அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 06 May 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அப்பால் பற்றி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அப்பால் தமிழ் குழுமம்  
Saturday, 29 May 2004

அப்பாலும் விரிகின்றது வேற்றுமைச் சுழல்
அணையாமல் எரிகின்றது நெஞ்சினில் தழல்
ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் எழும் தமிழ்
  

அப்பால்...தமிழ்

இது ஒரு மட்டுப்படுத்தப்பட்டதான பொது நோக்குகள் கொண்ட கூட்டுறவு நிறுவனம். ஊடகம் (இணையத்தளம் அப்பால்-தமிழ்),  பதிப்பகம் (நூல்வெளியீடு அப்பால் பதிப்பகம்)  என்பன தற்போதைய செயல்திட்டங்களாகும். இணையத் தளத்தின் கட்டமைப்பு வேலைகள் முடிவடைந்ததும் பதிப்பகத் துறையில் கவனம் செலுத்தப்படும்.
சமூகம், கலை இலக்கியம், வரலாறு, தத்துவம், அரசியல், பொருளியல் என்னும் துறைகளில் அக்கறை காட்டும்.

மௌனம் இதழில் பங்கேற்றோர் பலரும் இந்நிறுவனத்திலும் இணைந்துள்ளனர். ஊரிலேயே அறிமுகமானோரும் புதியவர்களுமாக இந்த நிறுவனம் பதியமாகி உள்ளது. 1993ம் ஆண்டுக் காலகட்டதில் மௌனம் காலாண்டிதழினூடாக தாயகத்திற்கு அப்பால் எம்கனவுகளை விரித்திருந்தோம். ஆறு இதழ்களை மட்டுமே எம்மால் வெளிக்கொணர முடிந்தது. கொள்வாருமில்லை கொடுப்பாருமில்லை என்ற உண்மை எம்கையைச் சுட்டதால் தொடர முடியாமல் போய்விட்டது. தற்போது இணைய வெளியில் நாம் கால் பதிக்க துணிந்தபோது மௌனத்திற்கும் அப்பால் நிரப்பப்படாத வெற்றிடம் இன்னும் தொடர்வது எமக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மௌனமும் இதழும் அன்றைய எண்ணங்களும்:

மௌனத்தில் அப்போது நாம் முன்மொழிந்தவற்றை மீளவும் இங்கே மொழிகின்றோம். மௌனிகளின் பதிவான மௌனம் இதழ் இரு நூறு பிரதிகள் மட்டுமே வெளியிடப்படுகின்றது. மக்களுக்காக வெளியிடுகின்றோம், வென்றெடுக்கப் போகின்றோம் என்ற மிதப்பு எதுவும் கிடையாது. அறிமுகமான வாசக ஆர்வலர்களில் நேசம்மிக்கோரை சென்றடைதலும், இணைவதுமே இதன் திசையாகும். மௌனித்துள்ள கலை இலக்கியப் பதிவுகளை, சமூகத் தளங்களை, வரலாற்றின் பக்கங்களை, வெளிக் கொணர முயல்வதே இதன் செயலாகும்.

ஆங்கிலம் படித்து, அதில் சிந்தித்து ஆங்கிலேயருக்கு கற்பிக்கும், எழுதும் கல்விப் பாரம்பரியத்தையும், கல்விமான்களையும் கொண்ட சமூகத்தில், "இளக்காரமான தமிழ்பேசும்" மௌனிகளின் இதழ்தான் இந்த மௌனம். அந்தப் பலவீனப்பட்ட சமூகத்தின் தேவையும், அவாவுமோ அளப்பரியவை. மௌனித்துக் கிடப்பவை. இதற்காகப் பூக்கும் நூறு பூக்களில் ஒரு பூவென மௌனமும் புன்னகைக்கும். தன்னை வடிவமைக்கும். பூக்கும் நூறும் சிவப்பு ரோஜாவாய் இருக்கும்படி விதிக்கப்படின், விமர்சிக்கப்படின் மௌனம் வெவ்வேறு வண்ணங்களில் வெவ்வேறு பூக்களாய் பூத்தும் காட்டும்!

