அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 04 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow உளவியற் தடைநீக்கம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உளவியற் தடைநீக்கம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Wednesday, 13 July 2005

பல்லாயிரமாண்டு காலமாகப் படிவளர்ச்சியுற்றிருக்கும் மனித மூளை, முற்று முழுதாகவே இயந்திர நுட்டபஞ் சார்ந்த கணனிப் பொறிபோல் இயங்குகிறதா அல்லது மூளையின் ஒரு பகுதிமட்டும் இயந்திரப் பொறிபோல் இயங்க, ஒரு பகுதி இயந்திர வளர்ச்சிக்கு ஆட்பாடமல் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், இயந்திர நுட்பம் சார்ந்த செயற்பாடு என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
இயந்திரப் பொறிபோல் இயங்கும் மூளையின் ஒரு பகுதியின் இயக்கம் வரையறுக்கப்பட்ட பரப்பெல்லைக்குள் இயங்குகிறது. அந்தப் பரப்பெல்லைக்குள்ளேயே 'நான்' குறிப்பிட்ட பாங்கில் செயற்படுகின்றேன். அப்பொழுதுதான் 'நான்' ஒரு பொதுவுடமையாளனாகவோ, மதவாதியாகவோ, இடது சாரியாகவோ, வலதுசாரியாகவோ, முதலாளித்துவ வாதியாகவோ, இந்துவாகவோ, கத்தோலிக்கனாகவோ, பௌத்தனாகவோ, ஒரு கோட்பாடை - கொள்கையை - சித்தாந்தத்தைப் பின்பற்றுபவனாக இருக்கின்றேன்.
பலதரப்பட்ட அனுபவங்கள் எனது மூளைக்குள் நினைவுகளாகப் பதியப்பட்டுள்ளன. அந்த நினைவுகளின்படி இயங்குவதும் ஒரு வித இயந்திர இயக்கமே. கணனியைப் போலவே மூளையும் இயங்குகின்றது. இயந்திரத் தன்மையுடன் செயற்படும் மூளை மரபை ஏற்றுக் கொள்கின்றது. பின்பு அது ஏற்றுக்கொண்ட மரபுப்படியே செயற்படுகிறது. எண்ணத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நோக்கத்தையோ, இலக்கையோ ஏற்றுக் கொள்ளும்படியும், அதற்கு கீழ்ப்படியும் எம்மை அவ்வெண்ணம் தூண்டுகின்றது. எண்ணம் இயந்திரத்தன்மை கொண்டது. இவ்வுண்மையை நாம் எமக்காக எம்முள் அவதானிக்கவேண்டும். பிற தூண்டுதல்களோ செல்வாக்குகளோ இல்லாமல் இதனை இயல்பாக எம்முள் நாம் அவதானிக்கும் போது, எங்களது சிந்தனைகளும், உணர்வுகளும், கருத்துக்களும், அவற்றோடு சம்பந்தப்பட்ட  அனைத்தும் எப்படி இயந்திர ரீதியாகச் செயற்படுகின்றன என்பதைக் கண்டு கொள்வோம். இயந்திர ரீதியாகச் செயற்படுபவை யாவும் எண்ணங்களே. எண்ணம் இயந்திர ரீதியாக இயங்குமானால், எண்ணத்திற்கும் தெளிவான சிந்தனை என்ற சொற் பிரயோகத்திற்குமிடையே உள்ள முரண்பாடு எமக்குப் புலப்படும். ஒன்றைத் தெளிவாகப் பார்ப்பதையே தெளிவான சிந்தனை என்கின்றோம். எமது சிந்தனை தெளிவாக இருந்தால் நாம் எந்த ஓர் அரசியற் கட்சியையோ, மதத்தையோ சார்ந்தவர்களாக இருக்க மாட்டோம். தெளிவாகச் சிந்திக்கும்போது எண்ணத்தின் வரையறையை எங்களால் அவதானிக்க முடியும்.
அனுபவம் என்பது ஏதாவது ஒன்றினூடாகச் செல்வதையே குறிக்கும். அப்படிச் சென்ற பின்பு அது முடிவுக்கு வந்துவிடவேண்டும். நீங்கள் என்னைக் காயப்படுத்தும்வகையில் எதையோ ஒரு முறை கூறினீர்கள் என்றால், அது எனது மூளையில் ஓர் அடையாளத்தைப் பதிவு செய்துவிடும். பின்பு நான் உங்களைச் சந்திக்கும் போதெல்லாம் அந்தநினைவுப் பதிவு எனது உள்ளுணர்ச்சியைத்தூண்டும்.
என்னைப்பற்றி நான் உருவாக்கிவைத்துள்ள விம்பம் காயத்திற்கு உட்படுகிறது. நான் ஏன் என்னைப்பற்றி ஒரு விம்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறேன்? எனது கலாச்சாரம், கல்வி, சமூக எதிர்வினைகள் ஆகியவையே எனக்குள் என்னைப்பற்றிய விம்பத்தையே ஏற்படுத்துகின்றன. எனது விம்பத்தோடு தொடர்புடைய உங்களைப்பற்றிய விம்பத்தையும் நானே ஏற்படுத்திக் கொள்கின்றேன். இப்படி நான்பல விம்பங்களைக் கொண்டுள்ளேன். நீங்கள் என்னை முட்டாள் என்று அழைக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால் நான் காயப்படுத்தப் படுகின்றேன். இப்பொழுது நான் அந்தக் காயத்தை மறையச் செய்வது அல்லது