Thursday, 21 June 2007
பண்பாட்டியல் கல்வி என்பது சிறப்புமிக்க ஒரு துறையாக இப்போது பல்கலைக் கழகங்களில் பெருகி வருகிறது. கால மாற்றங்களும்; சமூக மாற்றங்களும்; புலம்பெயர்வுகளும்; பண்பாடுகளிலும், பண்பாடு பற்றிய ஆய்வுகளிலும் பலத்த பாதிப்புக்களைச் செலுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியைத் தெளிவாக உணர்ந்து கொண்டதால் தமிழ் நிலைப்பட்ட ஓர் ஆய்வாக, ‘பண்பாடு - வேரும் விழுதும்’ என்ற நூலை எழுதியுள்ளார் சு. இராசரத்தினம் அவர்கள்.
தமிழாசிரியராகவும், தமிழ்க்கலை-தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனராகவும், தமிழியல் ஆர்வலராகவும், தொடர்ச்சியாக இயங்கி வந்த இராசரத்தினம் அவர்களின் நூல் ஜூன் 24, 2007 ஞாயிற்றுக்கிழமை வெளியீடு காண்கிறது.
பழந்தமிழர் மரபுகள், மொழியியலின் கூறுகள், உயிரியலும் பண்பாடும், மெய்யியலும் பண்பாடும் போன்ற பல தளங்களில் பண்பாடு பற்றிப் பொதுவாகவும் தமிழ்ப் பண்பாடு பற்றிக் குறிப்பாகவும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. ‘பண்பாடு என்றால் என்ன? பண்பாடு என்பது நிலையானதா அல்லது மாறுந் தன்மையானதா? மாற்றப்படக் கூடியதா? தொடர்ந்தும் ஒரே வகையான பண்பாட்டைத்தான் நாம் பேண வேண்டுமா? மரபு சார்ந்த பண்பாட்டைப் பின்பற்றுவது நமது சமூக மேம்பாட்டுக்குப் புலம்பெயர் சூழலில் வழி வகுக்குமா? போன்ற மிகவும் முக்கியமான கேள்விகளை விசாரணைக்காக எடுத்துக் கொள்கிறார் நூலாசிரியர். அவர் எழுப்புகிற கேள்விகளும், அந்தக் கேள்விகளுக்கு விடைகாண முற்படுகிற போது விரிகிற சமூகவியல், மெய்யியல் தேடலும் எமக்கு மிகுந்த பயன் தருவதாக அமைந்துள்ளது.
“புலம்பெயர்ந்து வாழும் நம் போன்ற தமிழர்களுக்காகவும், புலம்பெயர் மண்ணில் தமிழ் மொழியைக் கற்று வரும் மாணவர்களுக்காகவும் எழுதப்பட்டது இந்நூல்” என்று ஆசிரியர் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தாலும் ஆய்வுமாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழியல் விரும்பிகள், தமிழைத் துறைசார்ந்து படிப்போர் போன்ற பல தரப்பினருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். வழுவற்ற, தெளிந்த நடையில் ஆர்வத்தைத் தொடர்ச்சியாகத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் அனைவரும் வாசிக்கக் கூடிய வகையில் நூல் அமைந்துள்ளது.
பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகிய மூன்றையும் கருத்தியல் சார்ந்தும் ஆய்வு நெறிசார்ந்தும் விளக்கி, இவை மூன்றையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என்பதையும், மூன்றும் வேறானவை என்பதையும் நூலில் நுட்பமாக விளக்குகிறார் ஆசிரியர். சங்க இலக்கியம், நீதி நெறிப் பாடல்கள், பொருளியல், சமூகவியல், உளவியல் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து தன்னுடைய வாதங்களுக்குச் சான்றுகளைத் தேடித் தருகிறார் நூலாசிரியர்.
“எனது பட்டறிவோடு நான் இதுவரை கற்றவை, கேட்டவை என்பன நூலில் நிறையவே இடம் பெறுவதாகக்” குறிப்பிடும் ஆசிரியர் இயன்றவரை துணை நூல்களின் விவரத்தையும் பின்னிணைப்பாகத் தந்துள்ளார். பல்கலைக் கழகம் சார்ந்த ஆய்வு மரபுகளும், பயிற்சியும், தேர்ச்சியும், உருவாக்குகிற ஏராளமான புலமையாளர்கள் தமது புலமைத் திறத்தையும் அறிவுச் சுடரையும் சமூக நலனுக்குப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மலைமேல் சுடரும் விளக்காகவும் இருப்பதில்லை, குடத்துள் இட்ட விளக்காகவும் அமைவதில்லை. ‘தந்தக் கோபுரங்களில்’ அறிதுயில் கொள்வதே அவர்களில் பெரும்பாலானோரின் வழமை. இதற்கு மாறாக, மரபும் முறையும் சாராத புலமையாளர்களாக நமது சமூகத்தில் பலர் உருவாகி வருகிறார்கள். அவர்களது சீரிய முயற்சியும் பரந்த தேடலும் சமூக அக்கறையும் போற்றத் தக்கது. அத்தகையதொரு புலமையாளராகவே சு. இராசரத்தினம் அவர்கள் இந்த நூலூடாக மலர்ச்சி பெறுகிறார். தமிழுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த நூலைப் பெற்றுப் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.
சேரன்
பேராசிரியர் சமூகவியற்றுறை,
வின்சர் பல்கலைக்கழகம் கனடா
18-06-2007
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts) |