எழுதியவர்: தேவேந்திரன்
|
|
|
Sunday, 13 March 2005
'பாடசாலைக்கீதங்களில் கவித்துவம்' என்னும் தலைப்பிலான எனது ஆய்வுக்கட்டுரையின் முதலாவது அதிகாரத்தை முப்பது பக்கங்களில் எழுதிக்கொண்டுபோய், எனது ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியரிடம் சமர்ப்பித்தேன். அவருக்கே உரித்தான நகைப்புடன் நாளை மறுதினம் வருகைதரும்படி சொல்லியனுப்பினார். முக்கியமான கவிஞர்களினது சிற்சில கவிதைவரிகளையும், பேராசிரியர்கள் சிலரது மேற்கோள்களையும் கலந்து எழுதியிருந்த அந்த முதலாம் அதிகாரத்தில் பெரிதாகத் திருத்தமேதுமிருக்காது என நம்பினேன்.
குறித்த தினத்தில் பேராசிரியரைச் சந்திக்கப்போனேன். என்னைப் பார்த்ததும் அவர் முகம் இறுகத்தொடங்கியது. நான் சமர்ப்பித்திருந்த ஆய்வுக்கட்டுரையின் முதலாம் அதிகாரத்தைக் கையிலெடுத்தவர் என்னையழைத்து அதில் செய்யவேண்டியிருக்கும் திருத்தங்களை அடுக்கத் தொடங்கினார்.
“இஞ்சபாரும்! இந்தச் சப்ரரில நீர் தேவையில்லாததையெல்லாம் கோட் பண்ணியிருக்கிறீர். பக்கங்களைக் கூட்டவேணும் எண்டதுக்காக எழுதக்கூடாது. காத்திரத்தோட எழுதவேணும். நீர் இதில கோட்பண்ணியிருக் கிறதையெல்லாம் வெளில எடும். முக்கியமான விசயங்களை மட்டும் கோட்பண்ணும். எடுத்துக் காட்டுக் கவிதையளும் அப்பிடித்தான் இருக்கு, அதுகளையும் எடுத்திட்டு ஆய்வுக்குப் பொருந்தி வரக்கூடியதுகளாய்ச் சேரும். மற்றது ஒரு எடுத்துக்காட்டுக் கவிதையில கவிஞரின்ரை பேரை 'சண்முகம் சிவலிங்கம்' எண்டு முழுப்பெயரையும் எழுதியிருக்கிறீர்...”
“அவரின் பேரே அதுதான் ஸேர்” -நான் குறுக்கிட்டேன்.
“அது எனக்கும் தெரியும். அவரும் என்ர ஸ்ருடன்ற்தான். ச.சிவலிங்கம் எண்டு மட்டும் எழுதினால் காணும்” என்றார் கோபமாக. பிறகு தொடர்ந்தார். "மற்றது சப்ரரைத் தொடங்கினவிதம் நல்லாயில்லை. தொடக்கம் கவர்ச்சியாயும் ஈர்க்கக்கூடியதாயுமிருக்கவேணும். அதையும் மாத்தி எழுதும். அடுத்தகிழமை கொணந்து சப்மிற்பண்ணும். ஓ.கே.”
கட்டுரையைக் கையில் தந்தவர் தனது வேலையில் மூழ்கினார்.
மனத்தளர்வுடன் திரும்பினேன். இனி இவ்வளவையும் மாற்றி எழுதுவது என்றால்....
அதிர்ஷ்டவசமாக அன்றைக்குப் பின்னேரம் இளம்பிறையைச் சந்தித்தேன். அவன் சென்ற வருடம் 'ஆலயத்திருவூஞ்சல் பதிகங்களில் கவித்துவம்' எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து ஏ(A) வாங்கியவன் என்பதும் இதே பேராசிரியர்தான் அவனுக்கு வழிகாட்டியவர் என்பதும் ஏற்கெனவே தெரிந்திருந்தது. அவனிடம் நடந்ததைச் சொன்னதும் முதலில் பெரிதாகச் சிரித்தான் - பிறகு சொன்னான்:
“மச்சான் உனக்கு ஒரு அறுப்புந் தெரியாதடா. அந்தந்த ஆக்களுக்கு ஏற்ற மாதிரியெல்லோ எழுதவேணும். அதை விட்டுப்போட்டு நீ நினைச்சமாதிரி எழுதிறதே! அந்தாள் மினக்கெட்டு கவித்துவத்தைப்பற்றி பத்துப் பக்கங்களில ஒரு கட்டுரை, போன வருச மன்ற மகஸினில எழுதியிருக்கு. அதில ஏதாவது சில வரிகளைக் கோட் பண்ணியிருக்கிறியா?” என்று கேட்டான்.
எனக்கு ஏதோ விளங்குவது போல இருந்தது. “இல்லை” என்றேன்.
“அங்கதான் பிரச்சினை தொடங்குது. அந்தாள் எழுதின கட்டுரையில இருந்து சில வரியள எடுத்து அஞ்சாறு இடத்தில கோட்பண்ணிக்கொண்டு போ. சப்ரரை மாத்தி எழுதவேண்டிய அவசியமே இல்லை” என்றான்.
இளம்பிறை சொன்னபடியே செய்து பேராசிரியர் குறிப்பிட்டிருந்த தினத்தில், முதலாம் அதிகாரத்தை எடுத்துப்போய்ச் சமர்ப்பித்தேன். வழமைபோல் நாளைமறுதினம் வரச்சொன்னார். போனேன். புன்னகை புரிந்து வரவேற்றார்.
“வாரும்! வாரும்! திறமா எழுதியிருக்கிறீர். தொடக்கமே நல்ல ஈர்ப்போடஇருக்கு (தொடக்கத்தை நான் மாற்றவில்லை!). கோட்பண்ணவேண்டியதையெல்லாம் கோட்பண்ணியிருக்கிறீர். இதில திருத்தம் ஒண்டுமில்லை. அடுத்த சப்ரரையும் இதைப்போல எழுதும்”.
திரும்பிவரும்போது இளம்பிறைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தேன்.
தொடர்ந்து மற்ற அதிகாரங்களையும் அதைப்போல எழுதி நான் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்ததும், அதற்காக ஏ(A) வாங்கியதும் வேறுகதை!
|