அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow தமிழ் இலக்கியப் பதிப்பு முன்னோடி [சி.வை. தாமோதரம்பிள்ளை]
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழ் இலக்கியப் பதிப்பு முன்னோடி [சி.வை. தாமோதரம்பிள்ளை]   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மயிலங்கூடலூர் பி.நடராசன்  
Sunday, 19 September 2004

தாமோதரம்பிள்ளைசிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரம் பிள்ளை 12.09.1832 இல் தோன்றினார். தமிழ் ஆசிரியரும் அதிபருமான தந்தையாரிடமே முதலில் தமிழ் பயின்ற சி.வை.தாமோதரம்பிள்ளை பின்னர் சுன்னாகம் முத்துக்குமார கவிராயரிடம் நைடதம், இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கிய நூல்களை முறைப்படி பயின்று இளமையிலேயே தமிழறிஞரானார். தெல்லிப்பழை அமெரிக்கமிசன் ஆங்கில வித்தியாசாலையில் ஆங்கிலக்கல்வி பயிலத் தொடங்கிய அவர் பின் வட்டுக்கோட்டை சர்வசாஸ்திரக் கலாசாலையில் ஆங்கில உயர்கல்வி பயின்றார். இரு மொழிகளிலும் அறிஞரான அவர் 1852 இல் கோப்பாய் போதனா வித்தியாசாலையில் தமிழ் விரிவுரையாளரானார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆறுமுக நாவலரின் ஆசிரியராக இருந்தவரும் நாவலரிடம் தமிழ் பயின்றவருமான பேர்சிவல் துரை தமிழகத்துக்கு இடம் பெயர்ந்தபோது, தாமோதரம்பிள்ளையை அங்கு அழைத்து, "தினவர்த்தமானி" இதழின் ஆசிரியராக்கினார்.
  
தாமோதரம்பிள்ளை அவர்கள் 1857 இல், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியரானார். சென்னைப் பல்கலைக்கழக முதல் தமிழ் பட்டதாரிகள் இருவரில் ஈழத்துத் தாமோதரம்பிள்ளையும் ஒருவராவார். 1871 இல் சட்டத்துறை (B.L.) தேர்வுப்பட்டம் பெற்றார். 1875 இல் சென்னை அரசினால் "இராவ் பகதூர்" பட்டம் வழங்கப்பட்டார். கணக்காய்வாளர், விசாரணைக் கர்த்தர், நீதிமன்ற நடுவர் முதலிய பதவிகளை வகித்து 1891 இல் நோய் காரணமாகப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளர் பதவி பெற்ற காலத்திலேயே நூலாய்விலும் நூற்பதிப்பிலும் தீவிர விருப்பம் கொண்ட அவர், 1854 இல், நீதிநெறி விளக்கம் என்ற நூலை முதலில் பதிப்பித்து வெளியிட்டார். பழைய தமிழ் நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தேடிப் பெற்று ஒப்பிட்டு - ஆராய்ந்து சரியான பிரதிகளை உருவாக்கி அச்சிட்டு வெளியிட்டுக் காப்பதும், மக்கள் அனைவரும் நூல்களைப் படிக்கச் செய்வதும் அவருடைய முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

கிறித்தவக் குடும்பத்தில் கிறித்தவராகப் பிறந்த அவர் சைவத் தமிழ் நூல்களைப் பயின்றதால் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாகத் தமது இருபத்தெட்டாம் வயதில், 1860 இல் சைவரானார். இம்மதமாற்றத்திற்குச் சமகாலத்தவரான நாவலரின் சைவப் பிரசாரமும் காரணமாக அமைந்திருக்கலாம். தமிழகத்தில் நாவலருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவர் நாவலரின் நூற்பதிப்புக்குத் தம்மாலியன்ற உதவிகளை ஆற்றிவந்தார். நாவலர் தாம் பரிசோதித்து வைத்திருந்த தொல்காப்பியம் சேனாவரையம் நூலைப் பதிப்பிக்கும்படி தாமோதரம்பிள்ளை அவர்களிடம் வழங்கினார். 1868 இல் அவர் இந்நூலைப் பதிப்பித்தார்.

1879 இல் நாவலர் மறைந்த பின், அவர் மேற்கொண்ட பதிப்புப்பணியைத் தொடர்ந்தார் தொன்மையான தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதே அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர் பின்வரும் நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தார்:

வீரசோழியம்: பெருந்தேவனார் உரை - 1881
இறையனார் களவியல் - 1883
தணிகைப் புராணம் - 1883
தொல்காப்பியம் பொருளதிகாரம்: நச்சினார்க்கினியர் உரை - 1885
கலித்தொகை - 1887
இலக்கண விளக்கம் - 1889
சூளாமணி - 1889
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - 1891
தொல்காப்பியம் சொல்லதிகாரம்: நச்சினார்க்கினியர் உரை - 1892

அகநானூறு, ஐங்குறுநூறு முதலிய எட்டுத் தொகைச் சங்க நூல்களை வெளியிட முயன்ற போதும் பொருளாதாரமின்மை தடையாக இருந்தது. பதிப்பித்த நூல்களும் பெருமளவில் விலைப்படவில்லை; நிதி அன்பளிப்பும் போதிய அளவில் கிடைக்கவில்லை.

தொன்மையான தமிழ் நூல்களை வெளியிடுவதோடு பல நூல்களைத் தாமே எழுதியும் வெளியிட்டார். கட்டளைக் கலித்துறை, சைவமகத்துவம், ஆறாம் ஏழாம் வாசகப் புத்தகங்கள், நட்சத்திர மாலை, வசன சூளாமணி, ஆதியாகம கீர்த்தனம் முதலியன அவர் எழுதிய நூல்களாகும். நாவலரால் பெரிதும் வளர்க்கப்பட்ட உரைநடையைத் தாமும் எழுதித் தொடர்ந்து வளர்த்ததோடு, கவிதைத் துறையிலும் ஈடுபாடுகொண்டு விளங்கினார்.
  
நூற்பதிப்பின்போது அவர் தொடர்ந்து எழுதிய பதிப்புரைகள் தமிழ் இலக்கியக் கால வரலாற்று ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தன. தமிழ் வரலாற்றுக் காலத்தை ஒலிவடிவத் தமிழ்க் காலம் முதல் தமது சமகாலம் வரை எட்டாகப் பாகுபாடு செய்து, தமிழ் இலக்கியக் கால வரலாற்றை அவரே முதலில் சிறப்பாகக் கூறுகின்றார்.

தமிழ் நூற்பதிப்பில் நாவலர் முன்னோடி யாகவும் தாமோதரம்பிள்ளை அவரைத் தொடர்ந்தவராகவும் தமிழகத்தில் பணியாற்றினர். தமிழகத்தில் புகழ்பெற்ற பதிப்பாளரான உ.வே. சாமிநாத ஐயர் தாமோதரம்பிள்ளையின் தூண்டுதலால் தீவிர பதிப்பாளரானார்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Jul 2024 03:52
TamilNet
HASH(0x55b78b9305f0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Jul 2024 03:52


புதினம்
Thu, 25 Jul 2024 03:52
     இதுவரை:  25413816 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9301 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com