அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 34 arrow அனார் கவிதைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அனார் கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அனார்  
Wednesday, 16 May 2007

01.

அரசி

உன் கனவுகளில்
நீ காண விரும்புகின்றபடியே
நான் அரசி
அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு
சவால் விடும் பேரரசி
அடிபணிய அல்ல
கட்டளையிடப் பிறந்தவள்
ஆணையிடுகிறேன் மந்தைகளுக்கு
குகைகளிலிருந்து தப்பிச் செல்லுங்கள்
ஆணையிடுகிறேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்தவாயை பொசுக்கி விடுமாறு
பெரும் மலைகளை நகர்த்தி தளர்ந்துவிட்ட
மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுக்களை
வருடி விடுமாறு பறவைகளைப் பணிக்கிறேன்
ஒருத்தி சொல்கின்றாள்
'என்னிடமிருப்பது தீர்வற்ற புலம்பல் கசப்பு'
இன்னொருத்தி கூறுகின்றாள்
'குரலில் இறக்க முடியாச் சுமை'
இருண்டு வரும் பொழுதுகளில் நேர்ந்த
துஷ்ப்பிரயோகங்களை காட்டுகிறாள் எளிய சிறுமி
நான் என்னுடைய வாளை கூர் தீட்டுகின்றேன்
சுயபலம் பொருந்திய தேவதைகள்
விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை
வென்றெடுத்ததாய் கொண்டாடுகிறார்கள்
பாட்டம் பாட்டமாய்
பெண்கள் குலவையிடும் ஓசை
பெரும் பேரிகைகளாய் கேட்கின்றன
நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே
கைகளிரண்டையும்
மேலுயர்த்தி கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகின்றபடியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி

 

02.

வண்ணத்துப்பூச்சியின் கனாக்கால கவிதை


உனது பெயருக்கு
வண்ணத்துப்பூச்சியென்றொரு அர்த்தமிருப்பது
எவ்வளவு பொருத்தம்
இல்லாவிட்டால்
என் கூந்தலிலும் தோள்களிலும்
உதடுகளிலும் அமர்ந்து பறந்து திரிய
உன்னால் முடிந்திருக்குமா என்ன
உணர்வெங்கும் குந்தி சிறகடித்துத் திரியும் சாகசத்தை
வண்ணத்துப்பூச்சியாய் இல்லாது போனால்
எப்படி நிகழ்த்திக் காட்டுவாயெனக்கு
உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது
உள்ளே பாடல் போல மிதக்கின்ற வண்ணத்துப்பூச்சி
வெளியே பிடித்துவைக்க முடியாத கனா
பைத்தியம் பிடித்திருக்கும் இந்நாட்களிலெல்லாம்
வண்ணத்துப்பூச்சியை மொய்க்கின்ற மலராக
பறந்து கொண்டேயிருக்கிறேன்
வாழ்வின் கனாக்காலம் முழுவதும்
பருவங்கள் மாறி மாறிப் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
தம் வண்ணங்களால் உயிரூட்டுகின்றன
நம் அந்தரங்க வெளிகளில்
வானவில் படிந்து உருகிக்கிடக்கும்
மலைகளின் தொன்மப் புதையல்களில்
மௌனம் குருதிசொட்ட ஒளிந்திருக்கிறேன்
இன்னொரு முறை
மகரந்தச் சொற்களினால் சிலிர்ப்பூட்டு
பூங்கொத்துகளில் துளிர்த்துத் தேனூறும்
வண்ணத்துப்பூச்சியின் பிரம்மாண்டமான
கனாக்கால கவிதை நானென்பதில்
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்

 

03.

வெயிலின் நிறம் தனிமை


1.

நடுப்பகலில் என் வெறுமையுள்
வெயில் எரிந்து கொண்டிருக்கின்றது
சாந்தமாகவும்
அதே நேரம் கனன்றபடியும்
பகல்நேர ஆசுவாசத்தின் மறைவில்
தனிமை தன் தந்திரங்களுடன் ஊடுருவுகின்றது
வெயில் வீட்டிற்குள் வருகின்றது
அதன் விருப்பப்படி உட்கார்ந்திருக்கிறது
பரிவும் வருடலுமில்லாத சிடுமூஞ்சைத் தூக்கிக்கொண்டு
புழுங்கும் சர்வாதிகாரத்தை
எங்கும் விசுறுகின்றது
உக்கிரமாய் வியாபித்து இறுகிக்கிடக்கின்றன
எல்லாவற்றின் மீதும் தீவலைகள்
இன்றைய நாளின் உஸ்ணத்தில்
நெஞ்சில் தீய்க்கும் சுடுவெயிலில்
எந்த தீர்மானங்களுமில்லை
நீண்டு உயர்ந்த மரங்களுக்கிடையில்
விழுந்து முகம்பார்த்தேங்குகின்ற
அந்திவெயில் துண்டங்களில்
என் தனிமையின் பெரும்பாரம்
ரத்தமாய் கசிகின்றது


2.

தனிமையின் குரலிலிருந்து
மெல்லிய விசும்பல் உதிர்கிறது
பனிப்பொழிவைப் போன்று
வெண்மையும் நடுக்கமும் மிக்கதாய்
அரண்மனையின் நீண்டபடிகளின் கீழ்
ஓநாயின் வடிவத்திலிருக்கிறது தனிமை
உதாசீனம் செய்கின்ற
ஒவ்வொன்றையும் அழச்செய்கின்ற
இலையுதிர்காலம்
தீராத கவலைபோல் சிறியதும்
பெரியதுமாய் மலைப்பாறைகள்
நதியோரம் நீலச்சாயலுடன் ததும்புகின்ற
வெறும் வானம்
அணில் குஞ்சுகளின் விந்தையான ஒலிகள்
அனைத்தும்
தனிமை ஜன்னலில் விழுந்து தெறிக்கின்றன
துரதிர்~;டசாலியின் நழுவிப்போன தருணங்கள்
எங்கோ பற்றியெரிகின்றது பெரும்திடலாக
வீடு தனிமைக்குள் கேட்காத
கதறலாய் இருக்கிறது
மூச்சு திணறுமளவு பூட்டிய அறையினுள்
தனிமையின் புகைச்சல்
மறைவான புதர்களுக்கிடையில்
வேட்டையாடப்பட்ட இரையை
சத்தமின்றிப் புசித்தபடியிருக்கும் அரூப மிருகம்
தனிமையின் பள்ளத்தாக்கில் நானிருந்தேன்
காலங்களால் கைவிடப்பட்ட
ஒற்றைப் பட்டமரமாக

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Jul 2024 23:39
TamilNet
HASH(0x559c578500f0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Jul 2024 23:55


புதினம்
Fri, 19 Jul 2024 23:55
     இதுவரை:  25382635 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2371 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com