அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 28 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 11   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 10 April 2005

11.

வெளியே முற்றத்தில் கோணாமலையர், கரடியர், மம்மதுக் காக்கா மற்றும் உமாபதியின் ஒன்றுவிட்ட சகோதரர் சிவசம்பு முதலியோர் கூடியிருந்து பேசிக்கொண்டிருந்தனர். பலதையும் சுற்றிச் சுழன்ற பேச்சு கடைசியில் பதஞ்சலியில் வந்து நின்றது.

'அவளைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு கலியாணம் முடிச்சு வைச்சிட்டியளே எண்டால் உங்கடை கடமையும் முடிஞ்சுபோடும்!'.  மலையர் உமாபதியின் தம்பி சிவசம்புவைப் பார்த்துக் கூறினார். அதற்குப் பதில் எதுவும் கூறாமலே சிவசம்பு  வெளியே தெரிந்த இருளைப் பார்த்துக் கொண்டிருந்தார். 'என்ன ஒண்டும் பறையாமல் இருக்கிறியள்?' என்று மலையர் மீண்டும் கேட்டதும்,  'அவரு என்னத்தை மலையர் பறையிறது? அவருதானே இந்தப் புள்ளையைக் கூட்டிக்கின்னு போவணும்! ஆனா அவரு... தம் பொண்டாட்டி என்ன சொல்லுவாவோ எண்டுதான் யோசிக்கிறாப்போலை கிடக்கு!'. மம்மது காக்கா வெற்றிலை பாக்கை உள்ளங்கையில் வைத்துப் பெருவிரலால் கசக்கிவாறே கூறினார்.  'எட! நல்ல கதை சொன்னாய் மம்மது! மனிசிக்காறி வேண்டாம் எண்டாப்போலை அவளை இந்தக் காட்டுக்கை விட்டிட்டுப் போறதே!' சிறிது சூடேறிய குரலில் கேட்டார் கோணாமலையர். சிவசம்பு உடனே, அதுக்கில்லை கோணாமலையண்ணை, என்ரை பொண்சாதிக்கும் நான் பொட்டையைக் கூட்டிக்கொண்டு போறது விருப்பந்தான், ஆனா, இவளுக்கு நான் எங்கை மாப்பிளை தேடுறது? இவளை ஆர் முன்னுக்கு வந்து முடிக்கப் போறாங்கள்?.... உங்களுக்கு விசயமெல்லாமம் தெரியுந்தானே!'  என இழுத்தவாறே கூறினார். 'அதுக்கென்ன செய்யிறது? இதென்ன ஊர் உலகத்திலை இண்டைக்கு நடக்காத விசயமே!'  என்று மலையர் சொல்லவும், கரடியர் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார். கரடியர் யாழ்ப்பாணத்திலிருந்து உத்தியோகம் பார்க்கத் தண்ணிமுறிப்புக்கு வந்தவர். அவருக்கு உமாபதியாரின் குடும்ப விஷயம் எதுவும் தெரியாது. அவருடைய சந்தேகத்தைக் கவனித்த மலையர், குரலைத் தணித்துக்கொண்டு, 'காடியரையா! உமாபதியின்ரை மோள் முத்தம்மாவுக்குத்தான் இந்தப் பொட்டை பிறந்தது.... ஆனல் தேப்பன் ஆரெண்டு தெரியாது' என்று கூறி,  'இதுதான் விசயம்!' என முடித்தார்.

கதிராமனுக்கு இந்தச் செய்தி புதுமையாக இருந்தது. இருபத்திமூன்று வயதைக் கடந்துவிட்ட அவன் இப்போ ஒரு சின்னப் பையன் அல்ல. வாழ்க்கையில் தெரியவேண்டிய விஷயங்கள் சில, எல்லோருக்குமே அந்தந்த வயதில்; எப்படியோ தெரியத்தான் செய்கின்றன. ஆனால் பதஞ்சலியின் தந்தை யாரென்று தெரியாத காரணத்தால் அவளை ஒருவரும் மணக்க முன்வரமாட்டார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. காட்டிலே வளர்ந்த அவனுக்குத் தெரியவேண்டியவை தெரிந்திருந்தாலும்,  தெரியக்கூடாத சில நாகரீகங்கள் இன்னமும் தெரியாமலேதான் இருந்தன. அவன் மெல்லத் திரும்பிக் குடிசையைக் கவனித்தான். பதஞ்சலி எந்தவித உணர்வுமின்றிப் பாயில் படுத்திருந்ததைக் கண்டதும்,  தன் தந்தை கூறிய அந்த விஷயம் அவளுக்குக் கேட்கவில்லை என்பது தெரிந்தது.

