அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 29 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 13 - 14 - 15   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 23 April 2005

13.

கோணாமலையர் தன் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தவாறே, ஒரு கூர்மையான கத்தியினால் உரோமம் அகற்றிய மான் தோல்களை மெல்லிய நாடாக்களாக வார்ந்து கொண்டிருந்தார். இப்படி வார்ந்தெடுத்த தோல் நாடாக்களைக் கொண்டுதான் குழுமாடு பிடிப்பதற்குப் பயன்படுத்தும் வார்க்கயிற்றைத் திரிப்பார்கள். மலையரின் அனுபவமிக்க கைகள் கச்சிதமாகத் தோலை வார்ந்துகொண்டிருக்க, அவருடைய மனதுமட்டும் வேறு விஷயமொன்றைத் தீர்க்கமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது.

தண்ணிமுறிப்பு இப்போ ஒரு சிறிய காட்டுக் கிராமம் அல்ல. குளக்கட்டு உயர்த்தப்பட்டுத் திருத்தி அமைக்கப்பட்டபோது, அதன் கீழ்க்கிடந்த காடுகள், அந்தக் காரியாதிகாரி பிரிவிலுள்ள கிராமத்தவர்கட்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காடுகள் மறைந்து கழனிகளாகி விட்டிருந்தன. சமுத்திரம்போல் நீரைத் தேக்கிக் கொண்டிருந்த அந்தக் குளத்திலிருந்து இடையறாது தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. வளமான மண்ணும், நீர்வசதியும் நிறைய இருந்ததனால் வயல்களில் பொன் விளைந்திருந்தது. அந்தப் பொன்விளையும் பூமியை நோக்கிப் பலர் வந்தனர். வயல்களில் சதா ஒன்று மாற்றி ஒன்றாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. உழவு, சூடடிப்பு, பலகையடிப்புப் போன்ற பல வேலைகளுக்கும் அதிகமானோர் உழவு இயந்திரங்களையே உபயோகித்தார்கள். மலையரிடம் உழவு முதலிய வேலைகள் எல்லாவற்றுக்கும் உதவும் எருமைக் கடாக்கள் இருந்தாலும், தானும் ஒரு உழவு இயந்திரம் வைத்திருக்க வேண்டுமென்று அவருக்கு வெகுநாட்களாகவே ஆசை ஏற்பட்டிருந்தது. அவரிடம் ஓரளவு மாடுகன்று செல்வம் இருந்தாலும், இப்போது பதினைந்தோ இருபதினாயிரமோ கொடுத்து ஒரு நல்ல உழவுயந்திரத்தை வாங்குவதற்கு அவரால் முடியவில்லை. இந்த ஆசை ஏற்பட்டிருந்த போதுதான் மம்மது காக்கா, குமுளமுனைச் சிதம்பரியரின் மகளைப் பற்றிய பேச்சுக்காலைப்பற்றிக் கூறியிருந்தார். சிதம்பரியரின் பெண்ணைவிட, அவர் சீதணமாகக் கொடுக்கவிருந்த உழவு இயந்திரத்தைத்தான் கோணாமலையர் கூடுதலாக விரும்பினார். கதிராமனுடைய சிறந்த குணங்களும், அயராத உழைப்பும் அக்கம் பக்கமெல்லாம் பரவியிருந்த காரணத்தினாற்றான், கொஞ்சம் பசையுள்ள குமுளமுனைச் சிதம்பரியரும் மலையரைச் சம்பந்தியாக்கிக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

சில நாட்களாகவே கதிராமனுடைய போக்கு மலையருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அதற்குத் தூபம் போடுவது போலவே காடியரும், 'கதிராமனும் அந்தப் பெட்டையும் கண்டபடி காடுவழிய திரியிறது அவ்வளவு வடிவாயில்லை மலையர்' என்று பேச்சுவாக்கில் குறிப்பிட்டிருந்தார். இதற்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல், உமாபதிக்குப் பாம்பு கடித்தபோது, கதிராமன் விழுந்தடித்துக்கொண்டு ஒதியமலைக்கு ஓடியதும், அவன் அங்கிருந்து திரும்பியபோது பதஞ்சலி அவனுடைய காலைப் பிடித்துக்கொண்டு கதறியதும், மலையர் மனதில் ஏற்பட்டிருந்த எரிச்சலை அதிகமாக்கி இருந்தது. அதன் காரணமாகவே மலையர் மிகவும் முயற்சிசெய்து பதஞ்சலியை, சிவசம்பரோடு அனுப்ப முயன்றார். ஆனால் அந்த முயற்சி உடனடியாகப் பலனளிக்காது போகவே, அவருடைய எரிச்சல் சினமாக மாறிக் கொதித்துக் கொண்டிருந்தது.

