அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 19 September 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழ்த் திரையுலகு: [பகுதி 1] [பகுதி 2]   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….யேசுராசா  
Sunday, 05 September 2004
பக்கம் 2 of 2

[பகுதி - 2]

பிரதான போக்குகளும் மாற்று முயற்சிகளும்

1. நவீன அறிவியல், தொழில்நுட்ப சாதனையாகத் திரைப்படம் உருவானது. 1895இல் லூமியர் சகோதரர் தயாரித்த "பகற்போசன வேளை", "புகைவண்டியின் வருகை" ஆகிய மௌனத் துண்டுப் படங்களே ஆரம்பம். 1927இல் "ஜாஸ் பாடகன்" என்ற உலகின் முதலாவது பேசும்படம் உருவானது. காட்சிரூப வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கட்புல ஊடகமாக - நவீன கலையாக அது இன்று பெருவளர்ச்சி அடைந்திருக்கிறது. சிக்கலான வடிவப் பரிசோதனை முயற்சிகள் இருந்தபோதிலும், பிரதானமாக யதார்த்த ரீதியில் வெளிப்படுத்தப்படுவனவாகவே இருக்கின்றன.

2. தமிழ்நாட்டில், 1897இல் திரைப்படம் முதலில் அறிமுகமானது. சென்னையிலுள்ள "விக்ரோறியா பொது மண்டபத்தில்", "புகைவண்டியின் வருகை" (Arrival of a Train), "தொழிற்சாலையை விட்டு" (Leaving the factory) போன்ற சில நிமிடங்களே ஓடும் மௌனத் துண்டுப் படங்கள், "எட்வர்ட்ஸ்" என்ற ஆங்கிலேயரால் காட்டப்பட்டன. 1900இல், மௌண்ட் ரோட்டில் "எலக்ட்ரிக் தியேட்டர்" என்ற சினிமாக் கொட்டகையை "வார்விக் மேஐர்" கட்டினார். 1907இல், இரண்டாவது திரையரங்கான "லிரிக் தியேட்டரை" "கோஹன்" என்ற ஆங்கிலேயர் கட்டினார். இவ்விரண்டிலும் மௌனப் படங்கள் காட்டப்பட்டன. 1905இல், திருச்சியைச் சேர்ந்த "சாமிக்கண்ணு வின்சென்ட்" என்பவர், "ட்யூபா" என்ற பிரெஞ்சுக்காரரிடமிருந்த "புரொஜெக்ரரையும்", "Life of Jesus" எனற துண்டுப் படச்சுருளையும் விலைக்கு வாங்கி திருச்சியைச் சூழவுள்ள கிராமங்களிலும் சென்னை போன்ற நகரங்களிலும் காட்டத் தொடங்கினார், இவர்தான் தென்னிந்தியாவின் முதலாவது சலனப்படக் காட்சியாளரான இந்தியராவார். இவ்வாறாக தமிழ்நாட்டில் மௌனப் படங்கள் பரவின. இவற்றால் கவரப்பட்ட "நடராஜா முதலியார்" என்பவர் "இந்தியா பிலிம் கம்பனி"யைத் தொடங்கி, "கீசகவதம்" என்ற முதலாவது மௌனப் படத்தை உருவாக்கி வெளியிட்டார்.

மௌனப் படக் காலகட்டத்தில் 50இற்கு மேற்பட்ட முழுநீளக் கதைப்படங்களும் 30 செய்தி விபரணப் படங்களும் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் அவையெல்லாம் அழிந்துவிட்டன. [2]
"முதலாவது தமிழ்ப் பேசும்படமான "காளிதாஸ்" 1931இல் வெளியிடப்பட்டது, இதனை இயக்கியவர் "அர்தேஷிர் இரானி" என்ற பார்சிக்காரர். இந்தியாவின் முதலாவது பேசும்படமான "ஆலம் ஆரா"வை உருவாக்கியவரும் இவரே. ஆரம்பகாலப் படங்கள் யாவும் பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களிலுள்ள "ஸ்ரூடியோ"க்களிலேயே தயாரிக்கப்பட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.

3. வரலாற்று ரீதியாகத் தமிழ்ப்படங்களை உற்றுநோக்குகையில், அவற்றின் பிரதான போக்குகளாக அம்சங்களாகச் சிலவற்றை அடையாளங்காண முடியும்.

