Sunday, 13 March 2005
ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிபற்றி எடுத்துரைப்போர் நாவல், சிறுகதைத் துறைகளை விட கவிதைத்துறை சிறப்புற்றிருப்பதாகக் கூறுவர், இது ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான். எனினும், நவீன கவிதைபற்றி இத்தகைய அவதானிப்பு குறிப்பிட்ட கவிதைத் தொகுப்புகள் சிலவற்றை வைத்தே கூறப்பட்டுவருகின்றது, பரந்துபட்ட நிலையில் முழுத்தொகுப்புகளும் கவனத்துக்குட்படுவதில்லை. இன்னொருவிதமாகக் கூறின், ஈழத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் வெளிவருகின்ற அனைத்துத் தொகுப்புகளும் அவர்களது பார்வைக்குட்படுவதில்லை. எண்பதுகளின் பிற்பகுதி தொடக்கம் தொகுப்புகளின் வரவு அதிகரித்துக் காணப்படும் அதேவேளையில், அவற்றை எளிதாகப் பெறமுடியாத நிலைமை காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை. இத்தகைய தொகுப்புகள் பலவற்றையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது, ஈழத்து நவீன கவிதை 'வளர்ச்சி'யின் ஆரோக்கியமற்ற பக்கங்கள் சில வெளிப்படுகின்றன!
மேற்கூறிய விதத்தில் நோக்கும்போது, முதலில் குறிப்பிடத்தக்கதாயுள்ளமை, 'மேத்தா, வைரமுத்து பாணியிலான' கவிதைப்போக்கு தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவது. இப்போக்கு முன்னரைவிட அதிகரித்துள்ளது என்றுகூடக் கூறலாம். பின்வரும் தொகுப்புகள் இவ்வேளை நினைவுக்கு வருகின்றன: புயல் வாசித்த புல்லாங்குழல் (1991), கிழக்கில் வெளுக்காத வழக்கு (1991), உன்னிடம் விரல்கள் கேட்கிறேன் (2000), என் உயிரும் உன் முகவரியும் (2000). இவ்வாறு இன்னும் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கவனத்துக்குரிய மற்றொரு விடயம், 'உற்பத்தி' செய்யப்படும் கவிதைகளின் வரவு பெருகியுள்ளமையாகும். இதனைத் தமிழ்நாட்டு விமர்சகரொருவரின் கூற்றினூடாக எடுத்துரைப் பது வசதியானது: “ஆனால், ஈழத்தில் அவதிப்படுவோரும் சரி, புலம்பெயர்ந்து வாழ்வோரும் சரி, அவர்கள் வாழ்க்கை எவ்வளவு நீண்டகாலமாகக் கடும் சோதனைகளுக்கும், துயருக்கும் உயிர் இழப்புகளுக்கும் இரையான வாழ்க்கை என்று நினைத்துப்பார்க்கும்போது, அந்த அனுபவங்கள் உண்மை என முகத்தில் அறையும்போது, நீண்டநீண்ட வாக்கியங்கள் எவ்வித உயிர்த்துடிப்பும் அற்று அதைப்புத்தராது, மனச்சலனம்தராது, எவ்வளவு யாந்திரிகத் தனமாக எழுதப்படுகின்றன என்று பார்க்க வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஒரு ஹாஸ்பிடலில், இன்ஜெக்ஷன் ஸிரிஞ்சுகளைத் தள்ளுவண்டியில் எடுத்துச்செல்லும் காட்சியை,
'தட்டில் நிறைய வெண்டைக்காய்கள் நிரப்பினாற்போல ஊசித்தட்டை ஹாஸ்பிடல் ஆயா வைத்துச்செல்கையில்'
