அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 10 February 2025

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow அத்தியாயம் - 42-43-44
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அத்தியாயம் - 42-43-44   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 06 November 2005

42.

காய்ந்துபோன தன் வளவுக்குள், மனதிலும் வரட்சி நிறைய, பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்தார் மலையர். வேளாண்மையில் ஒரு சதமேனும் மிஞ்சவில்லை. எருதுகளையும், வண்டிலையும், எஞ்சியிருந்த மாடுகன்றையும் விற்றுப் பணமாக்கியபோதும், மலையாக வளர்ந்திருந்த கடனில் ஓரு பகுதியைத்தானும் அவரால் தீர்க்க முடியவில்லை.

போதாதற்கு அவர் கேள்விப்பட்ட அந்தச் செய்தி! அவருடைய பழைய உழவுயந்திரத்தின் பெயரிங் உடைந்துவிட்டது. ஒரு வாரத்துக்குமுன் வீட்டிலிருந்த கொஞ்ச நஞ்சப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மெசினைப் பழுதுபார்க்கச் சென்றிருந்த மணியன் திரும்பவில்லை. தண்ணிமுறிப்புக்கு வந்த நெடுங்கேணிவாசி ஒருவரிடம் விசாரித்தபோது, மணியன் மிசினை யாருக்கோ விற்றுவிட்டுப் பணத்துடன் எங்கோ ஓடிவிட்டானாம்! என்று கிடைத்த செய்தி அவருடைய மனதைப் பேரிடியாகத் தாக்கியிருந்தது.

மணியன் உழவுயந்திரத்தை விற்றுவிட்டுப் பணத்துடன் ஓடிவிட்டான் என்ற செய்தியைக் கேட்டபின் மலையர் யாருடனும் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். பித்துப் பிடித்தவர்போல் குளக்கட்டைப் பார்த்தவாறே சதா உட்கார்ந்திருப்பார். அவருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்று பாலியாருக்குத் புரியவில்லை. அவளுக்கு இந்தக் கடன்காரியங்கள், மிசின் விஷயங்கள் ஒன்றுமே விளங்குவதில்லை. வீட்டு வேலைகளைச் செய்வாள். அந்த வேலைகள் இல்லாத சமயங்களில் கதிராமனை நினைத்துக்கொண்டு கண்ணீர் விடுவாள். இவற்றைத் தவிர அவள் எதுவுமே செய்வதில்லை. நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.

சிந்தனையில் ஆழ்ந்தபடி முற்றத்திலிருந்த மலையர், தன் வளவுக்கு முன்னால் ஒரு ஜீப் வந்துநின்ற சத்தத்தைக் கேட்டு, கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தார். ஜீப்பில் வந்து இறங்கியவர்கள் அவருடைய வயலைக் காட்டி எதுவோ பேசிக்கொள்வது கேட்டது. என்ன விஷயமென்று தெரிந்து கொள்வதற்காக மலையர் எழுந்து தனது வளவுப் படலையடிக்குச் சென்றார். அவர் வருவதைக் கண்டதும், ஜீப்பில் வந்திருந்த ஒரு பெரிய மனிதர், மலையரை நோக்கி வந்தார்.

