அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 07 - 08
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 07 - 08   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 21 March 2005

7.


பதஞ்சலி பருவமடைந்து விளையாட்டுப்போல் மூன்று வருடங்கள் சென்றுவிட்டன. அந்த மூன்று வருடங்கள் பதஞ்சலியில் மட்டுமன்றி அந்தச் சின்னக் காட்டுக் கிராமத்திலேயும் எத்தனையோ மாறுதல்களை ஏறபடுத்திவிட்டுச் சென்றிருந்தன.

பதினாறு நிறைந்த பதஞ்சலி தண்ணிமுறிப்புக் காடுகளிலே தன்னிச்சையாகத் திரியும் பெண் மான்களைப் போன்று அழகும் நளினமும் நிறைந்தவளாக விளங்கினாள். கிடுகிடுவென வளர்ந்து மதாளித்துக் குலை தள்ளவிருக்கும் வாழையின் செழுமை அவளுடைய உடலில் தெரிந்தது.

  வயல்வெளி, அதன் ஓரத்திலே அடர்ந்திருந்த காட்டை வெகு தூரத்திற்குப் பின்னே தள்ளிவிட்டாற் போன்று, விசாலித்திருந்தது. குளத்தினின்று செல்லும் வாய்க்காலும், அதையொட்டி அமைந்திருந்த செம்மண் சாலையும் செப்பனிடப்பட்டுச் சீராகக் காணப்பட்டன. உயர்த்தப்பட்டுக் காணும் குளக்கட்டில் இப்போது ஏறிநின்று பார்த்தால், ஒருபுறம் குளத்தில் நீர் நிறையத் தேங்கி அலையடிப்பதைக் காணலாம். மறுபுறம் குளக்கட்டின் கீழே விசாலித்துக் கிடக்கும் வயல்களில் பச்சைப் பசேலெனப் பயிர்க்கடல் தளும்புவதைப் பார்க்கலாம்.

  குளத்துக்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த காடியர் பஙகளா, விரிந்துகொண்டே போகும் வயல்வெளி, அதன் நடுவே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் காணப்படும் சிறு குடிசைகள், இவை யாவுமே தண்ணிமுறிப்பு இப்போது ஒரு குக்கிராமம் அல்ல, மெல்ல வளரும் ஒரு குடியேற்றத் திட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லி நின்றன.

  கோணாமலையர்கூடச் சற்று மாற்றமடைந்தவராகக் காணப்பட்டார். கதிராமனும், மணியனும், ராசுவும் வேலைகள் அத்தனையையும் கச்சிதமாகக் கவனித்துக் கொள்ளவே, அவருக்கு ஓய்வுநேரம் அதிகமிருந்தது. காடியர் மிகவும் குஷியான பேர்வழி! எனவே ஓய்வு நேரங்களில் காடியருடன் பலதையும் பேசிச் சந்தோஷமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டார் மலையர்.

  உமாபதியரிடம் முதுமையின் தளர்ச்சி கூடுதலாகத் தென்பட்டது. இருந்தும் வழமைபோலக் கூலிவேலை செய்வதும், கதிராமன் முதலியோருடன் காட்டுக்கு வேட்டைக்குச் செல்வதுமாக அவருடைய காலம் போய்க் கொண்டிருந்தது. பதஞ்சலியின் திருமணம் ஒன்றே அவர் தன்னுடைய வாழ்வில் எதிர்பார்க்கும் முக்கிய விஷயமாக இருந்தது. தன்னை முதுமை முழுமையாகப் பற்றிக் கொள்வதற்கு முன் எப்படியாவது கொஞ்சப் பணத்தைச் சேர்த்து, யாராவது நல்ல உழைப்பாளி ஒருவனுடைய கையில் அவளைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் அயராது உழைத்தார்.

  அன்றும் எங்கோ ஒருவருடைய வயலில் நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலையில் வீட்டை நோக்கி உமாபதியார் வந்துகொண்டிருந்தார். அவர் தூரத்திலேயே வரும்போது கண்டுகொண்ட பதஞ்சலி குசினிக்குள் தேநீரை ஆற்றிக் கொண்டிருந்தாள். வாய்க்காலில் உடலைக் கழுவிக்கொண்டு வளவுப் படலையைத் திறக்கும்போது, உமாபதியரின் காலில் திடீரென நெருப்பால் சுட்டது போலிருந்தது. வலியில் ஓவென்று அலறிய அவர் குனிந்து நோக்கியபோது வாய்க்கால் ஓரத்தில் மண்டி வளர்ந்திருந்த புற்களிடையே நாகபாம்பொன்று விரைந்து செல்வதைக் கண்டார். அவருடைய அலறலைக் கேட்டுப் பதறித் துடித்து ஓடிவந்த பதஞ்சலி 'என்னணையப்பு?' எனக் கேட்போது, 'பாம்பு கடிச்சுப் போட்டுதம்மா!' என்றவாறே வலி பொறுக்க முடியாமல் துடித்தார் உமாபதியர். அவருடைய வலது புறங்காலில் நாலு இடங்களில் பொட்டுப்போல இரத்தம் சிறிதாகக் கசிந்து கொண்டிருந்தது.

