அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 19 September 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 04 - 05
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 04 - 05   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 06 March 2005

4

முரலி மரங்களில் பழங்கள் முடிந்துவிட்டன. வயல்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராய்க் கிடந்தன. உமாபதியரின் சின்னக் குடிசை, கோணாமலையரின் வீட்டுக்கு வடக்கே குமுளமுனைக்குச் செல்லும் பாதையோரமாக அமைந்திருந்தது. அவர் தன் பேத்தி பதஞ்சலியைக் கையில் பிடித்துக்கொண்டு கால்நடையாய்த் தண்ணிமுறிப்புக்கு வந்தபோது, மலையரின் உதவியோடுதான் இந்தக் குடிசையைப் போட்டுக் கொண்டார்.

வேட்டை நாய்களால் துரத்துப்பட்ட குழிமுயல் பற்றைக்குள் ஓடிப் பதுங்கிக் கொள்வதுபோல உமாபதியரும் ஏதோவொன்றால் துரத்தப்பட்டவராகத்தான் தண்ணிமுறிப்புக்கு ஓடிவந்தார்.

அந்தச் சிறு குடிசையையும், வளவையும் மிகவும் துப்பரவாகவும், அழகாகவும் வைத்திருந்தாள் பதஞ்சலி. பாலியாரைப் பார்த்துப் பல நல்ல பண்புகளைப் பழகிக் கொண்டிருந்த அவள், அடிக்கடி அங்கு சென்று வாழைää கத்தரி, மிளகாய்க் கன்றுகளை வாங்கிவந்து குடிசையைச் சுற்றிலும் செழிப்பான தோட்டம் போட்டிருந்தாள். சிறிய வளவாயினும் அவளுடைய அயராத உழைப்பின் பயனாக அங்கு அழகு மிளிர்ந்தது. படலையிலிருந்து குடிசைக்குச் செல்லும் சிறிய நடைபாதையின் ஓரங்களிலே அழகிய பூக்கள் சிரித்தன. பசிய இலைகளைப் பரப்பியவாறே குடிசையின் கூரையில் பூசணிக்கொடி படர்ந்திருந்தது. வெண்மணல் பரப்பப்பட்டிருந்த சிறிய முற்றம் பளிச்சென்று பெருக்கப்பட்டிருந்தது. அழகோடு ஆரோக்கியமும் நிலவிய சூழல்!

கிழக்கு வெளுக்கும் நேரத்தில் பதஞ்சலி முற்றத்தைப் பெருக்கும் ஓசையைக் கேட்டு எழுந்த உமாபதியர், வேலி வேம்பில் குச்சியை முறித்துப் பல்துலக்கியவாறே வளவுக்கும் செம்மண் சாலைக்கும் இடையே சலசலத்தோடும் வாய்க்காலை நோக்கிச் சென்றார். கால்முகங் கழுவித் துண்டால் துடைத்துக் கொண்டு குடிசைப் பத்தியில் கட்டப்பட்டிருந்த சுரைக்குடுவைக்குள் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றி நிறையப் பூசிக்கொண்ட அவரின் விழிகளில் குடத்தடியில் நின்ற செவ்விளை தட்டுப்பட்டது.

அங்கு அவர் குடிவந்த சில நாட்களில் அந்தத் தென்னம்பிள்ளையை நட்டிருந்தார். பதஞ்சலியின் பராமரிப்பில் செழித்து வளர்ந்த அந்தச் செவ்விளை சில நாட்களுக்கு முன்தான் முதற்பாளையைத் தள்ளியிருந்தது. இதுவரை இயற்கையின் இறுக்கத்தில் இருந்த அந்தத் தென்னம் பாளை இன்று வெடித்து மெல்லச் சிரித்து நின்றது. அவ் வெடிப்பினூடாகத் தெரிந்த அழகிய முத்துக்கள் உமாபதிக்கு அவருடைய மகள் முத்தம்மாவின் சிரிப்பை ஞாபகப்படுத்தின. பதஞ்சலியும் முத்தம்மாவையே உரித்துப் பிறந்திருந்தாள். அதே செவ்விளை நிறம்! அதே பாளைச் சிரிப்பு!

