அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 16
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 16   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 07 August 2006

16.


தண்ணீரூற்றில் சேனாதியின் தந்தை பூதன்வயல் தெருவில்; கடந்த ஆண்டு  வெட்டித் வெளியாக்கிய செய்த ஐந்து ஏக்கர் காணி இருந்தது. அந்தப்  புதுப்பிலவில் இம்முறை கச்சான் பயிர்செய்ய அவன் திட்டமிட்டிருந்தான்.  ஆடியில் பெய்கின்ற முதல் மழைக்க கச்சானை விதைத்தால் மூன்று  மாதங்களில் அது விளைந்துவிடும். அதிற் கிடைக்கும் பணம்,  நெல்வயல்களுக்கு பசளை முதலியவற்றை வாங்க உபயோகப்படும் என்ற  எண்ணத்தில், மந்துகள் வளர்ந்திருந்த அந்தக் காணியை அவன் மீண்டும்  துப்பரவு செய்ய ஆரம்பித்திருந்தான். எனவே சேனாதியும் மாலையில்  பாடசாலை விட்டதும் வந்து அந்த வேலைகளில் பங்குகொள்ள  வேண்டியிருந்தது. அதனால் அடுத்தடுத்து இரண்டு சனிஞாயிறு அவனால்  ஆண்டாங்குளம் செல்ல முடியவில்லை. வானொலியை வைத்துக்கொண்டு  சினிமாப் பாடல்கள் கேட்பதில் பொழுதை ஒருவாறு போக்கிக்கொண்டான்.
காந்திக்கும் பல்கலைக்கழகப் பிரவேசப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.  அவன் தன் முழுக் கவனத்தையும் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதில்  செலுத்திக்கொண்டான். ஆசிரியர் கே.பிஇ பரீட்சை எடுக்கின்ற மாணவர்களை இரவிலும் பாடசாலைக்கு அழைத்து இலவசமாகவே பாடம் நடத்தினார்.
மூன்று வாரங்களில் பூதன்வயல் புதுப்பில வெளியாக்கும் வேலைகள்  முடிந்திருந்தன. இனிமேல் முதல்மழை விழுந்ததுமே பாத்தியமைத்து  கச்சானை நடவேண்டியதுதான். ஒரு வெள்ளிக்கிழமை அந்த வேலைகள்  யாவும் முடிவடைந்திருந்தன. வேலையைச் சிறப்பாகச் செய்துமுடித்த  திருப்தியில், சிறிது கொண்டாட்ட மனநிலையில் இருந்த சேனாதியின் தந்தை அவனிடம் மாலை ஏழு மணியளவில் போத்தலையும் காசையும் கொடுத்து  சாரயம் வாங்கி வரும்படி அனுப்பினான்.
அவர்களுடைய வீட்டுக்குச் சற்றுத் தொலைவில்தான் சாரயம் விற்கும்  சின்னையரின் வீடு இருந்தது. அவருக்கும் சிங்கராயரின் வயதுதான்  இருக்கும். ஆனால் சிங்கராயரைவிட சின்னையர் தளர்ந்தவராய், பல் விழுந்து  பொக்கை வாயுடன் காட்சியளிப்பார். உடலால் வருந்தி உழைக்க  முடியாமையால், அவர் தினமும் காலையில் முல்லைத்தீவுக்கு பஸ்ஸில்  சென்று இரண்டு போத்தல் சாராயம் வாங்கிவந்து இலாபம் வைத்து விற்பார்.  சாராயம் வாங்கி வருவதுதான் அவருடைய வேலை. விற்பனைசெய்வது  அவருடைய மகள்தான். சுமார் முப்பத்தைந்து வயதான அவளுக்குச்  சிறுபிராயத்தில் இருந்தே இடுப்புக்குக் கீழே கால்களிரண்டும் வழங்காமல்  போய்விட்டிருந்தன. இருப்பினும் தரையில் அரக்கி அரக்கிச் சென்றெ அவள்  எல்லா வேலைகளையும் கச்சிதமாகச் செய்துவிடுவாள்.
இப்போ சேனாதி அங்கு சென்றபோது சின்னையர் தனது சிறிய ஓலைக்  கொட்டிலுக்குள், தொய்ந்து போனதொரு சாக்குக் கட்டிலில் தளர்ந்துபோய்  உட்கார்ந்திருந்தார். அப்போதுதான் அவர் மாலைக் குளியலை முடித்திருக்க  வேண்டும், நெற்றியில திருநீறு பளிச்சிட்டது. அவருடைய மகள்  சேனாதியைக் கண்டதும்,'தம்பி இண்டைக்குச் சாரயம் முடிஞ்சுது! சில்வா  மாமா பின்னேரமே சைக்கிளிலை முல்லைத்தீவுக்குப் போட்டுது! இப்ப  வந்திடும்.. இருந்து வாங்கிக்கொண்டு போ!" என்றபோது, சேனாதி நன்கு  பெருக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய முற்றத்தில் அமர்ந்துகொண்டான். தரையில் சின்னையரின் மகள் வீட்டுக்கும் அடுக்களைக்குமாய் கால்களை இழுத்துப்  போய்வந்த அடையாளங்கள் தெரிந்தன.
