Thursday, 28 July 2005
29.
தண்ணீருற்றைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த சுந்தரலிங்கம், முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் படித்து எஸ்.எஸ்.சி தேறியிருந்தான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தபோதும், அவனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி மேற்கொண்டு படிக்க வைக்கும் அளவுக்கு அவனுடைய தகப்பனாரின் பொருளாதார நிலை இடங்கொடுக்கவில்லை. அவன் வேலைக்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்த போதுதான் அந்தப் பகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதி, தண்ணிமுறிப்பில் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கும்படியாகவும், கூடிய கெதியல் அப் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்கும்படி செய்து, அவனை ஓர் ஆசிரியராக்கி வைப்பதாகவும் உறுதியளித்திருந்தார். இதன் காரணமாகச் சுந்தரலிங்கம், கோணாமலையரைச் சந்தித்து, அவருடைய உதவியுடன் ஒரு பாடசாலையை அமைக்கும் நோக்கத்துடனே தண்ணிமுறிப்புக்கு வந்திருந்தான்.
கோணாமலையரின் வீட்டையடைந்த சுந்தரலிங்கம், அவரிடம் தன் விருப்பத்தைக் கூறியதும், மலையருக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. காடியர் அடிக்கடி கூறுவதுபோன்று தண்ணிமுறிப்பும் இப்போ பெரிய இடமாக மாறும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அத்துடன் தானே அந்த இடத்திற்குப் பெரியவன் என்பதை அங்கீகரிப்பதைப்போன்று எம்.பீயும், சுந்தரலிங்கத்தை; தன்னிடம் அனுப்பியிருந்தது மலையருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. வேளாண்மை சீரழிந்ததால் மனம் புழுங்கிக் கொண்டிருந்த அவருக்கு, பள்ளிக்கூடம் அமைக்கும் விஷயம் மிகவும் ஆறுதலைக் கொடுத்தது. பாடசாலை அமைக்கப்பட்டுவிட்டால் தன் கடைசி மகனான ராசுவுக்கும் கல்வி கற்பதற்கு வாய்ப்பு ஏற்படுமென்று எண்ணினார். ஆதலால் வேண்டிய உதவிகளைத் தான் செய்து தருவதாக அவர் வாக்களித்தார்.
சுந்;தரலிங்கம் மறுநாள் கூலியாட்களுடன் வநது பள்ளிக்கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். கோணாமலையர் வீட்டுக்கும், கதிராமனுடைய குடிசையிருந்த இடத்திற்கும் நடுவே சாலையோரமாக ஒரு கொட்டகை போடப்பட்டது. ஒரு கிழமைக்குள்ளாகவே கூரையும் கிடுகுகளினால் வேயப்பட்டு, கொட்டகையின் ஒருபக்கம் சிறியதொரு அறையாகவும் வகுக்கப்பட்டு விட்டது. கிராமத்துவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்தனர். கதிராமன் பாடசாலைக்கு அரைச்சுவர் வைக்கும் வேலையில் கூடிய பங்கெடுத்து உதவினான். மலையர் அந்தப் பக்கம் அதிகமாக வரவேயில்லை. ஊருக்குப் பெரிய மனிதனான பின்னர் கண்டபடி இவ்வாறான வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வது தன்னுடைய அந்தஸ்துக்குக் குறைவு என்று எண்ணினார்.
தை மாதத்தில் ஒரு நல்ல நாளில் தண்ணிமுறிப்பில் வாழும் எட்டுப்பத்துக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழெட்டு மாணவ, மாணவியரை வைத்துக்கொண்டு சுந்தரலிங்கம் பாடசாலையைத் தொடங்கினான. கோணாமலையர், காடியர் சகிதம் ராசுவைக் கூட்டிவந்து பாடசாலையில் சேர்த்துவிட்டுச் சென்றார். சுந்தரம் தன்னுடைய செலவிலேயே பிள்ளைகளுக்குப் புத்தகம், சிலேற்று முதலியவற்றை வாங்கிக் கொடுத்து, தன் உத்தியோகத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளும் துடிப்பில் உற்சாகமாக வேலை செய்தான்.
30.
அறுவடைக் காலம்போல், கமக்காரனுக்கு மகிழ்ச்சி தரும் நாட்கள் வேறில்லை. சிந்திய வியர்வையெல்லாம் செந்நெல்லாக இறைந்து கிடக்கையில், அவர்களுடைய உள்ளங்கள் களிப்பால் நிறைந்திருக்கும்.
அதிகாலையிலேயே அரிவாள் சகிதம் வயலில் இறங்கிவிட்டால் கதிராமனும், பதஞ்சலியும் போட்டி போட்டுக்கொண்டு கதிர்களை அறுத்துக் குவிப்பர். வேகமாக அருவி வெட்டும்போது, பதஞ்சலி எதையாவது கூறிவிட்டுக் கலகலவெனச் சிரிப்பாள். கதிராமன் அவளையும், அவளுடைய குறும்புகளையும் வெகுவாக இரசித்தவனாக அருவி வெட்டிக் கொண்டிருப்பான். தங்குதடையின்றி ஒழுங்கான வேகத்துடன் அவனுடைய கரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும்.
நண்பகலில் பாடசாலை முடிந்ததும் சுந்தரத்துக்குப் பொழுது போவதே பெரிய பாடாகவிருந்தது. புத்தகங்களைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு வாசித்தாலும், அவனுடைய மனதில் அடிக்கடி பதஞ்சலியின் அழகிய முகம் தலைகாட்டிக் கொண்டிருக்கும். அவன் எவ்வளவோ தீவிரமாக, அலையும் தன் மனத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டாலும், விஷமம் செய்யும் சிறுவனைப் போன்று அவனுடைய மனம் அடங்கிப்போக மறுத்தது. மனம் முரண்டு பிடிக்கும் நேரங்களில் சுந்தரலிங்கம் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஏகாந்தத்தை நாடி கலிங்குவரை செல்வான். அங்கு குளக்கட்டின்மேல் அமர்ந்துகொண்டு, எதிரே தேங்கிக் கிடக்கும் நீரையும், மரங்களிலிருந்து கீதமிசைக்கும் பறவைகளையும் பார்த்து இரசிப்பான். குளக்கட்டின் கீழே பல சமயங்களில் மான்கள், மரைகள், மயில்கூட்டங்களையும் காண்பான்.
அழகான குழந்தைகள், மலர்கள், விலங்குகள், பறவைகள் அவை யாருக்குச் சொந்தமாக இருந்தாலும் நாம் பார்த்து இரசிக்கத்தானே செய்கின்றோம்? பதஞ்சலி இன்னொருவன் மனைவியாய் இருந்தாற்கூட அவளின் அழகை, தான் கண்நிறையப் பார்த்து இரசிப்பதில் என்ன தவறு என்று தன்னையே கேட்டுக்கொள்வான். ஆனால் அவன் இதுவரை மனதில் வளர்த்த சில கொள்கைகள், அவ்வாறு செய்வது தவறு என்று அறிவுரை கூறும்.
இவ்வாறான போராட்டங்களை நடத்திய அவன் மனது ஆசை வயப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். நான் என்ன பதஞ்சலியையா பார்க்கப் போகிறேன்? இந்தக் காட்டு ஊரில் என்னுடன் பழகுவதற்கு வேறு யார் இருக்கின்றார்கள். கதிராமனைச் சந்தித்தாலாவது பொழுதுபோகும் என்று நினைத்து, அதன்படி அவனைச் சந்திக்கச் சென்றான்.
|