அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 42 arrow உயரத்தை தொடாத வட்டம்பூ
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உயரத்தை தொடாத வட்டம்பூ   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பொ.கருணாகரமூர்த்தி  
Monday, 18 February 2008

நிலக்கிளி பாலமனோகரனின் நிலக்கிளி, குமாரபுரம் இரண்டு  நாவல்களையும் என் பதினெட்டாவது வயதில் அவை வெளிவந்த  காலத்திலேயே படித்துச்சுவைத்தேன் . இத்தனை மண்வாசனையோடும்  மொழிவளத்தோடும் எழுதவல்ல எழுத்தாளர் தொடர்ந்து  எழுதாமல்  இருந்தது சமீபகாலம்வரை எனக்கு வியப்பாகவே இருந்தது. பின்னால்  அவர் டென்மார்க்கிற்கு புலம் பெயர்ந்து வந்தபிறகுகூட ஐரோப்பிய  புலம்பெயர் சஞ்சிகைகளிலோ, தாய்நிலச்சஞ்சிகைகள்  பத்திரிகைகளிலோகூட அவரது படைப்புக்கள் எதுவும் வெளிவராமல்  இருந்ததால் அவர் இலக்கிய அஞ்ஞாதவாசம் புரிவதாகவே  எண்ணிக்கொண்டிருந்தேன். அப்பால்தமிழில் நிலக்கிளி, குமாரபுரம்  நாவல்களைத்தொடர்ந்து அவரது மூன்றாவது நாவலான வட்டம்பூ  வெளிவந்திருப்பதைப் பார்த்ததும் எனக்குள் இன்ப அதிர்ச்சி. அரை  மணிநேரத்தில் படித்து  முடிக்கக்கூடிய  சிறுகதைகள், கவிதைகள்  என்றால் பரவாயில்லை 'நாவல் ஒன்றைப் படிப்பதற்கு  இணையம்  பொருத்தமான ஒரு தளமல்ல' என்பது என் அனுபவம். இருந்தும்  வட்டம்பூவை படித்துமுடிக்கவே வேண்டுமென்னும் என் அகவுந்துதலால்  என் பணிகளை  ஒதுக்கிவிட்டு அதற்கான அவரது முன்னீட்டையும்   நாவலையும் முழுவதும் படித்தேன்.   சகபயணியாகிய நம் எழுத்தாளரின்  அந்நாவல் பற்றிய என் பார்வையை பதிவு செய்வதா வேண்டாமா என்கிற  மனப்போராட்டத்தோடும் சிறிதுகாலம் இருந்தேன். இருந்தும் வட்டம்பூவை  இரண்டாவது தடவையும் படித்தேன். இன்னும் இவ்வரைவின் மூலம் திரு.  பாலமனோகரன்  அவர்களுடன்  சற்று விரிவான ஒரு தளத்தில்  பேசவேண்டு மென்ற என் எண்ணமும் ஒருவேளை சாத்தியமாவதாகலாம்.

மனுஷக்காதல்களால் இரண்டு பகை அரசுகளிடையே ஒற்றுமை  ஏற்பட்டதையும், ஒற்றுமையாயிருந்த அரசுகள் சாம்ராஜ்ஜியங்களிடையே  பகைமை ஏற்பட்டதையும் தொன்மங்களிலும், வரலாறு நெடுகிலும் நாம்  பார்த்திருப்போம். ஒரு நாட்டினுள்ளேயே பல்லாயிரமாண்டுகளாக வாழும்  இரு சமூகங்களின் ஐக்கியமின்மையால் ஒரு காதல்  வளர்த்தெடுக்கப்படாமல்  கருக்கப்படுவதும் மானுஷத்துன்பங்களில்  ஒன்று. அப்படியான அவல நிகழ்வொன்றை முல்லை மண்ணின்  பகைப்புலத்தில் கூறுவதுதான் வட்டம்பூ நாவல்.
 