தன்னை நோக்கி வருபவரை யாரெனக் கண்டுகொண்டார் மலையர். முல்லைத்தீவுச் செந்திப்போல் சம்மாட்டியாரை அந்தப் பகுதியிலேயே தெரியாதவர்கள் இருக்கமுடியாது. முல்லைத்தீவுக் கடற்கரையிலேயே அதி செல்வந்தர் அவர்தான். அவரிடம் பல கரைவலைகளும், வள்ளங்களும், வாகனங்களும் இருந்தன. சம்மாட்டியார் ஏன் இஞ்சை வந்தவர்? என்று மலையர் யோசித்தபோது, 'நீங்கள்தானே கோணாமலையர்?" என்று கேட்டார் சம்மாட்டியார். 'ஓ! என்ன சங்கதி?" என்று வினவிய மலையரைப் பார்த்து, தான் கூறவந்ததைக் கூறச் சற்றுத் தயங்கினர் சம்மாட்டியார். அவரின் தயக்கம் மலையருக்குப் புரியவில்லை. 'என்ன சம்மாட்டியார் யோசிக்கிறியள்? சொல்லுங்கோவன்!" என்று மலையர் தூண்டியதும், 'உங்கடை வயல் காணியை நான்தான் சின்னத்தம்பியரிட்டை இருந்து இப்ப வாங்கியிருக்கிறன். அதுதான் உங்களிட்டைச் சொல்லிப்போட்டு இந்தமுறை விதைப்பம்" என்று கூறிய சம்மாட்டியார், மலையரின் முகம் அடைந்த மாற்றத்தைக் கண்டு பயந்துபோனார். காட்டு வயிரவன்போல் கறுத்து நெடுத்திருந்த மலையரின் விழிகள் கோவைப்பழமாகச் சிவந்துவிட்டன. 'நான் வெட்டின காடு, நான் திருத்தின பூமி! ஆருக்கிடா துணிவிருக்கு இண்டைக்கு என்ரை காணிக்கை இறங்க?" என்ற ஆவேசமான வார்த்தைகள் மலையரின் குமுறும் நெஞ்சினுள் பிறந்து தொண்டைவரைக்கும் வந்துவிட்டபோது, சம்ட்டியால் சட்டென்று தலையிலடித்தது போன்று மலையருக்குத் தன் நிலைமை விளங்கியது. வாய்மட்டும் வந்த அந்தச் சொற்கள் வெளியே வரவில்லை. அவை நெஞ்சிலிருந்து புறப்பட்ட வேகத்துடனேயே மீண்டும் திரும்பி நெஞ்சுக்குள் அமுங்கிக் கொண்டன. நெஞ்சைக் கையால் அழுத்திப் பிடித்தபடியே திகைத்துப்போய் நின்றுவிட்டார் மலையர்.

சின்த்தம்பியர் மிகவும் கண்டிப்பான பேர்வழி. ஆனால் தனக்கும் இப்படிச் சின்னத்தம்பியர் செய்வாரென்று மலையர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஒருதடவை முல்லைத்தீவுக்குச் சென்று அவருடன் பேசி, அடுத்த வருடத்திலாவது கடனைத் திருப்பிவிடுகிறேன் என்று தவணை கேட்டுவர வேண்டுமென்று எண்ணியிருந்த மலையருக்கு, சின்னத்தம்பியா வயலை விற்றுவிட்டார் என்ற செய்தி இதயத்தில் பேரிடியாக விழுந்தது. நாணலைப் போன்று வளைந்து கொடுக்காமல், கருங்காலி மரத்தைப்போல் உறுதியாக நிமிர்ந்து நின்றே இதுவரை வாழ்ந்திருந்த மலையர், இன்றும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முயற்சித்தபோது, அவரால் அது முடியவேயில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மனதில் பல அடிகள் விழுந்து அவரைப் பலவீனப்படுத்தி இருந்தன. இறுதியாக விழுந்த இந்த அடியையும் தாங்கிக் கொள்ள முயல்கையில் அவர் படீரென முறிந்துபோனார்.

படலையைப் பிடித்துக்கொண்டு திகைத்துப் போய்நின்ற மலையருடைய முகத்தில் முதலில் தோன்றிய சினத்தையும், பின் அது பொக்கென்று அடங்கி வேதனையாக மாறியதையும் கவனித்த செந்திப்போல் சம்மாட்டியாருக்கு மலையரைப் பார்க்கையில் மிகவும் பரிதாபமாக இருந்தது. 'நான் என்னத்தை மலையர் செய்யிறது..." என்று  அவர் ஆறுதல்கூற முற்பட்டபோதுகூட, மலையர் அதைக் கவனிக்கவில்லை. 'உங்களிட்டை எதுக்கும் ஒருகதை சொல்லிப்போட்டுச் செய்வம்..." என்று மீண்டும் சம்மாட்டியார் கூறியபோதுதான் மலையர், 'அதுசரி சம்மாட்டியார்... எல்லாம் என்ரை விதி!" என்று மெல்லக் கூறிவிட்டுத் திரும்பிப்போய் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டார். சற்றுநேரம் படலையடியில் நின்ற செந்திப்போல் சம்மாட்டியார் திரும்பிச் சென்று தன் ஜீப்பில் ஏறிக்கொண்டார். செம்மண் படலத்தைக் கிளப்பிக்கொண்டே ஜீப் விரைந்து சென்று மறைந்தது.