மீண்டும் அத்தகைய காயம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வது எப்படி? ஒன்று இறந்தகாலம் சம்பந்தப்பட்டது. மற்றது எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இவை இரண்டும் ஒரே மையத்திலிருந்து தோன்றுபவையே. எனவே. அந்த மையமே, தான் மீண்டும் காயப்படுவதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு தன்னைச்சுற்றி பாதுகாப்புச் சுவர்களை எழுப்புகின்றது அல்லது தான் மீண்டும் காயப்படாமலிருக்கும் பொருட்டுத் தன்னைத் தனிமைப் படுத்துகின்றது அல்லது சகலவிதமான உறவுகளிலிருந்தும் தன்னைப் பின்வாங்கிக் கொள்கிறது.
நான் காயப்படாமல் இருக்கவேண்டுமானால் என்னைப்பற்றிய விம்பம் என்னுள் இருக்கக்கூடாது. என்னைப் பற்றித் தற்செருக்கோ, ஆரவாரப்பகட்டோ, அகந்தையோ இல்லாதுவிட்டால் என்னுள் இருக்கும் 'நான்' காயத்துக்கு உட்படாது. எம்மைப் பற்றிய விம்பங்கள் இல்லாத நிலையிலேயே எம்முள் உண்மையான சுதந்திரம் இருக்கும்.
நான் ஓர் இந்து என்று சொல்லும் போது அது ஒரு விம்பம். ஒரு விம்பம் தன்னை மேலும் மேலும் அடையாளப்படுத்தும்போது, அது மேலும் மேலும் பல விம்பங்களை கட்டியெழுப்பிக் கொண்டேயிருக்கும். அறிந்தவற்றைக்கொண்டே (known) மனத்தால் விம்பங்களை கட்டியெழுப்ப முடியும். புற உலகில் இருக்கின்ற உளதான பொருள்களைப் பற்றியே விம்பங்கள் உருவாகின்றன. இல்லாத - அறியாதவைப்பற்றி விம்பங்கள் ஏற்படா. விம்பங்கள் என்று சொல்லப்படுபவையாவும் கருத்தியல் ரீதியாகச் சோடிக்கப்பட்ட வெறும் வார்த்தைகளே அவை உண்மையானவை அல்ல. நான் சொற்களுக்கு அடிமையாக இல்லாதபோது விம்பங்கள் இரா. நான் ஓர்இந்துவாகவோ, பௌத்தனாகவோ, கிறிஸ்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ இல்லாவிட்டால் என்னுள் அது பற்றிய விம்பம் என்னுள் இராது. நாம் சொற்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டு, அச் சொற்களையே உண்மையாக்கிவிடுகின்றோம். சொற்களையே வணங்குகின்றோம். இவை எமக்கு ஒருவகைப் பாதுகாப்பைத் தருவதாக நம்புகின்றோம். ஆயிரக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் எல்லோரும் ஒரு மதத்தை நம்பும்போது, எனக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வு ஏற்படுகின்றது. அந்த நம்பிக்கையையிட்டு யாராவது கேள்விகேட்கும் போது உடனே எனது மனம் அதனை எதிர்க்கின்றது.
எங்களுக்குப் புகழ்ச்சியோ காயமோ ஏற்படும் அக்கணத்தில் அப்புகழ்ச்சியையோ காயத்தையோ எங்களது மனம் பதிவுசெய்யாது. எனக்குத் திடீரென ஓர் அதிர்ச்சி ஏற்படுமானால் எனது மனம் மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கும். எனது மூளை உயிர்ப்புடன் இருக்கும். இயந்திர ரீதியான விம்பம் இல்லாதபோது. அந்த விம்பத்திலிருந்து நான் விடுதலை பெறுகின்றேன். அத்தகைய நிலையில் மூளையின் ஒரு பகுதி வரையறுக்கப்படாத நிலையை ஏய்துகின்றது. பின்பு எனது முழு மூளையையும் வரையறுப்புக்கு உட்படாது இருக்கும். இந்த இயந்திர ரீதியில்லாத நிலையில் முற்றிலும் வித்தியாசமான சக்தியை மூளைபெறுகிறது. இந்த உண்மையான யதார்த்த நிலையை நாம் வெறும்கருத்தாக வேறுபடுத்துவோமானால் அது வெறும் சொற்களாக மாறிவிடும். அந்தச் சொற்கள் எம்முன் உளவியல் ரீதியான தடைவேலிகளை உருவாக்கிவிடும். அவை எமக்குப் பாதுகாப்பளிப்பதாக எம்மை நம்பவைக்கிறது எமது எண்ணம். ஆனால், உண்மையில் இந்த உளவியல் தடைவேலிகள் நீங்கும்போதே பூரணமான பாதுகாப்பு ஏற்படுகிறது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 04 May 2024 02:29
TamilNet
HASH(0x55a8fd8a9998)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 04 May 2024 02:29


புதினம்
Sat, 04 May 2024 02:29
















     இதுவரை:  24856007 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1588 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com