ஆறடி உயரமும்  உழைப்பினால் வைரம்பாய்ந்த கருங்காலியன்ன   தேகத்தையுமுடைய ஆஜானுபாவர் சிங்கராயர். வேட்டை, விவசாயம்,  கால்நடை பராமரிப்பு என்று எதையுமே ஒரு கச்சிதத்துடன் செய்யவல்ல  அசல் மண்ணின்மைந்தர். அவர் புகையிலையை கிழித்து சுருட்டொன்றைச்  சுருட்டிப் பத்துவதானாலும் அதில் ஒருவகை நேர்த்தியும் கம்பீரமும்  கலந்து இருக்கும். அவர் மகள் கண்ணம்மா வயித்துப்பெயரன்தான் சேனாதி எனப்படும் சேனாதிராஜன். நித்தகை குளத்தை புனருத்தாரணம் செய்யும்  திட்டத்தின் நிமித்தம் ஆண்டான்குளத்துக்கு வந்து முகாமிடும்  நிலஅளவைப்பகுதிக் குழுவின் கங்காணி குணசேகராவின் அழகிய மகள்  நந்தாவதி. சிறுவயதிலேயே தாயை இழந்துவிடும் நந்தாவதி தந்தையுடனே  வாழ்வதற்காக ஆண்டான்குளம் வந்துவிடுகிறாள். அருகாமையில் வாழும்  சிங்கராயர்- செல்லம்மா குடும்பத்தின் அரவணைப்பில் அவர்களையே தனது உற்ற உறவாகக் கருதிக்கொண்டு அவர்கள் வீட்டில் வளையவருகிறாள்.  ஒவ்வொரு வாரவிடுமுறைக்கும் தண்ணீரூற்றிலிருந்து தாத்தா பாட்டியிடம் வந்துபோகும்  சேனாதிக்கும் நந்தாவதிக்கும் காதல் உண்டாகிவிடுகிறது.   அக்கால கட்டத்தில் பழையாண்டாங்குளத்துக் குழுவன் மாடு ஒன்று  அவர்களுக்குப் பெரிய இடைஞ்சலாகி ஊருக்குள் உள்ள  பட்டிமாடுகளையேல்லாம் தாக்கிச்சேதாரம் விளைவித்தும்,   குளமுனையிலிருந்து வந்து ஆண்டான்குளத்தையடுத்த வட்டுவனில்  பட்டிகளில் மாடுகளை மேய்த்தும் பால்எடுத்துப் பிழைக்கும்  கிராமவாசிகளைத் தொந்தரவுக்குள்ளாக்கியும் பயமுறுத்தியும் அட்டகாசம்  பண்ணுகிறது.  அக் குழுவனின் தலையில் குண்டுத்தோட்டாவினால்  ஒரேயடியாகப் போட்டு அதன் கதையை முடித்துவிடலாந்தான், இருந்தும்  அக்கலட்டியனை மடக்கிப்பிடிக்காமல் விடுவதில்லையெனச் சிங்கராயர்  சங்கற்பம் செய்துகொள்கிறார். அதற்கு அவர் பல தந்திர வியூகங்கள்  வகுப்பதுவும்  இயலாமல் அவர் தோற்றுப்போய் அதனால் தொடையில்  வெட்டப்பட்டு வைத்தியம் பார்க்க நேர்வதும்,  அவருக்கேற்படும்  ஆதங்கமும் பின் அவர் சளைக்காமல் உன்னி எழுந்துகொண்டு ஒரு  இளைஞனைப்போல் அம்மாட்டுடன் போராடி அதை மடக்கிப்போடுவதும்  நாவலில் சேனாதி நந்தாவின் காதலுக்குச் சமாந்தரமாகச் சொல்லப்படும்  சுவாரஸ்யமான பகுதிகள். 