அன்று முழுவதும் கதிராமனும் ஒன்றுமே சாப்பிடவில்லை. இரண்டொரு தடவை தேநீர் மட்டுமே குடித்திருந்தான். அவ்வளவுதான்! பதஞ்சலியின் அனாதரவான நிலையும், அவளுடைய சிறிய தகப்பன் அவளை அழைத்துச் செல்ல மனதில்லாதிருப்பதையும் கண்ட கதிராமனுக்குச் சாப்பிடவே மனம் வரவில்லை. எனவே அவன் ஒன்றும் பேசாமல் குசினிக்குள் வந்து,  மடிக்குள் வைத்திருந்த புகையிலையை எடுத்துச் சுருட்டு ஒன்றைச் சுற்றத் தொடங்கினான். சிறியதொரு சுருட்டைச் சுற்றி அதை நெருப்புக் கொள்ளியால் பற்ற வைத்துக் கொண்டவன்,  'எனக்கும் கொஞ்சம் தேத்தண்ணி தாணை'  என்று கேட்டான். அவன் எப்போதுமே அதிகமாகப் பேசாதவன். தான் எண்ணியதையே செய்வான். எனவேதான் பாலியார் அவனை மீண்டும் சாப்பிட வற்புறுத்தாமல் தேநீரை ஆற்றிக் கொடுத்தாள்.

அதேசமயம் பதஞ்சலியும் கதிராமனுடைய குரலைக் கேட்டு எழுந்து குசினிக்குள் வந்தாள். பெருமழையில் அகப்பட்ட செங்கீரைக் கன்றுபோல் அவள் கசங்கிக் காணப்பட்டாள். அடுப்படியில் பாலியாரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவள் கொடுத்த தேநீரை மெல்ல மெல்லக் குடிக்கத் தொடங்கினாள். இடையிடையே தன் அகன்ற விழிகளால் கதிராமனுடைய முகத்தை அளந்தவள்,  பாலியாரை நோக்கி,  'சிவசம்பர் என்னைக் கூட்டிக்கொண்டு போகவே வந்தவர் அம்மா?' என்று கரகரத்த குரலில் கேட்டாள். 'அப்பிடியெண்டுதான் புள்ளை கதைச்சினம். நீ அவரோடைதானே மோனை போகோணும்!'  என்று பாலியார் பதில் கூறியபோது ஒருசில நிடங்கள் மௌனமாக இருந்த பதஞ்சலி,  'எங்கடை சொந்தக்காறரோடை போய் இருக்கிறதிலும் பாக்க எங்கையாவது ஆத்திலை குளத்திலை விழுந்து செத்துப் போறது நல்லது!' என்று குரல் தழுதழுக்கக் கூறினாள்.

அதன்பின்பு அங்கு ஒருவருமே பேசவில்லை. அவளுடைய அந்த வார்த்தைகள் அந்தச் சின்னக் குசினிக்குள் தங்கி நின்று மீண்டும் மீண்டும் ஒலிப்பதுபோல் கதிராமனுக்குத் தோன்றியது. அவன் வெளியே இருளை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு தடவையும் அவன் வாயில் சுருட்டை வைத்து இழுக்கவும்,  அதன் தணல் பிரகாசமாக ஒளிர்ந்தது. அமைதியாக இருந்து இருளை வெறித்து நோக்கிய கதிராமனையும், தலையைக் குனிந்தவாறே அமர்ந்திருந்த பதஞ்சலியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் தேநீரைக் குடித்தாள் பாலியார்.

