அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பார்த்தீபன்  
Friday, 14 March 2008


பசியோடும் இருளோடும் வாழுகின்ற சனங்களின் கதையாய் 'பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் எழுதிய இந்த சிறுகதைகளுள் மேலும் சொல்லியிருக்க வேண்டிய வெளிகளும் குரல்களும் இருக்கின்றன என்றே படுகிறது. இருந்தாலும் இன்றைய சூழலில் இக்கதைத்தொகுதி 'ஒரு தனியன் இறுமாப்படைகிறான்' என்கிற மாதிரியான குரலோடு முக்கியம் பெறுகிறது.

பல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.

த.அஜந்தகுமார், தீபச்செல்வன், திருச்செந்தூரன், ச.நிரஞ்சனி, ந.வினோதரன், மயூரரூபன் போன்ற ஒருசிலரையே காணமுடிகிறது.

அப்படிப்பார்க்கையில் எழுத்துச்சூழலுக்கான தொடக்கமாக இந்த கதைத்தொகுதியை கருதமுடிகிறது. ஆபத்தையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி எழுகிற எழுத்துக்களாக இந்த எழுத்தக்களை பார்க்கலாம்.

இந்த தொகுதியில் இடம்பெறும் கதைகளை ச.நிரஞ்சினி, ப.உதயசாந்தினி, சி.கோகிலவாணி, த.அஜந்தகுமார், ந.வினோதரன், ந.மயூரரூபன், க.சிவதாரணி, சி.சிவாகர். ஜெ.கவிதா முதலியோர் எழுதியிருக்கிறார்கள்

'உதிர்வு' என்ற கதையை ச.நிரஞ்சனி எழுதியிருக்கிறார். இதுவரையில் அவர் எழுதிய கதைகளிலிருந்து இது சற்று வித்தியாசப்படுகிறது. நவீன பெண்ணிய கதைகளுக்காளன தன்மைகளை கதை கொண்டிருக்கிறது. விண்மீனை பெண்ணென்றும் முகிலை ஆண் என்றும் குறியீடுபடுத்துகிற கதையில் பெண்ணை உரசிவிட்டு தட்டிக்கழித்து சொற்களாலும் நடைமுறைகளாலும் நெருக்குகையில் எழும்பும் ஒரு பெண் எழுத்தாய் கதை அமைகிறது. நவீன பெண்எழுத்துக்கான மொழியையும் நடைமுறைப்பாங்கையும் ஓரளவு கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஈழத்தில் எழுதத்தொடங்கிய புதிய செம்மையடைந்து வரும் எழுத்தாளராக நிரஞ்சனி காணப்படுகிறார்.

ஓவியம்:கோ.கைலாசநாதன்

 

 

 

 

 

 

 

 

 

 

'ஒரு தனியன் இறுமாப்படைகிறான்' என்ற கதைக்கு கோ.கைலாசநாதன் வரைந்த ஓவியம்

தொகுதியில் இடம்பெறும் மற்றொரு முக்கிய கதையாய் "ஒரு தனியன் இறுமாப்படைகிறான்" என்ற கதையை குறிப்பிடலாம். கிராமத்திற்குரிய புழங்கு மொழியை கதை கதையாடுகிறது. கிராமத்திற்குரிய கதை பேசும் முறை இயல்பாக காணக் கூடியதாயிருக்கிறது. மேலால் கதையை வாசிக்கையில் ஒருகதை புலப்படுவதைக்காணலாம். விவசாயி ஒருவனின் விவசாய வாழ்வில் குறுக்கிடுகிற மிருகங்களின் நாசங்களையும் அவைமீதான போரிடலையும் கதைபேசுகிறது. இன்னொருவிதத்தில் நாசப்படுத்தப்படுகிற ஒரு இனத்திற்குரிய செழுமையான போரிடலாகவும் கதை தெரிகிறது. புரட்சிர சமுகத்திற்குரிய குரலிடும் குறியீடாய் கதைத்தொகுதியில் இந்த கதை முக்கியம் பெறுகிறது. அதற்கான மொழியும் கதைச்சூழலும் சொல்லப்படுமுறையும் வாய்த்திருக்கிறது.

