அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 19 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow புத்தக வாசல் வழி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


புத்தக வாசல் வழி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: செம்பியன் செல்வன்  
Sunday, 19 September 2004

உச்சாலியா - பழிக்கப்பட்டவன்

உச்சாலியாதமிழ்த் தேசிய கவியும், பன்மொழி அறிஞனும் வடநாடுகளில் பல ஆண்டுகள் யாத்திரை புரிந்தவனுமாகிய சுப்பிரமணிய பாரதி 'ஆயிரம் இங்குண்டு சாதி......' என்று கவிதை வரியில் கூறிய அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் எத்தனைபேர்? 1871 ஆம் ஆண்டில், இந்தியாவை ஆண்ட பிரித்தானியர், இந்தியாவின் பழங்குடி மக்கள் பிரிவினரையும், நூற்றுக்கணக்கான சாதிகளையும் 'பிறப்பால் குற்றவாளிப் பரம்பரையினர்' எனச் சட்டத்தால் தீர்மானித்தனர். இவர்கள் 'ஜாதவ், கெய்க்வாட்'; இரு முக்கியபிரிவில் அடங்கியபோதும் இவர்களிடையே பல இனக்குழுக்களும் குலங்களும் அடங்கும். பாத்ரூத், தகாரி, பாம்தா, உச்சாலே, கிர்னேவாதார், கமாடி, காண்டிச்சோர், வாதார் எனப் பல பெயர்களில் இவர்கள் இடத்துக்கு இடம் அழைக்கப் பட்டனர்.
 
  1956 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில், லட்டூரில் உள்ள தானேகோனில் குற்றப்பழங்குடியில் பிறந்த லட்சுமண் கெய்க்வாட், 'உச்சாலியா - பழிக்கப்பட்டவன்' என்ற சுயசரிதை நூலினை மராத்தி மொழியில் எழுதிவெளியிட்டுள்ளார். இது சாஹித்திய அக்கடமி பரிசினையும் ஈட்டியுள்ளது. தலித் ஒருவருடைய வாழ்க்கை - லட்சுமண் கெய்க்வாட் - அவருடையமொழியில் இலக்கிய நயம் குறைந்த அவர்கள் வழியில் பேசப்பட்டிருப்பதே இந்த நூலின் யதார்த்த உயர்வுக்கும் காரணமாயிற்று. 1998 ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் இது பெயர்க்கப்பட்டமை இதன் முக்கியத்துவத்தைக் காட்டும். எஸ். பாலச்சந்திரனின் தமிழ் மொழி பெயர்ப்பு 2001 இல் வெளிவந்துள்ளது.

  பலம் மிகப்பெற்று சாதிப்பிரிவுகள் அரசியல் ரீதியில் வளர்வதும், தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவினர் விழித்தெழுந்து தம்மைப்பற்றிச் சிந்திப்பதுடன் மட்டுமல்லாது, பிறசாதியினருடன் நேரடியாக அரசியல், சமூகப் பொருளாதார ரீதியாக தம் உரிமைகள் பற்றி பேச, போராடத் தொடங்கும் முயற்சியாக 'தலித் இலக்கியங்கள்' தோன்றுவதும் சமகால வரலாற்று நியதிகள் என்பதனைப் புரிந்துகொள்ளத் தவறுவது நாட்டின் தேசிய ஒற்றுமைக்கும், விடுதலை, சுதந்திர உணர்வுகளுக்கும் ஆப்புவைக்கும் முயற்சி என்பதற்கு சமகால நிகழ்வுகள் பாடமாகின்றன. இன்றைய உலகின் ஜனநாயகமே ஜாதியின் பெயரால், இனங்களின் பெயரால், குலங்களின் பெயரால், தொழிலின் பெயரால், ஏன், மொழியின் பெயரால் (தமிழ்ச்சாதி?) தேசிய நீரோட்டம் கொண்டிருப்பதை நாம் உணரலாம்.

  உச்சாலியா 'லட்சுமண் கெய்க்வாட்' அவர்களின் சுயசரிதை. பிறப்பால் குற்றவாளிப் பரம்பரையைச் சார்ந்த இவரின் வாழ்க்கைச் சரிதம் மூலம் பத்ரூத் சாதி மக்களின் அவலமான வாழ்வு - இவ்வாழ்வின் அவலத்தை அவர்களே புரிந்து கொள்ளாமல் பிறப்பாலும், அரசாலும் தம்மீது விதிக்கப்பட்ட 'பழி'யை இயல்பாக ஏற்று இருப்பியல் வாழ்க்கைப் போராட்டம் நடத்துவதைச் சித்திரிக்கிறது.