மண்மணம் மணக்க எழுதும் கைவல்யம் வாய்த்தவர் பாலமனோகரன்.  இந்நாவலிலும் நான் எதிர்பார்த்தபடியே முல்லைப்பகுதியின் காடுகள்,  ஆறுகள், ஏரிகள் குளங்கள், அங்கு வாழக்கூடிய பலவகையான மாடுகள்,  எருமைகள் கடாரிகள் அவற்றின் குணாதிசயங்கள், அம்மக்களின் மொழி,  விவசாயம், கால்நடைவளர்ப்பு , மீன்பிடித்தல் என்று   இடையறாத  உழைப்போடு உழலுமவர்களின் வாழ்வை நுட்பமாக அவதானித்து   அழகாகவே பதிவுசெய்கின்றார். இருந்தும் நிலக்கிளி, குமாரபுரம்  நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும்  வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது  திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக்  கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில்  பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல என்பதை பரந்த எழுத்தின்  சொந்தக்காரரான பாலமனோகரனும் நன்கு அறிவார்.
நாவலில்  முதன்மைப்பாத்திரங்களான சிங்கராயர் அவர்மனைவி  செல்லம்மா, மகள் கண்ணம்மா, பேரன் சேனாதி, அவள் காதலன் நந்தாவதி, சேனாதியின் நண்பன் காந்தி, ஆசிரியர் பானுதேவன் தவிர  உபரிப்பாத்திரங்களாக நந்தாவதியின் தந்தை குணசேகரா, வள்ளக்காரக்  கயிலாயர், கள்ளிறக்கும் கந்தசாமி, செல்வன் ஓவசியர், லோயர்  சங்கரலிங்கம் என மிகக்குறைவானோரே நடமாடுகின்றனர். இவ்வகையில்  அம் மண்ணில் மலர்ந்திருக்ககூடிய  உதிரிப்பூக்கள் பலவற்றின்  தரிசனங்களைத் தவிர்த்துக்கொண்டோ, கண்டுகொள்ளாமலோ வேகமாகச்  செல்கிறது வட்டம்பூ. பாத்திர சித்தரிப்பிலும்  நாவலின் நகர்வோடிழைந்த  சிங்கராயர், சேனாதி, நந்தாவதி தவிர்ந்த ஏனைய பாத்திரங்கள் வெகு  லேசாகவே தீற்றப்பட்டுள்ளனர்.  நந்தாவதியின் சித்தரிப்பில்கூட அவள்  முகம் நிலவுபோலிருக்கும், தங்கம்போல தகதகக்கும் , குளித்துவிட்டு  வந்தாளென்றால் முழங்காலளவுக்கு இறங்கும் அவள் கூந்தலில் சந்தனம்  கமழும் என்பதுபோன்று பழைய நாவலாசிரியர்களின் பாணியிலான  விபரிப்பே கையாளப்பட்டிருக்கிறது.  பெரிதும் புறவய  காட்சிமைப்படுத்தல்களால்  இயங்கும் இந்நாவலின் பாத்திரங்களின்  அகவுலகங்கள் ஆழமாகப் பேசப்படவில்லை.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் பத்தாவது படிக்கும்  மாணவனாக அறிமுகப்படுத்தப்படும் சேனாதிக்கு அக்கல்லூரியில்  அவனுடன் வகுப்பில் பயிலக்கூடிய அவன் வயதுத் தோழர்கள்  நிறையப்பேர் இருந்திருப்பார்கள். அவனுக்கு நெருக்கமான தோழர்களாக  வேறு  எவரும் இருந்ததாகத்தெரியவில்லை.  அவனது கல்லூரியில்  உயர்தர வகுப்பில் பயிலும் புரட்சிகர சிந்தனைகளுள்ள மாணவனான  காந்தி மட்டும் காட்டப்படுகிறான். சேனாதிக்கு ஆரம்பத்தில்  காந்தியை  எங்கு காணநேர்ந்தாலும் அவன் அரசியல், சமூகம் புரட்சியெனப் பேசுவது   புரிவதுமில்லை, அவனைப்பிடிப்பதுமில்லை.  எப்படியாவது அவனிடமிருந்து கழற்றிகொண்டு செல்லவே பார்ப்பான்.  சேனாதிக்கு  காட்டிலுள்ள  முயல்கள், உடும்புகள், காட்டுக்கோழிகளை வேட்டையாடுவதில், கடலில்  இறங்கி இறால் பிடிப்பதில் உள்ள ஆர்வமும் திறமைகளும்  சொல்லப்படுமளவுக்கு அவன் தன் பாடங்களில் எப்படி இருந்தான்  கெட்டிக்காரனா, சராசரியா, மக்கனா என்பதோ, கல்வி தவிர்ந்த புறவலயச்  செயற்பாடுகள், விளையாடுக்கள் போன்றதுறைகள் எதிலாவது அவனுக்கு   ஈடுபாடுகள் இருந்ததா இல்லையா என்பதைப்பற்றியோ, அவனது இதர  கல்லூரி ஆசிரியர்களைப்பற்றியோ, கல்லூரியைப்பற்றியோ  கல்லூரி  ஆசிரியரான ஒரு நாவலாசிரியரால் நாவலில் எதுவும் சொல்லப்படாததும்  வியப்பு.

