அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 28 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 11-12   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 02 April 2007

11.
கங்காதரன் அமெரிக்காவுக்கு வந்து வாரமொன்று கழிந்துவிட்டது. புதிய சூழலிலும், புதிய அனுபவங்களிலும் ஆழ்ந்துபோன அவனுடைய சிந்தனையில் சித்திராவைப் பற்றிய எண்ணங்கள் அதிக இடத்தைப் பிடிக்கவில்லை. இருப்பினும் அவனுடைய அடிமனதிலுள்ளே மிகவும் நுண்ணிய உணர்வுச் சிக்கலாக ஒரு ஊமை வேதனை இருக்கவே செய்தது.

காலையில் ஊரிலிருந்து வந்த கடிதம் இன்று அந்த வேதனையை அதிகரிக்கச் செய்துவிட்டிருந்தது.
ஊர் விஷயங்களைப் பற்றியும், தாயின் அன்பையிட்டும், அவனுடைய படிப்பைக் குறித்தும் எவ்வளவோ எழுதிவிட்டு, இறுதியில் ஏதோ கனமில்லாத விஷயத்தைக் குறிப்பிடுவதுபோல, சித்திரா குமாருவுடன் ஓடிவிட்டாள், என்னால் ஊருக்குள் தலைகாட்ட முடியவில்லை! நீ கவனமாக உன்னுடைய படிப்பைப் படி! என்று எழுதியிருந்தார் குலசேகரத்தார்.

அவனுடைய நெஞ்சைப் பலவகை உணர்ச்சிகள் போட்டுக் குழப்பின. காலங்காலமாகக் காத்திருந்தவனை ஏமாற்றி விட்டாளே! என்ற ஆத்திரம் ஒருபுறம். ஒரு சேலையைக் களைந்து போட்டுவிட்டு இன்னொன்றை எடுத்து அணிந்து கொள்வது போல, ஒருவனைக் காதலித்து அவனுடன் அன்பாய்ப் பழகிவிட்டு, பின் வெகுசாதரணமாக வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டாளே என்ற வெறுப்பு ஒரு பக்கமுமாக, அவன் குமைந்து கொண்டிருந்தான்.

மாலையில் அவனுடைய நண்பன் சிவராசா அவனிடம் வந்தபோது, கங்காதரன் இருந்த நிலையைப் பார்த்து என்னவோ, ஏதோ என்று பயந்துவிட்டான்.
சிவராசா அவனுடைய கல்லூரி நண்பன். அவனும் உல்லாசப் பயணம் சம்பந்தமான துறையில்தான் ஈடுபட்டிருந்தான். அவனுடைய குடும்பத்தினர் பலர் அமெரிக்காவிலேயே குடியிருந்தனர். சிவராசாவின் உதவியினால்தான் கங்காதரனுக்கும் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்தவாறே படிக்க வாய்ப்புக் கிடைத்திருந்தது.

பள்ளிப்பருவத்திலிருந்தே கங்காதரனுடன் ஒன்றாகப் படித்த அவனுக்கு கங்காதரன் சித்திராவை விரும்பியிருந்தது ஓரளவு தெரியும். ஆனால் விஷயம் இப்படி முடிந்து போனதைக் கங்காதரன் சொன்னபோது அவனுக்கும் துக்கமாகவே இருந்தது.

ஆனால் சிவராசா எந்த விஷயத்திற்காகவும் மனதை வெகுநேரம் அலட்டிக் கொள்பவனல்ல! சற்றுநேரம் கங்காதரனுடன் அமைதியாக இருந்தவன், 'இங்கை பார் கங்கா! நீயும் சித்திராவும் ஒருவரையொருவர் விரும்பியிருந்தது உண்மைதான். இன்று அவள் உன்னை மறந்து வேறொருவனை மணந்துவிட்டாள் என்று நீ மனம் வெதும்புவதில் எவ்வித பிரயோசனமும் கிடையாது! அவள் உன் காதலை மறந்து ஒதுக்கிவிட்டுப் போய்விட்டாள் என்று வருந்தாதே! அவளை நீ மணந்தபின் இப்படி அவள் நடந்து கொண்டிருந்தால் அது இன்னமும் எவ்வளவு வேதனையையும், விபரீதங்களையும் ஏற்படுத்தியிருக்கும் என்று சிந்தித்துப் பார்!" என்று கூறுகையில், கங்கா சட்டென்று துடிப்புடன் குறுக்கிட்டான். 

'சிவா! சித்திரா அப்படிப்பட்ட ஒரு பெண்ணல்ல! ... இந்த விஷயத்தில் எங்கோ, ஏதோவொரு பெரும் பிழை ஏற்பட்டிருக்க வேண்டும்!"
சிவராசாவுக்கு கங்காதரனுடைய மனநிலை விளங்கவில்லை.

'அதுசரி கங்கா! அவள் நல்லவள் என்று நீ கூறுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இன்றைய நிலையில் அவள் இன்னொருவரின் மனைவிதானே! பிறன் மனைவியை நினைந்துருகுவதில் என்ன லாபம்?" எனச் சிவராசா கேட்டான்.

... பிறன் மனைவி! .. எனக்கென்றே பிறந்தவள் என்று நான் எண்ணியிருந்த என்னருமைச் சித்திரா இன்று யாரோ ஒருவனுடைய மனைவி! ....
கங்காதரன் மௌனமாக அமர்ந்திருந்தான். 'சும்மா யோசிச்சுக் கொண்டிருக்காதை! வா வெளியிலை போவம்!" எனச் சிவா அழைத்தபோது, மனதிற் பொங்கிய துயரைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்து, உடையணிந்து புறப்பட்டான் கங்காதரன்.