குப்பிவிளக்கின் ஒளியில், சாக்குக் கட்டிலில் தொய்ந்துபோய் இருந்த  சின்னையர் தனது மடியில் கிடந்த உடுக்கைத் தனது கையினால் மெல்ல  வருடிக்கொண்டிருந்தார். ஒருகாலத்தில் அவர் இந்தப் பகுதியிலேயே  பெயர்பெற்ற அண்ணாவியாய் இருந்தவராம். சதா காத்தான் கூத்தும்,  அரிச்சந்திராவும் போட்டுப்போட்டு நாடகங்களையே தனது வாழ்க்கையாகக்  கொண்டிருந்த அண்ணாவியாருக்கு இப்போ எஞ்சியதெல்லாம் ஊனமாகிய  அவர் மகளும், அவருடைய உடுக்குந்தான்.
தனது வேலை முடிந்ததுமே சாக்குக் கட்டிலுக்கு வந்துவிடும் அவர்  சிறிதுநேரம் கண்களை மூடிக்கொண்டே இருந்துவிட்டு பின் உடுக்கை எடுத்து அடித்துக் கொண்டே பாட ஆரம்பிப்பார். பற்கள் விழுந்துவிட்டதனால் பாடலின் சொற்கள் யாவருக்கும் எளிதில் புரியாது. அந்தப் பாடல்கள் தெரிந்த  பழையவர்களுக்குத்தான் அவற்றை இரசிக்கமுடியும்.
சேனா இப்போது சாராயம் கொண்டுவரச் சென்ற சில்வா மாமாவுக்காகக்  காத்துக் கொண்டிருந்தபோது, சின்னையர் தனது மடியில் வைத்து  ஆசையுடன் வருடிய உடுக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்தார்.
தாளலயம் தப்பாது மெல்ல எழுந்த உடுக்கின ஓசை உயர்ந்தும், தாழ்ந்தும்,  பம்மியும் ஒலிக்கையில், அந்த இசையில் ஒன்றிப்போனான் சேனா.  அவனுக்கு அந்த உடுக்கின் ஓசையில், சின்னையர் தனது இளமைக்காலத்தை நினைத்து மகிழ்வதை, மீட்பதை உணர்ந்தான். பின்பு, கால் வழங்காத தன்  பெண்ணின் வெறுமையான வாழ்க்கையை நிநை;து அழுவதை உணர்ந்தான்.  சின்னையரின் உடுக்கு ஓசை அவனுக்குப் பல சங்கதிகளை  சொல்வதுபோன்ற மயக்கத்தில் இருந்தான் சேனாதி.
அந்த மனமயக்கத்தில் நந்தாவின் இனிய மழலையும், இளந்தேகத்தின்  நறுமணமும், இனிமையாகச் சுவைத்த அவளுடைய சிவந்த இதழ்களும்  மறுபடியும் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன. கூடவே ஆசிரியர் கே.பியும்  காந்தியும் பேசிக்கொண்ட விஷயங்களும் நெஞ்சில் வந்த நின்றன. இந்த  சங்கதிகள் யாவுமே, உடுக்கோசையின் பின்னணியில் வார்த்தையில் சொல்லி விளக்கமுடியாத எல்லையற்ற சோகத்தில் தன்னை ஆழ்த்துவதை சேனாதி  உணர்ந்தான்.
அப்போது படலையைத் திறந்து தனது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் மீன்வியாபாரி சில்வா. இந்தப் பகுதியில் சற்று வயதான எல்லா  சிங்களவரையுமே மாமா என்றுதான் அழைப்பார்கள். கிராமத்துக்கு இப்படி  ஒரு சிங்களவர் இருப்பதே மிகவும் அபூர்வம். இப்போது, சில்வா மாமாவை  ஏதோ முதன்முதலில் பார்ப்பதுபோன்று சேனாதி ஏறிட்டுப் பார்த்தான்.  நந்தாவின் உறவு இப்போ தமிழ்சிங்கள உறவுகளில் அவனை அக்கறை  காட்டத் தூண்டியது. இதுவரை அவன் அரசியலையோ அல்லது  உலோகாயுதமான விஷயங்களையோ சிரத்தையுடன் சிந்தித்ததே கிடையாது.  வீட்டுக்கு வந்தால் சினிமாப் பாட்டு, பாடசாலைக்குச் சென்றால் படிப்பு,  ஆண்டாங்குளம் போனால் மாடுகண்டு, வேட்டை எனக் காடும், மாடும்,  பாட்டுமே முக்கியமாக இருந்த அந்த இளங்குமரப் பருவத்துச் சேனாதிக்கு,  உணர்வுகளை அனுபவிக்க முடிந்ததேயன்றி, அவற்றின் காரண  காரியங்களைப் பகுத்தறியும் பக்குவம் இருக்கவில்லை.