3.1. புராண, இதிகாசக் கதைகளே ஆரம்பத்தில் மௌனப் படங்களாகவும் பேசும் படங்களாகவும் தயாரிக்கப்பட்டன. திரௌபதி மான சம்ரக்ஷணம் (1917), மகிராவணன் அல்லது மாருதி விஐயம், மார்க்கண்டேயா (1919), பீஷ்ம பிரதிக்ஞை (1921), கஜேந்திர மோட்சம், பக்தநந்தன், சமுத்திர மதனம், மோகினி அவதாரம் (1926), காலவா, அரிச்சந்திரா (1932), சாவித்திரி (1933), சீனிவாச கல்யாணம் (1934) போன்றவற்றை உதாரணங்களாகக் காட்டலாம். இவற்றில் பல நாடகங்களாக நடிக்கப்பட்டவையாகும். 1920இல், அரசின் தணிக்கைக் குழு தமிழ்நாட்டில் செயற்பட ஆரம்பித்தது, பொலிஸ் ஆணையாளர் இக்குழுவின் தலைவராக இருந்தார். எனவே, பொலிசாரின் பிடிக்குள் சிக்காதிருப்பதற்காகவும் சமூகம் - அரசியல் சார்ந்த படங்களைத் தயாரிக்காமல், மக்களிற்குப் பரிச்சயமானவையும் விருப்பமானவையுமான புராண - இதிகாசக் கதைகள் படமாக்கப்பட்டன.

3.2. சென்னை மாகாணத்தில் கொங்கிரஸ் கட்சி பொதுத் தேர்தலில் வென்று 1937 - 1939 வரை பதவியில் இருந்தபோது தணிக்கைமுறை நீக்கப்பட்டது. அக்காலத்தில் சமூக சீர்திருத்தத்தையும் தேசபக்தியையும் வெளிப்படுத்தும் பேசும்படங்கள் உருவாக்கப்பட்டன.

"கே. சுப்பிரமணியம் இயக்கிய பாலயோகினி (1937), ஸேவா ஸதனம் (1938), தியாகபூமி (1939) முதலான தமிழ்ப் பேசும்படங்கள் பெண் விடுதலைக் கருத்துக்களோடு சாதிக்கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தன. குழந்தை மணக் கொடுமைகளை எதிர்த்துப் பால்ய விவாகம் (1940) என்றொரு பேசும்படம் குரல் கொடுத்தது. சாதி பேதக் கொடுமைகளை எதிர்த்து முதல் தமிழ்ப் பேசும் படமான காளிதாஸ் (1931) முதலாக, நந்தனார் (1935), பாலயோகினி (1937), தாயுமானவர் (1938), தேச முன்னேற்றம் (1938), ஸேவாஸதனம் (1938), தியாகபூமி (1939), சதிமுரளி (1940), பக்த சேதா (1940)..., முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பேசும்படங்கள் கருத்துப் பிரச்சாரம் செய்துள்ளன. அதேபோல, இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி மேனகா (1935), முதலாகப் பல தமிழ்ப் பேசும்படங்கள் மத நல்லிணக்கத்திற்கான கதைகளையும் அறிவுரைகளையும் கூறின. சந்திரமோகனா அல்லது சமூகத் தொண்டு (1935), சமூக பொருளாதார சீர்திருத்தத்தின் அவசியத்தைக் கூறியது. இத்தகைய பிரச்சாரங்கள் எல்லாம் இந்தியர்களிடையேயான அக முரண்களை அகற்றி, அவர்களைத் தேசியப் போராட்டத்தில் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டவை." [3]

3.3. ஐம்பதுகளில் தயாரிக்கப்பட்ட தி.மு.க. வினரின் திரைப்படங்களில் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் என்பவற்றைப் பிரச்சாரப்படுத்தும் போக்கு பிரதானமானதாக இருந்தது. வேலைக்காரி (1949), நல்லதம்பி (1949), பராசக்தி (1952), ரத்தக்கண்ணீர் (1954) போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். தமது கட்சிக் கொள்கைகளைப் பிரச்சாரப்படுத்தும் போக்கும் இருந்தது. ஓர் இரவு, ரங்கூன் ராதா, வேலைக்காரி போன்றவற்றில் இதனைக் காணலாம்.

"நாடோடி மன்னன் என்ற படத்தில் கதாநாயகனான எம்.ஜி.ஆர். ஆட்சியை ஏற்றுக்கொண்டவுடன் அறிவிக்கும் அரசப் பிரகடனம் தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஒத்திருந்தது.