ஒரு சமூகம் என்பது பெண்களும் இளைஞர்களுந்தான் சேர்ந்ததுதான்,  அங்கே ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கு குறிப்பிட்ட ஒரு ஆடவன் மேல்  ஈர்ப்பு ஏற்பட ஏதாவது ஒரு அம்சம் அல்லது பல அம்சங்கள் காரணமாக  இருந்திருக்கும். நந்தாவதி சேனாதியின் பாட்டியின் வீட்டில் அவர்களது  செல்லப்பிள்ளைபோல்  வளைய வந்துகொண்டிருக்கிறாள் என்பதைத்தவிர  அவர்களிடையேயான பழக்கம்  இலயிப்பு, ஈர்ப்பு, காந்தி காதலாக   மலர்ந்திருக்கக்கூடிய ஆரம்பக்கணங்களை அழகியலோடு  காட்சிமைப்படுத்தவல்ல ஒரு கலை இயக்குனரின் தரிசனத்தோடு  விபரிக்கப்பட்டிருப்பின் நாவலின் சுவாரஸ்யம்  இன்னும் அதிகரிக்கச்  செய்திருக்கும்.

இயல்பில் முரண் நடப்பியல்ஃயதார்த்தம்  என்று சொல்லும் வகையில்  எவ்வகை நிகழ்வையும் எழுதியிராத பாலமனோகரன் இந்நாவலின் முதல்  அத்தியாயத்திலேயே கலட்டியன் என்கின்ற கடாரி ஒரு சிறுத்தையை தன்  கொம்பினால் குத்தி அதைக் கொண்டுதிரிகிறது என்று விபரிக்கையில்  வியப்பே ஏற்படுகிறது. எருமை மாடுகளுக்கு எப்போதும் கொம்புகள்  பின்னோக்கி வளைந்து செல்வன. அவ்வாறான கொம்புகளால் ஒரு  சிறுத்தையை குத்துவதும் கொண்டுதிரிவதென்பதும் சாத்தியமா? 
எங்கள் ஊரில் ஒரு செவிவழிக்கதையொன்றுண்டு, இங்குள்ள ஒரு  கோவிலில் தெய்வசிலையைத் திருடவந்த திருடர்களூக்கு அதைவெளியே  கொண்டுபோகமுடியாமல் கோவிலின்  வெளிப்பிரகாரத்திலேயே அவர்கள்  கண்கள் குருடாகிவிடுமாம்.  இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஆங்காங்குள்ள  கோவில்களின் தெய்வத்தின் மகிமையைப் பேசும் 'மாட்டின் தலை  பன்றித்தலையாக மாறிய அற்புதம்' அன்ன செவிவழிக்கதைகள்  பரவலாகவே நம்மிடம் உள்ளன.  

இங்கும் ஊருக்குள் யார்வீட்டிலோ சங்கிலியொன்றைத் திருடியதாகக்  கருதப்படும் ஒருவன் ஆண்டாங்குளத்து ஐயன் கோயிலில் தான் திருடவே  இல்லை என்று சத்தியம் செய்கிறான். அத்துடன் அன்றே பாம்பொன்றினால் கடியுண்டும் இறந்தும்போகிறான். ஒரு சங்கிலித்திருட்டுக்கு   மரணதண்டனை தீர்ப்பு என்றால் மனுவோடு சேர்த்து எம் நம்பிக்கைகளும்  மீளாய்வு செய்யப்படவேண்டியன. பாம்புகள் நிறைந்த முல்லைப்  பிரதேசத்தில் ஒரு திருடனும் திருட்டுக்கொடுத்தவனும் பாம்பினால்  கடியுண்டு இறந்ததுபோகும் சாத்தியங்கள் உண்டே.  ஆனால் பொய்சத்தியம் செய்ததால்தான் பாம்பினால் கடிபடுகிறானென்ற சம்வாதம் அறிவியலின்  பாற்பட்டதல்ல. அவன் நிரபராதியாகக்கூட இருக்கலாம். நாட்டில்  பத்துபதினைந்து கொலைகளையே செய்துவிட்டு கமுக்கமாக  இருக்கும்  பேர்வழிகளை  இந்த அருட்பாம்புகள் ஏன் விட்டுவைக்கின்றன  என்கிற  வாதமின்றி ஒரு செவிவழிக்கதையை ஒத்த சம்பத்தை  ஆசிரியர் இங்கே  பதிவு செய்துவிடுகிறார்.