என்று மிகப் புகழ்வாய்ந்த தமிழ்நாட்டுக் கவிஞர் எழுதுகிறார். இன்ஜெக்ஷன் ஸிரிஞ்சுகள் வெண்டைக்காயாகத் தோற்றம் அளித்த காரணம் என்ன? மனநிலை என்ன? சூழல் என்ன? என்பது தெரியவில்லை. ஏதோ உவமைபுகுத்தவேண்டும். அதுதான் கவிஞனுக்கு அழகு. அதுதான் இதைக் கவிதையாக்கும் நினைப்பு. இதில் அனுபவ உண்மை ஏதும் இல்லை. இது சுகவாசத்தின் பிறப்பு. ஆனால் யாழ்ப்பாண அனுபவங்களை நேரடியாகத் தானே அனுபவித்த - அக்காயங்களைச் சுமந்து நிற்கும் ஒருவர்,
'ஒளிக் குருதி வீச்சோடு எழுகின்ற சூரியனே பார் இரத்தப் பிடிப்பின்றி சோகையுற்றோம் உன் குருதியை எமக்குள் பாய்ச்சு' என்றும், 'துயர்க் கொடீ, உணர்வின் மென் தண்டாகப் போனேன் நான் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகும் வெண்பனியின் இதயம் படைத்தேனா' என்றும் எழுதுவது திடுக்கிடவைக்கிறது....” 'போலச்செய்யும்' (தன்னைக் கவர்ந்த தொரு கவிதையை முன்மாதிரியாகக்கொண்டு எழுதுதல்) கவிதைகளின் வரவும் பெருகியுள் ளமை ஆழ்ந்து நோக்கும்போது தெரிய வருகின்றது (முற்கூறிய 'உற்பத்திசெய்தல்' என்பதும் போலச்செய்தல் என்பதும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவையே). மரபு வடிவக் கவிதைகள் எழுதிப் பழக்கமுள்ள இளங்கவிஞர் ஒருவருக்கு 'சரிநிகர்' கவிதைகளை - வாசிக்கக் கொடுத்ததும், அதன் பின் நவீன வடிவக் கவிதைகள் இரண்டை அவர் எழுதிவந்ததும் - அவை சிறப்புடையனவாக இருந்ததைப் பாராட்டியதும், 'சரிநிகர்' கவிதைகள் சிலவற்றைப் 'பார்த்து' சில சில பகுதிகளை இணைத்து அவற்றைத் தானெழுதியதாக அவர் கூறியதும் எனக்கு ஏற்பட்டதொரு அனுபவமாகும். இதே சரிநிகரில் வவுனியாவைச் சேர்ந்த வாசகரொருவர் ஒருதடவை, சரிநிகர் கவிதைகளை வெட்டி - சேர்த்து தானெழுதிய கவிதையொன்றுபற்றி (உதாரணம் தந்து) வாசகர் கடிதத்தில் எழுதியிருந்ததும் இலக்கிய ஆர்வலருக்கு நினைவிருக்கலாம். இவ்வாறு இலைமறைகாயாகப் பலருள்ளனரென்பதே கசப்பான உண்மையாகும்!
மேலும் இளங்கவிஞர் பலரது கவிதைத் தொகுப்புகள் பிரதேசமட்டங்களில் பரவலாக வெளிவருவதும், அவற்றுள் பெரும்பாலானவற்றின் தரம் கேள்விக்குறியாக இருப்பதும், பாராட்டு விமர்சனங்காரணமாகவோ கவிதைகளைத் தொகுப்பு உருவில் கண்ட (உளவியல் சார்ந்த) பூரிப்புக் காரணமாகவோ அக்கவிஞர்கள் தம்மை 'முதிர்ந்த கவிஞர்களாகக்' கருதிக்கொள்வதும் கவனத்திற்குரிய இன்னொரு விடயமாகின்றது. எடுத்துக்காட்டாக, பின்வரும் தொகுப்புகளைக் குறிப்பிடலாம்: விருட்சப் பதியங்கள் (பங்குனி 2000), தேட்டம் (கார்த்திகை 2000), ஏணி (2004), இளையநிலா (2003), நெஞ்சுகனக்கும் நினைவுகள் (கார்த்திகை 2004), அருவிகளின் சங்கமம் (2003), இளந்தளிர்கள் (2004), (இவற்றுள் பலவும் பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளன).