43.

புரட்டாதி முடியச் சில நாட்களே இருந்தன. இன்னும் மழையின் அறிகுறி இல்லை. இதுவரை தொடர்ந்து வீசிய சோளகம் அன்று வீழ்ந்திருந்தது. வெப்பத்தில் வேகும் அந்தப் பிரதேசமெங்கும் ஒரே அந்தகாரம்.

கொடிய வெம்மையும் அந்தகாரமும் தன் உள்ளத்தில் மட்டுமன்று உடலிலும் ஏற்படுவதை அன்று பகல் முழுவதும் உணர்ந்தாள் பதஞ்சலி. அன்று மாலை குசினிக்குள் எதுவோ எடுப்பதற்குச் சென்றவள், திடீரென அடிவயிற்றில் ஏற்பட்ட வலியில் துடித்துப்போனாள். வயிற்றில் வளர்ந்த தீ கொழுந்துவிட்டு எரியும் சமயம் வந்துவிட்டது. தான் விரும்பியது போலவே அந்தக் களங்கக் கனல் பிறந்து வெளிவருகையிலேயே தன்னையும் சுட்டெரித்து அழிக்கத்தான் போகின்றது. அத்துடன் தான் இதுவரை அனுபவித்த கொடிய வேதனையெல்லாம் அடங்கிப்போகும் என்று எண்ணியவளாய்ப் பதஞ்சலி குடிசைக்குள் போய்ப் படுத்துக்கோண்டாள்.

ஏதோ அலுவலாக வெளியே சென்றிருந்த கதிராமன் திரும்பி வந்தபோது வெளியே பதஞ்சலியைக் காணாதவனாகக் குடிசைக்குள் நுழைந்தபோது, அங்கு அவள் ஒரு பாயில் கிடந்து துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

'என்ன பதஞ்சலி?" என்று அவன் விரைந்து, அவளருகே சென்று அமர்ந்தான். அவள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு, வேதனையில் சுருண்டாள். விஷயத்தைப் புரிந்துகொண்ட அவன், 'ஒண்டுக்கும் பயப்பிடாதையம்மா!... எல்லாம் சுகமாய் நடக்கும், நான் ஓடிப்போய் ஒரு பொம்பிளையைக் கூட்டிக்கொண்ட வாறன்!" என்று கூறி, அவளுடைய கரங்களை ஆதரவாக வருடினான். அவனுடைய விழிகளிலே வழிந்த பாசத்தைக் கண்டு மனங்கசிந்து அழுதாள் பதஞ்சலி. அவனுடைய கரங்களை இறுகப் பற்றியவண்ணமே, 'நீங்கள் என்னை விட்டிட்டு ஒரிடமும் போகவேண்டாம்! இஞ்சை இதிலை என்னோடையே இருங்கோ!" என்று அழுது கெஞ்சும்போது அவள், மறுபடியும் அலையாக உடலில் பரவிய வலியில் துடிதுடித்துப் போனாள். நிச்சயமாக பிரசவத்தின்போது நான் இறந்துவிடப் போகின்றேன். இந்த உலகைப் பிரியும் இந்த வேளையிலும் கதிராமனுடைய கரங்களைப் பிடித்துக்கொண்டே உயிரை விடவேண்டும்!  என்று ஆபை;பட்டாள் அந்தப் பேதை! மேலும், உதவிக்குப் பெண்கள் யாராவது வந்தால், போகவிருக்கும் என்னுயிரை அவர்கள் தடுத்து நிறுத்திவிடுவார்கள், நான் மேலும் உயிருடன் இருந்து மனங்குமைந்து வேதனைப்பட வேண்டும்! அந்த நிலை எனக்கு வேண்டவே வேண்டாம்! அவருடைய அன்புக் கரங்களின் அணைப்பிலேயே என்னுயிர் பிரியவேண்டும் என்ற தவிப்பில் அவள் மேலும் தீவிரமாகக் கதிராமனுடைய கைகளை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