இந்தச் சில்வா மாமாவும் ஒரு சிங்களவர்தானே! இவருக்குத் தனது ஊர்,  குடும்பம், மனைவி, பிள்ளைகுட்டி என எதுவிதத் தொடர்புகளோ உறவுகளோ  இல்லையா? எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் சில்வா மாமா சின்னையர்  வீட்டில்தானே இருக்கின்றார். யாருடனும் அதிகம் பேசாது ஒரு  சன்னியாசிபோன்று தானும் தன்பாடுமாய் இருக்கும் இந்தச் சில்வா  மாமாவின் வாழ்க்கையின் இரகசியம் என்ன? சின்னையரின் சப்பாணி  மகளுக்கும் சில்வா மாமாவுக்கும் எதாவது உறவு இருக்குமா?.. அது  சாத்தியமானதா?.. என, பல வடிவம் புரியாத வினாக்கள் அவனுடைய  மனதை அலைக்கழிக்க, சேனாதி சாராயத்தை வாங்கிக்கொண்டு போனான்.
சின்னையரின் உடுக்கின் ஒலி வெகுநேரமாய் அவன் நெஞ்சுக்குள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அது சின்னையரின் மகளுக்காகவும், சில்வா  மாமாவுக்காகவும், தனக்காகவும், நந்தாவதிக்காகவும் அழுது அரற்றுவது  போன்று அவனுக்குத் தோன்றியது. வெதும்பிய இதயத்துடன் அவன்  நித்திரையாயப் போனான்.
சின்னஞ்சிறு காட்டுக் கிராமமாகிய ஆண்டாங்குளத்தில் சிட்டுக்குருவி  போன்று வாழ்ந்த நந்தாவதி, சேனாவைவிட வயதிற் குறைந்தவளாய்  இருந்ததாலும், இன்னமும் குழந்தைத்தன்மை அவளிடம்  குடியிருந்ததனாலும், தன் இயல்புக்கேற்ப எப்போதும் சந்தோஷமாகவே  இருந்தாள். சேனாவின் அண்மைக்கும், அணைப்புக்கும் இயல்பாகவே ஏங்கிய  அவளுடைய இதயத்தில் துன்பத்தின் சுவடே விழவில்லை.
அவள் தன் தந்தைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துவிட்டு  ஓடோடிப்போய் செல்லம்மா ஆச்சியுடன் இருந்துகொள்வாள். அவள்  சொல்கின்ற பழையகாலக் கதைகளைக் கேட்டுச் சிரிப்பாள். சிலசமயம்  ஆச்சியின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டே, சின்ன வயதில்  சேனா செய்த குறும்புகளை ஆச்சியிடம் துருவித் துருவிக் கேட்டு  மகிழ்வாள்.
ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் பாலையடி இறக்கத்து வெண்மணல்  மேட்டுக்கு வந்து, மான்குட்டி மணியைக் கட்டிக்கொண்டு சேனாவுக்காக்  காத்திருப்பாள். அவன் வராததுகண்டு, ஆச்சி கூறியதுபோல் அவன் கச்சான்  பிலவில் வேலை இருப்பதனால்தான் வரவில்லை, அடுத்த சனி நிச்சயம்  வருவான் என ஆறுதல்பட்டுக் கொள்வாள். சேனாவந்துவிடுவான், விரைவில்  வந்துவிடுவான் எனக் குதூகலிக்கும் உள்ளத்துடன், கலகலவெனக்  கிளுகிளுக்கும் காட்டு நதிபோல அவள் செல்லம்மா ஆச்சிக்கும்,  சிங்கராயருக்கும் வேண்டியவற்றைச் செய்வதிலே பெரும் இன்பத்தை  அனுபவித்தாள்.


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07
TamilNet
HASH(0x55f5199c69a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07


புதினம்
Thu, 28 Mar 2024 17:07
















     இதுவரை:  24712951 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5839 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com