12. 
தேர்ந்தெடுத்த காணியில் குமாருவும், சித்திராவும், தங்கைகளும் செல்லையருடன் சேர்ந்து கடும் உழைப்பை மேற்கொண்டிருந்தனர். செல்லையரும் குமாருவும் கைதேர்ந்த தொழிலாளிகள். அவாகளுடைய மேற்பார்வையிலும், உழைப்பிலும் வேலைகள் துரிதமாகவும், கச்சிதமாகவும் நிறைவேறிக் கொண்டிருந்தன.

சித்திரா, குமாருவுக்கு இணையாகவே சகல வேலைகளையும் செய்யப் பழகிக் கொண்டாள். அவளுடைய நான்கு தங்கைகளும் வெய்யிலைப் பார்க்காமல், களைப்பைப் பாராட்டாமல் மிகவும் உற்சாகத்துடன் பங்கெடுத்துக் கொண்டனர். பதினான்கு கரங்கள் என்றால் சும்மாவா! அவற்றின் ஊக்கத்துக்கு முன்னே காடென்ன, கரம்பையென்ன!
காணி முழுவதும் கட்டைவேர் பிடுங்கப்பட்டு துப்பரவு செய்தாகிவிட்டது. குமாரு தன் எருதுகளின் துணைகொண்டு நிலத்தை ஆழமாக உழுதான். எரிந்த சாம்பரும், பல்லாண்டுகளாக நிலத்தில் கிடந்து உக்கிய இலைகளும் மண்ணுடன் கலந்து நிலத்துக்கு உரமளித்தன.

சித்திரா உழுவதற்கும் பழகிக் கொண்டாள். எட்டு ஏக்கரளவில் அமைந்திருந்த அந்தக் காணி, ஆழ உழுததனால் செம்மண் பூத்துப்போய் அழகாகக் காட்சியளித்தது. கிழக்கே சித்திரவேலாயுத கோவில் பக்கம் மேட்டுநிலமாகவும், மேற்கே செல்லச் செல்ல சாய்வாகவும் அமைந்து, நீரூறிப் பாயும் வெண்மணற் பாங்காகவும் இருந்த அந்தக் காணியில், கீழே நெல்லும், மேலே மேட்டுநிலப் பயிர்களும் செய்கை பண்ணக்கூடிய சிறப்புக்களுடன் இருந்தது அவர்களுக்குப் பெரும் அதிர்ஷ்டமாகவிருந்தது.

ஆடி முடிவதற்குள் மேட்டுநிலத்தில் மூன்று ஏக்கர் விஸ்தீரணத்திற்கு கானல் வாழையாக மொந்தன் குட்டிகள் நாட்டப்பட்டிரந்தன. வாழைக் குட்டிகளுக்கு இடையில் நிலக்கடலை விதைத்தாயிற்று. செல்லையரின் கவனிப்பில் ஏற்கெனவே பராமரிக்கப்பட்ட மிளகாய் நாத்து பத்தாயிரம் நியைத்துக்கு மேல் நடப்பட்டிருந்தன.

அதிகாலையில் எழுந்து மாலையில் இருள் கவியும்வரை அத்தனைபேரும் கடுமையாக உழைத்து வந்ததனால், காணி நேற்றொரு தோற்றம், இன்றொரு மாற்றமுமாகக் காட்சியளித்தது.

காணியின் கீழ்கையிலே வெட்டப்பட்டிருந்த பெரிய துரவிலே இளநீர் போன்ற தண்ணீர் ஊறிச் சுரந்தது. பனையோலைப் பட்டைகளில் தண்ணீர் சுமந்து, காலையும் மாலையும் மிளகாய்க் கன்றுகளுக்கு நீரிறைத்தனர் சகோதரிகள்.

சிவந்த மணற்பரப்பில் பச்சைக் குருத்துக்களும், இளந்தளிர்களும் அழகாகக் காட்சியளித்தன. பருவமழை ஆரம்பித்தபோது, பூப்பெய்திய பெண்ணின் வேகமான வளர்ச்சியுடன் தோட்டம் முழுவதுமே கன்னிமைக்கோலம் காட்டியது.

வேலிக்குத் தேவையான முட்கம்பி, மற்றும் நிலக்கடலை, விதைநெல் முதலியவற்றை வாங்கியிருந்ததனால், குமாருவிடம் இருந்த பணத்தில் முக்காற்பங்கு கரைந்து விட்டிருந்தது. எனவே, கடுமையான உடலுழைப்பில் ஈடுபடும் எட்டுப்பேரைக் கொண்ட அந்தக் குடும்பம் உணவு விஷயத்தில் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கூபபனுக்குக் கிடைக்கும் அரிசி, ஒருநாளைக்கு ஒருநேரச் சோற்றுக்கே போதவில்லை. மரவள்ளிக் கிழங்கு, ஒடியல்மா பிட்டு முதலியவற்றினால் அவர்களுடைய வயிறுகள் அரைகுறையாக நிரம்பிக் கொண்டிருந்தாலும், அவர்களுடைய இதயங்கள் நாளை எமக்குச் சிறப்பான ஒரு எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையால் நிறைந்திருந்தன.

(வளரும்..)


     இதுவரை:  24831207 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6550 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com