Wednesday, 23 August 2006
எழுதிக்கொள் நானொரு அராபியன் என் அட்டை எண் 50.000 எட்டு குழந்தைகள் எனக்கு ஒன்பதாவது அடுத்த கோடையில் வெளிவரும் நீ கோபப்படுகிறாயா?
எழுதிக்கொள் நானொரு அராபியன் சக தொழிளாளித் தோழர்களுடன் கல்லுடைக்கிறேன் பாறை பிளக்கிறேன் ஒரு கவளம் சோற்றுக்காக குழந்தைகளுக்கு பள்ளிப் புத்தகம் வாங்குவதற்காக ஆனால் உன் ஆதிக்கத்தின் கீழ் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் கோபம் வருகின்றதா உனக்கு?
எழுதிக்கொள் நானொரு அராபியன் அடையாளமற்ற ஓர் ஆள் பைத்தியம் பிடித்த இந்த உலகில் திடமான திட்டமான மனிதன் யுகம் கடந்து காலம் தாண்டி ஆழ ஓடியுள்ளன எனது வேர்கள் உனக்கு கோபமூட்டுகிறேனோ?
கொஞ்சமே வருமானம் வரும் ஏழை விவசாயக் குடிமகன் நான் வளையும் நாணல் தட்டையால் வளையாத கம்பீரத்தால் வேயப்பட்ட குடிசையில் வாழ்பவன் நான். முடி - கன்னங்கறுப்பு கண்கள் - கோதுமை நிறம் அராபியத் தலையலங்காரம் உழைப்பின் கீறல்களும் காயப்புகளுமான கரம். எண்ணைக் குளியலையும் நறுமணப் பொடி தூவலையும் விரும்புவன்.
பணிவுடன் சொல்கிறேன் எழுதிக்கொள் இவையெல்லாவற்றுக்கும் மேலே நான் எவரையும் வெறுப்பவனல்ல ஆனால் பட்டினி கிடக்கின்ற போது என்னைக் கொள்ளையடித்தவர்களின் சதையை கவ்விக் குதறுவேன் கவனமாயிரு எனது பசி எனது வெஞ்சினம் கவனமாயிரு.
- ஆங்கிலம் வழி தமிழில்: சூரிய தீபன்.
குறிப்பு - அதிகார சக்திகளின் விசாரணையும், அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாக்குமூலமுமென கவிதை ஒலித்துள்ளது. 1960களில் அமெரிக்காவில்நடைபெற்ற மக்கள் எழுச்சியின்போது இக்கவிதை போராளிகளால் மறுபதிப்பு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. |