இந்துமதத்தினரினதும், ஜூதமதத்தினரினதும் பழக்கவழக்கங்களை  ஆய்வுசெய்த ஒரு ஆய்வாளர் ஒருமுறை சொன்னது எனக்கு நினைவில்
நிற்கிறது. அதாவது இரு மதத்தினருமே உணவில் இறைச்சியுடன் நெய்யை ஒருபோதும் சேர்த்துக்கொள்ளமாட்டார்களாம். இங்கே காட்டுக்கோழியை  அவர்கள் நெய்யில் பொரித்து உண்ணுகின்ற சேதி எனக்கு ஆச்சரியம்  தரும் புதிய தகவலாக இருந்தது. நானே புதுக்குடியிருப்பில் மெட்றாஸ்  மெயிலின் வீட்டுப்பக்கமாக வீடொன்றின் வாசலின் ' ஒரு காட்டுக்கோழிக்கு பதிலாக இரண்டு நாட்டுக்கோழிகள் தரப்படும் ' என்ற  அறிவிப்பைப்பார்த்திருக்கிறேன். காட்டுகோழி இறைச்சி சாப்பிடுவதில்  அவ்வளவு பிரியம் அவர்களுக்கு.

இன்னும் ஒரு வார்த்தைகூட சிங்களத்தில் பேசத்தெரியாத சேனாதி,   நந்தாவதி கொச்சையாவேனும் பேசவிழையும் தமிழை அவ்வப்போது  கேலிபண்ணுவதும் நகைச்சுவை. சேனாதி-நந்தாவதி இணை கட்டுக்களற்று  மிகவும் சுதந்திரமாக ஆண்டாங்குளத்தின் காடுகரம்பையெல்லாம் சுற்றித்  திரிகின்றது. சேனாதி  காட்டுக்கு காட்டுக்கோழி சுடப்போகையில்கூட   தன்னுடன் நந்தாவதியையும் கூட்டியே செல்கிறான். ஒரு இளைஞனும்   ஓரு குமரியும் அவ்வாறு சேர்ந்து சுற்றித்திரிவதற்கு ஒரு தமிழ்ச்சமூகம்  எவ்வளவு தூரம் அவர்களை அனுமதித்திருக்கும்? எவரும் அதைப்பற்றி  மூச்சுவிடுவதாகக்கூடக்காணோம்.