கோணாமலையர் கோபமடைந்திருந்தால் அவருடைய முகம் விகாரப்பட்டுப் போகும். அவரின் முகம் விகாரம் அடைந்திருந்த ஒரு வேளையில்தான் பதஞ்சலியின் வீட்டில் இருந்து பாலியார் வந்தாள். அவளைக் கண்டதும், 'என்னவாம் சொல்லுறாள் அந்தப் பொட்டை?' என்று சற்றுச் சூடாகவே கேட்டார். பாலியார் மிகவும் வினயமாக, 'அவள் இப்ப அழுதுகொண்டு இருக்கிறாள், பின்னேரமாய்ச் சொல்லிப் பாக்கிறன்' என்று கூறிவிட்டுத் தன்னுடைய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள். பதஞ்சலியின் பேச்சை எடுப்பதற்கு இந்த நேரத்தைவிடக் கூடாத வேளை வேறெதுவும் இல்லையென்பது அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவளுடைய பதிலைக் கேட்ட மலையர், 'உம்....' என்று உறுமிவிட்டு, மீண்டும் தோலை வாரத் தொடங்கினார்.

  
14.

பதஞ்சலியின் குடிசைக்குப் பின்புறமாக இருந்த காட்டினூடாக வந்து வெளிப்பட்ட கதிராமன், வேலியருகில் நின்று அவளின் குடிசையைக் கவனித்தான். அங்கு பதஞ்சலியைக் காணவில்லை. அடுப்புப் புகைகின்ற சிலமனில்லை. பதஞ்சலி தண்ணீருற்றுக்குப் போய்விட்டாளோ என நினைத்தபோது அவனுடைய மனம் சோர்ந்துவிட்டது. மான் குட்டியைக் கையில் அணைத்தவாறே அவன் வேலியை எட்டிக் கடந்து, பதஞ்சலியின் குடிசைக்கு முன்னால் வந்து நின்றான். குடிசையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே நோக்கினான். பதஞ்சலி ஒரு மூலையில் படுத்திருந்ததைக் கண்டதும் அவனுடைய நெஞ்சு குளிர்ந்தது. 'பதஞ்சலி' என்று மெதுவாக அழைத்தான். மான்குட்டிபோல் சதா துள்ளித் திரிந்தவள் இன்று அடங்கிப் போயிருந்ததைக் காண்கையில் அவனுடைய மனம் வேதனைப்பட்டது. 'இந்தா பதஞ்சலி!' என்று தான் கொண்டுவந்த மான்குட்டியை அவளிடம் நீட்டினான். மான்குட்டியைக் கண்ட பதஞ்சலியின் விழிகள் அகன்றன. ஆசையுடன் அதனை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொஞ்சினாள். அவளின் இயல்பே அதுதான். தனக்கு நேரிட்ட பெருந்துன்பத்தையும் மறந்து மான் குட்டியை வருடிக் கொடுத்து, அதனுடன் செல்லமாகப் பேசவும் முற்பட்டாள். அவனுடைய மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த கதிராமன்,  'நான் வீட்டை போய் பால் எடுத்துவாறன் மான்குட்டிக்குப் பருக்க' என்று கூறிவிட்டு உற்சாகமாகத் தன் வீட்டை நோக்கி நடந்தான்.

  
15.