...எஸ். எஸ். ராஜேந்திரனின் சொந்தப்படமான "தங்கரத்தினம்" என்ற படத்தில் திருச்சியில் நடந்த தி.மு.க மாநாட்டு ஒளிப்பதிவுக் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன." [4]

3.4. பாடல்கள், வசனங்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு பெரும்பாலான படங்களில் இருக்கிறது. இது திரைப்பட வடிவத்தின் அடிப்படைப் பண்பான காட்சிப்படுத்துதலிற்கு மாறானது. கண்ணுக்கு உரிய ஊடகத்தினை காதுக்கு உரியதாக்கும் "மாறாட்டம்" இங்கு நிகழ்கிறது.

"திரைப்படத்தினின்று வேறுபட்ட, தனித்த முக்கியத்துவம் சினிமாப் பாட்டுகளுக்கு வர ஆரம்பித்தது. இது ஹரிதாஸ் (1944) படத்துடன் ஆரம்பம் எனலாம். 133 வாரம் ஓடிய அந்தப் படம் இசையமைப்பாளருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை அளித்தது. இன்றளவும் பல படங்களின் வெற்றி பாட்டுகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பாடல்களினாலேயே படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றிபெறும்போது, சினிமாத் தன்மையின் முக்கியத்துவம் குறைகிறது. பாட்டு கேட்பதற்கானது. ஆனால் சினிமா பார்ப்பதற்காயிற்றே. அந்த அளவுக்கு, சினிமாவின் வளர்ச்சிக்குப் பாட்டுக்கள் இடையூறாக அமைந்து, சினிமா இலக்கண வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது.

...பொதுவாக சினிமாப்பாட்டு படத்தின் ஓட்டத்தைத் தடைசெய்து, சினிமா அனுபவத்தைக் கொச்சைப்படுத்துகிறது." [5]

கதாபாத்திரங்களின் பேச்சிற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது திரைப்படம் "ஒலிச்சித்திரமாகிறது". திரைப்பட வரலாற்றாய்வாளரும் விமர்சகருமான தியடோர் பாஸ்கரன், "சினிமாவின் இயல்பு பற்றிய பரிச்சயம் இல்லாமையால் பல திரைப்படங்களில் கதை நகர்வுக்குப் பேசும் மொழி பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஒரு தமிழ்ப் படத்தின், அதிலும் 60களிலும் 70களிலும் ஒலி நாடாவைக் கேட்டு அதன் கதையைப் புரிந்துகொள்ள முடியும். வானொலி நிலையத்தார் பிரதி ஞாயிறு மதியம் ஒரு படத்தின் ஒலி நாடாவை ஒலிபரப்புவது வழக்கம். செவி வழி புரிந்துகொள்ள முடிந்தால் அது காணும் படமாகுமா? திரைப்படத்தின் தனித்துவமற்ற ஒரு படைப்பே அது என்று அர்த்தம்.

...திராவிட இயக்க நாடகாசிரியர்களில் மு. கருணாநிதியும் ஒருவர். அவரது பராசக்தி, மனோகரா (1954) இரண்டு படங்களிலும் பொறி பறக்கும் வசனம் அடிநாதமாக அமைந்திருந்தது. இங்கு முக்கியத்துவம் பேசும் மொழிக்கே, காட்சிப் படிமங்களுக்கல்ல" [6] என்கிறார்.

3.5. திரைப்படம் பொழுதுபோக்குக்குரியதென்ற போக்கிலேயே தயாரிக்கப்படுகிறது, அந்தப் போக்கை ஏற்றுக்கொண்டே நுகரப்படுகிறது, "கலையாக" அது கருதப்படுவதில்லை.

"பெரும்பாலும் கலையாக அன்றி ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே திரைப்படம் பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சியாய்ப் பொழுதைப் போக்குவதற்குரிய ஒன்றுதான் திரைப்படம் எனக் கருதப்படுவதால், நம்பமுடியாத கதையமைப்பு, பாத்திரங்களின் அதிதீவிர சாகசங்கள், பொருத்தமில்லாத   கோஷ்டி நடனங்கள்  (உடற் பயிற்சிகள்...?!) நகைச்சுவை என்ற பெயரிலான 'அலட்டல்கள்' என்பனவெல்லாம் கேள்விக்கிடமேதுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, தமது பொதுப்புத்தி தொடர்ந்தும் அவமதிக்கப்படுவதை உணரமுடியாதளவிற்கு, பழக்கமாகிப்போய்விட்ட ஒரு இரசனை முறைக்குள் பார்வையாளர் சிக்கியுள்ளனர். கல்வித் தரம், வர்க்க வேறுபாடு என்பவற்றைத் தாண்டி பரவலாக இந்த இரசனைப் போக்கே காணப்படுகிறது." [7]

