அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 08 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow சுயபுத்தியை அவமதிக்கும் சமீபத்திய வரவு - கில்லி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சுயபுத்தியை அவமதிக்கும் சமீபத்திய வரவு - கில்லி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தேவேந்திரன்  
Sunday, 19 September 2004

கில்லிவியாபார ரீதியிலான வெற்றியை அடிப்படையாகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் தமக்கென ஒரு சமன்பாட்டைக் கொண்டிருக்கின்றன. நாயகன் எந்தவிதத்திலும் யதார்த்த வாழ்வைப் பிரதி பலிக்க வேண்டியதில்லை. சில சந்தர்ப்பங்களில் அடித்து நொறுக்கக்கூடியவனாகவும், சில சந்தர்ப்பங்களில் விவேகியாகவும், சில சந்தர்ப்பங்களில் கோமாளியாகவும் இயங்க வேண்டியிருக்கும். கதாநாயகிக்கு இளமையும், அழகும் முக்கியம். ஆபாசமாகத் தோன்ற வேண்டியது அதைவிட முக்கியம். மென்மையானவளாக இருப்பாள் - பேதைப் பெண்ணாகப் பாட்டுப்பாடித் திரிவாள் - தேவையான நேரம் பயந்து ஒடுங்குவாள். எதிர்நாயகன் கோமாளியாகவும், ஏமாளியாகவும் ஒவ்வொரு காட்சியிலும் யாரேனும் ஒருவனைக் கொல்பவனாக அல்லது கொடுமைப் படுத்துபவனாகவும் வந்துகொண்டிருத்தல் முக்கியமானது. எதிர்நாயகன் கதாநாயகிக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதும் அதை நாயகன் முறியடிப்பதும் சமன் பாட்டிற்கு வசீகரம் தரக்கூடியது. இந்தச் சமன் பாட்டிற்குள் பொருந்தி வரக்கூடிய சமீபத்திய வரவுதான் "கில்லி". காட்சிப்படுத்தல் ஊடகமாக இனங்காணப்படுகின்ற சினிமாவுக்கான எந்தவொரு அம்சத்தினையும் கொண்டிராத - பார்வையாளனின் பகுத்தறிவை அவமதிக்கும் - திரைப்படமாக "கில்லி" அறிமுகமாகின்றது!

"கபடி" விளையாடும் நாயகன் வேலு - செல்லப்பெயர் "கில்லி"- அவன் கபடி விளையாடுவதை விரும்பாத காவலதிகாரியான அப்பா. மதுரையிலிருக்கும் தூரத்து உறவினரின் திருமணத்துக்கு போவதாகச் சொல்லி, அங்கே நடக்கவிருக்கும் கபடிப் போட்டிக்கு செல்கிறான்  கில்லி. அங்கே எதிர்நாயகன் - கதாநாயகியின் அண்ணன், தம்பி ஆகியோரைக் கொன்று அவளைக் கட்டாயத் திருமணம் புரிந்துகொள்ள முயல அவளைக் காப்பாற்றிக்கொண்டு வந்து தனது வீட்டில் மறைத்து வைத்திருக்கிறான். இடையே அவளை அமெரிக்கா அனுப்பிவைக்க ஏற்பாடுகளும் செய்கிறான்.

எதிர்நாயகன் கதாநாயகியைத்தேடி கில்லியின் இடத்துக்கு வருகிறான். தேடுதல் தொடங்குகிறது. காவலதிகாரியான கில்லியின் தந்தைக்கு கதாநாயகி தனதுவீட்டில் மறைந்திருப்பது தெரியவருகிறது. கில்லி அவளுடன் தப்பி ஓடுகிறான் - அவளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறான். இறுதியில் நிகழும் கபடிப் போட்டியில் கலந்துகொள்கிறான். அவன் அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தவள் திரும்பிவருகிறாள். எதிர்நாயகனும் அங்கே வருகிறான். முடிவில் எதிர்நாயகனைப் "பறக்கவைத்து அடித்து" - கபடியில் ஜெயித்து, கதாநாயகியை கைப்பிடிக்கிறான்!!

