அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 29 May 2022

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குறும்படமாலை - ஓபர்கவுசன்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இளைஞன்  
Friday, 24 February 2006

கடந்த 19ம் திகதி பெப்ரவரி மாதம் 2006ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனி ஓபகவுசன் (Oberhausen) நகரில் சலனம் அமைப்பு வழங்கிய குறும்படமாலை நிகழ்வு சிறப்பாக நிகழ்ந்தது. இந்நிகழ்வு அங்கு வாழும் தமிழ் மக்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் சுமதி ரூபனின் 'மனுசி', எம்.சுதனின் 'அடிக்ட்', அஜீவனின் 'நிழல் யுத்தம்', வதனனின் 'எதுமட்டும்?', நாச்சிமார்கோயிலடி இராஜனின் 'பொறி', பராவின் 'பேரன் பேர்த்தி', விமல்ராஜின் 'கிச்சான்' ஆகிய ஏழு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டன. பொறி குறும்படம் இந்நிகழ்வில் தான் முதன் முறையாக திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிதியாக தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் ஒளிபரப்பப்படும் "படலைக்கு படலை" à®Žà®©à¯à®©à¯à®®à¯ à®¨à®•à¯ˆà®šà¯à®šà¯à®µà¯ˆ-சிந்தனை தொடர்நாடகத்தை இயக்கிவரும் சுதன்ராஜ் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். அதேபோல் "பேரன் பேர்த்தி" குறும்படத்தின் இயக்குனர் திரு பரா அவர்களும், "எது மட்டும்" குறும்படத்தின் இயக்குனர் திரு வதனன் அவர்களும் பிரான்சில் இருந்து வருகை தந்திருந்தனர். மற்றும் "பொறி" குறும்படத்தின் இயக்குனர் நாச்சிமார்கோயிலடி ராஜன் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஓபர்கவுசன் நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழும் பல தமிழர்கள் ஆர்வமாக நிகழ்வில் கலந்துகொண்டார்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள், இளைஞர்கள் என நிகழ்வு அரங்கு நிறைந்து காட்சி அளித்தது. குறிப்பாக இந்த நிகழ்வில் பெருமளவிலான இளைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

மாலை 15:45 க்கு நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் தொடக்கத்தில் விதையாகி வீழ்ந்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக மெளன அஞ்சலி செய்யப்பட்டது. அடுத்து சிறப்பு அதிதியாக வருகை தந்திருந்த சுதன்ராஜ், இயக்குனர் பரா, இயக்குனர் நாச்சிமார்கோயிலடி இராஜன் மற்றும் சிலர் இணைந்து மங்கல விளக்கினை ஏற்றினார்கள்.

  

  

அதனைத் தொடர்ந்து திரு இராஜகுமாரன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். "யேர்மனியில் இந்த குறும்பட நிகழ்வு மூன்றாவது முறையாக சலனம் அமைப்பினரால் நடத்தப்படுகிறது - புகலிடச் சூழலையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வியலையும் பதிவு செய்வதாக குறும்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன - மக்களிடத்தில் ஈழத்தமிழர்களின் திரைக்கலைப் படைப்புக்களை கொண்டுசேர்க்கும் பணியை சலனம் அமைப்பு செய்கிறது - அத்தோடு நில்லாமல் திரைக் கலைஞர்களை நேரடியாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தும் பணியையும் சலனம் அமைப்பு செய்கிறது - சலனம் அமைப்பு பொறுப்பாளர்கள், நிறுவனர்கள் பாராட்டுதற்குரியவர்கள் - நமது கலைகளை மீட்டெடுக்கவேண்டியவர்களாகவும், நமது தனித்துவத்தையும் அடையாளங்களையும் நிலைநிறுத்தவேண்டியவர்களாகவும் நாம் உள்ளோம் - நமது கலைஞர்களை வரவேற்கவேண்டும் - அவர்களுக்கு நம்மாலான ஆதரவை வழங்கவேண்டும்" போன்ற கருத்துக்களை முக்கியமாக தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளாரான திரு கமிலேஸ் அவர்கள் சலனம் அமைப்பை அறிமுகப்படுத்தி தனது உரையை ஆற்றினார்.

