அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 26 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 22-23
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 22-23   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 15 June 2005

22.

பாலை  மரங்கள் சிதறுபழம் பழுக்கும் சித்திரைமாதக்  கடைக்கூற்றில் வீட்டைவிட்டு வெளியேறிய கதிராமன் அயராது  உழைத்தான். இப்போ பாலை மரங்கள் வாருபழம் பழுக்கும்  வைகாசிமாதம். கதிராமனின் குடிசைக்கு மேற்கே கிடந்த காடு  இப்போ வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. சித்திரை இருபத்தெட்டுக்  குழப்பம் என்று அழைக்கப்படும் சோளகத்தின் பிரசவத்தின்  முன்பே அவன் கீழ்க்காடு முழுவதையும் வெட்டியிருந்தான். பின்  பெருமரங்களைத் தறித்து வீழ்த்தி, அவற்றின் கிளைகளையும்  வெட்டி நெரித்து மட்டப்படுத்தியிருந்தான். சதா கோடரியும்  கையுமாக வைகாசிமாத இறுதிவரை பிராயசப்பட்ட அவனுடைய  உள்ளங்கைகள், இரத்தம் கன்றிச் சிவந்து கரடுதட்டிப் போயின.

தங்களுடைய வாழ்வில் மலையர் தலையிட்டுத் தீங்கு  செய்யாதது பதஞ்சலிக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.  நாளடைவில், பழைய குதூகலமான போக்கும் உற்சாகமும்  அவளிடம் திரும்பியிருந்தன.

நிலத்தில் பொந்துகள் அமைத்து அவற்றினுள் கூடுகட்டி  வாழும் நிலக்கிளிகள் மிகவும் அழகானவை! உற்சாகம்  மிகுந்தவை! தண்ணிமுறிப்புப் பிரதேசத்தில் அதிகமாகக்  காணப்படும் இந்த நிலக்கிளிகள் தாமிருக்கும் வளைகளைவிட்டு  அதிக உயரத்துக்கெல்லாம் பறப்பதில்லை. இவை தம்  பொந்துகளைவிட்டு அதிக தூரம் செல்வதில்லை. அண்மையிலே  கிடைக்கும் பூச்சிபுழுக்களையும், தானியங்களையும் உண்டு  வாழும் இந்தப் பறவைகள் தொடர்ந்தாற்போல் ஓரிடத்தில்  தரித்திருக்காமல் அடிக்கடி நிலத்தை ஒட்டியவாறே பறக்கும்  காட்சி, அவற்றின் அழகையும், குதூகலத்தையும் மேலும்  மிகைப்படுத்திக் காட்டும்.

பதஞ்சலியும் ஒரு நிலக்கிளியைப் போலவே தான் வாழ்ந்த  சின்னஞ்சிறு குடிசையையும், கதிராமனையுமே தனது உலகமாகக்  கொண்டிருந்தாள். வேலையெதுவுமே இல்லாத சமயங்களில்,  பக்கத்திலே உள்ள பாலைமரங்களின் தாழ்வான கிளைகளிலே  ஏறிப் பழங்களைப் பறித்துவந்து கதிராமனுக்குக் கொடுத்து  உண்பாள். அவர்களுடைய குடிசையை அண்டிய  காட்டுக்குறையிலே மான்கிளை வந்து நிற்கும்போது அவற்றை  நோக்கிக் களிப்புடன் ஓடுவாள். பிலக்காட்டில் கதிராமன்  பாடுபடுகையில், 'வெய்யிலுக்கை நில்லாதை!" என்று அவன்  ஏசினாலும் அதைப் பொருட்படுத்தாது அவனைச் சுற்றிவந்து  தன்னாலான வேலைகளைச் செய்வாள்.