சேனாதி- நந்தாவதியின் காதல் சங்கதி அவர்களைத்தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆண்டான்குளத்தைப் பார்க்க சேனாதியுடன் செல்லும் ஆசிரியர்  பானுதேவனுக்கும்,  காந்திக்கும் சிங்கராயர் வீட்டில் நந்தாவதி அவரால்  அறிமுகப்படுத்தப்படுகிறாள். அங்கே காந்தி  'பேதையின் பொன்னொளியில் சுழற்சியைக் கற்றுகொண்டன என்கண்கள்' தேவதச்சன் சொல்வதுபோல்  அழகி நந்தாவதியின்  பின்னலையும் சேனாதியினது விழிகளையும்  அவ்வப்போது அவர்களின் விழிக்கோளங்களிடையே பாயும்  மின்னல்களையும், அண்மையில்  கல்லூரியில்  மாணவர் ஒன்றியத்தில்  சேனாதிராஜன், ''நந்தா நீ என் நிலா!", என உருகிப் பாடியதையும் சேர்த்துக்  கூட்டிக்கணித்து அவர்கள் விஷயத்தை லேசாக ஊகித்துக்கொள்கிறான்.  ஆனாலும் அவன் எக்கட்டத்திலும்  சேனாதியிடம் அவர்கள் விவகாரம்  பற்றிக் கேட்டதுமில்லை, தான் அதைத் தெரிந்து கொண்டதாக  வேறுஎவரிடமும்  வெளியிட்டதுமில்லை. அவன் தாத்தா  சிங்கராயரோ  பாட்டியோகூட அவர்களது காதல்விவகாரத்தை இம்மியும்  அறிந்திருக்கவில்லை.  தவிரவும்  ஆசிரியர் பானுதேவனோ,   குணசேகராவோ, ஊரில் வேறொரு குருவியுமோ அதுபற்றி ஒன்றும்  அறியாது. நாவலின் இறுதியில் அப்பாவிச்சிங்கராயரே  நந்தாவை  சேனாதியிடமிருந்து பிரித்துக் கொண்டுபோய் சிங்களப்பகுதியான  பதவியாவில் விட்டுவிட்டு வந்துவிடுகிறார். நாவல் முழுவதும் அவர்களின்  காதல்விவகாரம் மௌனமாகவே இருண்மையாக வைக்கப்பட்டிருப்பதன்  மர்மம் அல்லது அவசியம்  என்னவென்பதும் தெளிவில்லை.
 