கதிராமன் தங்களுடைய வீட்டுக்குச் சென்று குசினித் திண்ணையில் மான்தோலைப் போட்டுக்கொண்டு படுத்தான். அவனுக்கு நித்திரையே வரவில்லை. அமைதி நிறைந்த அந்த இரவில் காட்டிலிருந்து பழக்கமான பலவித ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. சில்வண்டுகளின் இடையறாத ரீங்காரம். இடையிடையே மான்கள் குய்யிடும் ஒலி! இவற்றினிடையே இரவு முழுவதும் ஒற்றையாய்க் கூவிக்கொண்டிருந்த இராக்குருவியின் ஓசை,  சோகம் நிறைந்ததாக அவனுடைய நெஞ்சை உருக்கியது. அதை அவன் வெகுநேரம் கேட்டுக் கொண்டேயிருந்தான். காட்டில் வாழும் விலங்குகளும்,  பறவைகளும் தத்தம் இனத்துடன் கூடி வாழும்போது,  பதஞ்சலியை மட்டும் ஏன் அவளுடைய இனத்தவர்கள் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றார்கள் என அவன் சிந்தித்தான். தான் அவளை முரலிப்பழத்திற்குக் கூட்டிச் சென்றதையும்,  பின்னொரு நாள் அவள் துடுக்குத்தனமாகப் பரிசொன்று கேட்டதற்குத் தான் தேன் தறித்துக் கொடுத்ததையும்,  உமாபதியரின் சடலத்தைத் தூக்கிப் பாடைக்குள் வைக்கும்போது அவள் குலுங்கிக் குலுங்கி அழுததையும் எண்ணிக்கொண்டே அவன் உறங்கிப் போனான்.

பாலியாரின் அணைப்பில் படுத்திருந்த பதஞ்சலியின் விழிகள் இருட்டிலும் திறந்திருந்தன. அவள் தண்ணிமுறிப்புக்கு வந்த நாட்தொட்டு இன்பமாய்க் கழிந்த நாட்களையும்,  அவற்றின் இனிமையையும் நினைத்துக் கொண்டாள். தண்ணீருற்றில் இருக்கும் தன்னுடைய உறவினர்களை எண்ணுகையில் அவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்துபோகாமல் இருந்ததும்,  தன்னையும்ää உமாபதியாரையும் ஒதுக்கி நடத்தியதும் அவள் நினைவுக்கு வந்தன. அவள் பாடசாலைக்குச் சென்ற நாட்களில்,  ஒருநாள் யாருடைய புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டாள் என்பதற்காக இவளை,  மற்றச் சிறுமி எதுவோ சொல்லி ஏசியதும்,  மற்றப் பிள்ளைகளெல்லாம் கைகொட்டிச் சிரித்துக் கேலி செய்ய,  தான் அழுதுகொண்டே உமாபதியிடம் வந்ததும், அவர்,  'நீ இந்தச் சனியன் புடிச்ச ஊரிலை இருக்கக்கூடாதம்மா! கொம்மாவைக் கொண்டதுபோலை இவங்கள் உன்னையும் கொல்லிப் போடுவாங்கள்!' என்று ஆத்திரத்துடன் பேசிவிட்டு மறுநாளே தன்னைத் தண்ணிமுறிப்புக்குக் கூட்டிவந்ததும்,  மங்கலாக நினைவில் தெரிந்தன. தண்ணிமுறிப்பில் முதலில் அவளைக் கண்ட பாலியார்,  வாஞ்சையுடன் அவளைக் கூட்டிச்சென்று தேனும்,  தயிருமாகச் சோறிட்டதையும் அவள் நினைத்துக் கொண்டாள்.

பாலியாரைப்பற்றி எண்ணுகையில் அவளுடைய நெஞ்சில் பாசம் பெருக்கெடுத்தது. நெஞ்சு விம்மியது. பதஞ்சலி இன்னும் நெருக்கமாகப் பாலியாருடன் அணைந்து ஒண்டிக்கொண்டாள். நாள்முழுவதும் பல வேலைகளைச் செய்த அலுப்பில் தூங்கிப்போன பாலியார், அந்த நித்திரையிலுங்கூட, 'அழாதையம்மா!' என்றவாறே பதஞ்சலியை அணைத்துக் கொண்டாள். அந்த அரவணைப்பில் மகளேயில்லாத ஒரு தாயும், தாயே இல்லாத ஒரு மகளும் பரஸ்பரம் நிம்மதியைக் கண்டவர்களாக உறங்கிப் போனார்கள்.
 


     இதுவரை:  24833252 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6192 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com