முத்தம்மா இறக்கும்போது பதஞ்சலிக்கு மூன்று வயது. முத்தம்மா அந்தச் சின்ன வயதிலேயே இறந்திருக்க வேண்டுமா? இல்லை! அவளைச் சாகடித்துவிட்டனர் அவ்வூர் மக்கள்! கள்ளங் கபடில்லாமலிருந்த முத்தம்மா அநியாயமாகக் கிணற்றில் விழுந்து செத்துப் போனாள். அவளை வெளியே தூக்கிப் போட்டு 'நீ ஏனம்மா இன்னொருவர் கதையைக் கேட்டுச் சாகவேணும்? நான் ஒருத்தன் உனக்கு எண்டைக்குமே துணையாய் இருப்பனே!" என்று கதறியழுதார் உமாபதியார். ஆனால் அவற்றையெல்லாம் கேட்பதற்கு அவளுடைய உடலில் உயிர் இருக்கவில்லை. மூன்றே வயதான பதஞ்சலி எதற்கென்றே தெரியாமல் கோவென்று அழுதாள். இறந்துவிட்ட மகளை எண்ணிப் பாசத்தையெல்லாம் பதஞ்சலிமேல் சொரிந்து வளர்த்தார் உமாபதி. உரிய பருவத்தில் பாடசாலைக்கும் அனுப்பினார். எட்டு வயதுவரைதான் அவள் அங்கு படிக்க முடிந்தது. என்றைக்கு அவளுடைய பிஞ்சு மனம் நொந்துபோய்க் கண்கள் குளமாக, உதடுகள் துடிக்கப் பாடசாலையால் ஓடிவந்து உமாபதியரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாளோ, அன்றே அவளையும் கூட்டிக்கொண்டு தண்ணிமுறிப்புக்குக் குடிவந்தவிட்டார் உமாபதியார்.

கடந்தகால நினைவுகளில் ஆழ்ந்திருந்த உமாபதியாரை பதஞ்சலியின் குரல் இவ்வுலகத்திற்கு இழுத்து வந்தது. குடிசையை ஒட்டியிருந்த சிறிய குசினிக்குள்ளிருந்து கேட்ட அவளுடைய குரலில் வழமையான துடுக்கும், துடிப்பும் காணப்படவில்லை. 'அப்பு! ஒருக்காப் போய்ப் பாலியரம்மாவைக் கூட்டிக்கொண்டு வாணை!" என்று அவள் சஞ்சலத்துடன் கூறியதும் உமாபதியார் கலவரப்பட்டுப் போனார். 'ஏன் மோனை! ஏதும் சுகமில்லையோ?" என்று கேட்டதற்கு 'நீ போய் அவவைக் கூட்டிக்கொண்டு வாவன்!" என்று மீண்டும் பதட்டத்துடன் பதஞ்சலி கூறவே, உமாபதியார் மனம் பதைபதைத்தவராகக் கோணாமலையரின் வளவை நோக்கி வேகமாக நடந்தார்.

அந்தக் காலைப் பொழுதில் உமாபதியாருடன் விரைந்து வந்த பாலியார் வளவுப் படலையைத் திறந்துகொண்டு முன்னே வந்தாள். குசினிக்குள் பதஞ்சலியைக் காணாததால் விடுவிடெனக் குடிசைக்குள் நுழைந்தாள். என்னவோ ஏதோவென்று பயந்து போனவராய் ஏதுமறியாது உமாபதியார் வெளியே நின்றுகொண்டிருந்தார். சற்று நேரத்துக்கெல்லாம் முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த பாலியார்ää 'பதஞ்சலி பெரிய மனுசியாய் விட்டாள்!" என்று சொன்னதும் உமாபதியாரின் முகம் உவகையினால் மலர்ந்தது. மறுகணம் அவரின் மனம்ää இந்த மங்கலச் செய்தியைக் கேட்க தனது மகள் முத்தம்மா உயிரோடு இல்லையே என்று நினைத்துப் புழுங்கிக் கொண்டது. இன்பமும் துன்பமும் ஒருங்கே அவருடைய முகத்தில் சுழியிட்டன.

 

 

 

5

பாலியார் தனக்கு மகளில்லாத குறையை அடியோடு மறந்துவிட்டாள். அடிக்கடி அங்கு வந்து பதஞ்சலிக்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்தாள். பல வகையான உணவுப் பண்டங்களைப் பதஞ்சலிக்கென விசேடமாகத் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள். கண்டிப்பு நிறைந்த கணவனுக்கும் வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டுப் பின், பதஞ்சலி வீட்டுக்கும் வந்து உதவ பாலியார் போன்ற ஒருத்தியாற்றான் முடிந்தது.

அவளுடைய மேற்பார்வையில் ஆகவேண்டியவை யாவும் ஆகிää அன்று பதஞ்சலிக்குப் புனித நீராட்டும் வைபவமும் சிறப்பாக நடந்தது. தண்ணிமுறிப்பில் வாழும் அத்தனைபேருமே அன்று உமாபதியாரின் குடிசை முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலின்கீழ் கூடியிருந்தனர். கோணாமலையரின் குடும்பம், தண்ணிமுறிப்புக் குளத்தை மேற்பார்வைசெய்யும் காடியர்ää உமாபதியாரும் அவருடைய பேத்தி, பதஞ்சலி இவர்கள்தான் அந்தச் சிறிய காட்டுக் கிராமத்தின் குடிமக்கள்.