  'ஆதி ஐயனே! நான் என்னணையப்பு செய்வன்!' என்று அரற்றிய பதஞ்சலி, 'இஞ்சைவிடப்பு! நான் வாயாலை கடிச்சு நஞ்சை உறிஞ்சித் துப்பிவிடுறன்!' எனக் கூறி அவருடைய காலை நோக்கிக் குனிந்தாள். 'சீ என்ன மடைவேலை செய்யப் பாக்கிறாய்! இஞ்சைவிடு காலை!' என்று பேத்தியைக் கடிந்து கொண்டவர், சிரமத்துடன் நடந்து சென்று குடிசைத் திண்ணையில் அமர்ந்து கொண்டார். 'புள்ளை! அந்த மான் கொடியை எடுத்து இதிலை நல்லாய் இறுக்கி ஒரு கட்டுப் போடு!' என்று அவர் சொன்னதும், பதஞ்சலி கொடியை எடுத்துக் கெண்டைக் காலில் இறுகக் கட்டினாள். அப்போது அவளுடைய விரல்கள் நடுங்கியதைக் கண்ட உமாபதியார், 'பயப்பிடாதை மோனை! எனக்கொண்டும் செய்யாது! நீ ஓடிப்போய் மலையரைக் கூட்டிக்கொண்டு வா!' என்றதும் பதஞ்சலி மலையர் வீட்டை நோக்கி விரைவாக ஓடினாள்.

  இரண்டுங்கெட்ட நேரத்தில் பதைபதைக்கப் பதஞ்சலி ஓடி வருவதைக் கண்ட பாலியார் பயந்து போனாள். 'என்ன புள்ளை?' என அவள் கேட்கமுன்பே, 'அப்புவுக்குப் பாம்பு கடிச்சுப் போட்டுதம்மா!' என்று தேம்பியழத் தொடங்கிவிட்டாள் பதஞ்சலி. பட்டிக்குள் எருமைக் கன்றுகளைக் கட்டிக்கொண்டிருந்த கதிராமன், பதஞ்சலி சொன்ன செய்தியைக் கேட்டு உமாபதியரின் குடிசையை நோக்கிப் பாய்ந்து சென்றான். 'தம்பி மணியம்! ஓடிப்போய்க் கொப்புவைக் கூட்டிக்கொண்டு வா! காடியர் வீட்டிலை இருப்பர்!' என்று பாலியார் மணியனை நோக்கிக் கூறிவிட்டு, பதஞ்சலியுடன் உமாபதியாரின் வீட்டுக்கு வேகமாகப் புறப்பட்டாள். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற ராசு பயந்தவனாகப் பதஞ்சலியையும் தாயையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டான்.

  உமாபதியாருக்கு நாக்குத் தடிக்க ஆரம்பித்துவிட்டது. அங்கு முதலில் சென்ற கதிராமன், விளக்கை எடுத்துவந்து கடிவாயைக் கவனித்தான். நான்கு பற்களுமே மிக ஆழமாக இறங்கியிருந்ததைக் கண்டதும் அவனுடைய முகம் இருண்டது. 'என்ன பாம்பு?' என்று கேட்டதற்கு, 'சர்ப்பம்!' எனத் திக்குத் திணறிக் கூறினார் உமாபதியார். இதற்குள் பதஞ்சலியும் பாலியாரும் அங்கு வந்துவிட்டனர். பதஞ்சலி வெளிறிய முகத்துடன் கதிராமனை நோக்கினாள். 'ஒண்டுக்கும் பயப்பிடாதை! நான் போய் ஒதியமலை வைத்தியத்தைக் கூட்டிக்கொண்டு வாறன்' என்று அவன் புறப்பட்டதைக் கண்ட பதஞ்சலிக்கு வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது.

  காடியரின் வீட்டு விறாந்தையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கோணாமலையரிடம், ஓடிவந்த மணியன் 'உமாபதியருக்குப் பாம்பு கடிச்சுப் போட்டுதாம்! உங்களை உடனை வரட்டாம்!' என்றதும், 'என்னடா கடுமையாய்க் கடிச்சுப் போட்டுதே? நீ ஓடிப்போய் வீட்டு மாடத்துக்கை பார், புதூர் மருந்து ஒரு சரை கிடக்குது, எடுத்துக்கொண்டு வா!' என மணியனுக்குக் கட்ளை பிறப்பித்துவிட்டு, உமாபதியாரின் குடிசையை நோக்கி விரைந்தார் மலையர்.