அதனை அடுத்து சலனம் அமைப்பின் பொறுப்பாளர் திரு முகுந்தன் அவர்கள் உரையாற்றினார். சலனம் அமைப்பின் தோற்றம் - அதன் நோக்கங்கள் - நிகழ்கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் - சலனம் அமைப்பிற்கு உள்ள பணிகள் - அதன் விரிவாக்கம் என்பனபற்றி விளக்கமாக உரை நிகழ்த்தினார். ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது தமிழீழத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களிலும் தமிழகத்தில் சென்னையிலும் குறும்பட நிகழ்வுகளை சலனம் அமைப்பு நிகழ்த்தியிருப்பது பற்றியும் குறிப்பிட்டார். வன்னியிலும் வெகுவிரைவில் குறும்பட நிகழ்வினை சலனம் அமைப்பு செய்யவுள்ளது என்றும் சொன்னார். அதேபோல் சென்னையில் நிகழ்ந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட திரைக்கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டு புகலிடப் படைப்புக்களை வெகுவாகப் பாராட்டியதையும் தெரிவித்தார்.

இம்முறை சலனம் அமைப்பால் தயாரிக்கப்பட்ட கருத்துப் படிவங்கள் பார்வையாளர்க்கு வழங்கப்பட்டது. இப்படிவத்தின் மூலம் நிகழ்வில் காண்பிக்கப்பட்ட குறும்படங்கள் பற்றிய கருத்துக்களை எழுத்துவடிவில் பதிவுசெய்கிற வசதியை சலனம் அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. தொடர்ந்து ஒவ்வொரு குறும்படங்களாக திரையிடப்பட்டன. ஒவ்வொரு குறும்படங்களுக்கும் இடையில் கருத்துக்களை படிவத்தில் எழுதுவதற்கான நேரம் வழங்கப்பட்டது.

காட்சிகள் நிறைவுபெற்றதன் பின் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த கலைஞர்களை திரு முகுந்தன் அவர்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் நேரடியாக கலைஞர்களிடமே தெரிவித்தார்கள்.


அவற்றில் சில:

* வதனனின் "எது மட்டும்" என்கிற குறும்படம் பற்றி ஒருவர் சொல்கையில்: "தமிழரின் பண்பாட்டை - குடும்பமாக சேர்ந்து வாழ்கிற ஒழுக்கத்தை இந்தக் குறும்படம் எடுத்துக்காட்டியுள்ளது. புலம்பெயர்ந்து வாழ்கிற பலர் - ஈழத்தவர் மற்றும் பல வெளிநாட்டவர் - இன்று தனித்துபோய் தனிமையில் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலையை - அவர்களின் ஏக்கத்தை எது மட்டும் என்கிற இந்தக் குறும்படம் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது" என்றார்.

* குறும்பட நிகழ்வில் காண்பிக்கப்பட்ட குறும்படங்கள் பற்றி பார்வையாளர் ஒருவர் கூறுகையில்: "இதுவரை காலமும் தென்னிந்திய சினிமாவையே அதிகம் பார்த்துப் பழக்கப்பட்ட எமது சமூகத்துக்கு - தென்னிந்திய சினிமா மட்டுமே சினிமா என்றெண்ணிக் கொண்டிருந்த பலருக்கு - எமது வாழ்வியலை சொல்லக்கூடிய, எமது பிரச்சனைகளை எடுத்துக்காட்டக்கூடிய படங்களை எங்களாலும் தரமுடியும் என்று ஆணித்தரமாக இந்தப்படங்கள் மூலம் எமது இளைஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள். பாட்டும், காதலும், சண்டையும் இருந்தால்தான் அது படம் என்கிற போலித்தனத்தை உடைத்து - இங்கே பாருங்கள் எங்கள் உலகம் இங்கிருக்கிறது என்கிற யதார்த்தத்தை இந்தப்படங்கள் சொல்லிநிற்கின்றன" என்றார்.