நாள்முழுவதும் இடுப்பொடிய வேலை செய்துவிட்டு இரவில்  ஒருவரின் அணைப்பில் ஒருவர் ஒண்டிக்கொள்ளும் வேளையில்,  அவன் தன்னுடைய முரட்டு விரல்களால் பதஞ்சலியின்  உள்ளங்கைகளைத் தடவிப் பார்ப்பான். கடுமையான  வேலைகளைச் செய்து கன்றிப்போயிருந்த அந்த மென்மையான  கைகளைத் தன் முகத்தோடு சேர்த்தணைத்தவாறே அவன்  நித்திரையாய்ப் போவான்.

வைகாசி கழிந்து ஆனி வந்தது. நீர் நிலைகளையும்,  பசுமையையும் வறட்டும் சோளகக் காற்று, கதிராமன்  வெட்டியிருந்த காட்டையும் சருகாகக் காய்ச்சியிருந்தது. ஆடி  பிறந்ததும் காட்டுக்கு நெருப்பு வைக்க வேண்டுமென  எண்ணியிருந்தான். மரங்களையெல்லாம் வெட்டி அப்புறப்படுத்தி,  தோட்டப்பயிர் செய்வதற்கு அரை ஏக்கரளவு நிலத்தைத்  தயார்ப்படுத்திக் கொண்டான். அவர்களுடைய குடிசையிலிருந்து  சற்றுத் தூரத்திலிருந்த வாய்க்காலில், வயல்விதைக்கும்  காலங்களில்தான் தண்ணீர் பாயும். எனவே அவன் தன்னுடைய  புதிய வளவுக்குள்ளேயே ஒரு கிணற்றையும் வெட்ட  ஆரம்பித்தான். வெகு சீக்கிரத்தில், வாய்க்காலில் நீர் வற்றுவதற்கு  முன்பாகவே அவன் வெட்டிய கிணற்றில் துல்லியமான நீர்  சுரக்கத் தொடங்கிவிட்டது. கிணற்றில் நீரைக் கண்டதுமே  தோட்டம் அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக  இறங்கினான் கதிராமன்.

உமாபதி இறக்கும்போது பதஞ்சலியிடம் அவர் விட்டுச்சென்ற  பணம் இருநூறுருபா வரையில் இருந்தது. அதில் ஐம்பது  ருபாவுக்குமேல் உமாபதியரின் ஈமச்சடங்குகளுக்குச்  செலவாகிவிட்டது. எஞ்சியிருந்த பணத்தில் விதைநெல்  வேண்டுவதற்கென எண்பது ருபாய் எடுத்து வைத்திருந்தான்.  மிகுதிப் பணத்தில் குடிசைக்குத் தேவையான கிடுகு,  பதஞ்சலிக்குச் சேலைகள், தனக்குச் சாறம் முதலியவற்றையும்,  உணவுப் பொருட்களையும் வாங்கியிருந்தான். எனவே வருமானம்  எதுவுமில்லாத நாட்களில் அவர்கள் மிகவும் சிக்கனமாக  வாழவேண்டியிருந்தது. பிறந்ததுதொட்டுப் பச்சையரிசிச்  சோற்றையே உண்டு வளர்ந்த அவர்கள், இப்போ கோதுமை  மாவுடனும், மரவள்ளிக் கிழங்குடனும் காலத்தைக் கழித்தனர்.  பதஞ்சலியின் கைப்பாங்கில் தயார்செய்யப்பட்ட உணவுவகைகள்,  எளிமையாக இருந்தாலும், சுவையாக இருந்தன. நாள்முழுவதும்  வியர்வைசிந்த வேலை, அதனால் ஏற்படும் பசி, அதைத்  தொடர்ந்துவரும் நிம்மதி நிறைந்த நித்திரை, இவையெல்லாம்  அந்த இளந்தம்பதிகளின் அழகுக்கு மேலும் மெருகையும்  ஆரோக்கியத்தையும் அளித்தன.