அடுத்து "பரிகாஷைக்காரனின் சுற்றோட்டத்தில் குதிரைக்காரன்" என்ற கதையை குறிப்பிடமுடியும். நவீன சிறுகதைக்கான அல்லது ஒருமுறைக்கான முயற்சி என்கிறார் அருந்தாகரன். ஆனால் ரகுநாதன் அதை இருண்மைத் தன்மை கொண்ட கதை என்கிறார். நானும் இதை சற்று வித்தியாசமான ஒரு நவீன சிறுகதைக்கான முன் தன்மையுடையதாகவே நினைத்தேன். காதல் பற்றிய சொற்களுடனான சுய சம்பாஷனையும் உணர்வுமாக கதை அமைகிறது. ஒரு சிறிய புள்ளிப்பொழுது விரிகிற சொற்களின் ஓட்டமாய் கதை நிகழ்கிறது. கதையாடுவதும் கவிதைத் தன்மையுடையதுமாக கதை நகர்கிறது. கதையின் மொழி இறுக்கமும் அழகியலும் கொண்டிருக்கிறது.
சாதாரண மகக்களுக்கு புரியாத தன்மை ஒருவேளை கதை இருண்மைத்தன்மை உடையது என்ற தன்மையின் கீழ் விடலாம். த.அஜந்தகுமாரின் இந்தக்கதை இத்தொகுதியிலிருந்து தனிமைப்பட்டு சிலரால் முக்கியப்படுத்தப்படுகிற தன்மையும் சிலரால் இருண்மை என்று ஒதுக்கப்படுத்துகிற தன்மையும் கொண்டிருக்கிறது. சிறிய துண்டை விரித்து கதையாடிவரும் இந்தக்கதை ஏனோ முழுமை பெறாத ஒரு குறையுணர்வை கதை வாசித்து முடிக்கையில் ஏற்படுத்திவிடுகிறது.

அடுத்து இக்கதைத் தொகுதியின் தலைப்பாய் பிரதி முன்படுத்தும் "பசியடங்கா இருளிலிருந்து" கதையை பார்ப்போம. பசியடங்கா இருளிலிருந்து என்ற கதை யாழ்பாணத்தில் நிலவுகிற பசியையும் இருளையும் பெரியளவில் கொண்டிருக்கும் என்ற எதிபார்ப்பு வெற்றிடமாயிருக்கிறது. ஆனால் கதை இருள் பற்றி பெரியளவில் சொல்லுகிறது. யாழ்ப்பாணத்தில் நிலவிய மின்சாரத்துண்டிப்புகளும். விளக்கு அணைப்புகளும் இருளை பெரும் கொடுரமாக பார்க்கும் தன்மையை உருவாக்கி இருக்கிறது.

இந்தக் கதை இருள்மீதான பயத்தையும் இருள் சூழ்கிற குரூரத்தையும் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இருள் மூடிய பொழுதுகளை கதை விரித்து சொல்லுகிறது. பசி மிக மெல்லியதாகவே கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. விபரிக்கப்பட்ட காட்சிகளின் பின்னால் சொல்லப்படாத கதைகள் ஒளிந்திருக்கிறன என்றே சொல்ல வேண்டும். கதை நவீன சிறுகதைக்கான தன்மையை இலேசாக கொண்டிருக்கிறது. கதையாடுகிற மொழியில் இத்தன்மையை காணலாம். இந்தக்கதையை ரகுநாதன் இருண்மைத்தன்மை உடையதாய் குறிப்பிடுகிறார். கதையில் ஒரு இருண்மைத் தன்மை மறைந்திருப்பதை காண முடிகிறது. கதை முக்கியப்படுத்தப்படுகிற தொகுதியாக இருக்கிற பொழுதும் திருப்தி அளிக்காத தன்மையினை கொண்டிருக்கிறது.

"இழப்புகள்" என்ற கதை ஏ-9 பாதை மூடப்பட்ட முடப்பட்ட பின்னர் நிலவிய பசியின் கொடுரம் பற்றியதாக இருக்கிறது. மிக எளிமையான மொழியில் கதைஅமைகிறது. பாதைபூட்டப்பட்ட பின்னர் பசியின் துயரத்தால் ஒரு குடும்பம் அனுபவிக்கிற துன்பங்களை சொல்லுகிறது. பிள்ளையை அநாதரவாக சேர்ஜ்சில் விட்டுச்செல்லுகிற அளவில் உளவியல் ரீதியாக பாதிப்படைகிற தந்தையை பற்றி கதை இடம் பெறுகிறது. உளவியல் ரீதியாக பாதிப்படைந்திருக்கும் சமுகத்திற்கு தேவையான உளவியல் ஆற்றுதல் பற்றிய தன்மையை முன்வைக்கிறது 'பசியடங்கா இருளிலிருந்து' என்ற கதைத்தொகுதியின் தலைப்பை பிரதிபலிக்கும் கதையாக இதைப் பார்க்கலாம். இந்த தொகுதியின் முக்கியமானதொரு கதையாக இதை குறிப்பிடலாம்.

