Thursday, 30 June 2005
26.
கதிராமனுக்கும் பதஞ்சலிக்கும் இப்போ அந்தப் புதுக்காடுதான் உலகமாக இருந்தது. ஆவணி முடியுமுன்னர் அவர்களுடைய புதுப்பிலவு நிலம் வெளியாக்கப்பட்டு, நாற்புறமும் உறுதியான வெட்டுவேலியுடன் விளங்கியது. சுமார் மூன்று ஏக்கர் பரப்பான அந்தக் கன்னி நிலத்தில் சாம்பர் படிந்த இருவாட்டி மண் பூத்துப்போய்க் கிடந்தது
புரட்டாதி பிறந்ததும் நெல் கொத்தும் வேலைகள் ஆரம்பமாகியது. நல்லதொரு வித்துநாளின் விடிகாலைப் பொழுதிலே கற்பூரம் கொளுத்தி ஐயனை வேண்டிக்கொண்டு விதைநெல்லைச் சிறிது விதைத்தான் கதிராமன். இந்த நெல்லுக் கொத்தும் வேலையில் கதிராமனுக்குச் சமமாகப் பதஞ்சலியும் ஈடுபட்டாள். நெல்லுக்கொத்து பத்து நாட்களுக்குள்ளேயே முடிந்துவிட்டது. புரட்டாதி எறிப்பில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் புழுதி குடித்தவாறே மழையைக் காத்துக் கிடந்தன. இந்நாட்களில் கதிராமன் கடுமையாக உழைத்து அந்தக் காணியைச் சுற்றிக் கிடந்த வெட்டுவேலியின் வெளிப்புறத்தே ஒரு பாகம் அகலத்திற்கு நிலத்தை வெளியாக்கி, சாமம் உலாத்துவதற்கு வசதியும் செய்துகொண்டான். ஆங்காங்கு தீவறைகள் மூட்டுவதற்காகப் பட்ட மரங்களையும், எரிந்த கட்டைகளையும் குவித்து வைத்துக் கொண்டான்.
ஆடி உழவு தேடி உழு என்பார்கள். மலையரின் வயலிலே இந்த வருடந்தான் ஆடி உழவு தவறிவிட்டது. உழவு நடக்க வேண்டிய சமயத்தில் எருமைக் கடாக்களை விற்றுப் பணமாக்கியிருந்தார் மலையர். உழவுயந்திரம் அவருடைய வீட்டுக்கு வருமுன்னரே ஆடி மாதம் ஓடி மறைந்துவிட்டது.
எனவே இப்போது ஈரம் காய்ந்து, நிலம் உலர்ந்துபோன மலையரின் வயலிலே, அவர் வாங்கிய உழவுயந்திரம் புற்களை விறாண்டி வலித்துக் கொண்டிருந்தது. பழைய கலப்பையாதலால், கொழுக்கள் ஆழமாக உழாமல், மண்ணையும் புல்லையும் விறாண்டிக் கொண்டிருந்தன. மணியன் றைவருக்குப் பக்கத்தில் மட்காட்டைப் பிடித்தபடி புட்போட்டில் நின்று கொண்டிருந்தான்.
மலையருக்கு உழவைப் பார்க்கையில் எரிச்சலாக வந்தது. மாடுகட்டி உழுதாலும் இந்நேரம் வயல் முழுவதையும் பாடுபாடக உழுது புரட்டியிருப்பார். அவரது கையிலிருந்த மீதி பணமும், உழவுயந்திரத்துக்கு டீசல் அடிக்கவும், ஒயில் வாங்கவும் கரைந்து கொண்டிருந்தது. அவருடைய உழவுயந்திரமும், கலப்பையும் சரியில்லாததால் வேறு எவரும் கூலிக்கு அவரைக் கேட்கவில்லை. ஏதோ தானும் விதைத்தேன் என்ற சாட்டுக்கு புழுதிவிதைப்புப் போட்டிருந்தார் மலையர்.
இப்போதெல்லாம் மணியனுக்குத் தோட்ட வேலைகளிலோ, வீட்டு வேலைகளிலோ ஈடுபாடில்லை. முன்பெல்லாம் தானுண்டு, தன்பாடுண்டு என்றிருந்தவன், இப்போது முற்றிலும் மாறிப்போயிருந்தான். உழவுயந்திரத்துடன் கூடவே வந்த றைவர், மணியனுடைய நெருங்கிய நண்பனாகவும், மரியாதைக்குரிய குருவாகவும் இருந்தான். உழவுயந்திரத்தை இயக்கும் பாடத்தை மட்டுமல்ல, நாகரீகமடைந்த இளசுகள் விரும்பிப் பயிலும் பல்வேறு பாடங்களையும் இந்தக் குருவிடமே மணியன் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டான். இதன் முடிவு, மலையரின் பணம் முற்றாகக் கரைந்து போயிற்று.
|