பாலியார் காலையில் எழுந்த தன்வீட்டுக் காரியங்களை முடித்துக்கொண்டு உமாபதியரின் வளவுக்கு வந்து பதஞ்சலியை நீராட்டிää புடவையுடுத்தி, பின்னர் விருந்துச் சமையலில் ஈடுபட்டிருந்தாள். குடிசைக்குள் ஒரு பக்கமாகப் போடப்பட்டிருந்த பழைய பாயில் அடக்கமாக அமர்ந்திருந்த பதஞ்சலிää அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த மலையர் வீட்டுக் குத்துவிளக்கின் ஒளியில் மங்களகரமாகத் திகழ்ந்தாள். முழுகிவிட்டுத் தலையை ஈரம் உணர்த்திää முடியாது அவிழ்த்து விட்டிருந்தாள். அந்தக் கருங்குழற் காட்டின் பகைப்புலத்தில் அவளுடைய சிவந்த முகம் காலைச் சூரியனைப்போன்று ஒளி வீசியது. உமாபதியார் இவ்வளவு நாட்களாகத் தான் சேமித்ததை எடுத்துச்சென்று தண்ணீருற்றுச் சிவானந்தப் பத்தரிடம் செய்வித்து வந்த இரண்டு பவுண் சங்கிலி அவளுடைய கழுத்தை அலங்கரித்தது. கூடவே அவர் வாங்கிவந்த நீலவண்ணச் சேலை அவளுடைய செவ்விளை நிறத்துக்கு மவுசு கூட்டியது.

குடிசைக்கு வெளியே ஒரே கலகலப்பு! மலையரும், காடியரும்ää உமாபதியரும் சேர்ந்துகொண்டு, முல்லைத்தீவிலிருந்து வாங்கிவந்த சாராயப் போத்தல் சகிதம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

உள்ளே குடிசைக்குள் அமர்ந்திருந்த பதஞ்சலி தன் தங்கச் சங்கிலியையும், புதுச் சேலையையும் அடிக்கடி தொட்டுப் பார்த்து மகிழ்ந்து கொண்டாள். பாலியாரின் கடைக்குட்டி ராசு குடிசைக்குள் வருவதும், அவளை விநோதமாகப் பார்த்து 'ஏன் இண்டைக்குச் சீலை உடுத்திருக்கிறாய்? ஏன் இண்டைக்குச் சங்கிலி போட்டிருக்கிறாய்?" என்பது போன்ற வினாக்களைக் கேட்பதுமாய் விளையாடினான்.

பதஞ்சலிக்குக் கதிராமனுடைய நினைவு வந்தது. அனைவருமே விருந்துக்காக வந்துவிட்டபோது அவன் மட்டும் இன்னமும் வரவில்லை என்பதை அவள் அப்போதுதான் கவனித்தாள்.

'ஏன் ராசு, இன்னும் மூத்தண்ணையைக் காணேல்லை?" என்று அவள் கேட்டதற்கு, 'அவர் விடிய வெள்ளாப்பிலை நாயளையும் கொண்டு குழுமாடு புடிக்கப் போட்டார்! இன்னும் வரேல்லை!" என்று ராசு பதிலளித்தான். 'நேற்று முழுதும் காட்டிலை திரிஞ்சு உடும்பு பிடிச்சுக்கொண்டு இஞ்சை தந்திட்டு அவர் ஏன் இன்னும் வரேல்லை? எல்லாரும் சாப்பிடுற நேரமாய்ப் போச்சுது!" என்று தனக்குள் சொல்லிக் கொண்ட பதஞ்சலிக்குää அன்று முரலிப் பழத்திற்குத் தானும் வருவேனென்று அடம்பிடித்துச் சென்றதும், காட்டில் கரடி வந்ததும் தான் பயந்து நடுங்கியதும் ஞாபகம் வரவே, தனக்குள் மெல்லச் சிரித்துக்கொண்டாள். அவனுடைய வலிமைமிக்க கரங்களின் அரவணைப்பில், அவனுடைய இளம் மார்பில் தனது முகத்தைப் பதித்துக் குழந்தைபோல் தேம்பியழுததை நினைக்கையில் பதஞ்சலிக்கு அடக்கமுடியாத நாணம் கிளர்ந்தெழுந்து உடலெங்கும் பரவியது. நாணமும் புன்னகையும் மாறி மாறிக் கோலமிட்ட பதஞ்சலியின் முகத்தை உற்றுக் கவனித்த சிறுவன் ராசு வியப்புடன்ää 'ஏன் சும்மாய் சிரிக்கிறாய்?" என்று கேட்டதற்கு, 'ஒண்டுமில்லையிடா!" என்று கூறி மீண்டும் மெல்லச் சிரித்தாள் பதஞ்சலி. 'உனக்கென்ன விசரே?" என்று அவன் கேலி செய்தபோதுங்கூட அவள், 'போடா, ஒண்டுமில்லை!" எனக் கூறிவிட்டுச் சிரித்தாள்.

(வளரும்)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 19 Sep 2024 20:20
TamilNet
Even though I first met Viraj Mendis in Geneva, his reputation as a fearless advocate for Tamil liberation preceded him. The movement respected Viraj, and many of our leaders in the diaspora and the homeland sought his clarity and insight. I consider myself fortunate to have worked with him and learned from him.
Sri Lanka: Viraj exposed West?s criminalization of Tamil struggle


BBC: உலகச் செய்திகள்
Thu, 19 Sep 2024 20:20


புதினம்
Thu, 19 Sep 2024 20:20
















     இதுவரை:  25698917 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10991 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com