Thursday, 19 October 2006
1.
அறியாமை
வேர்பரப்பிய ஒரு மரத்தின் கிளையில் நான் கனியாய் தொங்கிக்கொண்டிருக்கிறேன்..
கனிக்குள் ஒரு மரம் ஒளிந்திருப்பது தெரியாமலே கிளைகளோடு உறவாடிக்கொள்கிறேன்...
எனக்குத் தெரியாமலே வேர்கள் என்னுள் உள்வாங்கிக் கொள்கிறது...
பிறிதொரு நாளில் நான் மரமானபோது புதிதாய் ஒரு கனியை பிரசவித்தேன்..
அடையாளமற்ற யாரோ கோடரியோடு என் வேர்களை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள்..
நானோ என் கனியை காப்பாற்ற பிரயத்தனங்களை செய்து கொண்டிருக்கிறேன்.
2.
காத்திருப்பு
என் கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றின் எல்லைக்குள் நான் சுதந்திரமாய் உலவுகிறேன்
என் சுதந்திரத்தின் அளவுகோல் பற்றிய சிந்தனை ஏதுமின்றி பெருமையும் புகழ்ச்சியுமாய் நாட்கள் கழிகின்றது...
என்னைச் சுற்றிய எல்லைக்குள் புற்களையும் பூண்டுகளையும் தண்ணீரையும் உண்டு வயிறு நிரப்பி வந்தபோது தீர்ந்துபோனது உணவு...
எனது எல்லை தாண்டி தெரியும் பசுமையில் என் வாயில் உமிழ்நீர் கசிகிறது...
இப்போது காத்திருக்கிறேன் என் எல்லைக்குள் வளரும் புற்களுக்காக அல்ல கயிற்றை இழுப்பதற்கான பலத்தை நான் கட்டப்பட்டிருக்கும் மரத்தில் இருந்து பெறுவதற்காக...
09-10-2006
|