அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழ்த் திரையுலகு: [பகுதி 3] [பகுதி 4]   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….யேசுராசா  
Saturday, 25 September 2004
பக்கம் 1 of 2

[பகுதி - 1] & [பகுதி - 2]  

[பகுதி - 3] 


3.8.
வியாபார வெற்றிக்காகப் பாலுணர்வைத் தூண்டும் போக்கு அண்மைக்காலப் படங்களில் எல்லைமீறிச் செல்கிறது. பழைய திரைப்படங்களில், கதாநாயகனைத் தனது வலைக்குள் சிக்கவைக்க முயலும் விபச்சாரியையோ, நாகரிகக் கவர்ச்சிப் பெண்மணியையோ காட்டவேண்டிய தேவை ஏற்பட்டபோது கூட இயக்குநர்கள் கட்டுப்பாடாக - ஆபாசம் என்ற எண்ணம் தோன்றமுடியாத வகையிலேயே - சித்திரித்தனர்.

ஆனால், பிந்திய - அண்மைக்காலப் படங்களில், அருவருப்பூட்டுவதாகவும், "வக்கரிப்பு" நிறைந்ததாகவும் பாலுணர்வைத் தூண்டும் போக்கு மேலோங்கி இருக்கிறது.

3.8.1. ஆபாசமான சொற்கள், பாலுறவுச் செயற்பாட்டை நினைவூட்டும் "முக்கல் முனகல்" ஒலிகள் நிறைந்த பாடல்கள்.

3.8.2. ஆபாசமான உரையாடல்கள் - குறிப்பாக நகைச்சுவைக்காக வரும் துணை நடிகர்கள் மூலம்.
 
3.8.3. பாலியல் வன்புணர்வுக் காட்சிகள் வலிந்து புகுத்தப்படுதல் - நுணுக்க விபரங்களுடன் சித்திரிக்கப்படுதல்.

3.8.4. சில்க் ஸ்மிதா, அனுராதா போன்ற கவர்ச்சி நடிகைகளின் கவர்ச்சித் தனி நடனங்கள், கோஷ்டி நடனங்கள்.

3.8.5. கதாநாயகன் - கதாநாயகி இருவரும் தோன்றும் பாடற் காட்சிகள், நினைவுக் காட்சிகள்.

3.8.6. பெண்ணின் வயிற்றுப் பகுதியில் பம்பரம் விடுதல், ஒம்லெட் போடுதல் போன்ற காட்சிகள்.

3.8.7. பெண் பாத்திரங்களை "உடற் சுகத்திற்காக" விரகதாபத்தில் எப்போதும் ஏங்குபவர்களாகச் சித்திரித்தல் (மூன்றாம் பிறையில் - சில்க் ஸ்மிதா, காதல் கோட்டையில் - ராஐஸ்தான் பெண்).

பல படங்களில் கதாநாயகிகளே இவ்வாறு அலைபவர்களாகத்தான் சித்திரிக்கப்படுகின்றனர்!


3.9. யதார்த்தமற்ற தன்மை.

3.9.1. நம்ப முடியாத கதையமைப்பு:

அ) கோழிப்பண்ணை வைப்பதற்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட வங்கிக் கடன் உதவியைப் பெற, வங்கி முகாமையாளரின் மகளைக் கதாநாயகன் காதலித்துத் திரியும் கதை. (நேசம்).

ஆ) சவாலை ஏற்று "ஒருநாள் மட்டும்" முதலமைச்சராக மாறும் ஊடகவியலாளனான கதாநாயகனைப் பற்றியது (முதல்வன்)

இ) இரண்டாயிரம் ஆண்டுகளாக இமயமலைச் சாரலில் உயிர்வாழும் "புனிதரினால்" பயனடையும் கதாநாயகனைப் பற்றிய சமூகப்படம் (பாபா).

ஈ) உருவ ஒற்றுமைகொண்ட சகோதரர்கள், சிறு வயதில் பிரிந்து இறுதிக் கட்டத்தில் இணையும் சகோதரர் பற்றியவை (பல படங்கள்).

உ) ஊழலை ஒழிக்கச் சாகசங்கள் புரிந்து கொலைகள் செய்யும் தேசபக்தனான கிழவனின் கதை (இந்தியன்).

3.9.2. நடிப்பு:

பாத்திரஙங்களின் இயல்பிற்குப் பொருத்தமில்லாத நடிப்புமுறை கையாளப்படுகிறது. நிஐ வாழ்வில் நாம் தரிசிக்கும் மனிதர்களைப் போலல்லாது, செயற்கையான - மிகையான உணர்ச்சி வெளிப்பாட்டை நடிப்புக் கொண்டுள்ளது. "கமெரா" எல்லாவற்றையும் துல்லியமாகக் காட்டும் என்ற உணர்வே இல்லை. அதன் காரணமாகத்தான், நாடக அரங்கின் கடைசிப் பகுதியில் இருப்பவருக்கும், தெரியவேண்டுமென்பதுபோல் மிகையான அபிநயங்களுடன்-கத்துங்குரலுடன் நடிக்கின்றனர் போலும்!