23

ஆனிமாதக் கடைசிக்கூற்றில் ஒருநாள் இருட்டும் சமயத்தில்  கோணாமலையர், குமுளமுனையிலிருந்து புறப்பட்டுத்  தண்ணிமுறிப்பை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தார்.  அத்தி பூத்ததுபோல் குமுளமுனைக்குச் சென்று, இருட்டும்  சமயத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மலையரின் முகம்  கோபத்தால் விகாரப்பட்டு இருண்டு கிடந்தது.

கதிராமன் அவரைவிட்டுப் பிரிந்து சென்றதன்பின் மலையர்  வளவில் இவ்வளவு காலமும் திகழ்ந்த செந்தளிப்பு  அழிந்துவிட்டது. எருமைகளை மேய்ப்பாரில்லை. அவை கட்டாக்  காலிய்த் திரிந்தன. தோட்டத்தில் முறைப்படி இறைப்பு  நடக்காததால் புகையிலைக் கன்றுகள் சேட்டமின்ற நின்றன.  இதைப்போலப் பல அன்றாட அலுவல்களிலும் கதிராமன்  இல்லாததால் ஏற்பட்ட பாதிப்புத் துலாம்பரமாகத் தெரிந்தது.  இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும். அடுத்துவரும்  ஆவணியில் மணியனுக்கு, குமுளமுனைச் சிதம்பரியருடைய  மகளைப் பேசி முடிக்கவேண்டும். உழவுயந்திரம் வீட்டுக்கு  வந்துவிட்டால் இன்னமும் நான்கு துண்டுக் காணியைக்  குத்தகைக்கு எடுத்து விதைக்க வசதிப்படும் என்றெண்ணிய  மலையர், ஆனி முடிவதற்குள் திருமணப் பேச்சுவார்த்தைகளை  முடித்துவிட வேண்டுமென்ற துடிப்புடன் சிதம்பரியரின்  வீட்டுக்குச் சென்றிருந்தார்.

மலையர் எண்ணிப்போன விஷயம் கைகூடவில்லை. 'நீங்கள்  கோவிக்கக் கூடாது மலையர்! உங்கடை கதிராமனுக்கு என்ரை  பொட்டையைச் செய்வம் எண்டுதான் நான் நெடுக விரும்பி  இருந்தனான். ஆனால் அதுக்குக் குடுத்து வைக்கேல்லை.  உங்கடை மணியனுக்கும் என்ரை பொடிச்சிக்கும் ஒரு  வயசுதானே! கடைசி ஒரு மூண்டு நாலு வயதெண்டாலும்  வித்தியாசம் இருக்கிறதுதான் நல்லது!" என்று சிரித்துக்கொண்டே  சிதம்பரியர் கூறி, தனக்கு இந்த விஷயத்தில் விருப்பமில்லை  என்பதை மிகவும் நாசூக்காகத் தெரிவித்துவிட்டார். ஆனால்,  உண்மையிலேயே மணியன், கதிராமனைப்போல் சிறந்த  உழைப்பாளி இல்லை என்பதுதான் அவர் மறுத்ததின் காரணம்  என்பதை மலையர் அறிவார். இந்த வயதுப் பிரச்சனையைக்  கிளப்பிச் சிதம்பரியர், தனது கடைசி நம்பிக்கையையும்  பாழடித்துவிட்டார் என்பது மலையருக்கு நன்கு விளங்கியது.

'அவன்ரை வீட்டு முத்தம் மிதிச்சு நான் போய்க கேட்டதுக்குச்  சிதம்பரியான் இப்படிச் சொல்லிப்போட்டான். உழவுமிசின்  வைச்சிருக்கிறதாலைதானே இவனுக்கு உவ்வளவு கெப்பேர்!....  சீவனோடை இருந்தால், இந்த விதைப்புக்கு முன்னம் நானும்  ஒரு மிசின் எடுக்கவேணும்!... அப்பதான் என்ரை மனம் ஆறும்!"  என்று மலையர் அந்த இருட்டில் தனக்குத் தானே  சொல்லிக்கொண்டு, நட்சத்திரங்களின் ஒளியில் தண்ணிமுறிப்பை  நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