* இளைஞர் ஒருவர் கூறுகையில்: "ஒவ்வொரு குறும்படங்களும் - அதன் கதையும் - அதில் நடித்தவர்களின் நடிப்பும் மனதைக் கவர்வதாக அமைந்துள்ளன. அந்த குறும்படங்களில் முற்றுமுழுதாக உண்மையான வாழ்வியல் நடைமுறைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில குறும்படங்களை பார்த்த பொழுது கண்ணீரை அடக்க முடியாத உச்ச உணர்வுநிலையை நான் அடைந்தேன். இந்தக் குறும்படங்களை தமிழர்கள் வாழ்கிற ஒவ்வொரு பகுதிகளிலும் கொண்டுசென்று காண்பிக்கவேண்டும் - ஒவ்வொரு தமிழரும் இந்தப் படங்களைப் பார்க்கவேண்டும். தென்னிந்திய திரைப்படங்களை சற்று ஓரம்தள்ளிவிட்டு, நமது கலைஞர்களின் படைப்புகளுக்கு - நமது வாழ்வியலை பேசும் படைப்புகளுக்கு முன்னிரிமை அளிக்கவேண்டும். எனவே இப்படியான படங்களை தமிழர்கள் வாழ்கிற பகுதிகளில் காண்பிக்க நாம் நமது ஆதரவை வழங்கவேண்டும். ஆகவே, நான் வாழும் பகுதியில் ஒரு நிகழ்வை ஒழுங்குபண்ணி அப்பகுதியில் வாழும் எம்மவர்க்கு இந்தப் படங்களை காண்பிக்கிற வசதியை ஏற்படுத்துவேன் என்று உறுதிகூறுகிறேன்" என உணர்வு பொங்கக் கூறினார்.

* பார்வையாளராக அமர்ந்திருந்த ஒரு பெண் கூறுகையில்: "எதுமட்டும் குறும்படத்தில் நமது அந்த இளைஞனும் வேற்று நாட்டு இளைஞனும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வோடு நெருக்கமாக பழகுகிறார்கள் - விருப்பு வெறுப்புகளை பகிர்ந்துகொள்கிறார்கள் - இது எனக்கு மிக பிடித்துள்ளது. புலம்பெயர்ந்து வாழ்கின்ற நம்மில் பலர் எம்மைப் போன்று புலம்பெயர்ந்து வாழ்கிற இன்னொரு சமூகத்துடனோ, அல்லது அந்நாட்டு மக்களுடனோ நெருங்கிப் பழகுவது மிகக் குறைவு. அப்படி நாம் நெருங்கிப் பழகிறபோது எமது பண்பாட்டை அவர்களுக்கு இலகுவாக எடுத்துச்சொல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. அவர்களின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடிகிறது" என்றார்.

* எழுத்தாளர் ஒருவர் இக்குறும்படங்கள் பற்றிக் குறிப்பிடுகையில்: "இன்றைய நாள் எனக்கு மிக மகிழ்ச்சியான நாள். இந்த புலம்பெயர்ந்த மண்ணில் கலை - இலக்கிய - தொழில்நுட்ப வளங்கள் நிறையவே உள்ளன. அவற்றை உள்வாங்கி நமது சமூகத்துக்கு தரவேண்டிய கடமை இளைஞர்களுக்கு உள்ளது. hollywood படங்களில் கூட பல பரிமானங்கள் உள்ளன. அங்கு எடுக்கப்படும் குடும்ப உறவு சார்ந்த படங்கள் எங்களையும் உணர்வுபூர்வமாக தொடுகின்றன. அப்படியான ஒரு அம்சத்தை இன்று நாம் பார்த்த குறும்படங்கள் கொண்டிருக்கின்றன. இக்குறும்படங்களை எடுத்த இளைஞர்கள் இனி அடுத்தகட்டத்தை நோக்கி நகரவேண்டும். நாம் நமது இளைஞர்களை நினைத்து பெருமைப்படக்கூடியவர்களாக இருக்கிறோம்" என்று கூறினார்.