நடந்து முடிந்த ஒரு தேர்தலின் பின்னால் தென் இலங்கையில் தமிழர்கள்  தாக்கப்படுகிறார்கள். ஆதலால் இங்கு சொல்லப்படும் இக்கலவரத்தை ஒரு  நடுவயது வாசகன் 1977ல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன்   ஆகஸ்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் என ஊகிக்கலாம். அதன்  தொடர்ச்சியாக தமிழ்ப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்கள் மெல்ல மெல்ல  வெளியேறுகிறார்கள். முல்லைத்தீவுக்குடாப்பக்கமாக வாடியமைத்திருந்த  சிங்களமீனவர்களின் வாடிகளுக்கு தமிழர்கள் யாரோ  தீவைத்துவிடுகிறார்கள். இதன் எதிர்வினையாக சிங்களப்படையினர்  அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களைத்தாக்கிவிடுவர்களோ என்கிற பயத்தில் அப்பகுதியின்  மக்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்களுட்படத்  தம்  பொருள் பண்டங்களைக் காவிக்கொண்டு மாட்டுவண்டிகளிலும்  கால்நடையாகவும் இடம்பெயர்ந்து  ஆண்டான்குளம்   நோக்கி  வருகிறார்கள். இக்காட்சியால் சினமடைந்த சிங்கராயர் " எம்  உயிர்போனாலும் நாம் நின்று தாக்குப்பிடித்து (வெறுங்கையால்?) போராட  வேணுமே தவிர இப்படிச் சட்டி பெட்டிகளையும் தூக்கிக்கொண்டு  இடம்பெயர்ந்து வருவது கோழைத்தனமடா" என்று உபதேசம் செய்யவும்  அம்மக்களும் அதைக்கேட்டுச் சமாதானமாகித் திரும்பிச்செல்வது மிகச்  செயற்கையாகவும் நாடகத்தன்மை வாய்ந்த நிகழ்வாகவும் உள்ளது. 
இலங்கைத்தீவில் தமிழர்கள்மீதான இனக்கொலைகளும் கலவரங்களும்  அடக்குமுறைகளும் இதுவரை குறைந்தபட்ஷம் பத்துதடவைகளுக்கும்  மேல் நடந்தேறியுள்ளன. நாவலில் பேசப்படும் கலவர நிகழ்வுகள் எந்த  ஆண்டில் நிகழ்கின்றன என்பதற்கு எந்த ஒரு தடயமோ பதிவோ இல்லை  (ஊhசழழெடழபiஉயட ழுஅளைளழைn). இது இன்னும் ஐம்பது ஆண்டுகளின் பின்னால் இந் நாவலைப் படிக்கநேரும் ஒரு இலக்கிய மாணவனுக்கோ  ஆர்வலனுக்கோ ஆய்வாளனுக்கோ மயக்கத்தை ஏற்படுத்தும்.
இலங்கையின் அரசியல் நிலவரங்கள், தமிழ் மக்களின் அரசியல்  பிரச்சனைகள் என்பன காந்திக்கும் மாஸ்டருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் அரசியல் சம்வாதங்களாலும், தமிழ் மக்களிடம்  எப்போதுமிருக்கும் ஒரு இனக்கலவரம் ஏற்படலாமென்ற அச்சம்  உணர்வாலும் மாத்திரம் அங்காங்கே இலேசான தீற்றல்களாகக்  காட்டப்படுகின்றன. இந்நாவல் இப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்டால்  இலங்கையின் அரசியல், தமிழர்களுக்குண்டான பிரச்சனைகளை அறியாத  ஒரு புதிய வாசகனுக்கு தெளிவின்மைதான் எஞ்சும். 1982ல் எழுதப்படும்  இந்நாவலில் சமகால அரசியல் பிரச்சனைகள் தெளியவே சொல்லப்படாதது பலவீனம்.   இலங்கையின் அரசியல் , ஒடுக்கும் சக்திகளின் செயற்பாடுகள், தமிழர்கள் நசுக்கிஒடுக்கப்படும் காட்சிகள், அவர்தம் பாதிப்புகளை  வெறுமனே சம்பா~ணைகளாக விபரியாமல் நாவலின் நிகழ்வுகளாக ,  பாதிக்கப்பட்டவர்களைப் பாத்திரங்களாக வார்த்திருக்கும் மகா-சாத்தியம்  வினைப்படவில்லை. மூச்சுக்கு மூச்சு சமூகம் அரசியல் எனக்கவலைப்படும் காந்தி என்ன ஆனான் என்பதுவும் தெரியவில்லை.
காந்தி பேசும் அரசியல் விடயங்களில் ஈடுபாடற்றும் அவற்றைப்புரியவும்  முயற்சிக்காத சேனாதி இறுதியில் தமிழ் சிங்கள மக்களிடையேயான  ஒற்றுமையீனம்தான் தான் நந்தாவை இழக்கவேண்டி வந்ததின் காரணம்  என்பதை உணர்கிறான். நாவலின் இறுதி வாக்கியத்தில வினை முடிக்கப்  புறப்படுகிறான் என்ன சொல்லப்படும் சேனாதி என்னதான்  செய்யப்போகிறான் இனங்களுள்  ஒற்றுமையை உண்டுபண்ண உழைக்கப்  போகிறானா? அல்லது தனி ஈழம் அமைக்கப்போராடப்போகிறானா?  என்பதுவும் நாவல் எழுப்பும் கேள்விகளாகும். 
பாலமனோகரன் மிகவும் கனமான சுவையான ஒரு ராகத்தைத்  தொட்டுக்கொண்டு  தானத்திலேயே அதன் ஆரோகணத்தையும்,  அவரோகணத்தையும்  கோடிகாட்டி அப்பிழிவின் இரசத்தை நம் நாவில்  லேசாகத்தடவிவிட்டு அப்பால் சென்றுவிடுகிறார். இதனால்தானோ  இது  எனக்கு சாத்தியப்படக்கூடிய ஒரு பெரிய நாவலின்  'எடுப்பாக' மட்டும்  (பல்லவி) படுகிறது.  பாலமனோகரன்  அதன் தொடுப்பையும், முடிப்பையும் இன்னும் இழைத்து  விரிவுபடுத்தியிருக்கக்கூடிய சாத்தியங்கள்  வட்டம்பூவில் நிறையவே இருப்பதாகத்தோன்றுகிறது.

பெர்லின். 12.02.2008

(கருணாகரமூர்த்தியின் கருத்துக்களுக்கு பதிலுரைக்க விரும்புபவர்கள் எழுதலாம்.)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 11:52
TamilNet
HASH(0x55e2bb8197d0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 11:52


புதினம்
Tue, 19 Mar 2024 11:52
















     இதுவரை:  24681972 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1192 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com