அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 43 arrow தற்செயலாய் ஏறிய பேருந்து
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தற்செயலாய் ஏறிய பேருந்து   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்  
Thursday, 06 March 2008

ஓவியம் - மெலிஞ்சிமுத்தன்

அன்று மரணத்தை மிக அருகில் சந்தித்தேன். அது, பாதை கடந்துகொண்டிருந்த என்னைத் தேடி, ஒரு வேகமான வாகனத்தில் வந்தது. என்னைச் சுற்றியோர் காற்றுச் சுழியை உண்டுபண்ணிவிட்டு என் முன்னே ஓர் சிவப்பு விளக்கைப்போல நின்று சிரித்தது. அது, தன்னைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த என்னை மிக அருகில் வந்து உற்றுப் பார்த்தது. அதை ஏற்றிவந்த வாகனம் என்னைத் தாண்டிச் சென்ற பின்னும், அது என்னோடு ஒரு நெடுநாள் நண்பனைப்போல உரையாடிக்கொண்டிருந்தது. தேய்ந்து போகாதவைகளும், கட்டிபட்டுப் போகாதவைகளுமான புதிய வார்த்தைகளைத் தேடி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்....

அந்த நாட்களில் இந்த உலகத்தின் மீதிருந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தேன். உலக வரலாற்று இயங்கியல் நிலைகளை ஆராய்ந்த மிகப் பிந்திய கோட்பாட்டு வடிவங்களின் ‘புதுயுகத்தை’ எதிர்கொள்ள முடியாமையின் விளைவினால் உருவாகிப் பரிணமித்து நிற்கும் பிரச்சினைக் கூறுகளைக் காவிநிற்கும் கூட்டங்களுக்குள் நான் எந்தக் கூட்டம் என்கின்ற வினாக்களிலிருந்து விடுபட்டு எனக்கானதோர் தத்துவப் பின்புலத்தை நான் கண்டடைய வேண்டிய தேவையொன்று இருந்தது.

எனது தப்பியோடல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் என்முன்னே ஓர் சிவப்பு விளக்கைப்போல் மரணம் வந்து நின்றது. மரணத்துடனான அன்றைய உரையாடல் எனக்குள் இறுகிக்கிடந்த பல கட்டுக்களை அவிழ்த்துவிட்டது. மரணத்திலிருந்து பின்னோக்கிய எனது பாய்ச்சல், உள்ளுணர்வின் உந்தல்களுக்கு கலைவடிவம் கொடுக்கும்; உத்தியை நான் கையிலெடுக்கச் செய்தது. ஆயினும், எழுதுதலுக்கும் கிழித்தலுக்கும் இடையிலான என் இருத்தற் கணங்கள் மிகவும் அரிதாய் இருந்தன. எனக்குள்ளிருந்த ஒருவன் எழுதிக்கொண்டிருக்க, இன்னொருவன் கிழித்துக்கொண்டிருந்தான்.

என் எழுத்துக்களில் உருவாகி, சில கணங்களே தலைகாட்டிப்போன பாத்திரங்கள் பல, மிகவும் மென்மையான வெள்ளைநிறப் பேய்களாய் என் கனவுகளில் வந்து குசுகுசுத்தன.

நான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.
புறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன. கோழிகளை உரிப்பதுபோல் சம்மனசுகளின் இறகுகள் சடசடக்க யார்யாரோவெல்லாம் உரித்துக்கொண்டிருந்தனர். கடைவாயால் சம்மனசுக் கறி வழிந்தொழுக சம்மனசு தின்ன என்னையும் அழைத்தார்கள். அப்போது பற்களின் ஈறுகள் எங்கும் காரீயக் கூர்கள் முளைத்து கூர்களெங்கும் குருதிசொட்ட என் வாய்நிறைய வார்த்தைகள் செத்த வாடை வீசிக்கொண்டிருந்தன. செத்துப்போன வார்த்தைகளை மீண்டும் மீண்டும்; என் மனசுக்குள்ளேயே புதைத்தவாறிருந்தேன். மனம் முழுதும் ஒரு நீண்ட இடுகாடு வளர்ந்திருந்தது.

புற உலகின் கால மாற்றம்போல, அக உலகின் காலங்கள் மாறுவதில்லை. நிகழ்காலத்தைத் தொடராமலேயே என் இறந்த காலங்கள் எதிர்காலங்களின் மீது பாய்ச்சல் நிகழ்த்தின. மரணத்தை மிக அருகில்; வந்தித்து அதனுடன் உரையாடல் நிகழ்த்துவதும் ஒரு செறிவுமிக்க கலையென்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மரணத்துடன் நான் உரையாடிக்கொண்டிருந்த அந்தக் கணங்களில் வாழ்க்கை எனக்குள் பாதங்களிலிருந்து உச்சிவரை முட்டிக்கொண்டு நின்றது. வாழ்க்கையின் வீச்சினை சமய ஞானத்தின் அடித்தளத்தில் உருவான எனது தத்துவார்த்த நிலையில் உரசி, புறவுலகுக்கான தீர்வுகளை முன்வைக்க முனைந்துகொண்டிருந்தேன். மரணமோ மிகுந்த அமைதியாக என் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றது.

