அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 27 arrow பாரிஸ் மாநகரத்தில் வெள்ளம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பாரிஸ் மாநகரத்தில் வெள்ளம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பாரதி  
Thursday, 22 June 2006
(காலச்சுவடு பதிப்பத்தின் வெளியீடான பாரதி 'விஜயா' கட்டுரைகள் என்னும்  நூல் தொகுப்பில் இருந்து இக்கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்  பிரசுரமாகின்றது. 'விஜயா' பாரதியார் ஆசிரியராக இருந்து 1909-1910ல்  வெளிவந்த நாளேடு. அந்நாளேட்டில் பாரதி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு  முதன் முறையாக ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களால் தொகுப்பட்டு  காலச்சுவடு பதிப்பகத்தால் நூல்வடிவில் வெளியிடப்பட்டது. 1910ம் ஆண்டில் பாரிஸ் பற்றிய ஒரு தோற்றத்தை இக்கட்டுரை சுவையுடன் தருகின்றது.  படித்துப் பாருங்கள்)
நமக்கு சென்ற வாரம் தபால்மூலமாக கிடைத்த கடிதங்களாலும்  பததிரிகைகளாலும் பாரிஸ் வெள்ளத்தை குறித்து பின் எழுதும் விபரங்கள்  வந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக சேன் நதியில் பிரவாகம் அதிகரித்து சுற்றுப்பக்கங்களிலெல்லாம் பரவி வந்தது. பூமிக்குள் இருப்புப்பாதை போட்டு  ரயில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுரங்க வழிகளில் முதல்முதல்  தண்ணீர் நிறைந்து அவ்வழியாக ரயில் வண்டிகள் ஓட்டமுடியாமல்  நிறுத்தப்பட்டன.பிறகு வெளி ரோட்டுகளில் பரவி பாரிசில் பள்ளமாக  இருக்கம் பாகங்களிலெல்லாம் நீர் தங்கிவிட்டது. குதிரை வண்டிகள் வெகு  கஷ்டத்தோடு தெருக்களில் இங்குமங்குமாகப்போய் கடைசியில் தண்ணீர்  அதிகரிக்கவே வண்டிகளின் நடமாட்டம் இல்லாமலே போய்விட்டது. டிராம்  வண்டிகளும் மேடான தெருக்களில்தான் ஓடிக்கொண்டிருந்தன. வரவர  தண்ணீர் அதிகரிக்கவே அநேக தெருக்களில் டிராம் வண்டிகூட செல்ல  முடியவில்லை. கேதோர்ஸே என்னும் பாகத்தில் இருந்து ரயில்வே ஸ்டேசன் தண்ணீரில் முக்கால் முழுகிவிடடபடியால் அந்தப்ப பக்கத்து ரயில் வண்டி  ஓடவேயில்லை.
எங்கெங்கு பார்த்தாலும் தெருக்களில் சுமார் 20 அடி தண்ணீர்  நிறைந்திருந்தபடியால் சிறு படகுமூலமகாத்தான் ஐனங்கள் நடமாடிக்  கொண்டிருந்தார்கள்.  வெள்ளம் அதிகமாகும் என்று நன்றாக தெரிந்தபொழுதே பாரிஸ் பட்டணத்து முக்கிய பொலீஸ் உத்தியோகஸ்தரான (Prefect de Police) ஷெர்புர்க், பிரெஸட், தொன் கெர்க்கலே முதலிய துறைமுகங்களுக்கு தந்தி  கொடுத்து சிறு படகுகளை தகுந்த மனிதர்களோடு வரவழைத்தார்.  பாரிஸிலுள்ள படகுகளும் இவைகளும்தான் இப்போது தெருக்களில்  நடமாடுவதற்கு உபயோகப்படுகின்றன. அநேக தெருக்களில் தண்ணீர்  முதல்மாடி வரைக்கும் வந்துவிட்டிருக்கின்றது. அந்த வீட்டிற்குள் செல்ல  வேண்டியவர்கள் படகுகளின்மேல் மாடியிலிருக்கும் ஐன்னலண்டைப் போய், அதற்குள் நுழைந்து உள்ளே குதிக்க வேண்டியதாயிருக்கின்றது. அநேக  வீடுகளில் ஜனங்கள் ஜன்னல் வழியாக அடிக்கடி போய்வருவதற்கு தகுந்த  சாரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வீட்டுக்கு கீழ்ப்பாகத்திலிருந்த ஆடு, மாடு,  குதிரை முதலிய மிருகங்கள், பகூி வகைகளெல்லாம் அடியோடு  நாசமாய்வி்ட்டன. இவைகளின் சவங்கள் தண்ணீரில் மிதந்துகிடக்கின்றன.  ழார்தென் தேப்ளாந்த் என்னுமிடத்திலிருக்கும் உயிர் மிருகங்களெல்லாம்  தண்ணீர் தங்குவதனால் கஷ்டப்படுகின்றன. கூண்டிலிருக்கும் பாம்புகளும்  கரடிகளும் தத்தளிக்கின்றன. ஆனால் அங்கு சீக்கிரத்தில் நீர் வடிந்துவிடும்.