  அங்கே குடிசைத் திண்ணையில் படுத்திருந்த உமாபதியாரின் தலைமாட்டில் பாலியாரும், காலருகே பதஞ்சலியும் உட்கார்ந்திருந்தனர். பதஞ்சலியின் முகத்தில் களையே இல்லை. எதற்கும் இலகுவில் உணர்ச்சி வசப்பட்டுப்போகும் அவள் உமாபதியாரின் நிலையைக் கண்டு மிகவும் பயந்து போயிருந்தாள். அவருடைய உடலில் வினாடிக்கு வினாடி விஷம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. நிலைமையை அவதானித்த கோணாமலையர், 'கதிராமன் எங்கை?' என்று கேட்டார். 'அவன் வைத்தியத்தைக் கூட்டிக் கொண்டுவர ஒதியமலைக்குப் போட்டான்' என்று பாலியார் சொன்னதும், 'இந்த ரா இருட்டியிலை என்னண்டு  உந்தக் காட்டுக்காலை போகப்போறான்.... கையிலை லைற்றுக் கொண்டு போனவனே?' என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மணியன் காகிதப் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தான். குடத்தடிக்குச் சென்று வாயைக் கொப்பளித்துவிட்டுப் பயபக்தியுடன் புதூர் நாகதம்பிரான் கோவிலிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை எடுத்து உமாபதியரின் உச்சியிலும், கடிவாயிலும் பூசிவிட்டு அவரின் வாயினுள்ளும் சிறிது போட்டார்.

  பதஞ்சலி உமாபதியரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவருடைய முகத்திலே எந்தவிதச் சலனமுமில்லை. விழிகள் மெல்ல மெல்ல மேலே சொருகிக் கொண்டிருந்தன. அவளுக்கு நினைவு தெரிந்த நாள்முதல் மார்பிலும் தோளிலும் அவளையேந்தி அவளுக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்த அவளுடைய அப்பு பேசாமல் கிடப்பதைக் கண்டு அவளின் மனம் வெந்து வெதும்பியது!

  உமாபதிக்கு அவர்கள் பேசிக்கொள்பவை எங்கோ வெகு தொலைவில் கேட்பது போலிருந்தது. அவரால் எதையும் தொடர்ச்சியாகக் கவனிக்க முடியவில்லை. மெல்ல மெல்ல ஒரு அந்தகாரம் அவரை வந்து மூடுவது போலிருந்த அந்த வேளையிலும் பதஞ்சலியின் முகம் அவர்முன் தோன்றி 'என்னை விட்டிட்டுப் போகாதை அப்பு! நீயும் போனால் எனக்கு ஆர் இருக்கினம்?' என்று தேம்பியழுவது போலிருந்தது. அவளுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லவேண்டுமென்று அவர் உன்னியபோதும் எதுவுமே பேசமுடியவில்லை. வாய் நிறைய நாக்குத் தடித்துப்போய்க கிடந்தது.

 8.

அமாவாசை இருள்....! தண்ணிமுறிப்புக் குளத்துக்கு மேலிருந்த காட்டினூடாகச் செல்லும் வண்டிப்பாதையில் கதிராமன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். மையிருட்டைக் கிழித்துச் சென்றது அவனுடைய கையிலிருந்த ரோச்சின் ஒளி. காட்டு யானைகளும், கரடிகளும் உலவும் அந்தக் காட்டினூடாக இந்த இருட்டிலே தனியே போகும் துணிவு கதிராமன் ஒருவனுக்குத்தான் இருக்கமுடியும். வாழ்நாளெல்லாம் அப் பகுதிக் காடுகளிலே திரிந்த அவனுக்குக் காட்டில் செல்வதென்றால் மீன்குஞ்சு தண்ணீரில் நீந்துவது போன்றதுதான்! அவ்வாறிருந்தும் இப்போ அவனுடைய புலன்களெல்லாம் எந்த நிமிஷமும் ஆபத்தை எதிர்நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்தன.

  தண்ணிமுறிப்பிலிருந்து ஆறுகல் தொலைவிலிருக்கும் ஒதியமலை என்னும் சிறிய கிராமத்தில் ஒதியமலை வைத்தியம் என்ற பெயர்பெற்ற சேனாதியார் இருந்தார். அவர் மனம் வைத்து வைத்தியம் செய்வதற்கு முன்வந்துவிட்டால் எந்தக் கொடிய விஷமும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்பர். விஷகடி வைத்தியத்தில் அத்தனை திறமைசாலி!