  இவர்களின் வேலை திருடுவது. குடும்பம் முழுவதும் சந்தைகளிலும், திருவிழாக்களிலும் திருடுவது. இவரின் தாத்தா லிங்கப்பாவின் பெயர் நிஜாம் அரசின் ஆவணங்களில் ஆபத்தான திருடன் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. திருடத் தெரியாத குடும்ப உறுப்பினருக்கு உதையும் அடியும்தான் பரிசு. திருடத் தெரிந்தவன் குடும்பத்தலைவனாவான். வைக்கோலால் வேயப்பட்ட தாழ்வான குடிசை. மண்டியிட்டு கைகளை ஊன்றித்தான் போய்வர முடியும் உணவுப்பஞ்சம் எப்போதும் இருந்துவந்தது. இவரது தாய், அப்பா, தமையன், ஆகியோர் இரவு வேளைகளில் வயல்களில், சோளம், மிளகாய், வேர்க்கடலை, கேழ்வரகு என்பனவற்றைத் திருடி வருவர். நள்ளிரவில் இவற்றினை குருணையாக்கி வேகவைத்து உண்பர். அம்மாவின் அப்பா சாயாபு டாடா வேட்டைக்குச் சென்று மீன்கள், முயல்கள், மான்கள், நரிகள், காட்டுப்பூனைகள், எலிகள், நண்டுகள், ஆமைகள், கீரிகள் போன்றவற்றைக் கொணர்வார். இவர்களின் உணவு இதுவாகும். ரொட்டி போன்ற கோதுமைப் பதார்த்தம் இவர்களுக்கு எட்டாப்பொருள். சிலசமயம் தானியக்கதிர்களைக் கவரும் விதம் சுவாரசியமானது. தங்கள் குடிசைகளில் அபரிமிதமாக வாழும் எலிகளைப் பிடித்துச் சென்று தானியக்கதிர் உள்ள வயல்களில் விடுவார்கள். எலி கதிர்களை அறுத்து வரப்பு வளைகளில் சேர்க்கும். மறுநாள் வயல் எலி பிடிப்பதாக கூறி எலியையும் தானியத்தையும் பிடித்துவருவர்.

  படிப்பது பாவச் செயல் என்ற எண்ணம் உள்ளவர்கள். லட்சுமண் பாடசாலையில் சேர நாலைந்து சிறுவர்களுக்கு வாந்திபேதி வந்துவிட, கிராமமே லட்சுமணால்தான் இது நிகழ்ந்தது என வாதிட்டது. இவர்களுக்கு குடிசையே பாதுகாப்பளிப்பதில்லை. ஒருநாள், நள்ளிரவில் இவனது அண்ணியை - இவன் அருகே படுத்திருக்கும்போது - அண்ணியே அறியாமல் அவள் கற்பை ஒருவன் சூறையாடிச்செல்வதைப் படிக்கும்போது கண்ணீர் மல்கும்.

  இவர்கள் குடிசைகளைச் சுற்றியே பிறர் மலங்கழிப்பர். மலக்காடு. உயர்சாதிப் பெண்கள் கூட வெட்டவெளியில் மலங்கழிப்பர். நாற்றம் மூக்கைத் துளைத்தாலும் இவர்கள் இச்செயலை வரவேற்பர். காரணம் இம் மலங்களே இவர்கள் வளர்க்கும் பன்றிகளின் தினசரி உணவாகும். ஆடி, ஆவணி மாதங்கள் உணவுக்கு கஷ்டமான மாதங்கள். வள்ளிக்கிழங்கு இலை, காதவ்காடா, தார்வாடா, குந்து, தக்தி, ஷேபு, கேரட், மற்றும் சில காட்டுச் செடி இலைகள் மட்டும் அவித்து கட்லட்போல் உண்பர்.

  இவ்வளவு கஷ்டங்களிடையேயும் எங்காவது திருட்டுப்போனால் இவர்களே ஜவாப்தாரி. களவுப்பொருட்களுக்கான பெறுமதியை கந்துவட்டிக் கடன் பட்டாவது செலுத்தவேண்டும். பொலிஸ் விடாது. இவர்களிடம் மாமூல் பெறுவதையும் விடாது. இவர்கள் குற்றவாளிப் பரம்பரையினர் எனச் சட்டம் விதித்திருப்பது இவர்களைச் சுரண்டுவதைச் சுலபமாக்கிவிடும்.

  இச்சுயசரிதை மிக நீண்டது. சுருக்குவதும் சுலபமில்லை. ஆனால், தீண்டத்தகாதவர்களென ஒதுக்கப்பட்ட தலித் மக்களுடைய அவலங்கள், வேதனைகள், கலகக்குரல்கள், மனிதப்பண்புகள் பிடுங்கி எறியப்பட்ட இவர்களின் தன்னிலை (Self)யை மீட்டெடுத்து மறுக்கப்பட்ட அவர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக அமைகிறது. தாழ்த்தப்பட்டோர் அல்லது தீண்டத்தகாதோர் தங்களைத் தாங்களே இனங்கண்டும், பிறருடன் பகிர்ந்துகொண்டும் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் தேடும் முயற்சியாக இத்தகைய சுயசரிதைகளும் தலித் இலக்கியப் போக்கும் அமைகின்றன.         

  சுயசரித முறையிலான இம்முயற்சிகள் சமூக ஆய்வாக, மானுடவியல் ஆய்வாக மட்டுமிராது மனித இதயத்தை மிகமிக நெருங்கும் இலக்கியப் பொருளாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இச் சுயசரிதத்தின் கடைசி வரி: 'என் பிள்ளைகள் ஒழுங்காகப் பள்ளிக்குப் போகிறார்கள்.... என் சகோதரர்கள் பிழைப்புக்காகத் திருட்டுத் தொழில் செய்து வருகிறார்கள்'.            


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 19 May 2024 23:21
TamilNet
HASH(0x55d82e216fa0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 19 May 2024 23:21


புதினம்
Sun, 19 May 2024 23:21
















     இதுவரை:  24908875 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3193 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com