தின்பண்டங்களின் விலை வெள்ளத்தினால் அதிகமாய்விடவில்லை. படகில்  ஏறிப்போய் வீடுகளில் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூபாயிக்கு ஆறுகாசு  விகிதம் உயர்த்தப்பட்டது. சில பாகங்களில் ரொட்டி சுடுபவர்கள் அடுப்புகளில் தண்ணீர் நிறைந்து விட்டபடியால் தண்ணீர் எட்டாத இடங்களிலிருக்கும்  ரொட்டிக் கிடங்குக்காரர்கள் தங்கள் அடுப்பில ரொட்டி தட்டிக்கொள்ளும்படி  இவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். வெளியில் எப்பொழுதும் பனி பெய்து  கொண்டே இருந்தது. ராணுவ உத்தியோகஸ்தர்களும், ராணுவ சேவகர்களும்  ஓச்சல் ஒழிவில்லாமல்  ஜனங்களுக்கு ஒரு ஆபத்தும் நேரிடாவண்ணம்  இரவும் பகலும் இங்கும் அங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒரு  ஆஸ்பத்தரியில் தண்ணீர் வரக்கண்டு அங்கிருந்த நோயாளிகளையெல்லாம்  மெதுவாக எடுத்துக்கொண்டு தகுந்த இடத்தில் கொண்டுபோய் விட்டார்கள்.  ஜனவரி 28 தேதி வரையில் வெள்ளத்தினால் மரணம் ஒன்றும்  காணப்படவில்லை. ஒரேவொருயிடத்தில் ஒரு ஸ்திரீ ஒரு புருஷன் கையைப் பிடித்து கொண்டு போகையில் நீரோட்டத்தினால் கீழே தள்ளப்பட்டு  மரணமடைந்தாள். அவள் தேகத்தை உடனே எங்கே தேடிப்பார்த்தாலும்  அகப்படவில்லை. நீர் அவளவு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
வெள்ளத்தினால் பெருத்த கஷ்டம் ஒரு பாகமாகிய ஆல்போர்வீல்  என்னுமிடத்தில்தான். அங்கு தண்ணீர் சுமார் 25 அடி ஆழம் வரைக்கும்  தங்கிற்று. அங்கு சுமார் 18000 பெயர்கள் தண்ணீரால் சூழப்பட்டு தம்தம்  வீடுகளை விட்டு வெளியில்வர முடியவில்லை. இவ்விடத்தில அநேக  படகுகள் சென்று சுமார் 9000 ஜனங்கள் வரைக்கும் மேல் ஜன்னல்கள்  வழியாக இறங்கச் செய்து தப்பித்துவிட்டனர். மற்றவர்கள் அங்கிருக்கும்  ஸொத்துக்களை காக்கும்பொருட்டு வெளியில்செல்ல  ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் தாங்கள்  அங்கே இருப்பதாக பிடிவாதம் செய்கிறார்கள். இதற்கு தகுந்தாற்போல் இந்த  ஆபத்துக் காலத்தில் அபாஷ் என்னும் திருடர்கள் இருட்டில் படகு  போட்டுக்கொண்டுபோய் காலி வீடுகளையும் கொஞ்சம் பேர்களிருக்கும்  வீடுகளையும் கொள்ளையடிக்கிறார்கள். இந்த கொள்ளைக்காரர்களைப்  பிடித்து நியாயஸ்தலத்தில் விசாரணைக்கு கொண்டுவருவது இப்பொழுது  அசாத்தியமாகையால் அவர்களை உடனே  தண்டிக்க பின்வரும்  விளம்பரத்தை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள்.
