Sunday, 13 March 2005
‘யாழ்ப்பாணக் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின்மூலம் முக்கியத்துவம் பெற்ற கே.வி. நடராஜன், தமிழ்த் தேசியவாதியாய்ச் செயற்பட்ட கவிஞர் தில்லைச்சிவன், பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாய் படைப்புலகிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டுழைத்த ‘நாட்டுப்பற்றாளர்’ சொக்கன் ஆகியோரின் மறைவிற்குத் ‘தெரிதல்’ அஞ்சலி செலுத்துகிறது! |
றெஜி சிறிவர்த்தன
இலங்கையின் சிறப்புமிகு புதல்வர்களில் ஒருவரான றெஜி சிறிவர்த்தன, சென்ற மார்கழியில் காலமானார்.
அவர், சிறந்த மனிதர் - நேர்மையான மார்க்சியவாதி, இலங்கை இடதுசாரிகள் பலரைப்போல் சிங்களப் பேரினவாதச்சேற்றைத் தன்மீது (ஒருபோதுமே) பூசிக்கொண்டவரல்லர், தமிழ் மக்களிற்கெதிரான இனவொடுக்கல் நடவடிக்கைகளிற்கெதிராக எழுதியும் பேசியும் வந்தார். பாடநூல்களில் காணப்படும் இனவாதக் கருத்துக்கள் பற்றி ஆராய்ந்து வெளிப்படுத்தினார், 1979 ஆம் ஆண்டின் 'பயங்கரவாத தடைச் சட்டத்'திற்கெதிராகவும் தீவிரமாய்ச் செயற்பட்டார், சிவிலுரிமைக் கழகத் தலைவராகவுமிருந்தார். ஆங்கிலம், சிங்களம், ரஷ்ய மொழிகளில் புலமையுள்ளவர், வேறுசில ஐரோப்பிய மொழிகளை அறிந்திருந்தாரெனவும் தெரிகிறது.
இலக்கியம் - திரைப்படம் - கலைக் கோட்பாடுகள் - அரசியல் பற்றிய அவரது மார்க்சியப் பார்வை செழுமையானது, நெகிழ்ச்சி மிக்கது, எழுபதுகளில் ஈழத் தமிழ்ப்பரப்பிலும் ஓரளவு தாக்கம் விளைத்தது. 'லங்கா காடியன்', 'டெய்லி நியூஸ்' முதலிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன, தமிழில் 'அலை', 'திசை', 'சமர்' போன்றவற்றில் சில கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
'சோவியத் யூனியனின் உடைவு' என்ற அவரது விரிவான நூல் தமிழில் வெளிவந்துள்ளது, தவிர, 'மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள்', 'மரணதண்டனைக்கெதிரான வாதம்' ஆகிய நூல்களிலும் அவரது கட்டுரைகள் உள்ளன.
அவரிற்கு 'தெரிதல்'இன் துயர அஞ்சலி!
|