆவல்பொங்க 'என்ன! எங்கை குணசேகரா? " எனக் கேட்டார். 'ஐயா! பழையாண்டாங்குளங் கட்டிலேதானே நாங்க இப்ப வேலை செய்யுறது.. அந்தக் குளத்துக்கு நடுவில கொஞ்சங் தண்ணி நிக்கிறதுதானே!.. அந்தப் புல்லுக்கைதானே அவங் கிடக்கிறது!.. நாங் பயத்திலை கிட்டப் போக இல்லைத்தானே!" என்றான் குணசேகரா. 'ஓகோ! அப்பிடியே சங்கதி?" என்று கேட்டவ சிங்கராயரின் முகம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டது. அவருடைய மனதில் கலட்டியனைப் பிடிப்பதற்கு ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. 'பாப்பம்.. நாளைக்கு நான் பழையாண்டாங்குளத்துக்குப் போய்ப் பாத்திட்டு வந்து சொல்லுறன்.. இப்ப வா சாப்பிடுவம்!" என எழுந்தார் சிங்கiராயர்.


 


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 10:09
TamilNet
HASH(0x563148423870)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 10:09


புதினம்
Mon, 15 Jul 2024 10:09
     இதுவரை:  25360045 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1396 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com