3.9.3. நம்பமுடியாத சம்பவங்கள்:

அ) காதலியின் காதலை இழக்காமலிருப்பதற்காக நாக்கை அறுத்துக்கொள்ளுதல் (சொல்லாமலே).

ஆ) தமிழ்நாட்டிலுள்ள 350 சாதிகளை கதாநாயகன் ஒரே நாளில் ஒழித்தல் (முதல்வன்).

இ) நடுவானில் பறக்கும் விமானத்திலிருந்து பரசூட் இல்லாமலேயே கதாநாயகன் குதித்துத் தப்புதல் (செங்கோட்டை).

3.9.4. காதல் உருவாதல் :
"கதாநாயகனை, கதாநாயகி ஒரு வினாடி உற்றுப் பார்த்தால், உடனே காதல்! அல்லது அழகான பெண் கதாநாயகனைக் கடந்துபோனால் போதும் காதல் தீ திபுதிபுவென பற்றிக்கொண்டுவிடும்.

...கதாநாயகன், கதாநாயகி இருவரும் முதல் சந்திப்பில் மோதிக்கொள்வார்கள். "யூ ராஸ்கல்" என்று பல்லைக் கடிப்பாள் கதாநாயகி. "அவள் திமிரை அடக்கிக் காட்டுகிறேன்"
என்பான் கதாநாயகன். மூன்றாவது காட்சியில் கையைக் கோர்த்துக்கொண்டு டூயட் பாடிக்கொண்டிருப்பார்கள்.

...காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தவிர, கதாநாயகன் ஓயமாட்டான். கையில் திருவோடு இல்லாத குறையாக தெருத் தெருவாக நாயகியின் பின்னால் அலைந்து காதல் பிச்சை கேட்பான். குரங்கு வித்தை காட்டி, பாட்டுப் பாடி, ஆட்டம் போடுவான். அப்படியும் மசியவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுவான். காலக்கெடுவைப்பான். கெடு முடிவதற்கு சரியாக ஒன்றரை வினாடிக்கு முன்பு கதாநாயகியால் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்." [9]

3.9.5. கோஷ்டி நடனங்கள்:

கனவு - நினைவுக் காட்சிகளில் மட்டுமல்லாது நிஐத்தில் வீடு, கல்லூரி, கோவில், பூங்கா, நடு வீதி போன்று பொது இடங்களிலும் நாயகனோ நாயகியோ தோழியருடன் திடீரெனக் கூட்டமாகத் திரண்டு, ஒரேவித உடை அலங்காரத்துடன், நடனம் என்ற பெயரில் "உடற்பயிற்சி" செய்யும் காட்சிகள் தவறாமல் இடம் பெறுகின்றன, பாலியல் அபிநயங்கள் நிறைந்து வழிவனவாகவும் இவை உள்ளன.

3.9.6. சண்டைக் காட்சிகள்:

ஒருவரே பத்துப்பேரை அடித்து வீழ்த்துவதும், ஆறு தோட்டாக்கள் கொண்ட ரிவால்வரை வைத்துக்கொண்டு "மெஷின்கண்" வில்லன் கோஷ்டியைச் சுட்டுப் பொசுக்குவதும், ஐந்து மாடிக் கட்டடத்திலிருந்து அடிபடாமல் குதிப்பதும் நமக்குப் பழகிப்போன வித்தைகள்.

...கதாநாயகனின் வீரபராக்கிரமத்தை நிரூபிக்கிறோம் என்று அசட்டுத்தனங்களை எல்லாம் அரங்கேற்றுகின்றனர். கால் தரையில்படாமல் சண்டையிடுவது, ஒற்றைக் கையைக்கட்டிக் கொண்டு பெரும் கூட்டத்தையே அடித்துத் துவைப்பது போன்றவை சில உதாரணங்கள். [10]


3.10. வியாபார ரீதியில் நன்கு வெற்றிபெற்ற படத்தைப் பின்பற்றி, ஒரே வகையான கருப்பொருளில் படங்களை உருவாக்கும் போக்கு.

3.10.1. இயக்குநர் பீம்சிங் பாசமல்ர் (1961), பாவமன்னிப்பு (1961), பாலும்பழமும் (1961), படித்தால் மட்டும் போதுமா? (1962) போன்ற படங்களில் குடும்ப உறவு - பாசம் - நேசம் போன்றவற்றைக் கருவாக வைத்து "வெற்றிப் படங்களை" உருவாக்கினார்.