எப்படியாயினும் கலைச் செல்வங்கள் சுமக்கும் பெட்டகமாகவும், மேலை மொழிச் செழுமையைக் காவும் கடத்தியாகவும், இனிவரும் தலைமுறையின் நம்பிக்கையாகவும், இருக்க மௌனம் உறுதி கொள்கின்றது. அரச வன்முறையாலும், ஆயுதபாணியோரின் வன்முறையாலும் கனவுகளுக்காய் கொலையுண்டிறந்தவர்களை மௌனம் எப்போதும் நினைவில் கொள்கின்றது. தலை தாழ்த்துகின்றது. ஆயுதக்கலாச்சாரப் பரம்பலின் பொறுப்பாளிகள் நாங்களல்ல என வேறுபக்கம் கைநீட்டி தப்பித்துக் கொள்ளமுடியாது.
மௌனிகளாகிய நாங்கள் உள்ளிட்ட சமதலைமுறையினரும், அவர்தம் நாவும், பேனாவும் கூடத்தான் அதற்கு பொறுப்பு என்பதனை வேதனையுடன் மௌனம் இதழ் ஏற்றுக் கொள்கின்றது.
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்ததனாலேயே "போராட்ட குற்றவாளிகள்" அற்றவர்களாய் நாங்கள் மாறியுள்ளோம், கொல்லாமை- நிலையாமை- பற்றிய ஒளிகிடைத்து புனிதத்துவத்தைப் பெற்றுவிட்டோம் எனும் மார்தட்டலை மௌனம் இதழ் மறுதலிக்கின்றது. பொய்மைகளை, கருத்து, எழுத்து அழகுகளால் மூடிமறைப்பதையும் மௌனம் ஏற்க மறுக்கின்றது.
தமது முன்னெடுப்புகள் பலவற்றில் மௌனிகளாகிய நாங்கள் தோற்றவர்கள், சிதைந்தவர்கள் என்பதனை அறிக்கை செய்வதுடன், எண்பதுகளின் பிற்பகுதியில் உலகெங்கும் நிகழ்ந்த- நிகழ்ந்த வண்ணமுள்ள சறுக்கல்களையும், தோல்விகளையும் மாற்றங்களையும், உள்வாங்கி கற்க கடப்பாடுடையவர்கள் என்பதனையும் ஏற்கின்றது.
"கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலின்றி நாட்டத்தில் பொள்ளாதார்" பற்றி பாரதி கொள்ளும் கவலையை மௌனமும் தனதாய் வரித்துக் கொள்கிறது.

இன்றைக்கு இந்த அப்பால்:

மேலே அறிக்கையிடப்பட்டவை பல இன்றைய அப்பால் கூட்டுறவு நிறுவனத்திற்கும் பொருந்தும்.  அத்துடன் கீழ்வருவனவற்றையும் அதனுடன் இணைத்துக் கொள்கின்றோம்.

நம்மை எழுதியெழுதி உந்திச் தள்ளுகின்றது வரலாறு கனவுகளுக்கும் அப்பால். இரண்டாயிரத்தோராம் ஆணடும் செப்டம்பர் 11ம் வரலாறாகி விட்டது. இனிவரும் காலம் நாகரிகங்களுக்கிடையேயான மோதல்களே என எதிர்வுகளும் கூறப்பட்டு விட்டன. உலகமயமாதலும், ஓருலகக் கோட்பாடும், பண்பாட்டுத் தனித்துவங்களை நசுக்கி அழித்து வருகின்றன.

இந்தியத் துணைக்கண்டத்து தென்கோடிக்குக்கும், இலங்கைத் தீவிற்கும், மலேசிய தீபகற்பகத்திற்கும் அப்பாலுமென பூமிப்பந்தெங்கும் நம் மொழி உறவும் பரவிப் படர்ந்த வண்ணமே உள்ளது. வாழ்வியல் அனுபவங்களும், கருத்தியல் வளர்ச்சிகளும் நம்மை புதிதுபுதிதாய் வடிவமைக்கின்றன. மானிட நாகரிக முதிர்வுகளையும் மேன்மைகளையும் தனித்தவராகவும் கூட்டாகவும் எடுப்பதும் கொடும்பதுமான பரிமாற்றத்தில்தான் வளர்ச்சியும் மாற்றமும் நிகழ்கின்றன.

