Monday, 19 September 2005
35.
வார இறுதியில் சனிஞாயிறு விடுமுறைக்கு வழக்கமாகத் தன் வீட்டுக்குச் செல்லும் சுந்தரலிங்கம், இம்முறை போகவில்லை. அன்று காலையில் கதிராமனுடன் கூடிக்கொண்டு காட்டுக்கு வேட்டைக்குச் சென்று, மாலையில் வீடு திரும்பும் வேளையில் மழைபிடித்துக் கொள்ளவே இருவரும் தெப்பமாக நனைந்துவிட்டனர். கிராமத்தை நெருங்கியதும், 'நீ வீட்டை போ, நான் சாறத்தை மாத்திக்கொண்டு வாறன்" என்று கதிராமனை அனுப்பிவிட்டுத் தன் இருப்பிடத்திற்குச் சென்ற சுந்தரத்திற்குத் தேகம் ஒரே அலுப்பாகவிருந்தது.
பகல் முழுவதும் வெய்யிலிலும் மழையிலும் அலைக்கழிந்த அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான். அன்றிரவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தவன், அடுத்தநாள் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியவில்லை. பேசாமற் படுத்திருந்த அவனைத் தேடிவந்த கதிராமன், அவனுடைய உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டுத் திகைத்துப் போனான். அனலாகக் கொதித்தது சுந்தரத்தினுடைய உடம்பு. 'இஞ்சை தனியக் கிடந்து என்ன செய்யப் போறியள்?... வாருங்;;;;கோ வீட்டை போவம்!" என்று அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான் கதிராமன்.
மாலுக்குள் படுக்கையைப் போட்டு அவனைப் படுக்கவைக்க உதவிசெய்த பதஞ்சலி, அவனுடைய நெற்றியைத் தொட்டுப் பார்த்தபோது நெருப்பாகத் தகித்தது. அவள் தயாரித்த கொத்தமல்லிக் குடிநீரை வாங்கிக் குடிக்கும்போது சுந்தரத்தின் விரல்கள் குளிரால் நடுங்கின. தன்னுடைய சேலையொன்றைக் கொண்டுவந்து அவனுக்குப் போர்த்திவிட்டு, பதஞ்சலி வீட்டுவேலையைக் கவனிக்கச் சென்றாள். கதிராமன் அன்று முழுவதும் எங்கும் செல்லாமல் சுந்தரத்துடனேயே இருந்து அவனைக் கவனித்துக் கொண்டான்.
சுந்தரத்திற்குக் காய்ச்சல் விடவேயில்லை. எனவே இருட்டும் சமயத்தில் கதிராமன் லைற்றையும் எடுத்துக்கொண்டு குமுளமுனைச் செல்லையாப் பரியாரியிடம் மருந்து வாங்கி வருவதற்காகப் புறப்பட்டான். 'கோடை மழை பெய்தது, காலடியைக் கவனமாய்ப் பாத்துப் போங்கோ!" என்று அவனை வழியனுப்பிவிட்டு, காய்ச்சலில் முனகிக்கொண்டு கிடக்கும் சுந்தரத்தின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் பதஞ்சலி.
காய்ச்சலின் வேகுரத்தில் தன்னை மறந்து கிடந்த சுந்தரம், மறுபடியும் கண்களைத் திறந்தபோது, தன்னருகிலே இருக்கும் பதஞ்சலியைக் கைவிளக்கின் ஒளியிலே கண்டான். அவன் விழிகளைத் திறந்து பார்த்ததைக் கண்ட பதஞ்சலி, அவன் முகத்துக்கு நேரே குனிந்து, 'என்ன வாத்தியார் செய்யுது?" என்று கவலையோடு கேட்டபோது, சுந்தரம் அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.