அவளுக்கு மறுபடியும் வலி ஏற்பட்டபொழுது, வெளியே இருள் நன்றாகக் கப்பிக்கொண்டது. வேதைனை மயக்கத்தில் ஆழ்ந்திருந்த பதஞ்சலியின் பிடியை மிகவும் பிரயத்தனப்பட்டு விலக்கிக்கொண்ட கதிராமன், எழுந்து அரிக்கன் லாம்பைக் குடிசையினுள் ஏற்றி வைத்துவிட்டு, யாராவது ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று எண்ணியவாறு குடிசைப் படலையை மெல்லத் திறந்தான். பக்கத்துக் காடுகளைத் தழுவிவந்த ஒரு குளிர்காற்று அவனுடைய உடலை வருடிச் சென்றது. கதிராமன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். மேற்கே பரந்து கிடந்த காடுகளின்மேல் கருமேகக் கூட்டங்கள்! மயிலைப்போன்று அவன் உள்ளம் சட்டென மகிழ்ந்தது. மறுகணம், 'ஐயோ! என்ரை ஆச்சி!" என்ற பதஞ்சலியின் வேதனை தோய்ந்த ஓலம், அவன் நெஞ்சிலே முள்ளாகத் தைத்தது. பாய்ந்து உள்ளே சென்றவனுடைய கைகளை ஆவேசமாக இழுத்துப் பற்றிக்கொண்ட பதஞ்சலி, 'ஐயனாணை என்னை விட்டிட்டுப் போகாதையுங்கோ!" என்று வலியில் புழுவாக நெளிந்துகொண்டே கெஞ்சினாள். அவளுடைய உடலில் சட்டென எழுந்து, பின் மெல்ல அடங்கிக் கொண்டே போகும் வலிகளிடையே இருந்த அவகாசம் வரவரக் குறைந்துகொண்டே வந்தது.

வெளியே வானத்தில் சூல்கொண்ட மேகங்கள் வேதனையால் முழங்கிக் கொண்டிருந்தன. சில்லென்ற சீதளக்காற்று அந்தப் பிரதேசமெங்கும் வீசியது!

மால் திண்ணையில் படுத்திருந்த மலையர், தன் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டே, 'மனுசி! இஞ்சை ஓடிவா! எனக்கு நெஞ்சுக்கை ஏதோ செய்யுது!" என்று வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். அவரது குரல் கேட்டுப் பதறிப்போய் ஓடிவந்த பாலியாருக்குத் தேகமெல்லாம் உதறியது. 'ஆதி ஐயனே!" என்று புலம்பியவாறே மலையரிடம் ஓடிச்சென்றவள், அவரை மெல்லத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, 'என்ன? உங்களுக்கு என்ன செய்யுது?" என்று கலங்கியபோது, 'நெஞ்சுக்கை.. நெஞ்சுக்கை.." என்று திக்கித்திணறிய மலையர் மூச்செடுக்க முடியாமல் தவித்தார். அவருடைய நெஞ்சைப் பிடித்து நீவிவிட்ட பாலியாரியின் கரங்கள் நடுங்கின. குப்பென்று வீசிய குளிர்காற்றில் அவளுடைய மெலிந்த உடல் சிலிர்த்தது. கடைக்குட்டி ராசு, 'அப்புவுக்கு என்னணை?" என்று பயந்துபோய்க் கேட்டவனாய் அழத் தொடங்கிவிட்டான்.

மேற்கே எழுந்த கருமேகங்கள் தண்ணிமுறிப்பை மூடிவிடுவதுபோல் வானமெங்கும் கவிந்து கொண்டிருந்தன. மந்திகள் கிளைகளின்மேல் பாய்ந்து தனுப்போடும் ஒலியும், தொலைவில் எங்கோ ஒரு மயில் அகவும் ஓசையும், முழக்கத்தின் மத்தியில் கேட்டன.

கதிராமன் குடிசையினுள் பதஞ்சலியின் அருகே இருந்தவாறு தன்னால் ஆனவற்றைச் செய்துகொண்டிருந்தான். இளமையிலிருந்தே எருமைக்கும், பசுவுக்கும் மருத்துவம் பார்த்து, எத்தனையோ இளங்கன்றுகளை சுகமாகப் பிரசவிக்கச் செய்தவன், இன்று பதஞ்சலிக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு சிறந்த மருத்துவிச்சிக்கே உரிய அமைதியும், திறமையுங் கொண்ட அவன், கலங்காமல் அவளை நிதானமாகக் கவனித்துக்கொண்டான்.