உழவுயந்திரம் வாங்கவேண்டும் என்று இதுவரை மலையர்  எண்ணியது கிடையாது. அவரிடம் இருந்தவை மூன்று ஏக்கர்  வயலும், எருமை, பசுமாடுகளுந்தான். அவரிடம் பணமாய்ப்  பெருந்தொகை இருக்கவில்லை. வருடா வருடம்  நெல் விற்கும்  வகையில் ஐந்நூறோ ஆயிரமோ கிடைக்கும். அதுவும் துணிமணி,  நாள் விசேஷங்கள், அவருடைய குடி முதலியவற்றில்  செலவழிந்துவிடும். இப்போதும் கையில் ஒரு ஆயிரம் ருபாவரை  பணம் இருந்தது. இச் சிறுதொகை, உழவு இயந்திரம்  வாங்குவதற்குப் போதாது. இருபத்தைந்து ஆயிரத்துக்குப் புது  இயந்திரம் வாங்கத் தன்னால் முடியாவிடினும், அரைப் பழசாவது  மிசின் ஒன்று வாங்கவேண்டுமென்று  கணக்குப் போட்டுப்  பார்த்தார் மலையர். எப்படியென்றாலும், தன்னுடைய வயலை ஈடு  வைத்தாகிலும், அதுவும் போதாவிடில் மாடுகளை விற்றாவது,  ஒரு உழவு இயந்திரம் வாங்கியே தீரவேண்டுமெனச் சங்கற்பம்  செய்துகொண்ட மலையர், இப்போ தண்ணிமுறிப்பை நெருங்கிக்  கொண்டிருந்தார்.

அவர் குமுளமுனையிலிருந்த சிதம்பரியர் வீட்டுக்குச்  செல்லும்போது, கதிராமனுடைய குடிசைக்குச் செல்லும்  ஒற்றையடிப் பாதையைக் கடந்துதான் சென்றார். ஆனால் அந்தப்  பக்கமே திரும்பிப் பார்க்க விரும்பாதவர்போல் நெஞ்சை  நிமிர்த்திக்கொண்டே சென்றார். இப்போது, தான் எண்ணிச்சென்ற  நோக்கமும் கைகூடாமல் போகவே, அவருடைய சினம் எல்லை  மீறிவிட்டது. 'இந்தப் பொறுக்கியாலைதானே நான் இண்டைக்குப்  போகாத இடமெல்லாம் போய் மொக்கயீனப்பட்டுக் கொண்டு  வாறன்! என்று உறுமியவாறே கதிராமனுடைய குடிசை இருந்த  திசையில் நின்று நிதானித்து நோக்கினார்.

மங்கலான நிலவொளியில் கதிராமன் வெட்டியிருந்த காடு  வெளிப்பாகத் தெரிந்தது. 'நான் நினைச்ச காரியங்களுக்கெல்லாம்  மண்விழுத்திப்போட்டு, அந்த வம்பிலை பிறந்தவளோடை இவன்  இஞ்சை காடுவெட்டி வயல் செய்யவோ?" என்று  கோணாமலையரின் நெஞ்சு கொதித்தது. உழவு இயந்திரம்,  நாலுபேரின் மதிப்பு என்றெல்லாம் மலையர் கட்டியெழுப்பிய  ஆசைகளைக் கதிராமன் சிதைத்துவிட்டான். குமுளமுனைச்  சிதம்பரியர் வீட்டில் அவர் பட்ட அவமானம், அவருடைய மனதை  நிலைகுலையச் செய்துவிட்ட இந்த வேளையிலே, அவருடைய  நெஞ்சில் குருரமானதொரு எண்ணம் உதித்தது. 'இவனுக்கு  இண்டைக்குச் செய்யிறன் வேலை!" என்று உறுமியவாறே  மலையர் தன் மடியைத்தடவினார். அங்கு நெருப்புப்பெட்டி  தட்டுப்பட்டது. அதைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த  ஒற்றையடித் தடத்தில் இறங்கி, கதிராமன் வெட்டியியிருந்த  காட்டை நோக்கி நடந்தார் மலையர்.