இவைகளோடு ப.உதயசாந்தினியின் 'பதம்' என்ற பெண்ணியம் பற்றியதும், சி.கோகிலவாணியின் 'விரட்டப்பட்ட கனவுகள்',  à®•.சிவதாரணியின் 'கோடிட்ட இடம்',  à®œà¯†.கவிதாவின் 'தாய்மனசு' என்ற சுனாமி இழப்புதொடர்பான கதை முதலிய கதை முயற்சிகளும் தொகுதியில் இடம்பெறுகின்றன. இவர்களின் கதை முயற்சிகள் மொழி.கதையின் பரப்பு. கதையாடும் முறை முதலியவற்றில் குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. இவைகள் நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறமாதிரியான தன்மையை கண்டடைவதற்கான இடங்களை அவசியப்படுத்துகிறது.

இந்த தொகுதியில்
ச.நிரஞ்சனியின் -"உதிர்வு"
த.அஜந்தக்குமாரின்-"பரிபாஷையின் சுற்றோட்டத்தில் குதிரைக்காரன்"
ந.வினோதரனின்-"ஒரு தனியன் இறுமாப்படைகிறான்"
சிவாகரின்-"இழப்புகள்"
மயூரரூபனின்-"பசியடங்கா இருளிலிருந்து"
முதலிய கதைகள் முக்கியம் பெறுகின்றன.

புத்தகத்தில் இடம்பெறுகின்ற ஓவியங்கள் பற்றி முக்கியமாக குறிப்பிடவேண்டும். முன்னட்டை ஓவியம் மிக எளிமையானதாயிருக்கிறது. பசியடங்கா இருளிலிருந்து என்ற ஏக்கத்தையும் ஒடுங்கிப்போயிருத்தலையும் முகத்தில் வெறி எழுகிறதையும் இன்னும் பலவற்றையும் பிரதிபலிக்கிறது. கதைகளுக்கான உள் ஓவியங்களும்கூட சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. நவீன ஓவியத்தன்மையுடனும் குறியீட்டு மொழியுடனும் பல உணர்வுகளை குவிக்கிற தன்மையும் கொண்டிருக்கிறது. ஓவியங்களை கோ.கைலாசநாதன் வரைந்திருக்கிறார்.

புத்தகத்தின் வெளி அட்டையின் எளிமை வரவேற்கத்தக்கது. ஆனால் புத்தகத்தை உள்ளே வடிவமைப்புச்செய்ததில் பல குறைபாடுகள் இருக்கின்றன. பக்கவடிவுகள்,  எழுத்துருக்களை பாவித்தவிதம், எழுத்துருவின் அளவுகள், பந்தியமைப்பு. என்பவற்றில் சீரின்மையும் போதியளவிலான ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன. ஓவியங்களால் பெரியளவு இந்த குறைபாடு வாசிப்பை பாதிக்காதிருக்கும் போலுள்ளது.

ஏற்கனவே இரண்டாயிரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய "மண்ணின் மலர்கள்" என்ற கதைத்தொகுதி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தட்சாயினி, ராகவன்,உடுவில் அரவிந்தன்,சிவாணி,பிரியா போன்றோர் எழுதியிருந்தனர். இதில் தட்சாயினி, ராகவன் முதலியோர் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதிவருகின்றமை முக்கிய விடயமாகும். தவிரவும் மு.திருநாவுக்கரசு முதலியோர் மறுமலர்ச்சிக்காலத்தில் ஒரு சிறுகதைத் தொகுதி பல்கழைக்கழகத்தின் முலம் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற போதும் அது பற்றி விரிவாக அறியமுடியவில்லை.

கதைகளை செ.யோகநாதன், சோ.ப, குப்பிளான் ஜ. சண்முகம் முதலியோர் தெரிந்திருக்கிறார்கள். இந்த தொகுதிக்கான விமர்சனங்களை வெளியீட்டு விழாவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்களான அருந்தாகரனும் ரகுநநாதனும் முன்வைத்தார்கள். கதைகளை ந.வினோதரன் தொகுத்திருக்கிறார். இந்த கதைத்தொகுதி புதிய எழுத்துக்கான தொடக்கமாகும். இவர்கள் நல்ல கதைகளை எழுதுகிறவர்களாகவும் புதிய கதை எழுத்துப்பரப்புக்களை உண்டாக்கிறவர்களாகவும் செம்மையடைய வேண்டும். இன்னும் புதியவர்களும் எழுதத்தொடங்க வேண்டும்.

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 07:48
TamilNet
HASH(0x55e763a71970)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 07:48


புதினம்
Tue, 19 Mar 2024 07:48
















     இதுவரை:  24681813 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1376 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com