அவளைத் தன்னருகிலே காண்கையில், துயரம் நிறைந்த அவளுடைய விழிகளைப் பார்க்கையில், காலங்கள்தோறும் தன்னுடன் அவள் தொடர்பு கொண்டவள்போல் அவனுக்குத் தோன்றியது. ஏழு பிறவிகளிலும் என்னைத் தொடர்ந்து வரவேண்டியவள், ஏன் இன்று இன்னொருவன் மனைவியாக என்னைச் சந்தித்தாள்? இந்தச் சந்திப்பு ஏன்தான் என்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தது? என்று மிகவும் வேதனைப்பட்டான் சுந்தரம். வேதனை முகத்தில் நிறைந்து விழிகள் கலங்கியபோது, பதஞ்சலி இரக்கத்தால் உந்தப்பட்டவளாக அவனுடைய நெற்றியை மெதுவாக வருடிக் கொடுத்தாள். அவளின் குளிர்ந்த ஸ்பரிசம் தன் நெற்றியின்மேல் தவழும் அந்தப் பொழுதிலேயே தன்னுடைய உயிர் போய்விடக் கூடாதா என்று அவன் ஏங்கினான். ஏக்கத்தின் விளைவாகச் சுரம் அதிகமாகிக் குலைப்பன் வந்து உடல் வெடுவெடென்று நடுங்கியது. தூக்கித்தூக்கிப் போடும் அவனுடைய உடலை எப்படியாவது அழுத்திப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற தீவிரத்தில், பதஞ்சலி அவனுடைய உடலை நடுங்கவிடாது அப்படியே தன்னுடனயே சேர்த்து இறுக அணைத்துக் கொண்டாள். சுந்தம் சுரவேகத்தில், 'பதஞ்சலி! பதஞ்சலி!" என்று வாயோயாமல் பிதற்றிக் கொண்டிருந்தான்.
குமுளமுனையிலிருந்து திரும்பிவந்த கதிராமன் வாங்கிவந்த குளிசையைக் கரைத்துக் கொடுத்ததும் ஒருதரம் வாந்தியெடுத்த சுந்தரத்தின் காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து, காலையில் முற்றிலும் விட்டிருந்தது.
அவனுக்கு மிகவும் பரிவோடு பணிவிடை செய்த கதிராமனையும் பதஞ்சலியையும் பார்க்கையில், சுந்தரத்தினுடைய மனம் நெகிழ்ந்தது. இந்தக் காலத்திலே இப்படியும் ஒரு பிறவிகளா? காட்டின் நடுவே மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்தும் இவர்களுடைய உள்ளங்கள்தாம் எத்தனை தூய்மையானவை! பாசத்தையும், பரிவையும் தவிர வேறெதையுமே காட்டத் தெரியாத இவர்கள் சாதாரண மனிதர்களல்ல! இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்! இன்றைய உலகின் சாதாரண மக்கள் மத்தியில் பிறந்து, அவர்களிடையே வளர்ந்து, கறைபடிந்த உள்ளங் கொண்டவனாகிய நான், எதற்காக இந்த இளந்தம்பதிகளின் வாழ்விலே வந்து குறுக்கிடடேன்? என்றெல்லாம் ஓயாமல் சிந்தித்த சுந்தரலிங்கம், அவர்கள் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், தன்னுடைய அறையிலேயே அன்றிரவு போய்ப் படுத்துக்கொண்டான்.
36.
ஒருவார விடுமுறையில் வீட்டுக்குச் சென்று உடலைத் தேற்றிக்கொண்ட சுந்தரலிங்கம், ஞாயிறன்று காலையிலேயே தண்ணிமுறிப்புக்குப் புறப்பட்டுவிட்டான். 'இன்று லீவுதானே! நாளைக் காலையில் போகிலாமே!" என்று அவனுடைய தாய் தடுத்தபோதும், அவன் ஏதோ சாக்குப்போக்குச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.
காலை பத்துமணிபோல் தண்ணிமுறிப்பை வந்தடைந்தவன் நேரே கதிராமன் வீட்டுக்குச் சென்றான். முழுகிவிட்டுத் தன் கூந்தலை ஆற்றிக்கொண்டிருந்த பதஞ்சலி இவனைக் கண்டதுமே, 'எப்பிடி வாத்தியார் இப்ப சுகமே!... இண்டு முழுக்கக் காகம் கத்திக்கொண்டிருந்தது... நீங்கள்தான் வருவியள் எண்டு எனக்குத் தெரியும்!" என்று மகிழ்ச்சியுடன் கூறி அவனை வரவேற்றாள்.
வீட்டில் நின்ற விடுமுறை நாட்களில் சுந்தரலிங்கம் தினந்தோறும் ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, 'இறைவா! என்னுடைய உள்ளத்திலிருந்து இந்தக் கீழ்த்தரமான நினைவுகளையெல்லாம் நீக்கிவிடு!" என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டிருந்தான். ஒருவாரம் பதஞ்சலியைக் காணாமல் இருந்ததனால் அவனுடைய உணர்வுகள் ஓரளவு தணிந்துபோய் இருந்தன. ஆனால் இன்று, பதஞ்சலி தன் நீண்ட கருங்கூந்தலைத் தோகைபோல் விரித்து, முகமெல்லாம் மலர அவனை அன்புடன் வரவேற்றபோது, ஊற்றங்கரை வினாயகர் அவனை முழுமுழுக்கக் கைவிட்டுவிட்டார்.