இதற்கு தொடர்பு ஊடகம் அத்தியாவசியமானது. இந்நிலையில்தான் இணையத் தளத்தினையும் பதிப்பகத்தையும் செயல்தளமாக கொள்ள முனைந்துள்ளோம். இணையத் தளம் அப்பால்-தமிழ் என்ற முகவரியின் கீழ் 2002ம் ஆண்டில் தைப்பொங்கல் நாளில் அடிக்கல் நாட்டப்பட்டது. மார்ச் முதலாம் தேதியுடன் இயங்கும் தளமாக வடிவம் பெற்றது.

[14-01-2002]
[பாரிஸ் பிரான்ஸ்]


வணக்கம்!

பொங்கல் வாழ்த்துகளுடன் இணைய வெளியில் கனவுகளை விரிக்கின்றோம். கனவு மெய்ப்பட வேண்டும் என்பான் பாரதி. நம்மை எழுதியெழுதி உந்திச் தள்ளுகின்றது வரலாறு கனவுகளுக்கும் அப்பால். இரண்டாயிரத்தோராம் ஆணடும் வரலாறாகி விட்டது. இனிவரும் காலம் நாகரிகங்களுக்கிடையேயான மோதல்களே என எதிர்வுகளும் கூறப்பட்டு விட்டன. உலகமயமாதலும், ஓருலகக் கோட்பாடும், பண்பாட்டுத் தனித்துவங்களை நசுக்கி அழித்து வருகின்றன.

இந்தியத் துணைக்கண்டத்து தென்கோடிக்குக்கும், இலங்கைத் தீவிற்கும், மலேசிய தீபகற்பகத்திற்கும் அப்பாலுமென பூமிப்பந்தெங்கும் நம் மொழி உறவும் பரவிப் படர்ந்த வண்ணமே உள்ளது. வாழ்வியல் அனுபவங்களும், கருத்தியல் வளர்ச்சிகளும் நம்மை புதிதுபுதிதாய் வடிவமைக்கின்றன. மானிட நாகரிக முதிர்வுகளையும் மேன்மைகளையும் தனித்தவராகவும் கூட்டாகவும் எடுப்பதும் கொடும்பதுமான பரிமாற்றத்தில்தான் வளர்ச்சியும் மாற்றமும் நிகழ்கின்றன. இதற்கு தொடர்பு ஊடகம் அத்தியாவசியமானது.

மௌனம் என்னும் காலாண்டிதழினூடாக தாயகத்திற்கு அப்பால் எம்கனவுகளை விரித்தோம். ஆறு இதழ்களை மட்டுமே எம்மால் வெளிக்கொணர முடிந்தது. கொள்வாருமில்லை கொடுப்பாருமில்லை என்ற உண்மை எம்கையைச் சுட்டது. ஆனாலும் எட்டாண்டு இடைவெளியின் பின் இணைய வெளியில் நாம் கால் பதிக்க துணிந்தபோது மௌனத்திற்கும் அப்பால் நிரப்பப்படாத வெற்றிடம் இன்னும் தொடர்வது எமக்கு அதிர்ச்சி அளித்தது.

அப்பால்-தமிழ் என்பது முகவரியாக இருந்தாலும் இந்த இணையத்தை அப்பால்.. என்றே நாம் அழைக்கிறோம்.

தமிழ்நாட்டிற்கு அப்பால்..
தாயகங்களுக்கு அப்பால்..
தமிழிற்கு அப்பால்..

ஏன் அடிவானத்திற்கும் அப்பால் பறவைகள் எங்கு செல்லும்? எங்கள் தேடல்களை உங்கள் முன் வைப்போம் இனி வரும் நாட்களில்...
இணையத் தளத்தில் சந்தித்துக் கொள்வோமா?

அன்புடன்
அப்பால் தமிழ் குழுமத்தினர்
[2002ல் எழுதியது]


     இதுவரை:  24861959 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1389 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com