3.10.2. திருவிளையாடல் (1965), புராணப்படத்தின் வியாபார வெற்றியைத் தொடர்ந்து சரஸ்வதி சபதம் (1966), கந்தன் கருணை (1967), திருவருட் செல்வர் (1967), எனப் புராணப்படங்களையே இயக்குநர் ஏ . பி. நாகராஐன் உருவாக்கினார்.

3.10.3. கல்யாணப் பரிசு (1959) வெள்ளி விழாக் கொண்டாடியதைத் தொடர்ந்து, அதேமாதிரி காதல் தோல்விச் சோகப் படங்களான மீண்ட சொர்க்கம் (1960), சுமைதாங்கி (1962), நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) போன்றவற்றை ஸ்ரீதர் உருவாக்கினார்.


3.11. மந்தைத்தனமாக ஒரேமாதிரிப் பெயர் சூட்டும் போக்கு.

3.11.1. காதல் கோட்டை, காதலா காதலா, காதலுக்கு மரியாதை, காதலே நிம்மதி.

3.11.2. சின்னத்தம்பி, சின்னக் கவுண்டர், சின்ன ஐமீன், சின்ன மாப்ளே.

3.11.3. ஜீன்ஸ், ஜென்டில் மேன், ஐ லவ் இந்தியா, கலோ பிரதர்ஸ், ஏர்போர்ட் என ஆங்கிலப் பெயர்கள்.


3.12. ஈழத்தமிழர் சார்ந்த படங்களை உருவாக்குதல் அண்மைக் காலங்களில் நிகழ்ந்துவருகிறது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இவர்களைச் சந்தையாகக் கருதியே இவ்வாறான படங்கள் தயாரிக்கப்படுகின்றன, அத்துடன் புதிய படத் தயாரிப்புகளிற்கு ஈழத்தமிழ் முதலீட்டாளர்களைக் கவர்வதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும். வியாபாரமே குறியாக இருப்பதால் இந்த வியாபாரிகளின் தயாரிப்புகளில் ஈழத்தமிழரின் வாழ்நிலை உண்மைகளோ, பிரச்சினைகளோ நேர்மையுடனும் கலை அக்கறையுடனும் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஆளும் இந்திய பிராமணிய மேல் வர்க்கத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு இணக்கமான முறையில் செயற்படும் மணிரத்தினத்தின், "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம் ஈழத்தமிழர் போராட்டச் சூழலைக் கொச்சைப்படுத்தி எதிர்ப்பிரச்சாரம் புரிகிறது, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அது பேசுவதுமில்லை. தெனாலி, நந்தா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்றவை மேலோட்டமானவை.

காற்றுக்கென்ன வேலி தமிழர் போராட்டத்திற்கு அனுதாபமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளபோதும், தவறான அம்சங்களுடன், மிகை உணர்ச்சிப் பாங்கில் உருவாக்கப்பட்டுள்ளதால் முக்கியத்தை இழக்கிறது. திரைப்பட மொழியைச் சிறப்பாகக் கையாண்ட படைப்பாக "ரெறறிஸ்ற்" இருக்கிறது ஆனால் "இறுக்கமான" அரசியல் நோக்குநிலை கொண்ட பார்வையாளரிடையில் அதிருப்தியான எண்ணங்களை அது எழுப்பியிருக்கிறது. ஆயினும், நெகிழ்ச்சியான நோக்குநிலை கொண்ட ஒரு பார்வையாளன், பல தளங்களில் விரியும் சிறப்புக்களை அதில் கண்டடைய வாய்புகளுண்டு.


3.13. அழகானவனாக, வீரம் நிறைந்தவனாக, சகலகலாவல்லவனாக திரையில் தோன்றும் கதாநாயக நடிகர்கள் - தமது படங்களின் வியாபார வெற்றிகளைத் தொடர்ந்து "நட்சத்திரமாக" மாறுகின்றனர், கதாபாத்திரம் மறைய நட்சத்திர நடிகனே முன் தெரிகிறான். இதனால்தான் தனது மீசையை எடுக்க ரஜினிகாந்த் மறுத்து, "மீசையுள்ள ஜுலியஸ் சீசராக" பிரியா படத்தில் நடித்தார், அருணாச்சலம் படத்தில் ரஐனியின் பாட்டியாக நடித்த வடிவுக்கரசியை நோக்கி, "ஏண்டி! அநாதைப் பயலேன்னு எங்க தலைவரைக் கூப்பிட என்ன தைரியம் உனக்கு!" என ரஜினியின் இரசிகர்கள் ரயில் நிலைய மொன்றில் கூச்சல் போட்டார்கள், எம்.ஜி. ஆரை "எங்க வீட்டுப்பிள்ளை" திரைப்படத்தில் சவுக்கினால் அடித்ததற்காக நம்பியாரை எம்.ஜி.ஆரின் இரசிகர்கள் மிரட்டினார்கள்!