கோணாமலையர் எந்த விஷயத்தையிட்டு மனதில் கொதித்துக் கொண்டிருந்தாரோ, அதற்கு மேலும் தூபமிடுவதுபோலப் பதஞ்சலியின் குடிசையிலிருந்து கதிராமன் வெளியே வருவது, முற்றத்தில் உட்கார்ந்திருந்த அவருக்குத் தெரிந்தது. அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. 'காட்டுக்குப் போனவன் நேரே இஞ்சை வாறதுக்கு ஏன் அந்த வம்பிலை பிறந்தவளிட்டைப் போட்டு வாறான்' என்று மலையர் மனம் புழுங்கினார். கதிராமன் எதிரில் வந்ததும், அவனுடைய முகத்திலே அடித்தாற்போல் எரிந்து விழுந்தார். மனதில் பதஞ்சலியைப் பற்றிய இன்ப நினைவுகளுடன் வந்தவனுக்கு, அவர் அவள்மேல் வீண்வசை சொல்லிப் பேசியது அவன் நெஞ்சில் என்றுமில்லாதவாறு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தந்தையை எதிர்த்து எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு வார்த்தை பேசாத கதிராமன், ஒன்றுமே கூறாது தலையைக் குனிந்துகொண்டே வீட்டுப் பக்கமாகப் போனான். 'நான் ஒருத்தன் கேக்கிறன்! அவர் பெரிய துரைமாதிரிப் போறார்! வாடா இஞ்சாலை பொறுக்கி!' என்று சினங் கொப்பளிக்கக் கோணாமலையர் கூறியதும், பாலியாருக்கு வயிற்றைப் பிசைந்தது. இருந்தும், 'விடிய வெள்ளணக் காட்டிலை போனவன் இப்பான் வாறான். அவனை ஏன் பேசிறியள்?' என்று மகன்மேல் சென்ற கோபத்தைத் தன்மேல் திசைதிருப்ப முயன்றாள் பாலியார். 'பொத்தடி வாயை! எனக்குப் படிப்பிக்க வெளிக்கிடுறியோ?' என்று பக்கத்தில் கிடந்த உழவன் கேட்டியையும் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றார் மலையர். சிறிது சிறிதாக மூண்டு தகித்துக்கொண்டிருந்த அவருடைய ஆத்திரம் இப்போது அவருடைய முகத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. நெடிதுயர்ந்த அவருடைய கரிய உடல் ஆத்திரத்தால் படபடத்தது. அவருக்குக் கோபம் வந்துவிட்டால், யாரையாவது அடித்து நொறுக்கினால்தான் அது அடங்கும். தோளுக்குமேல் வளர்ந்துவிட்ட மகனை அவர் அடிப்பதிலும் தன்னை அடித்து நொறுக்குவது எவ்வளவோ மேல் எனப் பாலியார் நினைத்தாலும், உருத்திரமூர்த்தியாய் நிற்கும் மலையரைக் காண அவளுடைய உடல் பயத்தால் நடுங்கியது. 'தாயும் மோனுமாய்ச் சேர்ந்துகொண்டு குடியைக் கெடுக்கப் பாக்கிறியள் என்ன!' என ஆவேசமாகக் கேட்டவாறு பாலியாரைத் துவரங்கேட்டியால் மூர்க்கத்தனமாக விளாசித் தள்ளிவிட்டார். தன் கண் முன்னாலேயே தாயைக் கொடுமையாக அடிப்பதைக் கதிராமனால் பொறுக்க முடியவில்லை. 'இப்ப அம்மா என்ன செய்ததுக்கு அவவைப் போட்டுக் கொல்லுறியள்?' என அவன் குறுக்கிட்டபோது, அவன்மேல் பாயமுற்பட்டார் மலையர். 'என்னை என்னண்டாலுஞ் செய்யுங்கோ! அவனை அடியாதையுங்கோ!' என்று கணவனுடைய காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினாள் பாலியார். ஆத்திரத்தில் படபடத்த நிலையில் பாலியாரின் பிடியை விலக்கிக்கொண்டு போகக் கோணமலையரினால் முடியவில்லை. உடல் பதற, இப்பவே இந்த வளவாலை வெளியிலை போடா நாயே! போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக்கொண்டு அவளோடை இருடா பொறுக்கி!' என்று சிங்கம்போலக் கர்ச்சித்தார் மலையர். அவர் இப்படிப் பேசியபோதும் கதிராமன் அந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவனுடைய மனதில் ஆத்திரமும் அவமானமும் குமுறிக்கொண்டு எழுந்தன. உணர்ச்சி வசப்பட்டதனால் அவனுடைய விழிகளிரண்டும் இரத்தம்போலச் சிவந்து காணப்பட்டன. நடப்பதையே பேசாமல் பார்த்துக்கொண்டு நின்ற கதிராமனின் முகத்தைக் கவனித்த மலையர், 'என்னடா ஒருமாதிரி முழுசிப் பாக்கிறாய்? இவனை இண்டைக்குக் கொண்டுபோட்டுத்தான் மற்ற வேலை!' என்று ஆக்ரோஷமாகக் கூறியவாறே கையிலிருந்த கேட்டியால், தன் கால்களைப் பற்றியிருந்த பாலியாரின் முதுகில் தாறுமாறாக வீசினார். உக்கிரமாக விழுந்த ஒவ்வொரு அடியையும் தாங்கமுடியாது பாலியார் துடித்துப் போனாள். அந்த நிலையிலும் அவள் தன் மகனைக் கோணாமலையரின் கோபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, 'நீ ஏன்ரா வளவாலை வெளிக்கிடச் சொன்னதுக்குப் பிறகும் இஞ்சை நிக்கிறாய்? போடா வெளியிலை! இந்த வீட்டு முத்தம் நீ ஒருநாளும் மிதிக்கக்கூடாது!' என்று அழுகையும், ஆத்திரமுமாகக் கூவினாள். அவளுடைய வார்த்தைகளைக் கேட்கக் கதிராமனுடைய கண்களில் இரத்தம் வடிந்தது. இன்னமும் ஒரு வினாடி தான் அங்கு தாமதித்தாலும் அவர், தன் தாயைக் கொன்றே விடுவார் என்ற எண்ணத்தில் கதிராமன் அங்கிருந்து புறப்பட்டான்.