கதிராமன் காட்டுக்குப் போயிருந்தான். திண்ணையில் அமர்ந்து பதஞ்சல தன் கூந்தலை ஆற்றும் அழகையே கண்கொட்டாமல் பார்த்தான் சுந்தரம். அவனுடைய பார்வையைக் கவனித்த பதஞ்சலி, 'என்ன வாத்தியார் அப்பிடிப் பாக்கிறியள்?" என்று குழந்தைபோலக் கேட்டதற்கு, 'உன்ரை தலைமயிர் எவ்வளவு நீளமாய், வடிவாய் இருக்குது தெரியுமே!" என்று மனந்திறந்து சுந்தரம் கூறியபோது, ஒரு பள்ளிச் சிறுமியைப்போல் பதஞ்சலி வெட்கப்பட்டுச் சிரித்தாள். அவளுடைய கள்ளமில்லாத புன்னகையைக் கண்ட சுந்தரம், தான் அப்படிச் சொன்னதற்காகத் தன்னையே நொந்து கொண்டான். இன்று துணிந்து அவளுடைய அழகைப் பாராட்டியவன் நாளைக்கு என்னென்ன செய்வேனோ என்ற தவிப்பில் பேச்சை வேண்டுமென்றே வேறுதிசைக்கு மாற்றினான்.
பதஞ்சலி கொண்டவந்த கோப்பியை வாங்கிப் பருகியவன், 'கதை வாசிக்கிறது இப்ப எந்த அளவிலை இருக்குது?" என்று ஆவலுடன் வினவினான். 'இரண்டு மூண்டு கதை வாசிச்சுப் பாத்தன், ஆனால் சில சொல்லுகள் விளங்கேல்லை வாத்தியார்!" என்றாள் பதஞ்சலி. அவன், 'அதென்ன சொல்லுகள்?" என்று கேட்டபோது, பதஞ்சலி தலையை ஆற்றுவதை நிறுத்தி அச் சொற்களை நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தாள். விழிகளைத் தூரத்தே செலுத்தி அப்படித் தீவிரமாகச் சிந்திக்கையில் அவளுடைய முகம் கனவு காண்பதுபோல் மிக அழகாக இருந்தது. திடீரென்று அந்த அழகிய முகத்திலே ஓரு சலனம்! 'கற்பு எண்டு புத்தகத்திலை எழுதிக் கிடக்குது... அப்பிடியெண்டால் என்ன வாத்தியார்?" என்று கேட்டாள் பதஞ்சலி. முன்பொரு நாள் அவள் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டபோது, தான் பெரும் பிரயத்தனப்பட்டு அதை அவளுக்கு விளக்கியது ஞாபகம் வந்தது. காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறியதுபோன்று, கற்பு என்பதற்கு, அதுவும் ஒரு இளம்பெண்ணுக்கு விளக்குவது அவனுக்குப் பெரிய சங்கடமாக இருந்தது.