நட்சத்திரங்களின் மதிப்புக் கூட அவர்களது சம்பளமும் அதிகரித்துவிடுகிறது, 2000 ஆம் ஆண்டு சம்பள நிலவரம்:

விஐய்  - 1 - 1/4 கோடிரூபா
அஜித்  - 1 கோடிரூபா
விஐயகாந்  - 1 - 1/2 கோடிரூபா
பிரபுதேவா  - 1 - 1/2 கோடிரூபா 
சரத்குமார்        - 75 இலட்சம்
பிரபு  - 75 இலட்சம்
கார்த்திக்  - 75 இலட்சம்

"கமலகாசன் ஒரு படத்தில் நடித்தால் 10 கோடி ரூபா வருவாய் வருகிறது, ரஜினிக்கோ ஒவ்வொரு படத்திலும் சும்மார் 25 கோடி ரூபா வருகிறது." [11]
இதனாலெல்லாம் இரசிகர்களின் ஆளுமையின் மீது "நட்சத்திர" ஆதிக்கம் அதிகரிக்கிறது. இரசிகர் மன்றங்கள் உருவாகின்றன, நட்சத்திரங்கள் மீது கடவுள் தன்மையும் ஏற்றிப் பார்க்கப்படுகிறது. "கட் அவுட்டுகளுக்குப் பால் அபிஷேகம் நடக்கிறது. நடிகைக்கு கோயில் கட்டுகிறார்கள். அபிமான நடிகர் நடித்த படம் வெற்றியடைய காவடி எடுப்பதும், தேர் இழுப்பதும் மொட்டை போடுவதுமான செயல்கள் நடைபெறுகின்றன" [12] என்கிறார், எழுத்தாளர், திலகவதி.

"ஐனவரி - 17: 'கடவுள், கடவுளைப் படைத்த நாள்' என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் சென்னையில் முக்கிய தெருக்களில் சில ஆண்டுகளுக்கு முன்னால் காணப்பட்டன. ஆம், ஐனவரி - 17 எம்.ஜி.ஆர். பிறந்தநாள். அச்சுவரொட்டியைத் தயாரித்தவர்கள் அவரது பக்தர்கள்." [13]

எம்.ஜி.ஆர். என்ற 'தெய்வம்' இறந்தபோது, துயரம் தாங்காது 31 இரசிகர்கள் தீக்குளித்து இறந்தனர்.


3.14. இலங்கைத் திரைப்படங்கள்

3.14.1. 1962இல் தயாரிக்கப்பட்ட "சமுதாயம்" (16 மி. மீ) திரைப்படத்திலிருந்து, 1993 இல் வெளிவந்த ஷார்மிளாவின் "இதயராகம்" வரை 28 தமிழ்த் திரைப்படங்கள் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளன. [14]
கலை அக்கறை தேசிய உணர்வு என்பவற்றுக்கு அப்பால் திரைப்படத்துறை மீதான கவர்ச்சி - வியாபார அக்கறை, பிரபலமடைதல் என்பவற்றால் தூண்டப்பட்டோரே பெரும்பாலும் இம்முயற்சிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, தமிழக ஐனரஞ்சக திரைப்படப்போக்குகளைப் பின்பற்றுபவையாக இவை அமைந்துள்ளன. பொன்மணி, குத்துவிளக்கு, வாடைக்காற்று ஆகிய படங்களில் மாறுதலான அம்சங்கள் சிலவற்றைக் காணலாம்.

3.14.2. "நிதர்சனம்" அமைப்புத் தயாரித்த வீடியோப் படங்களில் தனித்தன்மைகள் காணப்படுகின்றன. அரசியல் "தேவை"யான பிரச்சாரம், உண்மை நிகழ்வுகள், போர்க்கள நிலைமைகளைப் பதிவு செய்தல் என்பனவே இவற்றின் பிரதான போக்குகள். பிரச்சாரத் தன்மையை மீறி கலைத்துவத்துடன் அமைந்த படைப்புகளும் உள்ளன. எவ்வாறாயினும் திரைப்பட வடிவத்தின் அடிப்படையான "காட்சிரூபப் பண்பு" பெரும்பாலான படைப்புக்களில் முக்கிய போக்காக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
     இதுவரை:  25360196 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1494 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com