அனுதாபமே காட்டக்கூடாது. ஆல்போர்வீலிலும் அதை சுற்றியிருக்கும்  வீடுகளிலும் ராணுவச் சேவகர்கள் காபந்த செய்து வருகிறார்கள்.  அவர்களுக்கு கொடுத்திருக்கும் கண்டிப்பான உத்தரவானது  "கொள்ளையடிக்கும் 'அபாஷ்'களை உடனே சுட்டுவிட வேண்டியது".
இவளவு கண்டிப்பான உத்தவவில்லாவிட்டால் அச்சமயத்தில் பந்தோபஸ்து  செய்வது கஷ்டம். ஷான்ஸ் எலிசே என்னுமிடத்தில் சிறிது தண்ணீர்  ஏறிக்கொண்டு வருகின்றது. அங்கிருக்கும் ஐனங்கள் மண்ணினாலும்,   சிமெண்ட் சுண்ணாம்புகளினாலும் சுவர் போட்டு தண்ணீரை தடுத்துக்கொண்டு வருகிறார்கள் லூவர் என்னும் அரண்மனைக்கு ஒரு ஆபத்தும்  நேரிடாவண்ணம் பாதுகாக்கப்படுகின்றது.
பாரிஸ் நகரத்தார் இந்த பெருத்த ஆபத்தில்கூட தங்கள் சுபாவ குணமாகிய  காட்சி காணும் விருப்பத்தை கைவிடவில்லை. கூட்டம் கூட்டமாய் இவர்கள்  எவ்விடத்தில் அதிக வேகமாய் அறுத்துக் கொண்டு ஓடுகின்றதோ அங்கு  சென்று வேடிக்கை பார்க்கிறார்கள். அநேக பாலங்களில் தண்ணீர் நிறைந்து  ஓடுவதைக் கண்டு "இதற்கு மேல் தண்ணீர் வந்தால் அது என்ன செய்யும்"  என்று ஒருவரை ஒருவர் பார்த்து நகைத்துக் கொள்கிறார்கள். இந்த  வெள்ளத்தால் தங்களுக்குண்டான விபத்தை சிறிதேனும் கருதாது இந்தப்  பெருவெள்ளத்தின் மகத்துவத்தைக் கண்டு களிக்கிறார்கள். இவர்களுக்கு இந்த வெள்ளம் ஊரிலிருக்கும் செடிகளை அழிப்பது மிக வருத்தமாயிருக்கின்றது.  இந்த பாரிஸ் நகரத்தார் எப்பொழுதும் தங்கள் புன்சிரிப்பை  விட்டுவிடுகிறதில்லை. தெருக்களில் படகுகள் போகும் பொழுது பார்த்து  சிரித்த முகத்துடன் இந்தக் காட்சியைக் காண வெனிஸ் நகரம்  போகவேண்டுமென்றிருந்தோம் அது இங்கேயே வந்துவி்ட்டபடியால் நாம் இனி அங்கு போக வேண்டியதில்லை என்கிறார்கள்.
வெள்ளத் தண்ணீர் ஊரெல்லாம் பரவி குடிக்கும் நீரை கெடுத்து விட்டபடியால் ஐனங்களெல்லோரும் தண்ணீரை காய வைத்து குடிக்க வேண்டுமென்றும்  கறிகாய்களை நன்றாக வேகவைத்து சாப்பிடும்படியும் அதிகாரிகள்  விளம்பரம் செய்திருக்கிறார்கள். நீர் வடிந்த உடனே வீட்டுக்கு போவதாய்  இருந்தால் அங்கு அடைந்திருக்கும் சேறை நன்றாக வாரிவிட்டு பிறகு  சுண்ணாம்பு பூசி வாசம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.
ஐனங்களுக்கு இப்பொழுது நேர்ந்திருக்கும் விபத்தில் உதவிபுரியும் பொருட்டு  அநேக கனவான்கள் நன்கொடை செய்திருக்கிறார்கள்.
பத்திராதிபர்கள் மூலமாக நன்கொடை ஜனவரி 28 வரைக்கும்  சோத்தனுப்பியது 1036302 பிராங்குகள். நன்கொடை செய்ய வேண்டியவர்கள்  பின்வரும் விலாசத்திற்கு அனுப்பலாம்.
Le Syndicat
37, Rue Chateaudun
Paris.
விஜயா, 14 பிப்ரவரி 1910
 

மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Jul 2024 22:38
TamilNet
HASH(0x56056ac6acf0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Jul 2024 22:54


புதினம்
Fri, 19 Jul 2024 22:54
     இதுவரை:  25382534 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2327 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com