  கதிராமனுடைய ரோச் வெளிச்சத்தில் பாதையைக் குறுக்கறுத்துச் செல்லும் காட்டு விலங்குகளின் கண்கள் தீப்பந்தங்கள் போல் ஒளிர்ந்தன. பச்சைப் பளீரென ஒளிவிடும் கண்கள் மான்களுக்குரியவை. பழுப்பு நிறமாக மங்கித் தெரிபவை முயல், மரநாய்களுக்குச் சொந்தம். இவ்வாறு தரம்பிரிக்கப் பழகியவன் கதிராமன்.

  ஒதியமலையை நெருங்கும் சமயம் பாதையின் நடுவே நெருப்புத் துண்டங்கள் போன்று இரண்டு விழிகள் சுடர் விட்டபோது, கதிராமன் சட்டென்று நின்று, சூய்! என்று அதட்டினான். பாதையின் நடுவே குந்திக் கொண்டிருந்த ஒரு சிறுத்தைப்புலி எகிறிப் பாய்ந்து காட்டுக்குள் மறைந்தது.

  கதிராமன் ஒதியமலைக் கிராமத்தினுள் நுழைந்த வேளை அங்குள்ள மக்கள் நித்திரைக்குச் சென்றிருந்தனர். ஊர் நாய்கள் இவனுடைய வரவு கண்டு இடைவிடாது குரைத்தன. அவன் வைத்தியரின் வளவுக்கு முன்னால் போய் நின்றபோது, அவர் வீட்டு நாயும் பலமாகக் குரைக்க ஆரம்பித்தது. நாய்களின் குரைத்தல் கேட்டு விழித்துக்கொண்ட வைத்தியர் சேனாதியார் விஷயத்தை ஊகித்து அறிந்து கொண்டார். அர்த்தராத்திரியிலும் அவருடைய உதவியை நாடி வேற்றூர் மக்கள் வந்து எழுப்புவது மிகவும் சாதாரண விஷயம்.

  எழுந்து விளக்கை ஏற்றிய சேனாதியார், 'ஆர் மோனை அது?' என்று கூப்பிட்டதும், கதிராமன் உள்ளே சென்று திண்ணையில் உட்கார்ந்து கொண்டான். கையில் விளக்கை எடுத்துவந்து அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தார் ஒதியமலை வைத்தியர். விஷகடி வைத்தியரிடம் முதலில் எதுவுமே கூறக்கூடாது என்ற வழக்கம் கதிராமனுக்கு நன்கு தெரியும். எனவேதான் அவன் ஒன்றுமே பேசாமலிருந்தான். அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தபின், விளக்கைத் திண்ணையின்மேல் வைத்துவிட்டு ஒரு சுருட்டை எடுத்துப் பற்றிக் கொண்டார் சேனாதியார். நெருப்புக் குச்சியின் சுவாலை ஒளியில் அவருடைய முகத்தைக் கவனித்தான் கதிராமன். அதில் எந்தவிதக் குறிப்பையுமே அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. நன்றாகப் பற்றிக்கொண்ட சுருட்டைக் கையில் எடுத்துக் கொண்டவர் புகையை ஊதிவிட்டு, 'நாலு பல்லும் வாளமாய்ப் பட நாகம் தீண்டிப் போட்டுது! இனி நாமொன்றும் செய்வதிற்கில்லை" என அமைதியாகச் சொன்னபோது, கதிராமன் உள்ளம் குன்றிச் செயலிழந்து போனான்.

  ஒதியமலை வைத்தியம் கையை விரித்து விட்டாரேயானால் இனிமேல் ஒன்றும் செய்வதிற்கில்லை என்பது கதிராமனுக்கு நன்கு தெரியும். இருப்பினும், 'நீங்கள் ஒருக்கா வந்து பாருங்கோவன்' என்று கெஞ்சினான்.

  'தம்பி! நான் வந்து ஒரு பிரயோசனமும் இல்லையெண்டு உனக்கு நல்லாயத் தெரியும்' என அவர் உறுதியாகக் கூறினார்.

  கதிராமன் கையில் லைற்றையும் எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணிமுறிப்பை நோக்கி ஏமாற்றத்துடன் நடக்க ஆரம்பித்தான. சற்று ஓய்ந்திருந்த ஊர்நாய்கள் கோஷ்டியாகக் குரைத்து அவனை வழியனுப்பி வைத்தன.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Apr 2024 06:55
TamilNet
HASH(0x5642b3f57840)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Apr 2024 06:55


புதினம்
Thu, 25 Apr 2024 06:55
















     இதுவரை:  24804365 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5220 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com