'இண்டைக்கு வெளிக்கிட்டவன் செத்துப் போனான் எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ! இந்த வளவிலை உள்ள ஆரெண்டாலும் அவனோடை கதைபேச்சு உறவுகிறவு ஏதும் வைச்சியளோ நான் பிறகு மனிசனாய் இருக்கமாட்டன்!' என்று மலையர் பேசிவிட்டுச் சுருட்டைச் சுற்றவாரம்பித்தார். வெகுநேரம் வரையிலும் அவருடைய படபடப்பும் ஆத்திரமும் தீர்ந்தபாடில்லை.

அடியின் வேதனையால் முற்றத்தில் கிடந்து துடித்துப்போன பாலியார் மெல்ல எழுந்து குசினிக்குள் போய் இருந்துகொண்டாள். எத்தனையோ முறைகளில் சிறு விஷயங்களுக்கெல்லாம் தாறுமாறாகக் கணவனிடம் அடிவாங்கியிருந்த அவளுக்கு இந்த வேதனை புதியதல்ல. ஆனால் இன்று வீட்டைவிட்டுப் போய்விட்ட கதிராமன் மறுபடியும் இந்த வீட்டுமுற்றம் மிதிக்கமாட்டான் என எண்ணுகையில் அவளுடைய பெற்ற வயிறு எரிந்தது.

இங்கே பாலியாரின் நெஞ்சு ஒருவகை வேதனையில் துடிக்கையில்ää அங்கே பதஞ்சலியின் இளநெஞ்சு சுக்குநூறாக வெடித்துக் கொண்டிருந்தது.

குடிசையினுள் கதிராமன் கொண்டுவந்த மான்குட்டியுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த பதஞ்சலி, பாலியார் வளவில் கூக்குரல் கேட்கவே, பதறியடித்து அங்கே சென்றாள். அவள் வந்ததை யாருமே கவனிக்கவில்லை. தன் பெயர் பேச்சில் அடிபடுவதைக் கேட்டபோது, அவள் தூரத்திலேயே நின்றுவிட்டாள். 'போடா நாயே! போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக்கொண்டு அவளோடை இருடா பொறுக்கி!' என்று கோணாமலையர் பேசியது அவளுடைய செவிகளில் நாராசமாக வீழ்ந்தது. அம்பு துளைத்த புறாப்போல துடிதுடித்து ஓடியவள் நேரே தன் குடிசையை அடைந்து அங்கே பாயில் விழுந்து குமுறியழுதாள். முன்பொரு நாள் அவள் பாடசாலைக்குச் சென்ற காலத்தில் அவள் ஏதோ செய்துவிட்டதற்காக அவளுடன் வகுப்பில் படித்த ஒரு சிறுமி, 'நீ வம்பிலை பிறந்தவள்தானேடி!' என்று பேசியது அவளுடைய நெஞ்சில் புதுக்காயம் போன்று எரிந்தது. உமாபதியிடம் சென்று, 'ஏனப்பு அவள் என்னை அப்பிடிப் பேசினவள்?' என்று கேட்டபோது, அவர் ஒன்றுமே பேசாது தன்னக் கட்டிக்கொண்டு கண்ணீர் பெருக்கியது இப்போ பதஞ்சலியின் ஞாபகத்திற்கு வந்தது.

ஆனால், எதற்காகத் தன்னை இப்படி 'வம்பிலை பிறந்தவள்' என்று பேசுகின்றார்கள் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. எனினும், அது தன் வாழ்விலேற்பட்ட ஏதோ ஒரு கொடிய சங்கதி என்பதுமட்டும் அவளுடைய களங்கமற்ற உள்ளத்திற்கு விளங்கியது. காட்டுப் புறாப்போலக் கட்டுப்பாடின்றி வளர்ந்த அவள், இன்று தன்னைச் சூழ்ந்து நிற்கும் வசை இன்னதென்று அறியாமலே அது விளைத்த வேதனையின் காரணமாகக் கலங்கிக் கொண்டிருந்தாள்.

 


     இதுவரை:  24834312 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6321 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com