3.6. கலை நேர்த்தி, வடிவச் செம்மை, சிறந்த திரைக்கதை என்பவறைக் கொண்டல்லாது, வசூலை அள்ளித்தந்து வியாபார ரீதியில் மேலோங்கும் படமே "வெற்றிப்படம்" எனத் தயாரிப்பாளராலும் இரசிகர்களாலும் ஊடகங்களாலும் குறிக்கப்படும் போக்குக் காணப்படுகிறது, வியாபாரப் போக்கே திரைப்படத் தயாரிப்பின் அடிப்படையாகிறது. சோப்பு வியாபாரி சோப்பு விற்கிறான், சினிமா வியாபாரி சினிமா விற்கிறான், நான் சினிமா வியாபாரி என்ற இயக்குநர் மணிரத்தினத்தின் கூற்று, இதை நன்கு வெளிக்காட்டுகிறது.

3.7. மக்கள் திரளின் பல பிரிவினரையும் கவர்ந்து வருவாயைப் பெருக்கி இலாபமடையும் நோக்கினால், "பல சங்கதிகளைக் கலந்து" ஒருவித "சூத்திரப் பாங்கில்" திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

"ஒரு திரைப்படத்திற்குள் இரண்டு காதற் பாட்டுக்கள் - ஒரு கிளுகிளுப்பூட்டும் நடனம்- ஒரு டப்பாங்குத்து - இரண்டு மூன்று அடிதடிச் சண்டைகள் - சிந்திப்பவர்களுக்கு ஒரு தத்துவப் பாட்டு அல்லது வசனம் - பெரியவர்களுக்கும் பெண்களுக்கும் கண்ணீர் விடும் சில சோகக் காட்சிகள் - நகரத்தில் வாழ்பவர்களுக்குக் கிராமப்புற ஏரி - குளம் - கண்மாய் - வயல் - வரப்பு போன்ற மலரும் நினைவுக் காட்சிகள் - சிறு நகரங்களில் வாழ்பவர்களுக்கும் கிராமங்களில் வாழ்பவர்களுக்கும் பெரு நகரங்களில் காணப்படும் மாடமாளிகை கூட கோபுரங்கள், வியப்பூட்டும் வாகனப் போக்குவரத்துகள்... முதலானவற்றை எல்லாம் காட்டி அஃதை ஒரு "மசாலாப் படமாக" ஆக்கி விடுகின்றனர்." [8]

[பகுதி - 3] & [பகுதி - 4] 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)




அடிக்குறிப்புகள்

1. கோவிந்தன், க., முனைவர், ஆய்வாளர் பார்வையில் திரைப்படக்கலை, சென்னை, 1999, பக்.80.
2. மௌனப்படக் காலகட்டம் பற்றிய இத்தகவல்கள், சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய, தமிழ் சினிமாவின்முகங்கள், சென்னை, 1998என்ற நூலிலிருந்து பெறப்பட்டவை.
3 கோவிந்தன், க., முனைவர், மு.கு.நூ. பக். 86-87
4. பீர் முகமது, திரைப்படம் ஒரு வாழும் கலை, சென்னை, 1998, பக். 219.
5 தியடோர் பாஸ்கரன், சு., மு.கு.நூ. பக் 56, பக. 58.
6. மேற்படி நூல், பக் 65, பக் 74.
7. யேசுராசா, à®…., ஆத்மா, நொவம்பர் - டிசம்பர் 2002 யாழ்பாணம்,   பக். 04.
8. கோவிந்தன், க., முனைவர், மு. கு. நூ. பக. 119.
9. பிஸ்மி, ஜெ., தமிழ் சினிமாவில்..., சென்னை, 2000, பக். 59-60.
10. மேற்படி நூல், பக் 61, பக். 54.
11. மேற்படி நூல், பக் 110.
12.அணிந்துரையில் திலகவதி, இடைவேளை, திண்டுக்கல், 1999.
13. ஸ்டீபன், அ., மேற்படி நூல், பக்.31.
14. இலங்கை சினிமா ஓர் அறிமுகம், பொறல்லஸ்கமுவ, 2001, பக். 153.
15. நிழல், டிசெம்பர் 2002 இதழ்,பக்.22.
16. நாமசாமி, அ., அலையும் விழித்திரை, பெங்களூர், 2000, பக். 157.




     இதுவரை:  25699203 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 11242 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com