வேதனையின் உச்சக் கட்டத்தில் இதழ்களை இறுகக் கடித்துக்கொண்டு பதஞ்சலி மௌனமாக வலியைத் தாங்கிக் கொண்டிருந்தாள். இதோ! அடுத்த நிமிடத்திலேயே தன்னுயிர் போய்விடப் போகின்றது.. அதற்குமுன் எங்கே ஒருதடவை.. .. தன்னை முரலிக்காட்டுக்கு அழைத்துச் சென்றவனை.. .. ஆசையோடு அன்றொருநாள் தேன் எடுத்துத் தந்தவனை.. .. இருள்பரவும் வேளையிலே, கற்பூரத் தீபத்தின் ஒளியில், தன் கழுத்தைத் தொட்டுத் தாலி கட்டியவனை.. .. ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை.. பார்த்துவிட்டாற் போதும்! அந்த அன்பு முகத்தையும், பாசந்ததும்பும் விழிகளையும் ஆசைதீரப் பார்த்துவிட்டாற் போதும் என்று விழிகளைத் திறந்தவள், 'அம்மா!" என்று வீரிட்டுக் கத்தினாள்.

கருக்கொண்ட மேகங்கள் பிரசவித்த மழைத்துளிகள் குடிசைக் கூரையின்மேல் ஒன்றிரண்டாக விழுந்தன. சிறிது நேரத்திற்குள்ளாகவே பேரிரைச்சலுடன் பெருமழை சோனாவாரியாகப் பெய்தது. இத்தனை காலமும் வறண்டு, புழுதி பறக்கக் கிடந்த நிலம், ஆவலுடன் மழைநீரை உறிஞ்சியது. மண் மணத்தது. புதுவெள்ளம் பாய்ந்துது.

புதுமழை பூமியன்மேல் விழும் அந்த வேளையில் ஒரு புதுக்குரல், பெருமழையின் இரைச்சலையும் மீறிக்கொண்டு உயிர்த்துடிப்புடன் கூவியது. பச்சை இரத்தம் மணக்கும் அந்தக் குடிசை மண்ணில் ஒரு புத்தம் புதிய முகம்! உயிரொன்று இன்னொன்றைப் பிறப்பித்த வேதனையில் ஓய்ந்துபோய்க் கிடந்தது. மகனைக் கண்ட கதிராமனின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.

இங்கே தந்தையாகிவிட்டேன் என்று கதிராமன் மனம் பூரிக்கும் அதே வேளையில், அங்கே அவன் தாய் பாலியார் விதவையாகி விட்டேனே என நெஞ்சு வெடிக்கக் கோணாமலையரின் சடலத்தின்மேல் விழுந்து, கோவென்று கதறிக் கொண்டிருந்தாள். இவற்றையெல்லாம் அடக்கிக்கொண்டு, சோவென்ற இரைச்சலுடன் மழை கொட்டிக் கொண்டிருந்தது.

இரவுமுழுவதும் பெய்த மழை விடியற்காலை ஓய்ந்தபோது, மழையில் ஆசைதீர முழுகிய தண்ணிமுறிப்புக் காடுகள் சூரியோதயத்தில் சிலிர்த்துக் கொண்டன.

குடிசைக்குள் பகலவனின் மங்கலான ஒளி பரவும் அந்த வைகறைப் பொழுதில், இதுவரை மயக்கத்தில் ஆழந்துpருந்த பதஞ்சலியின் விழிகள் மெல்லத் திறந்தன. கடந்த பல மாதங்களாக அங்கு நிலவிய வெம்மை, அந்தகாரம் யாவுமே மறைந்து, தண்ணென்ற காலைத் தென்றல் அந்தச் சின்னக் குடிசைக்குள் புகுந்து பரவியது. சுய நினைவுக்குத் திரும்பிய பதஞ்சலி வெம்பி வெம்பியழுதாள். தான் எதிர்பார்த்திருந்த அந்த விடுதலை, நிச்சயமாகக் கிடைத்துவிடுமென்று காத்திருந்த அந்த நிரந்தரத் தூக்கம், தன் கறைகளையெல்லாம் சுட்டெரித்துவிடும் என்று நம்பியிருந்த சாவு.. .. தனக்குக் கிடைக்கவில்லையே என்று அவள் அழுதாள். தனக்குப் பிறந்த அந்தக் குழந்தையைக்கூடப் பார்க்க விரும்பாது அழுதுகொண்டிருந்தாள்.