இனி, மூத்த அல்லது (கவனத்திற்குரிய) இளங் கவிஞர்கள் சிலரது கவிதைப்போக்குப் பற்றியும் முக்கியமான சிலவற்றைக் கூறவேண்டும்.
தொடர்ச்சியாக எழுதிவருகின்ற மூத்த கவிஞர்களது தொகுப்புகளை அவதானிக்கும் போது அவர்களிற் பலரது கவிதை வெளிப்பாட்டுமுறை ஒரே பாணியிலமைந்துள்ளமை புலனாகின்றது (எ-டு: வ.ஐ.ச. ஜெயபாலன், சு.வில்வரத்தினம்). வேறு சிலரது கவிதைகள் புலமைத்தளத்திற்குச் செல்வதும் (சேரன்), இருண்மை நிலைக்குச் செல்வதும் (சோலைக்கிளி) கவனத்திற்குரிய விடயங்களே. அபூர்வமாக, சிலர்மட்டுமே வெவ்வேறு உத்திகளுடன் எழுதுகின்றனர் (எ-டு: சிவசேகரம்).
சங்க இலக்கியம் பற்றிய ஆய்வுகள் செய்தோர் சிலர், அவை வாய்மொழி இலக்கியமரபை அடியொற்றி எழுந்தவை என்பர். அதற்கு ஆதாரமாகச் சில, பல சொற்கள் சொற்றொடர்கள் மீண்டும் மீண்டும் சங்கப் பாடல்களில் வருவதை ஆதாரமாகக் குறிப்பிடுவர். இன்றைய நவீன கவிஞர்கள், குறிப்பாக இளங்கவிஞர்கள் பலரிடமும் அத்தகைய தன்மை கணிசமாகக் காணப்படுகின்றது (எ-டு: 'இரைச்சலைமேவி இரைச்சலில் கலந்தேன்', 'இரைச்சலிடும்' 'இரைச்சல் இல்லை' முதலிய தொடர்கள் கவனத்திற்குரிய இளங்கவிஞரொருவரின் தொகுப்பில் உள்ளவை). ஆரம்பநிலையில், இப்பண்பைத் தவிர்க்க இயலாதுவிடினும், கவிதைக்கு உயிரான 'சொல்' 'சொற்பிரயோகம்' என்பவற்றில் இளங் கவிஞருக்குள்ள அக்கறை மிகக்குன்றியே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை கூறியவை அனைத்தையும் விட இன்னொரு முக்கிய விடயம், தலைமுறை வேறுபாடின்றி எமது கவிஞர்கள் பலரும் தொடர்ந்து குறிபிட்ட ஓரிரு விடயங்கள் பற்றியே கவிதை எழுதிவருவது. இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், இன்றைய அரசியல் நெருக்கடிமட்டுமே எமது முக்கிய பிரச்சினை அன்று, சூழலியல், உலகமயவாக்கம், வெகுசனத் தொடர்பூடகங்களால் ஏற்படும் பாதிப்பு, கல்வித்துறை மாற்றங்கள் எனப்பலவும் எமது கவனத்திற்குட்படவேண்டியவையே. பதிலாக, பெரும்பாலானோர் அரசியல் நெருக்கடியை மட்டுமே கவிதைப்பொருளாகக் கருதிச் செயற்படுகின்றனர் (இக்குறை சிறுகதை, நாவல் எழுத்தாளர்களுக்கும் பொருந்துவதே). இதுபற்றி எம்மிற்பலரும் கவனத்திற் கொள்ளாமை ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும்.
அத்துடன், மேற்கூறிய பலவீனங்;களிலிருந்து மீள்வதெவ்வாறு என்பதுபற்றிச் சிந்திப்பதும், இளங்கவிஞர்கள் தமது கவிதையாக்கத்தில் அதிக அக்கறை காட்டுவதும், பாராட்டுகளின் போது விழிப்புணர்வுடன் செயற்படுவதும் அவசிய தேவைகளாகின்றன!
|