சில நிமிடங்கள் ஆழ்ந்து சிந்தித்தவன், 'கற்பு எண்டு சொன்னால்.... ஒரு பொம்பிளை தனக்குச் சொந்தமில்லாத வேளை ஆம்பிளையோடை நெருங்கிப் பழகினால்... அவளுக்குக் கற்பில்லையெண்ட சொல்லுவினம்... அப்பிடி நடக்காத பொம்பிளைதான் கற்புடையவள்.." என்று சுந்தரம் இழுத்து இழுத்துக் கூறியபோது, பதஞ்சலியின் முகத்தில் சந்தேகம் கோடிட்டது. மௌனமாக ஆழ்ந்து யோசித்த அவள், 'ஏன் வாத்தியார்.... நீங்கள் எனக்கு ஒரு பிறத்தி ஆம்பிளைதானை... உங்களோடை நான் நெருங்கிப் பழகிறன்தானே! .... அப்பிடியெண்டால் நான் கற்பில்லாதவளே?" என்று கேட்டதும் சுந்தரம் பதறிப்போய், 'சிச்சீ! அப்பிடி இல்லை பதஞ்சலி!.. அன்பாய்க் கதைச்சு உன்னைப்போலை நெருங்கிப் பழகிறதைக் கற்பில்லை எண்டு சொல்ல முடியாது!.... தொட்டுப்பழகி நடந்தால்தான் வித்தியாசமாய்க் கதைப்பினம்!" என்று கூறினான். அப்பொழுங்கூட பதஞ்சலியின் முகத்திலிருந்த சந்தேகமூட்டம் அகலவேயில்லை. 'ஏன்.... நான் உங்களைத் தொட்டுப் புழங்கியிருக்கிறன்தானே!.... நீங்கள் குலைப்பன் காய்ச்சலோடை கிடக்கேக்கை நான் உங்களைப் பிடிச்சுக்கொண்டு பக்கத்திலை இருந்தனான்தானே?" என்று குழந்தைத்தனமாகக் கேட்டாள். அவளுக்குப் பதில் சொல்ல இயலாது தவித்தான் சுந்தரலிங்கம். 'ஏன் வாத்தியார் அப்பிடிப் புழங்கினால் என்ன? பொம்பிளையளுக்குக் கட்டாயம் கற்பு இருக்கத்தான் வேணுமே?" என்று சந்தேகம் தீராது பதஞ்சலி பல வினாக்களைத் தொடுத்தபோது சுந்தரம், கற்பின் வரைவிலக்கணத்தை, அதிகம் படித்திராத பதஞ்சலிக்கு எப்படி விளங்க வைப்பதென்று புரியாமல் திகைத்துப் போனான். 'பதஞ்சலி! கற்புடைய பொம்பிளை ஒருத்தி, ஒரு ஆம்பிளையைத்தான் தன்ரை புருசனாய் நினைப்பாள்.... அவனுக்குத்தான் அவள் பெண்சாதியாய் இருப்பாள்.... வேறை ஆம்பிளையோடை அப்பிடியெல்லாம் பழகமாட்டாள்..." என்று ஒருவாறு விளக்கிபோது, பதஞ்சலிக்கு அது புரிந்தும் புரியாததுபோல் இருந்தது. எனவே மீண்டும் அவனைப் பார்த்து, 'அப்பிடித்தானை வாத்தியார் எல்லாப் பெண்சாதிமாரும் நடப்பினம்!" என்றபோது, 'ஓ அப்பிடித்தான்!... ஆனால் சில பொம்பிளையள் அப்பிடி நடக்கிறேல்லை.." என்று விடை கூறினான் சுந்தரம். இதைக் கேட்டு மேலும் குழம்பிக்கொண்ட பதஞ்சலி, 'ஏன் வாத்தியார் அந்தப் பொம்பிளையள் அப்பிடி நடக்கினம்?" என்று மீண்டும் கேட்டபோது அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
இதுவரை அவன் தன்னால் முடிந்தமட்டுக்கு பதஞ்சலியின் அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவகையில் கற்பு என்ற வார்த்தைக்குக் கருத்துக் கூறிக்கொண்டு வந்தான். ஆனால் ஒரு பெண் ஏன் கற்புத் தவறுகின்றாள்? அல்லது ஏன் ஒரு ஆண் ஒரு பெண்ணின் கற்பு கெடுவதற்குக் காரணமாயிருக்கிறான்? என்ற ரீதியில் பதஞ்சலியிடமிருந்து கேள்விகள் கிளம்பவே அவன் தடுமாறிப் போய்விட்டான். அவனுக்கே அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்கவில்லை. எனவே அவன், 'நீயேன் இப்ப இதுக்கெல்லாம் கடுமையாய் யோசிக்கிறாய்?... நான் இன்னும் வேறை புத்தகங்கள் தாறன்... அதுகளை வாசிச்சால் எல்லாம் தன்ரைபாட்டிலை விளங்கும்!" என்று பேச்சை மாற்றியபோது, அவள் ஓரளவு சமாதானம் அடைந்ததுபோல் காணப்பட்டாள்.
ஆனால் கல்வி, நாகரீகம், பண்பாடு என்ற விஷயங்களையெல்லாம் அறியாது, அமைதியான நீர்நிலை போன்றிருந்த அவளுடைய களங்கமற்ற உள்ளத்திலே, கற்பு என்ற சொல், ஒரு சிறிய கல்லைப்போல் விழுந்தபோது, அங்கு மெல்லிய அலைகள் எழுந்து, விரிந்து, பரந்து பின் மெதுவாக அடங்கிப்போயின. ஆனால் அந்தக் கல் அவளுடைய அந்தரங்கத்தின் அடியிலே மெல்ல இறங்கித் தங்கிக்கொண்டது.
|