வெளியே ஏதோ வேலையாக இருந்த கதிராமன் அவளுடைய விம்மல் ஒலியைக் கேட்டுக் குடிசைக்குள் நுழைந்தான். அவனுடைய மகிழ்ச்சி கொப்பளிக்கும் விழிகளைச் சந்திக்க முடியாமல், பதஞ்சலி கண்ணீர் பெருகும் தன் விழிகளை மூடிக்கொண்டாள். நெருப்பை விழுங்கி வளர்த்து, இன்று அதனைக் கக்கிவிட்டு இன்னமும் செத்துப் போகாமலிருக்கும் தன் விதியை நினைத்து நெஞ்சு கொதித்தவளாய்ப் பதஞ்சலி தேம்பிக்கொண்டிருந்த வேளையில், அவள் கதருகே அந்தக் குரல் கேட்டது. தாயின் பாசத்தோடும், தந்தையின் பரிவோடும் அழைக்கும் ஆதரவு ததும்பும் குரல்.., 'பதஞ்சலி! பதஞ்சலி! இஞ்சை கண்ணைத் துறந்து பாரன் உன்ரை மோனை!" அக் குரலின் கனிவு அவளுடைய இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. மூடியிருந்த இமைகளின் கீழாகக் கண்ணீர் பெருக்கெடுத்தது. 'ஓம், என்ரை மோன்தான்.. ஐயோ! உங்கடை சொத்தைப் பெத்துத் தரவேண்டிய நான், எரியிற கொள்ளியை அல்லோ உங்கடை நெஞ்சிலை செருகியிருக்கிறன்!" என்று மனதிற்குள் ஓலமிட்டுக்கொண்டு மௌனமாக அழுதாள். 'பதஞ்சலி பேந்தும் ஏனம்மா மான்போலை கதறுறாய்? கண்ணைத் துறந்து பாரன் இவன்ரை வடிவை!" என்று கதிராமன் ஆசையோடு அவளை அழைத்தபோது, 'பழியைச் செய்தனான்.. அதை உத்தரிக்கவும் வேணுந்தானே!" என்று வேதனைப்பட்டவளாய், தன் விழிகளைத் திறந்தாள்.

அங்கே.. கன்னங்கரேலென்று .. தலைகொள்ளாமல் காடாயக் கிடக்கும் சுருண்ட கூந்தலோடு.. கதிராமனை உரித்துக் கொண்டல்லவா அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது! பதஞ்சலி திரையாக மூடிய கண்ணீரை இரண்டு கைகளினாலும் அவசரமாக வழித்தெறிந்துவிட்டு, மீண்டும் குழந்தையைப் பார்த்தபோது, அமைதியாகத் துயிலும் அந்தச் சின்னக் கதிராமனின் முகத்தில் அமைதியான புன்னகை! ஆமாம்! சின்னக் கதிராமனேதான்! கதிராமனைப் போலவே கரியமேனி.. சுருண்ட மயிர்!..

உடல் நோவையும் பொருட்படுத்தாது வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்த பதஞ்சலி, வெறிகொண்டவளாகக் குழந்தையைப் பறித்தெடுத்துத் தன் முகத்தோடும் மார்போடும் அணைத்தவளாய் முத்தமாரி பொழிந்தாள். ஆறாய்ப் பெருகிய ஆனந்தக் கண்ணீரில் நனைந்த சின்னக் கதிராமன் தூக்கம் கலைந்து வீரிட்டு அழுதான்.