அந்த வீதியில் ஊதிப் பொருமி வந்த பேருந்து ஒன்றில், அது எங்கே செல்கின்றது என்பதைப் பார்க்காமலேயே ஏறி அமர்ந்துகொண்டேன். நான் தற்செயலாய் ஏறிய பேருந்து, நான் செல்லவேண்டிய சரியான இடத்துக்குத்தான் செல்கின்றது என்பதை எனது இருக்கையின் முன்னே அமர்ந்திருந்த ‘நல்லசிவம்’ என்ற மனிதரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.

நல்லசிவத்தை முன்னர் எப்போதோ, எங்கேயோ கண்டிருக்கின்றேன். ஆனால், எங்கே, எப்போது என்றுதான் நினைவில் இல்லை. அவர் என் பயணம்பற்றி விசாரித்தார்.

நான் மரணத்துடன் உரையாடிக்கொண்டிருந்ததையும், புதிய தத்துவமொன்றைக் கண்டடைய நகர்ந்து கொண்டிருப்பதையும் அவரிடம் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவர் என்னுடன் பேசினார்.

“நீ வாழும் உலகத்தின் வன்முறைப் போக்கும், இவ்வுலகத்தை மறுத்து மறு உலகை வலியுறுத்தும் பழைய முறைச் சமயப் போக்கும் இணைந்து மரணத்துடனான உன் உரையாடலுக்கு உந்து சக்தியாய் அமைந்திருக்கின்றன என்று நினைக்கின்றேன்” என்றார்.
“ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். இப்புறவுலகின் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்க என் அக உலகத்தில் தேடுகின்றேன். யாரும் மறுக்க முடியாதவாறு மனம் வளர்ந்து, உடலை உடைத்துக்கொண்டு ‘பிரமரந்திரத்தை’த் திறந்து விரித்தவாறு இருக்கின்றது. இப்போதைய நிலையில் நம்மிடமுள்ள தத்துவங்களின் போதாமை மிகவும் துல்லியமாகத் தெரிகிறதல்லவா?’ என்றேன்.
இதைத்தான் நான் என்றோ இந்த உலகத்திற்குச் சொல்லிவிட்டேனல்லவா?
எல்லாச் சிறைகளையும் உடைத்துக்கொண்டு மனம் வளர்வதை யாரும் தடுக்க முடியாது. ஆயினும், அதன் ஆரம்ப எழுச்சியைக்கூட யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே. இவர்கள் நினைப்பதுபோல, வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய – பொதுவுடமைச் சோசலிசத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வருவதும் முடியாது. பொதுவுடமைப் போராட்டத்தோடு, அகத்தே காணப்படும் குணவேறுபாடுகளையும் அதேசமயம் முழுச் சமூகமும் தாண்டினாற்தான் உண்மையான சோசலிசமும், உண்மையான ஞான எழுச்சியும் சர்வோதயமும் அடுத்த கட்ட மனிதப் பரிணாமமும் வர முடியும் என்றார்.
பழைய தத்துவங்களின் நன்மைகளைக் கறந்துகொண்டு, அவற்றின் உருவங்களை அழிக்கவேண்டும். இன்னுமொரு பெரும் தத்துவத்தால் அதைச் சிதைக்க வேண்டும். உருவாகும் தத்துவம் சிந்தனையளவில் இருந்தால் மட்டும் போதாது - வாழ்க்கையை மாற்றி வளர்க்கும் செயல் செறிந்த சிந்தனை. அதுவே தத்துவம். அதுவே நான் கண்டடைந்த ‘மெய் முதல் வாதம்’ என்றார்.

நான் தலையசைத்தேன். மெய்முதல் வாதத்தின் கூர்மையான புரிதல்களின் அடித்தளத்திலிருந்து நம்மை வளர்த்தெடுத்து, இந்த உலகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டடைய வேண்டுமென்று முடிவெடுத்தேன். நாங்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து சிறகு முளைத்து மேலே மேலே பறந்துகொண்டிருந்தது. 

நன்றி: தாய்வீடு - கனடா 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 11:52
TamilNet
HASH(0x55e2bb8197d0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 11:52


புதினம்
Tue, 19 Mar 2024 11:52
















     இதுவரை:  24681965 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1189 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com