இந்தப்படத்தில், நிதானமில்லாத திரைக்கதையைப் படத்தொகுப்புத்தான் சமனாக்குகிறது. சினிமா மொழியைக் கொண்டு வருவதில் கமராவின் பங்கு மிகச்சொற்பமே. மலிவான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய சாகசக்காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் பெரும் பங்கைவகித்து இயங்கிய கமரா தனது தனித்துவமான சினிமா மொழியை வெளிப்படுத்தத் தவறியிருப்பதைப் பார்க்கலாம். வெளிச்சவீடு தொடர்பான காட்சிகளில் கமராவின் இயக்கம் குறிப்பிடக்கூடியது. இருந்தாலும் கலை நேர்த்தியான அண்மைக் காட்சிகள் (close-up) எதுவுமில்லை. கதாநாயகியும் நாயகனின் தந்தையான காவலதிகாரியும் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதில் புகைப்படங்கள் பாவிக்கப்பட்டிருப்பது, இப்படத்தில் குறிப்பிடும் படியான உத்திதான். தந்தைக்குப் பயந்த நாயகன் கயிற்று ஏணிமூலம் வீட்டுக்குள் வருவதும், வீட்டுக்குள் இடம்பெறும் காட்சிகளும் சற்றும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்காதவை. நாயகன் கோமாளியாகவே அநேக காட்சிகளில் தோன்றி மிகை வெளிப் பாட்டினைக் காட்டுவதில், ஒரு நாடகத்தைப் பார்க்கும் உணர்வே மேலோங்குகிறது. காவலதிகாரியாக வரும் ஆஷிஷ் வித்தியார்த்தி மற்றும் நாயகியாக வரும் த்ரிஷா (சிலகாட்சிகள்) ஆகியோரைத் தவிர, இயல்பான உணர்வு வெளிப்பாட்டைத் தரக்கூடிய கலைஞர்களை இனங்காண முடியாமல் போகிறது. நகைச்சுவையென்பது இப்படத்தில் வெறுங் கேலிக்கூத்தாக மாறிவிடுகிறது. அசிங்கமான தோற்றங்களுடன் தலை பின்னிக்கொண்டு பெண்குரலில் கதைப்பதெல்லாம் இப்போது நகைச்சுவை என்ற வகுதிக்குள் அடங்குவது மரபாகிவிட்டது...!
 
இப்படத்தில் மிகப்பெரும்பாலான காட்சிகள் நாடகத்தன்மை வாய்ந்தவை - சினிமாவிற்குரிய தனித்துவமான பண்புகளைப் பின்தள்ளி துருத்திக்கொண்டு வெளித்தெரிகின்றன. நம்பமுடியாத காட்சிகளுக்கெல்லாம் பஞ்சமில்லை. உச்சக்காட்சியில் எதிர்நாயகனிடம் நரம்படி வாங்கிச் செயலிழந்து விழுந்துவிடும் கில்லி, பிறகு வீறு கொண்டெழுந்து எதிர்நாயகனைப் புரட்டி எடுக்கிறான்; "ரசிக மகாசனங்கள்" விசிலடிச்சான் குஞ்சுகளாக மாறிக் குதூகலிக்கிறார்கள் - தங்கள் சுயபுத்தி அவமதிக்கப்படுவது தெரியாமல்!
 
கதைக்காக நடிகர்கள் என்பது மிகவும் அருகி நடிகர்களுக்காக கதை என்ற நிலையில் "விஜய்" என்ற நடிகனுக்காகத் தயாரிப்புச் செய்யப்பட்டிருக்கும் கதையே "கில்லி" இந்த நிலையில், நல்ல சினிமாவுக்குரிய அம்சங்களை தேடிக்கொண்டிருப்பதும் அர்த்தமற்ற செயல்தான்!
 
நாயகியை மணம்புரிய தடையாக இருந்த அவளது அண்ணனையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவளது தம்பியையும் கொலை செய்துவிட்டு முறையாகப் பெண்கேட்டு அவள் வீட்டுக்கு வரும் எதிர்நாயகன், ஒரு கோமாளியாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறான். நாயகியை நெருங்கி “லவ் பண்ணடா செல்லம்” என்று சொல்வது எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது! சினிமாச் செய்திகளுக்கு நடுப்பக்கங்களை ஒதுக்கி வரும் நமது உள்ளுர் பத்திரிகைகள் “த்ரிஷாவுக்கு பிரகாஷ்ராஜ் ‘லவ் பண்ணடா செல்லம்’ என்று சொல்லும் அழகே தனிதான்” என்றெல்லாம் விமர்சனக் குறிப்புகளை (?) எழுதியிருப்பது வேதனைக்குரியது. சினிமா ரசனை மிகவும் தரந்தாழ்ந்து வருகின்ற நிலைமைக்கு இந்தப்பத்திரிகைகளின் பங்கு முக்கியமானது.

பார்வையாளன் தனது சுயபுத்தி அவமதிக்கப்படுவதை உணர்ந்துகொள்ளும் நிலை வரும்வரை, "கில்லி" போன்ற இன்னும் பல படங்கள் நமது திரையரங்குகளுக்கு வந்து (இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரேதின வெளியீடாக) நான்காவது, ஐந்தாவது வெற்றிவாரங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் என்பது உறுதி!

(கதை, திரைக்கதை, இயக்கம் - தரணி, இசை - வித்யாசாகர், படத்தொகுப்பு - B. லெனின், V.T. விஜயன்).


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 08 May 2024 15:47
TamilNet
HASH(0x55a216a2f328)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 08 May 2024 15:47


புதினம்
Wed, 08 May 2024 15:47
















     இதுவரை:  24867933 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4354 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com