அந்தக் குரலைத் தொடர்ந்து இன்னுமோர் அழுகுரல் கதிராமனின் குடிசை முற்றத்தில் கேட்கவும், அவன் திகைத்துப்போய் வெளியே வந்தான். அங்கு விம்மி வெடித்தவனாய் ராசு நின்றுகொண்டிருந்தான். வெளியே வந்த தமையனைக் கண்டதுமே, 'அப்பு செத்துப் போனார் மூத்தண்ணை!" என்று கூவியழுது கதிராமனுடைய காலடியில் வீழ்ந்தான். அவனை அள்ளியெடுத்துத் தன்னுடன் அணைத்துக்கொண்ட கதிராமன், ஒரு கணம் தகப்பன் இறந்துபோன செய்தி கேட்டு அதிர்ந்து போனான். குடிசையின் உள்ளே உணர்ச்சிக் கடலாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த பதஞ்சலியின் காதில் மாமனார் இறந்த செய்தி விழுந்ததும் அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். சற்று நேரத்துக்குள் தன்னைச் சமாளித்துக்கொண்ட கதிராமன், 'பதஞ்சலி! இருந்துகொள்.. நான் வீட்டைபோட்டு வாறன்!" என்று கூறிவிட்டு, ராசுவையும் அழைத்துக்கொண்டு தாயினிடத்திற்கு ஓடினான்.

 
44.

மலையர் மறைந்து ஒரு மாதம் கழிந்துவிட்டது. முப்பத்தோராம்நாள் சடங்குகளுக்காக, இதுவரை கதிராமன் குடிசையில் வாழ்ந்த பாலியாரும், ராசுவும், கதிராமன் பதஞ்சலி சகிதம் மீண்டும் தங்கள் வளவுக்கு வந்திருந்தனர்.

மீண்டும் பசுமையுடன் விளங்கிய மலையர் வளவு முற்றத்தில் பேரனை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் பாலியார். அவளுடைய மனதில் பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்து விழிகளைக் கலங்க வைத்தன. அந்தக் குழந்தையின் கரிய நிறத்திலும், சுடர்விடும் கண்களிலும் தன் அருமைக் கணவரை அவள் கண்டாள். அவளுடைய நெஞ்சு தகித்துக் கனிந்தது.. குழந்தை சிரிக்கிறான்.. இல்லை.. மலையரே அவளைப் பார்த்துச் சிரிக்கிறார்.. 'நான்தான் விசர்த்தனமாய் கதிராமனை அண்டாமல் ஒதுக்கி வைச்சிட்டன்.. நான் எண்டைக்கு எனக்கிருந்த மாடுகணடு, நெல்லுப்புல்லுக் காணாதெண்டு மிசினுக்கும், மெம்பர் வேலைக்கும் ஆசைப்பட்டனோ.. அண்டைக்குப் புடிச்சுpட்டுது எங்களைச் சனியன்!.. உன்னை விட்டிட்டு நான் ஒரிடமும் போகமாட்டன்!.. நான் சாகேல்லை.. நான்தான் உன்ரை மடியிலை இப்ப படுத்திருக்கிறன்!". பாலியார் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டவாறே பேரனைத் தன் முகத்தோடு சேர்த்துக் கொஞ்சினாள்.

வேள்வித் தீயில் வெந்து, புடமிடப்பட்ட தங்கத்தைப் போன்று ஜொலிக்கும் அழகுடன், பதஞ்சலி குடத்தடியில் அமர்ந்து மலையர் வீட்டுக் குத்துவிளக்கை மினுக்கிக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு காலமும் எரிமலையாய்க் குமுறிக் கொந்தளித்த அவளுடைய உள்ளம் பிரசவத்தன்று வெடித்து, இதுவரை உள்ளேயிருந்து உறுத்திய குப்பைகளையெல்லாம் வெளியே தள்ளிவிட்டிருந்தது. வெகுகாலமாகச் சீழ்ப்பிடித்துக் கொதித்துக் கொண்டிருந்த கட்டுப்புண் ஒன்று, தானே உடைந்து, உள்ளேயிருந்த அழுக்கையெல்லாம் வெளியேற்றிய பின் ஏற்படும் ஒரு இதமான சுகம் அவளுக்கு இப்போ சொந்தமாகவிருந்தது. பிரசவப் படுக்கையால் எழுந்தவுடன் அவள் செய்த முதற்காரியம், தனக்கு உலகரீதியான நாகரீகம், பண்பாடு என்ற பலவற்றைக் கூறிப் பலவீனமடையச் செய்த கதைப் புத்தகங்களை அடுப்பில் போட்டுக் கொளுத்தியதுதான்! அவை கொழுந்து விட்டெரிந்து சாம்பராவதற்கு முன்பே, அவள் அவற்றையும், அவை தனக்குக் காட்டிய புதிய உலகத்தையும், அதன் புதிய வாசல்களையும் அறவே மறந்து போனாள்.

