எழுதியவர்: அபிநயப்பிரியன்
|
|
|
Thursday, 26 October 2006
பரதேசிகளின் பாடல்கள் என்கின்ற கவிதை நூல் வெளியீடு கடந்த 21-10-2006ல் அப்பால் தமிழ் குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கவிதார்வம் கொண்ட குறைந்த எண்ணிக்கையானோர் கலந்து கொண்ட போதிலும் காத்திரமான நிகழ்வாக அது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இருபது பெயரிலிக் கவிதைகளை உள்ளடக்கிய சிறிய கையடக்க நூலாக சிறந்த வடிவமைப்புடன் இக்கவிதை நூல் வெளிவந்திருக்கின்றது. அலைதலில் உழன்ற பல்வேறு படைப்பாளிகளின் பெயர் அழிந்த கவிதைகளால் பதிவாகியிருக்கும் இத்தொகுப்பு ஈழத்து இலக்கிய சூழலுக்கு புதுமையானதே. அப்பால் தமிழ் தள இயக்குனரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் தலைமையில் நடந்தேறிய இந்நிகழ்வில் ஆரம்ப உரை நிகழ்த்திய கவிஞர் பாரதிதாசன் " பெயரற்ற படைப்புகள் என்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதையும், படைப்பாளி தன்னை வெளிப்படுத்துவது அவசியம் என்பதையும் குறிப்பிட்டார். மிகச் சிறிதான இந்தக் கவிதை நூல் உள்ளடக்கி இருக்கும் செய்தி மிகவும் பெரியது எனக் குறிப்பிட்ட அவர் தொகுப்பின் முதல் கவிதையாகிய 'நான்' என்பதைனை வாசித்துக்காட்டி, அது தன்னை எந்த வகையில் கவர்ந்திருக்கின்றது என்னபனையும் கூறி இந்நூல் வெளியீட்டு முயற்சியையும் பாராட்டினார்.
இந்நூல் குறித்து கருத்துரைத்த இளங்கவிஞனான சஞ்சீவ்காந்த், பரதேசிகளின் பாடல்கள் பற்றியதான தனது எண்ணப்பதிவுகளையும் சந்ததேகங்களையும் சிறந்த முறையில் வெளிப்படுத்தினார். குறிப்பாக 'பரதேசி' என்கின்ற சொல் எமது சமூகச் சூழலில் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்படும் விதத்தை குறிப்பிட்டு இத்தொகுப்புக்கான தலைப்பு பொருத்தமுடையதா என்கின்ற கேள்வியையும் எழுப்பினார்.
சிறிதாயினும் கனதியான கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக 'பரதேசிகளின் பாடல்கள்' இருப்பதனை சுட்டிக்காட்டிய ரமேஸ் சிவரூபன் தனக்குப் பிடித்துப்போன கவிதைவரிகளையும் வாசித்து வெளிப்படுத்தினார்.
கவிதைத் தொகுப்பின் முகப்பு அட்டை வடிவமைப்புச் சிறப்பை வெளிப்படுத்தி கவிதைகளுக்குள் நுழைந்த கவிஞர் தா.பாலகணேசன் பரதேசிகளின் பாடல்கள் யாவுமே தேர்ந்த சிறந்த கவிதைகளாகவே அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி இன்றைய அலைச்சல் வாழ்வியல் சூழலில் இத்தொகுப்பு பெறுகின்ற முக்கியத்துவத்தை குறித்தும், எதிர்காலத்தில் இத்தொகுப்பு ஏற்படுத்தக்கூடிய அதிர்வான அசைவியக்கம் குறித்தும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அத்துடன் இக்கவிதைகள் அரங்க கவிதைகளாகி மக்களிடையே செல்லும்போது ஏற்படுத்தக்கூடிய அதிர்வலைகளையும் சுட்டிக்காட்டினார். இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கவிதைகளுமே வாசகனுடன் நெருக்கமாகி வேரறுத்த வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் வறட்சியும் உணர்ச்சியும் ததும்ப பகிர்ந்து கொள்கின்றது எனவும் பாலகணேசன் குறிப்பிட்டார்.
பரதேசிகளின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில் தொகுப்பின் தலைப்பும், படைப்புகளின் படைப்பாளிகள் காணாமல் போயிருந்தமையும் எல்லோரின் அவதானிப்புக்கும் வியப்புக்குமுரிய பேசுபொருளாய் இருந்ததை நோக்க முடிந்தது. ஊர் நாடு என்னும் எல்லைகள் தாண்டி உலவிவந்த கவிஞர்களின் கவிதைகளே இங்கு தொகுக்கப்பட்டிருப்பதாக இந்நூலின் பதிப்புரையில் குறிப்பிடப்படடிருக்கின்றது. ஆகவே ஈழத்து மண்ணிலிருந்து வேரறுபட்டு தேசாந்திரிகளாக அலைந்த.. அலைகின்ற படைப்பாளிகளின் அனுபவ பதிகையாகவே இத்தொபு்பின் கவிதைகள் யாவும் விரிந்து செல்வதை நோக்க முடிகின்றது. ஊரான உரிழந்து ஒத்தப்பனை தோப்பிழந்து உலகெல்லாம் அலைந்தழியும் ஈழத்தமிழரின் உணர்வுகளுடன் இக்கவிதைகள் ஒன்றிப்போவதில் வியப்பேதுமில்லை. பெயரிலிக் கவிதைகளான பரதேசிகளின் பாடல்கள் யாவுமே வாசகனுக்கே உரித்துடையதாகி அவனுடன் இரண்டறக் கலந்துவிடுகின்ற வாய்ப்பும் இங்கே இயல்பாக ஏற்பட்டு விடுகின்றது.







"இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் ஊசலாடும் தராசு முள்ளாய் நான் தொங்கிக் கொண்டிருக்க வியர்வை மட்டும் ஆறாய்பாயும் பொருளாதார உறவுதேடி.."
என்னைக் கவிதையாய் அறைந்து மறைந்துபோன கவிஞன் யாரோ?
இத்தொகுப்பின் ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டும்போதும் இந்த ஏக்கம் எல்லோருக்குமே ஏற்படும் புகலிட தமிழ்க்கவிதைச் சூழலில் என்றும் பேசப்படும் தொகுப்பாய் இது இருக்கும். பாராட்டுக்குரிய இம்முயற்சிகள் தொரடப்படவேண்டும். படங்கள்:க.வாசுதேவன் |