Sunday, 13 March 2005
'சினிமா' என்பதும் ஒரு கலை வடிவம்தான். இதை நிலைபெறச் செய்ய மேற்குலகிலேயே பல ஆண்டுகள் பிடித்தன. இலக்கியம், ஓவியம், சிற்பம், இசை, நடனம் போல சினிமாக் கலைக்கும் தனி இடமுண்டு. ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், போலந்து, இந்தியா போன்ற நாடுகளில் தோன்றிய அபூர்வமான திரைப்பட இயக்குநர்கள் சினிமாவை ஒரு புதிய கலை மொழியாக்கி உலகுக்கு வழங்கியுள்ளனர். எல்லா உன்னத கலைப் படைப்புகளுமே இடையறாத தேடுதலுக்கான தூண்டியாக அமைந்து, மானுட மேன்மையின் பக்கம் திசைதிருப்பும் ஆற்றல் கொண்டவையாகவே உள்ளன. இதேபோன்று சினிமாவும் தனது எல்லையை ஆழ - அகலப் பரப்பிநிற்கிறதென்பதைக் காணலாம். உலக நாடுகள் தமது நாட்டின் கலை அடையாளங்களில் ஒன்றாகச் சினிமாவையும் முன்வைப்பதைக் காண்கிறோம், கலைப் பொக்கிஷங்களாக சினிமாவும் நாடுகளுக்குப் பெருமை சேர்க்கிறது. குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்துள்ள ஈரானிய சினிமா இன்று உலகில் தனது தடத்தைப் பதித்து வருவதைப் பார்க்கிறோம்.
இவ்வாறான கனதியான பெறுமானம் சினிமாவுக்கு உள்ளபோது, சினிமா என்றால் என்ன என்பது பற்றி எவ்வளவு தூரம் நாம் புரிந்து வைத்துள்ளோம் என்பதை எமது வருங்காலச் சந்ததியினர் சுய விமர்சனம் செய்யத்தவறினால், உலகம் பல ஆண்டுகள் முன்னோக்கி ஓடிவிடும், அதன் பின்பு எட்டிப்பிடிக்க முடியாத எல்லைக்கே போய்விடும். இது இவ்வாறிருக்க,
தமிழக சினிமாப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் இன்று எமது வாழ்க்கையின் பிரிக்கமுடியாத கூறாக ஆக்கிரமித்திருப்பதைக் காணலாம். கூடுதலாக இளைஞர்கள் - யுவதிகள் அன்றாடப் பாவனைப் பொருளாக இந்தச் சலன ஊடகத்தை மதிப்பதை அவதானிக்க முடிகிறது.
கலை, இலக்கியப் படைப்புகளை அடையாளம் காண்பதில் அறிவுத்தள மட்டத்தில் உள்ள வேறுபாடு புரிதலைச் சிக்கலாக்கவே செய்யும்.
படைப்புகளை ரசிகரின் தள மட்டத்திற்கு இறக்குவதென்பது தவறு, தமிழ் சினிமாவில் இதுதான் நடக்கிறது. சினிமாப்பண்ட வியாபாரிகள் புரியும் வர்த்தக தந்திரம்தான் ரசனை மட்டத்தைக் கீழிறக்குவது என்பதாகும். இதன் விளைபொருள்களே நம்மிடம் வந்து குவிகின்றன. அவர்கள் 'கோடி'கள் குவிக்க நாம் வரிசெலுத்துகிறோம், அவ்வளவுதான்.
அண்மையில், கொழும்பில் தமிழக நடிகர்- தயாரிப்பாளர் சரத்குமார் தொலைக்காட்சி யொன்றுக்கு வழங்கிய பேட்டியில், தமிழ் சினிமா வர்த்தக முதலீடு பற்றிய தொனிப்பொருளேநிறைந்து காணப்பட்டது, இவர்கள் நல்ல சினிமாவைத் தருவார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? மனிதனில் இயல்பாகவுள்ள தப்பித்துக்கொள்ளும் (Escapism) உபாயங்களின் வடிகாலாகக் கழியக்கூடிய காட்சித்துண்டுகளை வலிந்து புகுத்துவதைத் தயாரிப்பாளர்கள் பெரிதும் விரும்புவார்கள், இலாபமடைவதே அவர்களின் ஒரே இலக்கு. படம் ஓடினால் வெற்றிப்படம் என்ற புகழோடு அடுத்த படத்துக்குப் பூஜை போடுவார் தயாரிப்பாளர். பத்திரிகைகள் சினிமா நடிகர் நடிகைகளுக்கு ஆலவட்டம் பிடித்து - சக பத்திரிகைகளோடு விற்பனைப் போட்டியிட்டால் போதுமென்று தமது பணியை மட்டுப் படுத்துவதைப் பார்க்கின்றோம். ரசிகர்களுக்கு ஓரளவாவது விழிப்புணர்வு (சினிமா பற்றிய) ஏற்படுத்தவேண்டிய கடமை இவர்களுக் கில்லையா? ஆனால், உதிரியாக சிலர், நல்ல சினிமாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை அவர்களின் செயற்பாடுகள் காட்டுகின்றன.
இவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் எமது நாட்டின் தமிழ்சினிமா வளர்ச்சிக்கு நிச்சயம் உதவக்கூடிய முதல் படிகளே. இளைய தலைமுறையினர், நல்ல சினிமாவைத் தெரிவு செய்யவும் புரிந்துகொள்ளக்கூடிய அறிவை வளர்க்கக்கூடிய சினிமா ரசனையைப் பெற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டவேண்டும்.
முதலில், எமது தமிழக சினிமாப்படங்களில் உள்ள குறைபாடுகள் எவை? இவை எவ்வாறு சினிமா மொழிக்கு முரணாகச் செயற்படுகின்றன எனச் சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலில், நடிப்பு:
ஒரு சிநேகபூர்வமான கலந்துரையாடலின் போது தமிழக இயக்குநர் தங்கர்பச்சான், தமிழீழப் படங்களில் நடிகர் - நடிகைகளின் நடிப்பாற்றல் பற்றாக்குறையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அவரின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் சினிமா நடிப்புப் பற்றிய அவரின் எண்ணக்கரு, தமிழக நடிகர் நடிகைகள் வெளிக்காட்டும் நடிப்பை ஒப்பீடு செய்து குறிப்பிடப்பட்டிருந்தால் அது சர்ச்சைக்குரியதே. அன்றுதொட்டு இன்று வரை தென்னிந்திய நடிகர் நடிகைகள் பெரும்பாலும் அபிநய நடிப்பின் தொடர்ச்சியாகவே சினிமா நடிப்பையும் பேணி வருவது அவதானிப்புக்குரியது. நடன அபிநயம் (நவரச முத்திரைகள் போன்ற) மேடை நாடகங்களுக்கு வந்து, சினிமாவில் தொற்றிக்கொண்டு, நீண்;டகாலம் தமிழ்சினிமாவை ஆதிக்கம் செலுத்தியதை மறந்துவிடலாகாது. இத்தாக்கத்தின் எச்ச சொச்சங்கள் இன்றும் சற்று மெருகோடு தொடர்ந்துகொண்டிருப்பதையும் அவதானிக்கலாம். இவ்வாறான மிகைப்படுத்திய உணர்வு வெளிப்பாட்டிலிருந்து தமிழீழப் பட நடிகர்கள் பலர் விடுபட்டிருந்தபோதிலும், குறிப்பிட்ட உணர்வுநிலைக்கேற்ப அவர்களால் இயல்பான நடிப்பைக் கொண்டுவர முடியாமல் போயிருப்பதை அவர் குறிப்பிட்டிருந்தால் ஆக்கபூர்வமான கருத்தாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நடிப்பு மிகையானாலும் சரி குறைந்தாலும் சரி, தவறுதான்.
அடுத்து, திரைக்கதை வசனம்:
பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்லும் பாணி இன்றும் தொடர்கிறது. இதையே படமாக்கப்பட்ட மேடை நாடகமென்பர். சினிமாவில் சட்டகங்களின் ((Frames)) அசைவும் ஆழமும்தான் காட்சி ஊடக மொழி பேசுகின்றன, ஒலிகள் காட்சிக்கு வலுச்சேர்க்கவே பயன்படுத்தப்படும். நல்ல சினிமாக்கள் இத்தகைய சிறப்பியல்புகளைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். உரையாடல்கள் வரவேண்டிய இடங்களில் அவை இயல்பாக அமைந்திருக்கும் தன்மையைக் காணலாம்.
அடுத்து, படப்பிடிப்பு:
இதில் இயக்குநரின் எண்ணத்திற்கேற்ப காட்சிகளைத்திட்டமிட்டுப் படமாக்கும் பொறுப்பு படப்பிடிப்பாளருக்குரியது. தமிழக சினிமாவில் சிறந்த படப்பிடிப்பாளர்கள் இருந்தபோதிலும் அவர்களின் ஆளுமை முழுமையாக வெளிப்படாமல் இருப்பதற்குரிய காரணம், அவர்களை இயக்குபவர்களின் ரசனை மட்டமே. எனவே, சினிமா ரசனை முதலில் வளர்ச்சி காணவேண்டும்; விமர்சனங்கள் பெருகவேண்டும்.
தமிழிலும் நல்ல சினிமாக்கள் உருவாகும் என நம்புவோம்.

'சினிமா' காமிராவினால் பதிவுசெய்யப்பட்ட பல்சுவை நிகழ்ச்சியுமல்ல, எந்த ஒரு படத்திலும் இழையோடும் ஒரு மையக்கரு ஒன்று இருக்கும். இந்தக் கருவைச் சாராத எந்தக் காட்சிப் படிமத்திற்கும், ஒலிக்கும் அப்படத்தில் இடமில்லை. அப்படி சம்பந்தமில்லாத காட்சி வந்தால், அது சினிமாவாக இல்லாமல் படமாக்கப்பட்ட பல்சுவை நிகழ்ச்சி ஆகிறது. சினிமா, வாய்ப்பேச்சால், வார்த்தையால் சொல்லப்படுகிறதல்ல, அப்படி இருந்தால் அதற்கு ஒரு திரை தேவையிருக்காது. ஒலிநாடாவிலோ, வானொலியிலோ கேட்டுத் திருப்தியடைய முடியும்.”
- தியடோர் பாஸ்கரன் [தமிழக விமர்சகர்] |
|