தேங்காயப் பொச்சை வைத்துக்கொண்டு, பழப்புளியும் மண்ணும் சேர்த்து உரஞ்சித் தேய்கையில், செழிம்பு பிடித்துக்கிடந்த அந்தக் குத்துவிளக்கிலுள்ள அழுக்கெல்லாம் இருந்த சுவடுகூடத் தெரியாமல் அகன்றுவிடுகின்றன. தெளிந்த நீரில் அலம்பப்பட்ட அந்தக் குத்துவிளக்கு காலை வெய்யிலில் பளீரென்று ஒளி வீசுகின்றது. அதை எடுத்துச் சென்று நெய்யிட்டுத் திரியிட்டு மலையர் வீட்டு மாலுக்குள் வைத்து ஒளியேற்றிக் கொண்டிருந்த  பதஞ்சலியைப் பார்க்கையில், பாலியார் மனதிற்குள் பலவகை உணர்வுகள் குப்பென்று கிளம்பிக் கண்ணில் நீரை நிறைக்கின்றன.

விளக்கை ஏற்றிவிட்டுக் கிணற்றடிப் பக்கம் சென்ற பதஞ்சலி, ஒரு தடவை எதிரே தெரிந்த குளக்கட்டையும், அதை வளைத்துக் கிடக்கும் இருண்ட காடுகளையும் பார்க்கின்றாள். வரண்டுபோய்க் கிடந்த குளத்தில் புதுவெள்ளம் அலைமோதுகின்றது. பட்டுப்போய்விடும் என்ற நிலையிலிருந்த மரஞ்செடிகளெல்லாம் மீண்டும் பசுமையைப் போhத்தவாறு சிரிக்கின்றன.

.. மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன.. மீண்டும் தளிர்ப்பதற்காக!.. மான்மரைகள் கொம்புகளை விழுத்துகின்றன.. மறுபடியும் முளைப்பதற்கு!.. பறவைகள் இறகை உதிர்க்கின்றன.. மீண்டும் புதிய இறகுகள் பெறுவதற்கு!..

அவளுடைய பார்வை தொலைவிலிருந்து மீண்டபோது, தனக்கு வெகு அருகில் வேலிக் கட்டைகளின்மீது அமர்ந்திருந்த இரண்டு நிலக்கிளிகள்மேல் சென்று நிலைத்தது. இளங்காலைப் பொழுதில் மரகதப் பசுமை நிறமான அவற்றின் உடல்கள் அழகாகப் பளபளத்தன. வாலிறகை அடிக்கடி ஆட்டியவாறே ஜீவத்துடிப்புடன் இருந்த அவற்றை அவள் 'சூய்!" என்று கூவி, கைகொட்டிக் கலைத்தபோது அவை உல்லாசமாகப் பறந்தன!

அவள் குதித்துக்கோண்டே வீட்டை நோக்கிக் குதூகலத்தடன் ஓடியபோது, 'என்ன பதஞ்சலி! பச்சை உடம்போடை பாய்ஞ்சு திரியிறாய்!" என்று பாசத்துடன் கடிந்துகொண்டார் பாலியார். தோட்டத்தில் வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த கதிராமன், பாலியார் கூறியதைக் கேட்டு மெல்லச் சிரித்துக்கொண்டான்.

நிலக்கிளிகள் நிலத்தில் வாழ்பவைதான்! உயரே பறக்க விரும்பாதவைதான்! இலகுவில் பிறரிடம் அகப்பட்டுக் கொள்பவைதான்! ஆனால் அவை எளிமையானவை! அழகானவை! தம் சின்ன, சொந்த, வாழ்க்கை வட்டத்தினுள்ளே உல்லாசமாகச் சிறகடிக்கும் அவற்றின் வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையானது!


முற்றும்


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 10 Feb 2025 14:03
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Mon, 10 Feb 2025 14:06


புதினம்
Mon, 10 Feb 2025 14:26
















     இதுவரை:  26558810 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6333 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com