* இன்னொருவர் குறிப்பிடுகையில்: "இந்த மூன்று நான்கு மணித்தியாலங்களாக நாங்கள் யதார்த்த உலகில் இருந்தோம். வழக்கமாக தென்னிந்திய திரைப்படங்களோடு - பொய்க்காட்சிகளோடு - வாள் வீச்சுக்கள், துப்பாக்கிகளோடு - சண்டைக்காட்சிகளோடு - ஆடல் பாடல்களோடு இருந்த நாம் நிஜ வாழ்வியல் அனுபவங்களை திரையில் கண்டோம். எனவே இந்தப் படைப்பாளிகளை, குறிப்பாக இந்த இளைஞர்களை உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு ஆதரவளித்து மேலும் மேலும் பலவற்றை வெளிக்கொணர வைக்கவேண்டும். இவர்களுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் பல பரிமானங்களை அடையமுடியும்" என்றார்.

* இன்னொருவர் கூறும்போது: "இன்று திரையடப்பட் ஒவ்வொரு குறும்படங்களுமே ஒவ்வொரு கருப்பொருளை வைத்து செம்மையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன." என்றார்.

* மற்றுமொருவர் சொல்லும்போது: "பார்த்தை அனைத்துப் படங்களுமே மனதுக்கு நிறைவைத் தந்தன. கதை சொல்லுவதில், காட்சிப்படுத்துவதில் தென்னிந்திய சினமாவோடு போட்டி போடக்கூடியவாறு நமது கலைஞர்கள் வளர்ந்துவருகிறார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட நடிகர்கள், கலைஞர்கள் எல்லாரும் எல்லாத்துறையிலும் சிறப்பாக செய்திருந்தார்கள். எதிர்வரும் காலங்களில் புலம்பெயர்ந்து வாழும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான புரிந்துணர்வை வளர்க்கக்கூடிய வகையிலான குறும்படங்களை உருவாக்கவேண்டும்." என்றார்.

* ஒரு இளைஞர் குறிப்பிடுகையில்: "தென்னிந்திய சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சமே. அதை நாங்கள் தவறாக சொல்லக்கூடாது. ஒரு ஒரு வகை. இந்த குறும்படங்கள் ஒரு வகை. இவை யதார்த்த வாழ்வியலை மக்களுக்கு சொல்வது. இரண்டையும் ஒப்பிடத்தேவையில்லை" என்றார்.

இறுதியாக சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட திரு சுதன்ராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் "திரையிடப்பட்ட ஏழு குறும்படங்கள் பற்றியும் - அவற்றின் பல் பரிமாணங்கள் பற்றியும் - அவற்றின் சிறப்புத்தன்மைகள் பற்றியும்" குறிப்பிட்டார். அதேபோல் "தமிழரின் அடையாளங்கள், தனித்துவங்கள் பேணப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் - புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்வியலை பேசக்கூடிய சினிமாவை கட்டியெழுப்பவேண்டியதன் கட்டாயம் பற்றியும் - தென்னிந்திய சினிமா மயக்கத்திலிருந்து விடுபடவேண்டியது பற்றியும்" எடுத்துச்சொன்னார். மற்றும் "தான் உட்பட புலம்பெயர்ந்து வாழ்கிற இளைஞர்களுக்கு இருக்கும் கடமைகள் என்னவென்றும், நமது போன தலைமுறையின் சுமைகளை வாங்கி நாம் நமது தோளில் சுமக்கவேண்டும் என்றும், தேடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும்" மிகச்சிறப்பாகவும், ஆழமாகவும் தனது கருத்துக்களைச் சொன்னார்.இரவு 21:00 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்து. ஒரு நிறைவான நிகழ்வொன்றில் கலந்துகொண்ட திருப்தியை அனைவரது மனங்களிலும் இந்தக் குறும்படமாலை ஏற்படுத்தியிருந்தது.


     இதுவரை:  22196916 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7572 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com