காட்டை வெட்டி வீழ்த்தி நெரித்து, அது நன்றாக வெய்யிலிலும்,  காற்றிலும் காய்ந்து சருகான பின்புதான் நெருப்பு வைப்பார்கள்.  காட்டுக்குத் தீ வைக்கும்போது மிகவும் பயபக்தியுடன்தான்  செய்வார்கள். பங்குனி, சித்திரை மாதங்களில் காட்டை  வெட்டினால் அது நன்றாக உலர்ந்து, ஆடி மாதத்தில் நெருப்புக்  கொடுப்பதற்குத் தயாராக இருக்கும். ஐயனை வேண்டிக்கொண்டு  கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்து, அந்தக் கற்பூரச்  சுடரிலேயே தென்னோலைச் சூழ்களைக் கொளுத்தி, அவற்றைக்  கொண்டு காற்றின் திசைக்கேற்ப காட்டுக்குத் தீ வைப்பார்கள்.  வெட்டிய காடு நன்றாகப் பற்றிப் பிடித்து எரியாமல் ஆங்காங்கு  ஊடுபற்றி எரிந்துவிட்டால், சருகுகள் மட்டும் கருகிப்போய்  பெருமரங்களும், கிளைகளும் எரியாது எஞ்சிவிடும். பின்னர்  அவ்வளவு மரங்களையும், கிளைகளையும் தறித்து அப்புறப்  படுத்துவதற்கு மிகவும் செலவாகும். பலரைக் கூலிக்கமர்த்தி  வேலைவாங்கப் பணவசதி உள்ளவர்களால்தான் முடியும்.  எனவேதான் கதிராமனும் ஆடி பிறக்கட்டும், காட்டுக்கு நெருப்பு  வைக்கலாம் என்றெண்ணி, அதற்கு வேண்டிய பொருட்களையும்  சேகரித்துக் கொண்டு சரியான சமயத்திற்காகக் காத்திருந்தான்.

மகனுடைய எண்ணத்தில் மண்போட வேண்டும், அவன்  படுகாடு வெளியாக்க முடியாமல் அவதிப்பட வேண்டும் என்று  கறுவிக் கொண்டு, வஞ்சம் தீர்ப்பதற்குக் கோணாமலையர்  துணிந்துவிட்டார். வேண்டுமென்றே வெட்டிய காட்டின்  மேல்காற்றுப் பக்கமாய்ப் போய் ஓரிடத்தில் குந்திக்கொண்டு,  சருகுகளைக் கூட்டிக்குவித்து அதற்கு நெருப்பு வைத்தார். நாள்  முழுவதும் பாடுபட்டு உழைக்கும் கதிராமனும், பதஞ்சலியும்  வேளைக்கே நித்திரைக்குச் சென்றிருந்தனர். எனவே மலையர்,  நிதானமாக நாலைந்து இடங்களில் காடு ஊடுபற்றி எரியும்  வகையில் நெருப்பு மூட்டிவிட்டுக் குருரமாகச் சிரித்துக்கொண்டே  தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய நெஞ்சில்  கொழுந்து விட்டெரிந்த சினமென்னும் தீ, இச் செயலின் பின்,  பெருமளவு தணிந்து காணப்பட்டது. ஆனால் அவர், கதிராமன்  வெட்டிய காட்டுக்கு வைத்த தீ, ஆங்காங்கு வளர்ந்து பற்றிக்  கொண்டிருந்தது.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 26 Apr 2024 13:03
TamilNet
HASH(0x5650c48dd3d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 26 Apr 2024 13:03


புதினம்
Fri, 26 Apr 2024 13:03
















     இதுவரை:  24814382 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9277 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com